Thursday , January 23 2020
Home / Blogs / நெஞ்சு பொறுக்குதில்லையே / கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27

கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27

இந்த வருட மாவீரர் நாள் பற்றிய கட்டுரை ஒன்றினை கடந்த பேப்பரிலும் உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.புலம் பெயர் தேசமெங்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்று இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து பேசி ஒரு ஒற்றுமையுடன் மாவீரர்களிற்கான அஞசலியை செலுத்துவதே நாம் அவர்களிற்கு செய்யும் மரியாதையும் ஆகும் என்றும். என்றொரு வேண்டு கோளும் விடுக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் பேச்சு வார்த்தைகள் நடந்தது ஆனால் ஆக்கபூர்வமான எந்த முடிவுகளும் எடுக்கப்படால் இரு குழுக்கள்தனித்தனியே இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாட்டினை செய்யத் தொடங்கியதோடு மட்டுமல்லாது. ஆளாறிற்கு தாங்களே உண்மையானவர்கள் மற்றையவர்கள் விலை போனவர்கள் இலங்கை இந்திய உளவாளிகள் என மாறி மாறி அறிக்கைப் போரும் தொடங்கி விட்டனர்.

இதில் ஒரு பிரிவினர் புலிகள் அமைப்பில் இருந்து மே 2009 ம் ஆண்டிற்கு பின்னர் இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படைகளிடம் சரணடைந்தும் வேறு விதங்களில் தப்பியோடி ஜரேப்பாவிற்குள் நுளைந்தவர்கள். இவர்களின் வாதமென்னவென்றால் கடந்த காலங்களில் புலிகளின் வெளிநாட்டு பிரிவினர் பல தவறுகளை விட்டுவிட்டார்கள் அதுதான் புலிகளின் அழிவிற்கும் புலிகள் மீதான தடைக்கும் காரணம். பெருமளவான நிதியினையும் இவர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள்.

எனவே அந்த நிதி மற்றும் சொத்துக்களை தாங்கள் பொறுப்பெடுத்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தினை தாமே நகர்த்தப் போவதாகவும். இனி வருங்காலங்களில் தாமே புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நாள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப் போவதாக கூறுகிறார்கள்.. இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது கடந்த காலங்களில் புலிகளின் அனைத்துலகச்செயலகத்தினரில் பலர் நிதி மோசடி. தங்கள் பதவி நிலைகளை தக்கவைப்பதற்காக மற்றைய உறுப்பினரை காட்டிக்கொடுத்தல். மாவீரர் நாள் நிகழ்வுகளை வியாபாரமாக மாற்றியது என பலவிடையங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவை எல்லாவற்றிலும் மாற்றம் வரவேண்டும் மாவீரர் நாள் புலம் பெயர் தேசங்களில் புனிதமாக நடைபெற வேண்டுமென மாவீரர் குடும்பங்கள் அங்கலாய்க்கின்றார்கள். ஆனால் புதிதாய் வந்திறங்கியவர்கள். பழைய நிருவாக சீர் கேடுகளை மாற்றியமைப்பவர்களாகத் தெரியவில்லை.

அதற்கான காரணங்கள். புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்து விட்ட பிறகு இனி வரும் காலங்களில் அனைத்து போராட்டங்களும் ஆயுதமற்ற வன்முறையற்ற அரசியல் மற்றும் சனநாயக ரீதியிலான மென்முறைப்போராட்டங்களே. இதனை யாரும் ஒழித்திருந்து பலபெயர்களில் செய்ய வேண்டிய தேவையில்லை. பகிரங்கமாவே செய்யலாம் கைகளில் புலிக்கொடி ஏந்தி தலைக்கு மேலே தலைவர் பிரபாகரனின் படத்தை உயர்த்திப் பிடித்தபடியே செய்யலாம் எவ்வித தடையும் இல்லை.

