Home / தாய் நாடு / ஊரின் வாசம் / இழந்துபோன சிலவற்றின் வாசனைகள்…..

இழந்துபோன சிலவற்றின் வாசனைகள்…..

ஒரு பேப்பருக்காக சுபேஸ்

பிரான்ஸில் நானிருக்கும் வீட்டிற்க்கு முன்னால் உள்ள குட்டிப்பூங்கவின் நடுவில் ஓர்க் மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்திருந்தது.சுற்றிலும் கட்டடங்கள் நிறைந்த மரங்கள் அற்ற சூழழில் வளர்ந்திருந்த அந்த ஓர்க் மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை அண்ணாந்து பார்த்து தன் தனிமையை நினைத்து அழுவது போலிருக்கும் எனக்கு.அதன் கீழே வட்டவடிவ இருக்கை ஒன்று போட்டிருந்தார்கள்.கோடைகாலங்களில் கிடைக்கும் ஓய்வான நேரங்களில் எனது தனிமையையும் ஊரையும் உறவுகளையும் பிரிந்து வந்த சோகங்களையும் சுமந்து சென்று மனிதர்களின் இடையூறுகள் இல்லாமல் நிறைந்த அமைதியைப் பரப்பிக்கொண்டிருக்கும் அந்தப்பூங்காவில் ஓர்க் மரத்தின் கீழே இருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்து அந்த மரத்துடன் சேர்ந்து நானும் எனது தனிமைகளையும் சோகங்களையும் விரட்டிக் கொண்டிருப்பேன்.வீட்டில் கிடைக்காத அமைதியும்,புத்துணர்வும் அந்த மரத்தின் கீழே வந்து உட்கார்ந்தவுடன் எங்கிருந்தோ வந்து குதித்து என் மனத்தை வானத்தில் மிதக்கும் மேகக்கூட்டங்களைப் போல இலேசாக்கி எல்லையற்ற கற்பனைகளுக்கூடாக எட்டமுடியாத உலகங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்றுவிடும்

.கோடைகாலங்களில் அந்த மரத்தின் கீழே வீசும் சூடான காற்றில் எனதூரின் நினைவுகள் மனத்தில் ஒன்றன் பின் ஒன்றாக அலை அலையாக எழுந்து அடங்கிக்கொண்டிருக்கும். அன்றும் அப்படித்தான் கிடைத்த கொஞ்ச நேர ஓய்வில் ஓர்க் மரத்தின் அருகாமையை தேடிச்செல்லும்படி நினைவுகள் என்னை உந்தித்தள்ளிக்கொண்டிருந்தன.வீட்டைவிட்டு வெளியே வந்தபோது உயிரை உறையவைப்பதுபோலக் குளிர் கடுமையாக இருந்தது.இந்தக்குளிரில் அந்த ஒர்க் மரத்தின் கீழ் இருப்பதைப்பற்றி நினைத்துக்கூடப்பார்க்க முடியாது.இனிக் குளிர்காலம் முடியும்வரையான ஆறுமாத காலத்திற்க்கு அந்தப்பக்கம் தலைவைத்தும் பார்க்கமுடியாது.என் ஆசையை உறையவைக்கும் பனியுடன் சேர்த்து உறையவைத்துவிட்டு ஏமாற்றத்துடன் கட்டிலில் சரிந்தபோது ஊரில் எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் கிணற்றடியில் இருந்து சற்றுத்தூரத்தில் கிளைபரப்பி தன் பூக்களின் வாசனைகளினூடு அன்பையும் நேசிப்பையும் நன்றியையும் பரப்பியவாறு என் பால்யகால நினைவுகளைச் சுமந்தபடி என் அருகாமையைத் தேடிக்கொண்டிருக்கும் எனது இளமைக் காலங்களின் தனிமைத்தோழனாய் இருந்த மாமரத்தினைத்தேடி எனக்குள்ளே இருந்த எண்ணெய் வைத்துப் படியத்தலைவாரிய,மீசை அரும்பாத சிறுவன் இறங்கி ஓடிக்கொண்டிருந்தான்.

