Home / Blogs / சிரியாவில் ஏற்பட்ட எழுச்சியும் ஈரானின் பாதுகாப்பும் ஹிஸ்புல்லாவின் இருப்பும்.

சிரியாவில் ஏற்பட்ட எழுச்சியும் ஈரானின் பாதுகாப்பும் ஹிஸ்புல்லாவின் இருப்பும்.

ஒரு பேப்பருக்காக வேல் தர்மா

ஈரானைச் சுற்றி வளைக்கும் அமெரிக்கா

1970-ம் ஆண்டு சிரியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஹஃபீஸ் அல் அசாத் படைத்துறைப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி அங்கு தனது படைத்துறைச் சர்வாதிகார ஆட்சியை நிறுவினார். ஒரு கட்சி ஆட்சியு நடக்கும் சிரியாவில் பெண்களுக்கும் சிறுபானமயினருக்கும் எதிரான பாராபட்சம் கொடூரமானது.1963 இல் இருந்து சிரியா அவசர காலச் சட்டத்தின் கீழ் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவரது ஆட்சிக்கு எதிராக சிரியாவின் ஹமா நகரத்தில் 1982-ம் ஆண்டு மக்கள் கிளர்ந்தெழுந்த போது ஹஃபீஸ் அல் அசாத் தனது இரும்புக்கரத்தால் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைக் கொன்று கிளர்ச்சியை அடக்கினார். அரபு நாடுகளின் வரலாற்றில் அரசு ஒன்று கட்டவிழ்த்து விட்ட மிக மோசமான வன்முறை அதுவாகும். ஹமா நகரமே தரை மட்டமாக்கப்பட்டது. 2000இல் ஹஃபீஸ் அல் அசாத் இறந்த பின்னர் அவரது மகன் பஸார் அல் அசாத் பதவிக்கு வந்தார். 11-09-1965இல் பிறந்த பஸார் அல் அசாத் கல்வியில் கெட்டித்தனம் மிக்கவர். சிரியாவில் மருத்துவப் பட்டம் பெற்ற பஸார் அல் அசாத் பிரித்தானியாவில் மேற்படிப்பையும் செய்து முடித்தவர்.

அரபு நாடுகளில் இந்த ஆண்டின் ஆரம்பப்பகுதிகளில் மல்லிகைப் புரட்சி அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்த போது அது சிரியாவையும் விட்டு வைக்கவில்லை. மார்ச் 15-ம் திகதியை சிரிய மக்கள் முகவேட்டின் மூலமாக (Facebook) தன்மான நாளாகப் பிரகடனப்படுத்தி தலைநகர் டமஸ்கஸில் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அன்றிலிருந்து இன்றுவரை மூவாயிரத்துக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். முதலில் துருக்கியும் பின்னர் அரபு லீக்கும் சிரியாவில் அமைதியை ஏற்படுத்த முயன்று தோல்விகண்டன. ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் பான் கீ மூனும் சிரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப்பற்றி தனது கரிசனையை ஆகஸ்ட் 17-ம் திகதியன்று வெளியிட்டார். மறுநாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரிய அதிபர் பஸார் அல் அசாத் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கையை விடுத்து அமெரிக்காவில் உள்ள சிரியச் சொத்துக்களை முடக்கினார். ஆகஸ்ட் 22-ம் திகதி பஸார் அல் அசாத் சிரியாவில் 2012 பெப்ரவரியில் பாராளமன்றத் தேர்தல் நடக்கும் என்றும் அதில் பாத் கட்சியினர் பங்கு பெற முடியாது என்றும் அறிவிக்கிறார். சில அரசியல் சீர் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

தடை தடை என்றாலும் கடையில் வியாபாரம் நடக்கும்.
ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் சிரியாமீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. மேற்குலக பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட வெளிநாட்டு நாட்டு நாணய நெருக்கடியைத் தவிர்க்க சிரிய அரசு பல பொருட்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடு விதித்தது. அமெரிக்கா சிரியாவிற்கு எதிராகத் பொருளாதாரத் தடை விதித்த போதும் அமெரிக்க நிறுவனமான புளூ கோட் சிரிய அரசுக்கு இணையங்கள் மூலமான தொடர்பாடல்களையும் பிரச்சார நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் கருவிகளையும் மென் பொருளையும் வழங்கி பெரும் இலாபம் ஈட்டியுள்ளது. எதிர்க் கட்சிகளின் சிரியத் தேசிய சபை சிரிய மக்களைப் பாதுகாக்கும் படி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றன. ஒக்டோபர் 4-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் சிரியாவிற்கு எதிராக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை சீனாவும் இரசியாவும் இரத்துச் செய்கின்றன. ஒக்டோபர் 14-ம் திகதி சிரியாவில் 3000இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. ஒக்டோபர் 24-ம் திகதி அமெரிக்க தனது தூதுவரை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்தது. அரபு லிக்கிற்கு சிரிய அதிபர் பஸார் அல் அசாத் வழங்கிய உறுதி மொழிகள் பல இன்னும் அவரால் நிறைவேற்றப் படவில்லை.

