Home / அரசியல் / எமக்கான இந்தியக் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு

எமக்கான இந்தியக் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு

 

 

அலசுவாரம் – 96

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பான சனல்-4 காணொளி உலகம் முழுவதும் காட்டப்பட்டுவிட்டது.  இந்தியாவிலும் அது காட்டப்பட்டுள்ளது. அது தொடர்பான விவாதமொன்றில் கலந்துகொண்ட இலங்கை யரசின் இராணுவப் பேச்சாளர், பங்குபற்றிய ஏனையோர் கேட்ட கேள்விகளுக்கு சொதப்பலான பதில்களைக் கூறிக் காரியத்தைக் கெடுத்துவிட்டதாக வேறு விமர்சிக்கப்படுகிறது.  ஆக மொத்தத்தில் இலங்கையரசு நடத்தி யிருக்கும் அராஜகங்களையிட்ட வாதங்களும் பிரதிவாதங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றதேயொழிய, அவ்வராஜகங்களை நடத்திய மனித வர்க்கத்திற்கெதிரான நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் இதுவரை கைது செய்யப்படவுமில்லை விசாரிக்கப்படவுமில்லை.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தம்மால் முடிந்தவரை ஆர்ப்பாட்டங்களையும், மனிதவுரிமையமைப்பு களுடனான தொடர்பாடல்களையும் நடத்திக் கொண்டிருந்தாலும், நமது தாயகத்தில் நமக்கெதிராக நடத்தப்பட்ட குரூரத்தனமான கொடுஞ் செயல்களுக்கெதிராக யாரும் வாய்திறக்கும் நிலையிலில்லை.  இராணுவ அடக்கு முறைக்குள் ஒடுங்கிக் கிடக்கும் எமது உறவுகள் “ஹ{ம் என்றால் சித்திரவதை ஏனென்றால் படுகொலை” என்ற  ஆபத்ததான நிலையில் வாழ்ந்துகொண்டு எதைத்தான் செய்ய முடியும்?

நடந்தது நடந்தாகிவிட்டது.  அனியாயக்காரர்கள் தண்டிக்கப்படலாம் தண்டிக்காமல் விடவும்படலாம். தண்டி க்கப்பட்டாலும் படாமல் விடப்பட்டாலும், அதனால் ஆவதென்ன?  இழக்கப்பட்ட உயிர்களை மீளப் பெற முடியுமா?  அதனால், நடத்தப்பட்டுள்ள கொடுமைகளுக்கு உரியதண்டனையைத் தீர்மானிக்கும் பொறுப்பை உலகிடம் விட்டுவிட்டு  ஆகவேண்டியதைக் கவனிப்போம் என்ற மனப்பாங்கில், தமிழர் தரப்பினர் குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக அரசுடன் பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  எதைப் பற்றி?  அதுதான் பெரிய புதிராக இருக்கிறது.  யாருக்கும் இப்படி வருடக்கணக்காக என்ன விடயம் பற்றிப் பேசப்படுகின்றது என்பதில் போதிய தெளிவில்லை.

“அதிகாரப் பரவலாக்கத்திட்டத்தின் கீழ் வடகிழக்கு மாகாண சபைகளை ஒன்றிணைத்து 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துதல், விசேட பொலீஸ், காணியதிகாரங்களை வழங்குதல், கொஞ்சம் மிஞ்சிப் போனால் சமஷ்டி அமைப்பின் கீழான தேசிய சுயநிர்ணய உரிமை”  என்ற விடயங்களைத் தவிர வருடக்கணக்காகப் பேசப்படும் விடயங்கள் வேறு என்னவாக இருக்க முடியும்?

அரசாங்கமும் அதில் அங்கம் வகிக்கும் பேரினவாதக் கட்சிகளும் மேற்குறித்த விடயங்கள் எதையும் தரத்தயாரில்லை என்கின்ற போதும், மீண்டும் மீண்டும் கூடிக் கூடி எதைப் பேசுகிறார்களென்றே தெரியா மலிருக்கிறது.  போதாததற்கு இந்தியா வேறு வருடக்கணக்காக இலங்கையுடன் பேசிக்கொண்டேயிருக்கிறது.  அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான சட்டமூலங்களிலுள்ள ஒவ்வொரு வசனத்தையும் பற்றிப் பேசி முடிவெடுக்க வேண்டியிருந்தாலும்கூட இத்தனை எண்ணிக்கையான பேச்சு வார்த்தைகள் தேவைப் பட்டிருக்காது.  ஆனால் மூடுமந்திரம் போல எதைப்பற்றிப் பேசுகிறோம் என்பதையே வெளிப்படுத்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பது  அரசாங்கம் மட்டுமல்லாது தமிழர் தரப்பினரும் சேர்ந்து காலத்தைக் கடத்துவதற்கான உத்தியாகவே தெரிகிறது.