அப்பாவின் கைகளைப்பிடித்து பூமியில் நான் மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்கத்தொடங்கிய காலங்களில் இருந்தே அந்த மாமரம் அங்கிருந்தவாறு வாழ்க்கையை நோக்கிய எனது ஒவ்வொரு படிமுறை வளர்ச்சியையும் மெளனமாக அவதானித்துக்கொண்டிருந்தது. அந்த மாமரத்தின் கீழிருந்த சய்வுநாற்காலியில் படுத்திருந்தவாறு பெயர்தெரியாத பல பறவைகளுக்கும் பூச்சிகளிற்க்கும் தன் அரவணைப்பால் அகன்று குடைபோல சடைத்திருக்கும் அதன் அடர்ந்த கிளைகளில் மகிழ்ச்சிமிக்க ஒரு சின்ன உலகத்தை வழங்கியவாறு அன்பின் அடையாளமாக நிழல்பரப்பி நிற்க்கும் அந்த மாமரத்தினை வியந்து அவதானித்தவாறு என் சிறுவயதுகளில் அமைந்த அனேகமான மாலைப்பொழுதுகளை அனுப்பிக்கொண்டிருப்பேன்.

சின்ன வயதில் நண்பர்களுடன் சேர்ந்து மாபிளடியும்,கிளித்தட்டும்,பந்தடியும் முடித்து ஆடைகளை எல்லாம் அழுக்காக்கி விட்டு வீட்டுக்கு வரும் ஒவ்வொருதடைவையும் என்னை கிணற்றடிக்கு இழுத்துச்சென்று என் ஆடைகளை எல்லாம் கழற்றிவிட்டு அம்மா எனது முதுகைத் தனது கரங்களால் தேய்த்துக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும்போது அந்த மாமரத்தின் ஒவ்வொரு கிளையிலும் தாவிக்கொண்டிருக்கும் கிளிகளையும்,அணில்களையும்,புலுனிகளையும் ரசித்தபடி நான் குளித்து முடித்திருப்பேன். நிலத்தோடு சேர்த்து மனதையும் குளிர வைத்துக்கொண்டிருக்கும்,ஒளிக்கற்றைகள் ஒவ்வொன்றும் வெள்ளியாக உருகிப் பூமியை நனைத்துக்கொண்டிருக்கும் நிலாக்காலங்களில் இனிமையும்,நிறைவும்,மகிழ்ச்சியும் கொண்டமைந்த எனது அனேகமான இரவுணவுப்பொழுதுகளை அந்த மாமரத்தின் கீழேயே அனுபவித்திருக்கிறேன்.

சுயநலமற்ற அன்பையும் நேசிப்பையும் காலம்காலமாக இந்தப்பூமிப்பந்தில் பரப்பிக்கொண்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் ஏழைத்தாய்மார்களைப்போலவே நிலவொளியில் உணவுடன் அன்பையும் நேசிப்பையும் சேர்த்தூட்டிய எனதன்னையின் முகமும் சுட்டித்தனமும்,துடுக்குத்தனமும் நிறைந்த,அர்த்தமற்ற ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கேள்விகளால் துளைத்தெடுத்தபடி மடியில் தூங்கிப்போகும் தன் செல்ல மகனை அந்த மாமரத்தின் அடிவாரத்தில் நீண்ட நெடுங்காலமாக தேடிக்கொண்டிருக்கும்.மாதத்தின் அனேகமான மதியங்களில் அம்மாவின் விரதச்சாதத்தை எதிர்பார்த்து இரண்டு காக்கைகள் அந்த மாமரத்தில் வந்து உட்கார்ந்துகொள்ளும். வீட்டைவிட்டு அம்மா வெளியே வரும்போதெல்லாம் அந்தக் காக்கைகளின் முகத்தில் தெரியும் சந்தோசத்தையும் எதிர்பார்ப்பையும் நான் அவதானித்திருக்கிறேன். தங்களின் மிக நெருங்கிய ஒருத்தியாக அம்மாவை அவை நேசித்திருக்க வேண்டும்.அதனால்தான் அம்மாவைக் காணும்போதெல்லாம் அளவற்ற மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் அவற்றின் முகத்தில் பிரகாசிக்கும்.அந்த மாமரத்தின் மீது உட்கார்ந்திருந்து சாதக்காக்கைகள் கரையும்போதெல்லாம் யாராவது உறவினர்கள் வரப்போவதாக அம்மா உறுதியாகச் சொல்லிக்கொள்வார்.அம்மாவின் நம்பிக்கை சில நேரங்களில் மெய்த்து விட்டாலும் அநேகமான நேரங்களில் பொய்த்தே இருந்திருக்கிறது.ஆனலும் அம்மா காக்கைகள் கரையும்போதெல்லாம் தன் எதிர்வு கூறலை நிறுத்துவதேயில்லை.