சிரியா வித்தியாசமானது
எகிப்தில் எழுச்சி நடந்த போது படைத்துறையினர் நடுநிலை வகுத்தனர். அவர்கள் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை. சிரியாவில் படைத்துறையினர் ஆட்சியாளர்களுடன் இருக்கின்றனர். லிபியாவில் படையினர் விலகி கிளர்ச்சியாளர்களுடன் இணைந்தனர். சிரியாவில் படையில் இருந்து குறிப்பிடக் கூடைய அளவிற்கு யாரும் வெளியேறவில்லை. சிரியப் படையினர் லிபியப் படையினரிலும் பார்க்க வலிமையானவர்கள். இசுலாமியத் தீவிரவாதிகள் முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாஃபியுடன் நல்ல உறவு நிலையில் இருந்திருக்கவில்லை. அமெரிக்காவின் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போருக்கு கடாஃபி ஒத்துழைத்தார். சிரியா பல இசுலாமியத் தீவிரவாத இயக்கங்களுடன் நல்ல உறவைப் பேணுகிறது. ஆதரவுத் தளம் என்று பார்க்கும் போது எகிப்தின் ஹஸ்னி முபராக்கையும் லிபிய மும்மர் கடாஃபியையும் விட சிரிய அதிபர் பஸார் அல் அசாத்தின் ஆதரவுத் தளம் பரந்ததும் பலமானதுமாகும். சிரியப் படையமைப்பு நன்கு கட்டமைக்கப்பட்டதும் பஸார் அல் அசாத்துக்கு விசுவாசமானதும் ஒழுங்கு படுத்தப்பட்டதுமாகும்.

மசியாத கிளர்ச்சியாளர்கடுளும் அசையாத அசாத்தும்
எகிப்தைப் போலவே சிரியாவிலும் இளையோர் மத்தியிலான அதிருப்தி அதிகமானதாகக் காணப்படுகிறது. அவர்களில் வேலையற்றோர் 25%. ஏழுமாதமாக சிரியப் படையினர் பல வன்முறைகளை கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட போதும் சிரியாவில் கிளர்ச்சி ஓய்வதாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் புதிய நகரங்களுக்கு கிளர்ச்சிகள் பரவுகின்றன. காயப்பட்ட கிளர்ச்சியாளர்கள் மருத்துவ மனைகளில் பல சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர். அல் அசாத் அரபு லீக்குடன் பேச்சு வார்த்தை நடத்துவது போல் காலத்தை இழுத்தடிக்க முயல்கிறார். அல் அசாத் இதுவரை செய்த அரசியல் சீர்திருத்தங்கள் ஆர்ப்பாட்டக் காரகளைத் திருப்திப் படுத்தவில்லை. சிரிய மக்கள் லெபனானுக்குள் தஞ்சம் புகுவதைத் தடுக்க சிரியப் படைகள் எல்லைப் பகுதிகளில் கண்ணி வெடிகளைப் புதைத்துள்ளனர்.

சிரியாவில் அணு ஆயுதம் – ஈரானில் இரசாயன ஆயுதம் போல்!
சிரியாவில் பாக்கிஸ்த்தானிய விஞ்ஞானிகளின் உதவியுடன் அணு ஆயுத உற்பத்தி ஏற்பாடுகள் செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு அணு சக்தி முகவரகம் தெரிவித்துள்ளது. அம்முகவரகம் சிரியாவிற்கும் பாக்கிஸ்த்தானிய விஞ்ஞானி ஏ. கியூ. கானுக்கும் இடையில் நடந்த கடிதத் தொடர்புகளைப் பெற்றுள்ளதாகக் கூறுகிறது. சிரியாவின் வடமேற்குப் பிராந்திய நகரான அல் ஹசாக்காவில் பாரிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது லிபியாவின் மும்மர் கடாஃபிக்கு அணு ஆயுத உற்பத்திக்கு ஏ. கியூ. கான் வடிவமைத்த கட்டிடத்தைப் போல உள்ளது என்று மேற்படி முகவரகம் தெரிவிக்கிறது. இது சிரியாவில் மேற்குலகப் படைத் தலையீட்டிற்கு இன்னொரு சாட்டாக அமையலாம்.

