Home / அரசியல் / ஆட்சி மாற்றத்தை நோக்கிய அரசியல் நகர்வுகளும், கூட்டமைப்பினரின் வாக்கு அரசியலும்

ஆட்சி மாற்றத்தை நோக்கிய அரசியல் நகர்வுகளும், கூட்டமைப்பினரின் வாக்கு அரசியலும்

– கோபி
இலங்கைத்தீவில், அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலும் நடைபெறவிருப்பதாகத் நம்பப்படும் நிலையில், அங்கு நடப்பு அரசியல் இத்தேர்தல்களை மையப்படுத்தியதாக இருப்பதனை அவதானிக்க முடிகிறது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே தாம் பாராளுமன்றம் செல்வதாகக் கூறும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரும் தத்தமது ஆசனங்களை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டமைப்பின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாய்ப்பான பிரதேசங்களில் கட்சிப் பணிமனைகளை அமைப்பதும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியே மாநாடுகளை நடாத்துவதும் அவர்கள் தேர்தலை சந்திக்கத் தயாராகுகிறார்கள் என்பதனையே காட்டுகிறது. இருப்பினும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையிட்டு அக்கறைப்படாமல், அவர்களது அரசியல் நிலைப்பாட்டையே கேள்விக்குறியாக்கும் வகையில் கூட்டமைப்பினர் நடவடிக்கைளை மேற்கொள்ளும்போது அதையிட்டு கேள்வி எழுப்புதல் அவசியமாகிறது.

பொதுவில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பேசும் விடயங்களை வைத்துப் பார்த்தால், அவர்களது அரசியல் கோரிக்கைகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
• தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவது நிறுத்தப்பட்டு அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
• வடக்கு கிழக்கில் இராணுவம் குறைக்கப்பட்டு சிவில் நிர்வாகம் நடைபெறவேண்டும்.
• மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
• பதின்மூன்றாம் திருத்தத்திற்கு அப்பாற் சென்று அரசியல்த் தீர்வு வழங்கப்பட வேண்டும்,.
• இறுதி யுத்தத்தில் சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் மேற்கொண்டதாக நம்பப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற பன்னாட்டு விசாரணை நடாத்தப்பட வேண்டும்
மேற்குறித்தவை கூட்டமைப்பில் தீர்மானம் எடுக்கக்கூடிய நிலையில் உள்ள சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களால் தெரிவிக்கப்பட்டுவரும் கருத்துகளிலிருந்து பெற்பட்டவை. இன்னொருவிதத்தில் கூறுவதானால், இவைதான் தமிழ் தேசியத்தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பவர்களால் முன்வைக்கப்படும் ஆகக்குறைந்தளவிலான அரசியல் கோரிக்கைகளாக இருக்கும். தேர்தல் மேடைகளில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் போன்றவர்களது உணர்ச்சி வசப்பட்ட கருத்துகளே மேலோங்கி நிற்கும் என்பது வேறுவிடயம். எனினும், இவ்வாறான குறைந்தபட்ச அரசியற் கோரிக்கைகளிலாவது கூட்டமைப்பினர் உறுதியாக இருக்கிறார்களா என்றால், அதனையும் உறுதியாகச் சொல்ல முடியாதளவிற்கு அவர்களது நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. இதுவே பாராளுமன்றத்தையும், மகாணசபை, மற்றும் உள்ளுராட்சிச் சபைகளையும் மட்டும் நம்பியிருக்கிற தாயக அரசியலின் இன்றைய அவல நிலமை.