வயதாக ஆக வாழ்க்கையின் மீதான பிடிமாணங்களை ஏற்படுத்தும் ஒவ்வொரு காரணியும் மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்துபோக வெறுமையாக தனித்து நிற்க்கும் மனிதர்களைப்போலவே ஒவ்வொரு இலையுதிர் காலங்களிலும் அந்த மாமரம் உழைத்து ஓய்ந்துபோன தன் இலைகளை ஒவ்வொன்றாக உதிர்த்துவிட்டு இன்னொரு மீள் பிறப்பிற்க்காக நம்பிக்கையுடன் காத்து நிற்க்கும்.இலையுதிர்காலத்தின் பெரும்பாலான நாட்களில் ஒன்றன் பின் ஒன்றாக காய்ந்து உதிர்ந்து கொண்டிருக்கும் தன் இலைகளால் எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தை நிறைத்துவிட்டிருக்கும் அந்த மாமரம்.ஒவ்வொரு நாளும் காலையில் முற்றம் பெருக்கும்பொழுதெல்லாம் அம்மா அந்த மாமரத்தை திட்டியபடி அதன் இலைகளைக் கூட்டி அள்ளினாலும் ஒருபோதும் அம்மாவின் மாமரத்தின் மீதான அந்தக்கோபம் நீண்ட நேரம் நிலைப்பதில்லை.பனி கடுமையாக இருக்கும் மார்கழி மாதத்தில் ஈரலிப்பால் மண்ணுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவிலைகளைக் கூட்டி அள்ளுவது என்பது அம்மாவிற்க்கு மிகக்கடுமையான ஒரு பணியாக இருக்கும். பாடசாலை இல்லாத நாட்களில் மாவிலைகளைக் குத்தி எடுக்கும்படி முனையில் கூரான நீண்டதொரு கம்பியை என்னிடம் தந்துவிட்டுப் போய்விடுவார் அம்மா.நானும் அம்மாவின் காலை நேரக் கட்டாயப் படிப்பில் இருந்து தப்பிய மகிழ்ச்சியில் பனியில் தோய்ந்திருக்கும் மாவிலைகளை ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிக் குத்திச்சேர்த்துக்கொண்டிருப்பேன். வீட்டினுள்ளே இருக்கமுடியாத அளவுக்கு அணல் பறக்கும் வெய்யில் காலங்களில் எல்லாம் அப்பாவின் பெரும்பாலான பகல்ப்பொழுதுகள் தேநீர்க் கோப்பையுடன் அந்த மாமரத்தின் கீழிருந்த சாய்வுநாற்க்காலியில் சரிந்தபடி நாளிதழ்களை மேய்வதிலேயே கழிந்திருக்கும்.மாமரத்தின் கீழ் வீசும் இதமான தென்றலில் சொக்கியபடியே அப்பா படிக்கும் நாளிதழின் ஏதாவது ஒரு பக்கத்தை பிரித்தெடுத்து அவரின் அருகே அமர்ந்திருந்தபடி நானும் வாசித்து முடித்திருப்பேன்.வாழ்க்கையின் பல மிக அழகிய தருணங்கள் அந்த மாமரத்தின் கீழ் நிகழ்ந்ததைப்போலவே வாசிப்பின் இனிமையையும் அதன் பின் ஏற்படும் ஒருவித மெளன நிலையையும் அந்த மாமரத்தின் கீழேயே உணரத்தொடங்கியிருந்தேன்.யுத்தம் கடுமையாக நடக்கும்போதெல்லாம் எங்கும் செல்லாமல் அப்பாவும் நானும் எங்கள் வீட்டிலிருந்த வானொலிப்பெட்டியுடன் அந்த மாமரத்தின் கீழே உட்கார்ந்திருப்போம்.