பிராந்திய கேந்திரோபாய சமநிலை.
சிரியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிமீது ஈரானும் லெபனானில் செயற்படும் தீவிர இயக்கமான ஹிஸ்புல்லாவும் அதிக கரிசனை கொண்டுள்ளன. லிபியாவில் கடாஃபியின் ஆட்சி வீழ்ச்சியடந்ததைத் தொடர்ந்து ஈரான் தான் மேற்கு நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக உணர்கிறது. கடாஃபியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அடுத்த இலக்கு பஸார் அல் அசாத்தான் என்று பல மேற்கு நாட்டு அரசியல்வாதிகள் பகிரங்கமாகக் கூறினர். கடாஃபியின் கொலைக்குப் பின்னர் சிரிய கிளர்ச்சியாளர்கள் புதிய உத்வேகம் பெற்றுள்ளனர். சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கு மேற்குலக சார்பு ஆட்சி ஏற்பட்டால் ஆபிரிக்காக் கண்டத்தில் அதிலும் முக்கியமாக அரபு நாடுகளில் ஆதிக்கச் சமநிலை மேற்கு நாடுகளுக்கு பெரும் சாதகமாக அமைந்து விடும் என்று ஈரான், சீனா, இரசியா ஆகிய நாடுகள் உறுதியாக நம்புகின்றன. மேற்கு நாடுகள் லிபியாவில் மக்களைப் பாதுகாக்க விமானப் பறப்பற்ற பிராந்தியத்தை உறுதி செய்கிறோம் என்ற போர்வையில் ஒரு ஆட்சியாளர் மாற்றத்தை வெற்றிகரமாக ஆளணி இழப்பு ஏதுமின்றி நிறைவேற்றி விட்டன. ஹிஸ்புல்லா இயக்கத்திற்கான ஆயுத விநியோகம் ஈரானில் இருந்து சிரியா ஊடாகவே நடைபெறுகிறது. இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடையும் போதெல்லாம் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் அவர்களது குடும்பத்தினரும் சிரியாவிலேயே தஞ்சம் புகுவதுண்டு. சிரியாவில் இருந்து ஹிஸ்புல்லா நிதி ஆயுத உதவி பெறுகிறது. ஹிஸ்புல்லா இயக்கம் சிரியப் பிரச்சனையில் அரசுக்கு சார்பாக திரைமறைவில் இருப்பதை அதன் இரண்டாம் மூன்றாம் நிலைத் தலைவர்கள் விரும்பவில்லை. அது ஹிஸ்புல்லாவின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது என்று அவர்கள் கருதுகின்றனர். அத்துடன் இது மொத்த அரபு மக்களின் எதிர்ப்புக்கு ஹிஸ்புல்லா உள்ளாகலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். அவை மட்ட்டுமல்ல இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு போன்ற மக்களாட்சித் தத்துவத்தில் அதிக நம்பிக்கை உள்ள அமைப்புக்களுடன் ஹிஸ்புல்லா கைகோர்க்க வேண்டும் என்றும் பல ஹிஸ்புல்லா அமைப்பினர் கருதுகின்றனர். மேலும் சில ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தமது இயக்கம் அடக்கு முறை ஆட்சியாளரான அல் அசாத்தை ஆதரிப்பதை விடுத்து சிரிய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இவற்றால் ஹிஸ்புல்லாத் தலைமை தாம் சிரியக் கிளர்ச்சியை ஆதரிப்பது போல் பகிரங்கமாக அறிவித்த போதும் அவர்கள் சிரிய ஆட்சி மாற்றம் தமக்கு ஆபத்தானது என்றே நம்புகின்றனர்.

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

சிறீலங்கா சனாதிபதியின் நிபுணர்குழு ஐ.நாவுக்கான சவாலா?

நிர்மானுசன் பாலசுந்தரம் (தினக்குரல் பத்திரிகைகாக நிர்மானுசன் எழுதிய கட்டுரையின் சுருக்கத்தினை அதன் முக்கியத்தவம் கருதி இங்கு மறுபிரசுரம் செய்கிறோம். நன்றி …

Leave a Reply