“பிச்சையெடுத்ததாம் பெருமாள் அதைப்பறித்ததாம் அனுமார்” என்பதைப்போல, இலங்கையரசும் தமிழர் தரப்பும் எதையோ பேசி முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்ற நப்பாசையில் இருக்கும்போது இந்தியாவிலிருந்து சிவசங்கர் மேனன் வேறுவந்து காரியத்தைக் கெடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.  பதிதாகவோர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை உருவாக்க இந்தியப் பிரதிநிதியின் சமீபத்தைய விஜயம் துணைபோயிருக்கிறது.    இனி இன்னும் எத்தனை வருடங்கள் இந்தத் தெரிவுக்குழுவைச் சாட்டாக வைத்துக்கொண்டு கடத்தப் படப்போகின்றனவோ தெரியவில்லை.

இந்த அரசியல் பித்தலாட்டங்களுக்கு மத்தியில் உருப்படியானவோர் செய்கையை இந்தியக் கம்யூனிஸ்ட்  கட்சியினர் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.  போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு ஆதரவு கோரி டெல்லியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கான ஆதரவுக் கூட்டங்கள் தமிழகத்தைக் கடந்து ஆந்திர மற்றும் கேரள மாநிலங்களிலும் நடத்தப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.  ஆர்ப்பாட்டத்தோடு நின்றுவிடாமல், உலகெங்கிலுமுள்ள கம்யூனிஸ்ட்டு இயக்கங்களுடனும் தொடர்புகொண்டு எமது பிரச்சனை தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.  இன்று வரை எம்மை ஆதரிக்காத சீனா, ரஸ்யா போன்ற நாடுகளின் சினேகப் பார்வை எம்மீது படக்கூடிய விதத்தில் அந்நாடுகளின் தூதரகங்கள+டாக வேண்டுதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஈழத்தமிழர்களாகிய நாம் செய்யவேண்டியவை நிறைய இருக்கின்றன.  உலகச் செல்வாக்குமிக்க கம்யூனிச இயக்கங்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பான சூழல் உருவாகும்போது தமிழர்களாகிய நாம் அதனை எமது தேசிய இன அங்கீகாரத்திற்கான படிக்கல்லாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.  எம்மை ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்டுகளை யும் அவர்களது உலகத்தொடர்பையும் முழு அளவில் எமது ஈழ ஆதரவுக்குப் பயன்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதன்மூலம் சீனா ரஸ்யா போன்ற நாடுகளின் சினேகத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.  எமது நாடுகடந்த தமிழீழ அரசு உட்பட பல்வேறு தமிழர் அமைப்புகளும் இதற்கான யதார்த்த பூர்வமான செயற்பாடுகளில் இறங்குவார்களானால் இன்று சீனாவாலும் ரஸ்யாவாலும் முட்டுக்கொடுக்கப்பட்ட நிலையில் அகம்பாவத்துடன் இருக்கும் சிங்கள வல்லாண்மை வாதத்தை விழுத்தி இலங்கையின் பல்தேசியத் தன்மையை நிலைநிறுத்த முடியும். இலங்கை சிங்களவருக்கேயென்ற பேரினவாதத்தை கம்யூனிச நாடுகள் ஏற்றுக்கொள்ளாத நிலைவரும்போது சிங்களம் தமிழர் தேசியத்தை எதிர்த்து முரண்டுபிடித்துக்கொண்டு நிற்கமுடியாது.  எமது மக்களுக்கான அரசியல் சுதந்திரம் வழங்கப்பட்டேயாக வேண்டும்.

நாம் இதுவரை காலமும்  ஆயுதப் போராட்டத்தின் மூலம் எமது தமிழ்த் தேசியத்தை நிறுவி விடலாமென்ற எண்ணத்துடன் போராடினோம்.  எமது தமிழீழநாட்டின் உள்ளேயே எதிரி நிலைகொண்டிருக்கையில் அதனைப் பொருட்படுத்தாது தமிழீழக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டோம்.  முடிவில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போயின.  தமிழர் தேசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை உருவாகியது.  ஆனாலும் எமது போராட்டத்தின் ஆத்ம வலு இன்னும் அழிந்துவிடவில்லை.   இந்தியாவிலும் உலகிலும் எமது தேசியவுணர்விற்கான ஆதரவு நாம் ஆயுதத்தை நம்பியிருந்த காலங்களைவிட தற்போது வலுப்பெற்று வருகிறது என்றே கூறவேண்டும்.  நாம் பலமான நிலையிலிருந்த போது எமக்குக் கிடைக்காத ஆதரவு பலமிழந்து வீழ்ந்து கிடக்கும்போதுதான் கிடைத்திருக்கிறது.   அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையுடன்  உலகின் ஆதரவைப் பற்றிய எவ்வித கவலையுமின்றி நடத்தப்பட்ட எமது போராட்டம் வீழ்ச்சியடைந்தது.