கடுமையான யுத்தநாட்களில் எங்களின் பெரும்பாலான பொழுதுகள் அந்த மாமரத்தின் கீழே புலிகளின் குரல்,வெரித்தாஸ்,பிபிஸி என்று மாறிமாறி வானொலிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும்.எங்களவர்களின் ஒவ்வொரு இழப்பிலும்,மரணத்திலும்,தோல்வியிலும் அந்த மாமரத்துடன் சேர்ந்து நானும் மெளனமாக அழுதுகொள்வேன்.வாழ்க்கையின் பல மிக அழகிய கணங்களை அந்த மரநிழலில் அனுபவித்ததைப்போலவே வாழ்க்கையின் மிகப்பாதுகாப்பற்ற தருணங்களையும் அந்த மாமரத்தின் கீழே உணர்ந்திருக்கிறேன்.மக்களின் மரணங்களை வானொலிகள் அறிவிக்கும்போதெல்லாம் உயிர் வாழ்வதற்க்கான உரிமைகள் பலவந்தமாக அறுத்தெறியப்படுவதை எனது மிகச் சிறிய வயதுகளிலேயே உணர்ந்திருக்கிறேன்.உலகமெல்லாம் யுத்தம் குழந்தைகளை அச்சுறுத்தி அவர்களின் கள்ளம் கபடமற்ற புன்னகையைப் பறித்துவிடுவதைப்போலவே யுத்தம் எனது பால்யகாலங்களையும் பயமுறுத்தி எனது இளவயதுப் புன்னகைகளைப் பறித்துச் சென்று விட்டிருந்தது.

சிறுவயதுகளிலேயே சிங்களத்தின் கொலை விமானங்கள் வானத்தில் வட்டமிடும்போதெல்லாம் அந்த மாமரத்தின் கீழ் ஒளிந்திருந்தபடி மரணத்தின் வாசனையை எனக்கு மிக அருகில் நுகர்ந்திருக்கிறேன்.வாழ்க்கையின் நிலையாமையை,கொஞ்சமாகச் சிந்திக்க ஆரம்பித்திருந்த என் வாழ்வின் மிக ஆரம்ப நாட்களிலேயே அந்த மாமரத்தின் கீழ் உணர்ந்திருக்கிறேன்.மனிதர்களின் சிரிப்பையும்,மகிழ்ச்சியையும் கொள்ளைகொண்டு பிஞ்சுக்குழந்தைகளையும் கொலை செய்யும் பாழாய்ப்போன பகைமையும்,போரும் நிறைந்த உலகம் எங்கிருந்து துவங்குகிறது என்றகேள்வியை எனக்குள்ளே அப்பொழுதிலிருந்தே எதிர்கொண்டேன்.

பிறந்தபோது வெறுமையாக இருந்த நான் எனும் பாத்திரத்தினுள் நினைவுகளை ஊற்றி நிறைத்தபடி மெதுவாக நான் வளர்ந்துகொண்டிருந்தபோது எல்லாப் பருவங்களையும் மாறிமாறி எதிர்கொண்டபடி எங்கள் வீட்டு மாமரமும் என்னுடன் கூடவே வளர்ந்து கொண்டிருந்தது.என் துயரங்களின் போதான அழுகைகள்,என் மகிழ்ச்சிகளின் போதான கொண்டாட்டம்கள்,என் தோல்விகளின் போதான அவமானங்கள்,என் தனிமைகளின் போதான தவிப்புக்கள் என்று என் மனத்தின் எல்லா நிலைகளின் போதும் நான் தேடிச்செல்லும் இடமாக அந்த மாமரத்தின் அடிவாரமே இருந்தது. அதன் ஒரு கிளை நிலத்தை முத்தமிடத் துடிக்கும் வானத்தைப்போல நீண்டு அடர்ந்து பூமியை நோக்கி வளைந்தபடி வளர்ந்து கொண்டிருந்தது.அதிக உயரமில்லாத அந்தக்கிளையில் ஊர்த்தோழர்களுடன் சேர்ந்து பாடசாலை முடிந்த பின்னர் கிடைக்கும் மாலை நேரங்களில் சிலவற்றை ஆனந்தமாக ஆடிப்பாடியபடி வழியனுப்பிக்கொண்டிருப்போம். அப்படி அமைந்த நீண்ட மாலைப் பொழுதொன்றிலேதான் வேகமாக ஆடிக்கொண்டிருந்த மரக்கிளையில் இருந்து தவறி விழுந்து எனது இடது கையில் லேசான முறிவு ஏற்பட்டிருந்தது.அன்றிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்க்கு பண்டேஜ் சுற்றியிருந்த எனது கையில் ஒரு கயிற்றைக்கட்டி கழுத்தில் தொங்கப்போட்டபடி திரியவேண்டியதாகிப் போனது.அன்றிலிருந்து கொஞ்சக்காலத்திற்க்கு ஊஞ்சல் ஆட்டத்தை தள்ளிப்போட்டிருந்த நாங்கள் பண்டேஜ் அவிழ்த்ததும் அம்மாவின் ஏச்சையும் பொருட்படுத்தாது மீண்டும் எங்கள் விளையாட்டைத் தொடங்கியிருந்தொம்.வெண்ணிறத்தில் கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கும் தன் பூக்களின் உள்ளே மெளனமாக மகரந்தச்சேர்க்கையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் அந்த மாமரம் பருவங்களைப் படைத்துக்கொண்டிருக்கும் இயற்க்கையின் விசித்திரமான அழகைப் பிரதிபலித்துக்கொண்டிருக்கும்.மாம்பூக்களின் வாசனையில் கட்டுண்டுபோய் எங்கோ தொலைவுகளில் இருந்தெல்லாம் வரும் வண்டுகள் அந்த மாமரத்துடன் அதன் பூக்கும் காலம் முழுவதும் ஓய்வின்றி உரையாடிக்கொண்டிருக்கும்.முன்னால் விரிந்து பரந்து கிடக்கும் முதுமைக் காலங்களை தனியாக எதிர்கொள்ளும்படி,வளர்த்து ஆளாக்கப்பட்டபின்னர் சுயநலச்சிறகுகளுடன் பறந்து போய்விட்ட பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களைப்போலவே அதன் இலையுதிர்காலங்களில் வண்டுகளாலும்,பறவைகளாலும் கைவிடப்பட்ட அந்த மாமரமும் வெறுமையாக நின்று தன் தனிமையை நினைத்து அழுவதுபோலிருக்கும் எனக்கு.எனது பெரும்பாலான கோடை விடுமுறைகளை அந்த மாமரத்தின் கீழே அமர்ந்தபடி கசப்பும் இனிப்பும் சேர்ந்த அதன் ஒருவித கிறங்கடிக்கும் பூ மணத்தோடு இலயித்தபடி புத்தகங்கள் படிப்பதிலும்,அடுத்த தவணைக்கு தயாராவதிலும் செலவழித்துக்கொண்டிருப்பேன்.அடுத்த தவணையில் பள்ளியில் புத்தகங்களை விரிக்கும்போது அதனுள்ளே அகப்பட்ட ஒன்றிரண்டு காய்ந்துபோன மாம்பூக்கள் எனக்கும் அந்த மரத்திற்க்குமான வார்த்தைகளால் சொல்லமுடியாத ஏதோ ஒருவித பிணைப்பின் நீட்ச்சியை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்.