ஆனால் புதிதாக வந்தவர்களோ ஒவ்வொரு நாடுகளில் வேறு வேறு பெயர்களில் அதுவும் புலிகளின் அமைப்பில் இருந்த தளபதிகள் அல்லது பழைய உறுப்பினர்களின் பெயர்களான வினாயகம்.சங்கீதன். ஜேம்ஸ். தும்பன்.கரிகாலன். தமிழரசன்.சுரேஸ். என்கிற பெயர்களில் நடமாடுவதோடு. பல இரகசியக் கூட்டங்களை மட்டுமே இதுவரை ஜரோப்பிய நாடுகளில் நடத்தியுள்ளனர். தாங்களே இறுதிவரை தலைவருடன் முள்ளி வாய்காலில் நின்றதாக கூறிக்கொண்டு புதியதொரு கட்மைப்பினை கட்டியமைத்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப் போவதாக கூறும் இவர்கள்.முதலில் பொதுக்கூட்டங்களை கூட்டி மக்கள் முன் தோன்றியோ .அல்லது ஊடகங்களான வானொலி தொலைக்காட்சிகளில் பங்கு பற்றியோ இறுதி யுத்தத்தின் போது நடந்த சம்பவங்கள் பற்றி புலம்பெயர் தேசத்து தமிழர்களிள் மனங்களில் தத்தளிக்கு பலநூறு கேள்விகளிற்கு பதில் கொடுத்து முதலில் அவர்களிற்கு தெளிவைக் கொடுக்கவேண்டும். அதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு போராட்டத்தினை எப்படி நகர்த்துவது அல்லது நகர்த்தலாம் எக்கிற ஆலோசனைகள் பகிரங்கமாக கலந்துரையாடப்படல் வேண்டும்.அதே நேரம் ஜரோப்பிய நாடுகளில் இவர்களது அகதி தஞ்சக் கோரிக்கைகள் இன்னமும் அனுமதிக்படாமலேயே சரியான ஆவணங்கள் கடவுச்சீட்டு இன்றி இவர்களால் எப்படி எல்லைப் பாதுகாப்பு கூடிய இங்கிலாந்து சுவிஸ்.நோர்வே. டென்மார்க் போனற நாடுகளிற்கொல்லாம் சுதந்திரமாக போய் இரகசியக் கூட்டங்கள் நடாத்த முடிகின்றது என்பதனையும் மக்களிற்கு புரியவைக்கவேண்டும்.அதுவரை இவர்கள் மீதான சந்தேகங்கள் தொடரும்
.
அடுத்து மாவீரர் நாளிற்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார எம்.பி ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார்.அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது வணக்கம் என்று தமிழில் சொன்னதும் கைதட்டி விசில் பறக்கும். பிறகு அவர் தன்னுடைய மொழியில் ..தமிழர்கள் அன்பானவர்கள் .பண்பானவர்கள். பயிற்பானவர்கள்.நன்றாக உபசரிப்பார்கள். அவர்கள் சுடும் தோசை இருக்கிறதே சூப்பர்..தமிழர்களின் வடை இருக்கிறதே சூப்பரோ சூப்பர்.என்னை இங்கு அழைத்தற்கு நன்றி அடுத்த எலெக்சன் வருது என்னையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ என்று விட்டு கடைசியாய் தமிழில் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விடுவார்.

எனவே மாவீரர் வணக்க நிகழ்வினை யார் ஒழுங்கு செய்தாலும். கொத்துறொட்டிக்கடை புடைவைக்கடை ஏசியன் சாமான் கடை என்று எதுவுமில்லாமல் வியாபார நோக்கமற்றும் ஜரோப்பாவின் யாரோ ஒரு கடைசி வாங்கு பாராளுமன்ற உறுப்பினர் வரவழைக்கப் பட்டு அவர் வடைக்கதை சொல்லாமலும்..இந்தியாவிலிருந்து உணர்ச்சிகர மேடைப் பேச்சாளர்கள்சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டு வீண் சச்சரவுகளையும் சண்டைகளையும் உருவாக்காமல் அனைத்தையும் தவிர்த்து..

பல்லாயிரம் போராளிகளின் குருதியில் நனைந்து மென் மேலும் சிவப்பாகிப் போன தமிழீழ தேசியக்கொடி மாவீரர் நாள் மண்டப வாயிலில் பட்டெளி வீசிப்பறக்க மாவீரர்களின் நினைவுகளை சுமந்து மண்டபத்தில் நுளையும் போது மாவீரன் எங்கள் தலைவனின் புன்னகை படங்கள் வரவேற்க ஆண்டு தோறும் வழைமை போல கார்த்திகை 27 மதியம் கடக்கும் நேரம் “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே “என்கிற பாடல் ஒலிக்க மண்டபத்தில் மாவீரர்களது படங்கள் மீதும் அவர்களது நினைவிடங்களின் மீதும் மலர்களை அள்ளித் தூவி மனம் விட்டு அழுது அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரவேண்டும்.இது தவிர்ந்து எதோவெரு எம்.பிக்காகவோ. மேடைப் பேச்சிற்காகவோ கொத்து றொட்டிக்காவவோ நடாத்தப் படும் எந்தவொரு மாவீரர் நாளும் மாவீரரை மதிக்கும் நாள் அல்ல…..மக்களும் வரமாட்டார்கள்.

சாத்திரி
ஒருபேப்பர்

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

maaveerar_2015-102-1024x683

மாவீரர் நினைவெழுச்சிநாளும், தமிழ்மக்களும்

மாவீரர் நாள் பற்றியும், அதை நடாத்துவது பற்றியும் சில சர்ச்சைகள் உள்ளன. அதுபற்றிபார்க்க முன்பு, வழமைபோல இந்த முறையும்,வேலை, மற்றும் …

Leave a Reply