நமது விடுதலையை நாம்தான் போராடிப் பெறவேண்டும் வேறு யாரும் உதவ முன்வரமாட்டார்கள் என்பது சரியேயானாலும், எமது எதிரி தனக்குப் பக்கத்துணையாக உலகை அழைத்துக் கொள்ளும்போது எம்மாற் சமாளிக்க முடியாது போய்விடும் என்ற அடுத்த பக்கத்தைச் சரிவரப்புரிந்து கொள்ளாததுதான் இன்றைய எமது வீழ்ச்சிக்குக் காரணமாகும்.   எவ்வளவுதான் நாம் சொந்தக்காலில் நின்று போராடினாலும் எதிரியின் செல்வாக்கை உயர விட்டிருக்கவே கூடாது.  அதற்கான யதார்த்த நடைமுறைகளில் எமது போராட்டம் வழிப்படுத்தப்படாதது மிகவும் வருந்தத்தக்கதாகும்.  புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த போராளிகளின் தொடர்பு வட்டங்கள் ஜனநாயகப் பண்புகளற்ற மிகவும் இறுக்கமான கட்டமைப்புகளாகச் செயல்ப்பட்டதால் அறிவுஜீவிகளின் பங்களிப்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்பட்டது. எதிரி எம்மை முந்திக்கொண்டு போனதற்கு இதுவே காரணமாகும்.  சரியான வழிப்படுத்தல் நடைபெறவில்லை.  நாம் பயங்கரவாதிகளாக வேறு முத்திரை குத்தப்பட்டோம்.   உலக ஆதரவை முற்றாக இழந்து போனோம்.

ஆனால் இன்று நிலைமை வேறாகிக் கொண்டு வருகின்றது. உலக ஆதரவு எம்மை நோக்கித் திரும்பியிருக்கிறது.  இந்தியக் கம்யூனிஸ்டுகள் எமக்காகக் குரல் கொடுக்கிறார்கள்.  அதுவே உலகக் கம்யூனிஸ்டுகளின் ஓங்கிய குரலாக வடிவெடுக்கும் வாயுப்புகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன.  இந்நிலையில் எம்மை ஆதரித்துக் குரல் கொடுக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் எமது நன்றிகளையும் நல்லெண்ணத்தையும் நிறுவன ரீதியாகத் தெரிவித்து, அவர்களின் செயற்பாடுகளுக்கு நாமும் துணைபோகவேண்டியதே இன்று நாம் செய்யவேண்டிய கடமையாகும்.

புலம் பெயர்ந்த ஈழ ஆதரவுக் குழுக்கள், நாடு கடந்த தமிழீழ அரசு, இலங்கையிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற சகல தரப்பினரும் ஒன்றுபட்ட குரலில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியினரின் ஈழச்சார்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல் அவசியமாகும். கம்யூனிஸ்டுகளை ஊக்குவிப்பதன்மூலம், இன்று எமது அரசியல் அபிலாசைகள் நிறைவேறத் தடைக்கல்லாயிருந்து இலங்கையின் இனவிரோதச் செய்ல்பாடுகளைக் கண்டும் காணாமலிருக்கும் சீனா ரஸ்யா போன்ற நாடுகளை எம்பக்கம் ஈர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம்.

ஈழத் தமிழர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு உரிய மதிப்பினை அளிக்கவில்லை.  சரித்திரத்தில், உடுப்பிட்டித் தொகுதியில் கந்தையாவென்ற ஒரேயொரு தமிழ் கம்யூனிஸ்டு பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் முன்பொரு தடவை தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.  இன்று கம்யூனிஸ நாடுகளே எம்மைப் புறந்தள்ளி விட்டிருக்கின்றன.  இனி வருங்காலங்களில் எமது ஈழப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவும் பெறப்படவேண்டியது அவசியமாகும்.  அதற்கான காலம் கனிந்து வருகின்றது.

தொடருவம்…

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

corbyn

எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும், தமிழர்கள் செய்ய வேண்டியதும்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற …

Leave a Reply