எங்களது வீட்டின் ஒரு பகுதியை இடித்து விஸ்தரிக்கும் நீண்டகாலத்திட்டத்தை செயற்படுத்தும் முடிவிற்க்கு வீட்டார் ஒரு நாள் வந்தபோது கொல்லைப்புறத்தில் துருத்திக்கொண்டிருந்த அந்த மாமரமும் அதன் அடர்ந்த கிளைகளும் அவர்களின் முயற்ச்சிக்கு இடையூறாக இருந்தன.அதைத் தறிப்பதற்க்கான முனைப்புக்களில் வீட்டார் ஈடுபட்டபோது அதுவரையும் அந்த மாமரம் குறித்த பெரிய சிந்தனைகள் எதுவுமில்லாமல் இருந்த எனக்கு அதன் பெறுமதிகள் புரியத்தொடங்கின.அன்று முழுவதும் புரண்டு புரண்டு படுத்தபடியே மாமரம் குறித்த கேள்விகளில் தூக்கமின்றி கழிந்துபோனது எனதிரவு.மாமரம் வெட்டப்பட்டால் மாலைப்பொழுதுகளை நண்பர்களுடன் ஆடிப்பாடியவாறு கழிப்பதற்க்காக இனி நான் எங்குசெல்வேன் என்ற கேள்வி என்னுள் எழுந்திருந்தது.இனிமேல் அப்பாவுடன் உட்கார்ந்திருந்துகொண்டு அந்த மாமரத்தின் கீழே அப்பொழுது தான் வீசிக்கொண்டிருக்கும் புத்தம் புதிய காற்றை சுவாசித்தபடி பத்திரிகைகள் படிக்கமுடியாது.ஓய்வு நேரங்களில் சாய்வு நாற்க்காலியில் அந்த மாமரத்தை சுற்றி இயங்கிக்கொண்டிருக்கும் உலகத்தை அவதானித்தபடி காணும் கனவுகளை இரசிக்கமுடியாது.எனது ஓய்வு நாட்க்களை உயிர்ப்புடன் வைத்திருந்த அந்த மாமரத்தைப் பற்றிய கவலைகளிலேயே கழிந்துபோயின அடுத்துவந்த நாட்க்கள்.இப்பொழுது இருப்பதைவிட பெரிதாக வீட்டை விஸ்தரிப்பது வாஸ்த்துப்படி நல்லதல்ல என்று யரோ ஒரு சாத்த்ரி சொல்லியதால் வீட்டைப் பெருப்பிப்பதற்க்கான முயற்ச்சிகளுக்கு அப்பா முற்றுப்புள்ளி வைத்துவிட எனது மாமரமும் சாத்திரியின் உதவியால் தப்பித்துக் கொண்டது.நானும் பழைய மாதிரி மாமரத்தின் கீழே எனது ஓய்வுப்பொழுதுகளை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.இடையில் எதிர்கொண்ட ஒரு வருட வன்னி இடப்பெயர்வின் பின்னர் ஊருக்குத் திரும்பியபோது காய்ந்த மாவிலைகள் நிலமெங்கும் மூடிப்போய்க் கிடக்க நேசித்தவர்களின் மிக நீண்ட பிரிவொன்றை எதிர்கொண்ட அடையளங்களை சுமந்தவாறு எங்களின் வருகைக்காகக் காத்து நின்றது அந்த மாமரம்.