2009ம் ஆண்டிற்கு பிந்திய காலத்தில் கூட்டமைப்பின் எல்லா நடவடிக்கைகளுமே வெளித்தரப்பினால் தீர்மானிக்கப்படுபவையாக அமைந்திருப்பதனைக் காணலாம். இந்திய அதிகார மையத்தினதும், மேற்குலகச் சக்திகளினதும் வழி நடத்தலிலேயே கூட்டமைப்பு இன்று இயங்கி வருகிறது. ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு யாரை ஆதரிக்க வேண்டும், பாராளுமன்றத் தேர்தலில் யாரை வேட்பாளர்களாக நிறுத்துவது போன்ற விடயங்களில் வெளித்தரப்பின் ஆலோசனைகளின்படியே கூட்டமைப்பின் தலைமை நடந்து கொள்கிறது. இது விடயத்தில் கூட்டமைப்பின் தலைமைக்கு எதுவித தயக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக மேற்குலகமும், இந்தியாவும் தங்களை அங்கீரித்திருக்கின்றன என்ற செய்தியை தமிழ் மக்கள் மத்தியில் பெருமிதத்துடன் வெளியிட்டு வருகிறது.

2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் போன்று இம்முறையும் எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து மகிந்த இராஜபக்சவை தோற்க முடியும் என்ற நம்பிக்கை வெளிச்சக்திகளிடமிருக்கிறது. அவர்களது ஆலோசனையை சிரமேற்றுச் செயற்பட கூட்டமைப்பு தயாராகிவிட்டது என்பதனை சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் அண்மையில் வெளியிடும் கருத்துகளிலிருந்து அறிய முடிகிறது. சில மாதங்களுக்கு முன்னர் குசால் பெரெரா என்ற பத்தி எழுத்தாளர் தனது கட்டுரை ஒன்றில் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக விக்னேஸ்வரனை நியமிக்கலாம் என்ற ஆலோசனையை முன்வைத்திருந்தார். இதனை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளினதும் ஒருமித்த கோரிக்கை போன்று எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வரன் பொது வேட்பாளருக்கு பொருத்தமானவர் என சுமந்திரன் பத்திரிகைகளுக்கு கருத்து வெளியிட்டார். விக்னேஸ்வரனும் தன்பங்கிற்கு, ‘மிகவும் பெருந்தன்மையுடன்’ தனக்கு அவ்வாறான எண்ணமில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஐக்கிய தேசியக்கட்சி உட்பட எந்தவொரு எதிர்க்கட்சியும் குசால் பெரேராவின் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்தர் அல்லாத ஒருவரை வெற்றி பெறச் செய்யும் பக்குவத்தில் பெரும்பான்மை வாக்காளர் இருக்கிறார்கள் என வெளியுலகுக்கு காட்ட முனைவது, தொடரும் தமிழின அழிப்பினை மறுதலிக்கும் செயற்பாடு என்பதனை அறியாதவராக சுமந்திரன் இருக்கிறாரா, அல்லது இதன் மூலம் ஒன்றுபட்ட இலங்கைத் தீவினுக்குள் அரசியல்த் தீர்வு சாத்தியம் என்பதனை வெளிப்படுத்துகிறாரா என்பதனை தீர்மானிக்கும் பொறுப்பினை இதைப் படிப்பவர்களிடமே விட்டுவிடுகிறேன்.

இப்போது பொது வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர்கள் என சந்திரிகா குமாரணதுங்க, சரத் பொன்சேகா, சிரானி பண்டாரநாயக்க ஆகிய மூவரினதும் பெயர்கள் அடிபடுகின்றன. எதிர்க்கட்சிகளான சிங்கள அரசியல் கட்சிகள் தமக்கிடையே ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது அவர்களைப் பொறுத்தது. ஆனால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அரசியல் செய்வதாகக் கூறும் கூட்டமைப்பினரும் இவ்வியடத்தில் ஏன் அக்கறைப்பட வேண்டும் என்ற கேள்வி தமிழ் மக்களிடமிருந்து எழுவது நியாயமானது. தமிழ் மக்களுக்கு எதிரான போரை நடாத்தி, பாரிய இனவழிப்பை மேற்கொண்ட சிறிலங்காப்படைகளின் இராணுவத் தளபதியாகவிருந்த சரத்பொன்சேகா, தமிழ் மக்களின் இரத்தத்தால் நனைந்திருக்கும் கரங்களுடன் ஜனாதிபதித் தேர்தலில் நின்ற போது அவருக்கு ஆதரவளிக்குமாறு வேண்டிய கூட்டமைப்பினர்தான் மீளவும் பொது வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்குமாறு கேட்டு தமிழ் மக்களிடம் வரவிருக்கிறார்கள். கடந்த முறை கூறியது போன்று, மகிந்த இராஜபக்சவை தோல்வியடைச் செய்யவேண்டும் என்பதுதான் அவர்களது ஒற்றைக கோரிக்கையாக இருக்கப்போகிறது. இதனுடன் சேர்த்து, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதற்கு தமது பொது வேட்பாளருக்கு வாக்களிக்குமாறும், அவ்வாறு செய்யும்போது, தமிழ்மக்கள் நன்மையடைவார்கள் எனத் தம்மை நியாயப்படுத்தப் போகிறார்கள். ஆனால் மேற்குறிப்பிட்ட தமது ஆகக்குறைந்த அரசியற் கோரிக்கைகளையாவது பொது வேட்பாளர் நிறைவேற்றுவார் என கூட்டமைப்பினரால் உறுதியளிக்க முடியுமா?

