Thursday , November 21 2019
Home / Blogs / எனக்குப் பாதி கொடுங்கள் மன்னா…….

எனக்குப் பாதி கொடுங்கள் மன்னா…….

வெகு விரைவில் அடுத்த மாவீரர் நாள் வருகிறது. இது நினைவு எழுச்சி நாள் என உணர்வு பூர்வமாக மண்மீட்பு போரில் மரணித்த எம் மாவீரர்களை, மாமனிதர்களை நினைவு கூர்ந்து எழுச்சி கொள்ளும் நிகழ்வு. கலந்து கொள்ளும் பல்லாயிரக்கணக்கான மக்களும், அம்மாவீரர்கள் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காகவும், அவர்கள், மனங்களில் ஏற்றுக்கொண்டு யாருக்காகவும், எதற்காகவும் உயிர்கொடுத்தார்களோ, அந்தத்தலைவன், எமது தேசியக்கொடி, தேசியப்பறவை, தேசியப்பூ என்று அவர்கள் நேசித்த எம்மண்ணின் குறியீட்டுச்சின்னங்களையும், அவர்களின் தாரகமந்திரத்தையும் மனங்கொள்ளும் நினைவு சுமந்த நாள்.

இப்புனிதநாளின், புனிதத்தை கெடுக்காத வகையில் அதைக்கொண்டு நடத்தவேண்டியது மக்களான எமது கடமையும், தவறு நடக்கும் இடத்தில் தட்டிக்கேட்கவேண்டிய உரிமையும் கூட. மாவீரர்களின் பெயரில், மக்களின் எழுச்சியை திசை திருப்புபவர்களை, முளையிலேயே அடையாளம் கண்டு களைய வேண்டிய பொறுப்பு மக்களிடமே உள்ளது.

தேசியக்கொடியை மாற்றவேண்டும், எமது தலைவர் இவர் இல்லை அவர்தான் என்று சொல்பவர்களுக்கெல்லாம் மாவீரர்நாளில் என்ன வேலை. மாவீரர் நாளில் தேசியக்கொடியேற்றி, விளக்கேற்றுங்கள், அவர்கள் செய்த உன்னதங்களைப்பற்றிக் கதையுங்கள், அவர்கள் செயலில் செய்து காட்டிய திட்டங்கள், தீட்டிய தமிழ்ஈழக்கட்டுமானங்கள், உயிர்தியாகங்கள் பற்றிக் கதையுங்கள், போர்க் குற்ற விசாரணை பற்றியும், 11,000 போர்கைதிகளில் விடுதலை பற்றியும், அவர்களின் தொகை காலத்திற்குகாலம் குறைத்து அறிவிக்கப்படுவது பற்றியும், அவர்களின் பெயர் விபரம் வெளியிடப்படாதநிலை பற்றியும் பேசுங்கள். இக்காலகட்டத்தில் எமது தார்மீக எழுச்சி தடையுத்தரவு என்ற ரீதியில் நசுக்கப்பட்டு மாவீரர் நாள், நினைவெழிச்சி நாளாகப்பட்டு, படங்கள் வைக்கக்கக்கூடாது, மாவீரர் நாளில் தலைவரின் உரை போடப்படாது என்று வெளிநாட்டின் அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் நாம் தவிர்க்க முடியாது நின்று எழுச்சி நாளைக்கொண்டாடினோம். 21 வருடங்களாக இங்கு நடைபெற்ற மாவீர்நாள், கடந்த 5,6 வருடங்களாக மெதுமெதுவாக புதுமுகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளதோடு அதன் வீரியம் குறைக்கப்பட்டு வந்துள்ளது.

மேலும் அதன் பலத்தைக்குறைத்து, மக்களின் மனங்களில் இருந்து, மண்ணுக்கென மரணித்த மாவீரர்களின் நினைவுகளையும், தேசிய சின்னங்களையும், அன்நினைவின் அடையாளமாக இருக்கும் நினைவெழுச்சி தினத்தையும் சிதைத்தொழிக்கும் முயற்ச்சி பல்வேறு ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது. அண்மையில் ஜிரிவி இல் இருவர் வந்து, இந்தமுறை மாவீரர்நாள் லண்டனின் எக்ஸ்செல் மண்டபத்தில்தான் நடைபெறுகிறது என்று தன்னிச்சையாகச் சொன்னார்கள். (இவர்கள் அங்கம் வகிப்பதாக சொல்லிய அமைப்புகள் இவர்கள் சொல்லியதற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்றார்கள்) ஒருவாரத்தின் பின், நாடு கடந்த அரசின் அரசியல், வெளியுறவு அமைச்சர் திரு. தயாபரன் தணிகாசலம், அதே ஜிரிவியில் வந்து அதை மேலும் உறுதிசெய்து மக்களுக்கு அழைப்புவிடுத்தார். ஆராய்ந்து பார்த்தில், ஏற்கனவே வழமையாக மாவீரர் நாள் நடக்கும் எக்ஸ்செல் மண்டபத்தின் 50,000 பேர் கொள்ளக்கூடிய மண்டபம் Top Gear Live என்ற கொம்பனியால் அதே நாள், அதே நேரம் எப்பவோ எடுக்கப்பட்டுவிட்டது. இதை யாரும் இன்ரெநெற்றில் பார்த்து அறிந்து கொள்ளலாம். http://www.excel-london.co.uk/whatson/events/341/ இப்படி இருக்க, இவர்கள் வரச்சொல்லி மக்களுக்கு அழைப்பு விடுத்து, அதற்குரிய துண்டுபிரசுரமும் அடிக்கப்பட்டு கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் மண்டபம், வெறும் ஜயாயிரம் பேர் மட்டுமே கொள்ளக்கூடிய மண்டபம்.