நீண்ட ஒரு சமாதானத்தின் பின்னர் மிகப்பெரிய யுத்தம் ஒன்று ஆரம்பித்தபோது மாமரத்துடன் சேர்ந்து நானும் நன்றாக வளர்ந்து விட்டிருந்தேன்.ஈழத்தின் பெரும்பாலான இளைஞ்ஞர்களைப்போல் இலங்கைப் படைகளின் நெருக்கடிகளை நானும் எதிர்கொண்டபோது எல்லோரையும்போலவே அகதி ஆகப்புலம்பெயரவேண்டிய கட்டாயக் காரணிகள் பல என் முன்னே இருந்தன.மேகம்கள் சூரியனை மறைத்து மழையாக உடைந்து கொட்டிக்கொண்டிருந்த இருண்ட நாளொன்றிலே மண்ணை விட்டுப் பிரிய முடிவெடுத்து என் மூட்டை முடிச்சுக்களினுடன் தயாரானபோது அப்பொழுதுதான் துளிர்த்திருந்த அந்த மாமரத்தின் மெல்லிய இலைகள் என் பிரிவை நினைத்து அழுபவைபோல மழைத்துளிகளைச் சிந்திக்கொண்டிருந்தன.சோகத்தில் உடைந்துபோன மனிதர்களைப்போலவே மழையில் நனைந்து ஒடுங்கிப்போய் அந்த மாமரமும் அப்பொழுது காட்ச்சியளித்துக் கொண்டிருந்தது.மாமரத்தை விட்டு வெகு தொலைவிற்க்குப் போய்க்கொண்டிருந்தேன்.என் துன்பங்களின் போதும்,சந்தோசங்களின் போதும்,தனிமைகளின் போதும், கொண்டாட்டங்களின் போதும் என்னுடன் பேசிக்கொண்டிருந்த எனக்கே எனக்கான அந்த மாமரத்தின் நிழலைவிட்டு வெகுதூரத்திற்க்குப் போய்க்கொண்டிருந்தேன்.அதன் கீழே வெறுமையாக இருந்த சாய்வுநாற்க்காலியில் என் மனதை விட்டு விட்டுப் போய்க்கொண்டிருந்தேன்.இனி அந்த மாமரத்தின் கீழே மாலைப்பொழுதுகளில் புத்தகங்களின் பக்கம்களைப் புரட்டியபடி இருக்கும் எழுத்துக்களைக் காதலிக்கும் சிறுவன் காணாமல் போயிருப்பான்.இனிமேல் தன் ஒவ்வொரு இலைகளையும்,கிளைகளையும் நேசிக்கும் ஒரு உற்ற நண்பனைத் தேடியபடி அந்த மாமரம் நீண்ட நாட்க்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.இப்படித்தான் ஈழத்தின் அனேகமான வீடுகளில் மரங்கள் அகதியான தங்களின் நேசிப்புக்குரியவர்களின் வரவை எதிர்பார்த்து தங்கள் நிழலுடன் பேசியபடி தனிமையை உணர்த்திக்கொண்டிருக்கின்றன….

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

pongal

முற்றத்து தைப்பொங்கல்

தைப்பொங்கல் என்றால் சிறுபராயத்தில் ஊரில் எங்கள் வீட்டு முற்றத்தில் பொங்கி மகிழ்ந்த நினைவு தான் எழுகின்றது. பொங்கலைப் போலவே அந்த …

Leave a Reply