அண்மையில் ‘ருவிற்றரில்’ நடைபெற்ற தமிழ்தேசியச் செயற்பாட்டாளர்களுடனான கருத்து மோதலில், சுமந்திரன் விசமத்தனமான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். அதாவது, 2010 ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கில் சரத் பொன்சேகா பெற்ற வாக்குகள், பின்னர் ஏப்பிரல் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளை விட அதிகமானது எனவும் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவை ஏற்றுக்கொண்டிருந்தனர் என்பதுபதாகவும் அவரது கருத்து அமைந்திருந்தது. மகிந்த இராஜபக்ச மீதான தமிழ் மக்களின் வெறுப்பை பயன்படுத்தி சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்த கூட்டமைப்பு அதனை சரத் பொன்சேகாவிற்கான ஆதரவு வாக்குகள் எனக் காட்ட முனையும் ஆபத்தான நகர்வினையிட்டு தமிழ் மக்கள் நிச்சயம் அவதானமாக இருக்க வேண்டும்.

பொது வேட்பாளர்களாக நியமிக்கப்படக் கூடியவர்கள் என்ற பட்டியலில், சந்திரிகா குமாரணதுங்கவின் பெயரே முதனிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது. மேற்குலக சக்திகளால் விரும்பப்படும் ஒருவராக இருக்கும் சந்திரிகா ஆட்சிக்கு வருவதையே இந்திய ஆட்சிமையமும் விரும்புவதாகத் தெரிகிறது. இவ்விடயம் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தியத்தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் போன்றவர்கள் சந்திரிகா ஆட்சிக்காலத்தில், அவ்வரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்தவர்கள் என்ற வகையில் சந்திரிகாவினை ஆதரிப்பதில் அவர்களுக்கு எதுவித தயக்கமும் இருக்காது. ஆனால், தமிழின அழிப்பு விடயத்தில் இராஜபக்சவிற்கு சற்றும் குறையாதவராக இருந்த இன்னொரு போர்க்குற்றவாளியான சந்திரிகா புதிதாக எதனை சாதிக்கப் போகிறார் என்பதனயிட்டு கூட்டமைப்பினர்தான் மக்களுக்கு விளக்க வேண்டும்.

இதனிடையே, சிங்கள தேசியவாதத்தை முன்னிறுத்தி மீண்டும் தேர்தலில் இறங்கப்போகும் மகிந்த இராஜபக்சவின் வெற்றிவாய்ப்புகள் இன்னமும் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகிறது என்பதனையும், தேர்தல்கள் மூலமான ஆட்சி மாற்றம் தற்போதைக்கு சாத்தியப்படாது என்ற நடைமுறையதார்தத்தினையும் யாரும் புறந்தள்ளிவிட முடியாது. ஆகவே மகிந்தவை எதிர்ப்பது என்ற போர்வையில் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான செயற்பாடுகளில் தமிழ் அரசியற்கட்சிகள் இறங்குவது தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை நலிவடையச் செய்வதாகவே அமையும்.

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

corbyn

எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும், தமிழர்கள் செய்ய வேண்டியதும்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற …

Leave a Reply