அப்படியானால் இவர்களின் நோக்கம்தான் என்ன? மிகுதி நாற்பத்தைந்தாயிரம் சனங்கள், அந்த ஒரு உன்னதமான நாளில் தமது குழந்தைகளை நெஞ்சுருகி நினைவு செய்ய வந்து, மண்டப பாதுகாப்பு ஊழியர்களால் வாசலில் வைத்து மண்டபம் நிறைந்து விட்டது என்று விரட்டி அடிக்கப்படவேண்டும் என்பதா? அல்லது ஒருமுறை விரட்டியடித்த மனவெறுப்பில் அடுத்தமுறை வராமலே இருந்து, இந்த எழுச்சி அடக்கப்பட்டு விடும் என்பதா? அல்லது உண்மையாகவே தாங்கள் நடாத்தி, ஒலிபரப்ப இருந்த திரு. உருத்திரகுமாரின் உரையை கேட்க ஜயாயிரம் சனத்திற்கு மேல் வரமாட்டார்கள் என்ற எதிர்பார்ப்பா?

இதைவிட குளிரோ, மழையோ அம்பதாயிரம் சனமும் ஒருமணித்துளிநேரம் ஒன்றாக நின்று எமது மண்ணின் மைந்தர்களை நினைந்து, அந்த தலைவனின் கடைசி உரையை ஒருமுறை மீண்டும் கேட்டாலும், அவர் பூடகமாக சொன்ன விடையங்களுக்கு இப்போ சிலவேளை அர்த்தம் புரியக்கூடும்.

இவ்வளவு பிரச்சனையையும் சமாளித்து, அதே நேரம் கொள்கை பிறழாது, முப்பது வருடங்களாக போராட்டத்தை நடந்துவது என்பது எவ்வளவு சிரமானது என்பது, இந்த ஒரிரு வருடங்களில், தாம் தான் இனி தமிழ் மக்களை வழிநடத்தப்போகிறோம் என்று புதிது புதிதாக வந்த தலைமைகளை பார்க்கும் போது தான், இன்னும் காட்டமாக உறைக்கிறது. வலிக்கிறது. ஒரு தலைவன் வரவுக்கான காத்திருப்போடு எமது இனம் அங்கே, இங்கே ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதை ஒழுங்காக சேர்ந்து நடத்துவதை விடுத்து, ஒவ்வொன்றுக்கும் அதேபோல இன்னொன்றைத் தோற்றுவிக்கும் போட்டியில், ஒரு குழந்தையை தனதென அடிபட்டு இரு தாய்மார்கள் சாலமன் மன்னனிடம் நீதிகேட்டபோது, குழந்தையை சரிபாதியாக வெட்டி கொடுங்கள் என மன்னன் உத்தரவிட, புன்னகையுடன் பாதியைக் கொடு மன்னா என்று கேட்ட தாய்போல இவர்கள்;, வேண்டாம் மன்னா, குழந்தையை கொல்ல வேண்டாம் என்று கண்ணீரும், கைம்பலையுமாக நின்ற உண்மையான தாய்போல் புலம்பெயர் தமிழ் மக்களான நாங்கள்…

ஒரு பேப்பர்
சுகி

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

சிறீலங்கா சனாதிபதியின் நிபுணர்குழு ஐ.நாவுக்கான சவாலா?

நிர்மானுசன் பாலசுந்தரம் (தினக்குரல் பத்திரிகைகாக நிர்மானுசன் எழுதிய கட்டுரையின் சுருக்கத்தினை அதன் முக்கியத்தவம் கருதி இங்கு மறுபிரசுரம் செய்கிறோம். நன்றி …

Leave a Reply