Saturday , February 22 2020
Home / அரசியல் / அரசியல் ஆய்வு / சிறிலங்காவின் அதிபர் தேர்தலும், ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியப்பாடும்
maxresdefault

சிறிலங்காவின் அதிபர் தேர்தலும், ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியப்பாடும்

2010 ஜனவரியில் நடைபெற்ற சிறிலங்காவின் அதிபர் தேர்தலின்போது, அதுதொடர்பாக `பொங்குதமிழ்’ இணையதளத்தில் ஒரு கட்டுரையொன்றை எழுதியிருந்தேன். மகிந்த இராஜபக்சவே தேர்தலில் வெல்லவேண்டும், அதுவும் தனித்து சிங்கள மக்களின் வாக்குப்பெரும்பான்மையால் வெல்ல வேண்டும் என்ற கருத்துப்பட அக்கட்டுரை அமைந்திருந்தது. இக்கட்டுரையை, திரு. நடேசன் சத்தியேந்திரா தனது tamilnation.org  இணையதளத்தில் மீள் பிரசுரம் செய்திருந்தார். பின்னர், தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் `வணக்கம் மாமன்னரே’ என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரையை அதே இணையத்தளத்திற்காக எழுதியிருந்தேன். போரில் தமிழர்களை வென்றமைக்காக மகிந்த இராஜபக்சவை மாமன்னராக உருவகித்து பாடும் `ஆயுபோவெவ மகரஜனாய் …’ என்ற சிங்களப் பாடலின் தலைப்பினையே பின்னைய கட்டுரைக்கு தலைப்பாக இட்டிருந்தேன். (அப்பாடலின் உள்ளடக்கத்துடன் முற்றாக முரண்பட்டாலும், இளம் சிங்களப்பாடகி சகலி ரோச்சனா கமகேயின் இனிமையான குரலுக்காக அப்பாடலை ஒருமுறையாவது கேட்கலாம்)

மகிந்த இராஜபக்ச ஏன் வெற்றி பெறவேண்டும் என்பதற்கான காரணங்கள் எனது கட்டுரையில் தெளிவாக விளக்கப்பட்டிருந்தும், அக்கட்டுரைக்கு சில தமிழ்த் தேசியவாதிகள் கண்டனம் தெரிவித்தார்கள். சிலர் மின்னஞ்சல் மூலம் அவதூறுகளை அள்ளி வீசியிருந்தார்கள். மகிந்த இராஜபக்ச தோற்கடிப்பதனைக்காட்டிலும்,அவரது வெற்றி தமிழ் மக்களுக்கு சில நன்மைகளைப் பெற்றுத்தருமானால் அவரது வெற்றிக் குதூகலிப்புகளை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டம்ஒரளவிற்காவது வலுப்பெறுவதற்கு இலங்கைத் தீவின் அரசியல் சூழ்நிலை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையிட்டு அறியாதவர்கள் அல்லது அது தொடர்பில் கரிசனை அற்றவர்களேமகிந்தவை தோற்கடித்துவிட்டு இன்னொரு `பசாசை’ ஆட்சிக்கு கொண்டு வர முனைகிறார்கள்.இதில் இராஜதந்திர முறையில் போராடுகிறோம் என்கிறவர்கள் உங்கள் இராஜதந்திரம் யாருடைய நலன் நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதை ஒரு தடவை மீளாய்வு செய்துகொள்ளுங்கள்.

மகிந்த தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அவரினால் சிறிலங்காவை மேற்குலக தாராண்மைவாத ஒழுங்கிற்குள் கொண்டு வரமுடியாது, அவர் மேற்குலகுடன் முரண்பட வேண்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே மகிந்தவின் வெற்றி தமிழ் மக்களுக்கு அனுகூலமான நிலையை ஏற்படுத்தும் என எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். கடந்த ஐந்து வருடகாலத்தில் அது ஒரளவு உறுதிபடுத்தபட்டுள்ளது எனலாம். குறைந்தபட்சம் ஒரு அரைகுறையான சர்வதேச விசாரணை வரையிலாவது வந்து நிற்கிறது என்றால் அதற்கு மகிந்த இராஜபக்சவின் தெரிவு உதவியிருக்கிறது.

கடந்த தேர்தலில், மகிந்த தவிர வெற்றி பெறக்கூடிய நிலையில் இருந்த வேறெந்த வேட்பாளரும்மகிந்த அளவிற்கு மேற்குலகுடன் முரண்பட்டிருக்க முடியாது. இவ்விடத்தில், மகிந்த ஒரு ஏகாதிபதித்திய எதிர்ப்பாளர் என்றோ, இடதுசாரி முற்போக்குவாதி என்றோ யாரும் கருதி விடவேண்டாம். மாறாக, போரில் கிடைத்த வெற்றியை மூலதனமாக வைத்து தனது குடும்ப ஆட்சியை தக்கவைக்க முயலும் மகிந்தவால் வெளிச்சகத்திகளின் நெறிப்படுத்துலுக்கு வளைந்து கொடுப்பது முடியாமலிருக்கிறது என்பதுவே யதார்த்தம். அதே சமயத்தில் இவ்வெளிச்சக்திகளைக் காட்டியே உள்ளுரில் தனது வாக்கு வங்கியை அதிகரிப்பதில் அவர்குறிப்பிட்டளவு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த தேர்தல் காலத்தில் பல தமிழர்களிடம்தமிழின அழிப்பினை நடாத்திய ஒருவரை எவ்விதத்திலும் தோற்கடிக்க வேண்டும் என்ற குறுகியநோக்கமே இருந்தது. ஆனால் கூட்டமைப்பினரோவெளித்தரப்புகளின் வேண்டுதலுக்கு இணங்கவேபொதுவேட்பாளரான சரத் பொன்சேகா விற்குஆதரவளிக்க முன்வந்தார்கள். தங்களது ஐக்கியஇலங்கை நிலைப்பாட்டையும், இலங்கைத் தீவில்ஜனநாயகத்தை ஏற்படுத்துவதில் தமக்குரியவிருப்பையும் வெளித்தரப்புகளுக்கு காட்டுவதற்காக அத்தேர்தலை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். இதைத்தான், கூட்டமைப்பு ஒவ்வொரு தேர்தலிலும், தேர்தல் முடிவுகள் மூலம்தாங்கள் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை சொல்லவிரும்புவதாகக் கூறிவருகிறது.

இனப்படுகொலையை நடாத்தி முடித்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக கூட்டமைப்பினர் வாக்குக் கேட்டபோது, அவருக்கு வாக்களிக்க தமிழ் மக்களும் முன்வந்தார்கள். மகிந்த மீதான எதிர்ப்பினைத் தெரிவிக்க தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகள் பொன்சேகாவிற்கு ஆதரவாக வழங்கிய வாக்குகள் எனவும், அதன் எண்ணிக்கை 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையைவிட அதிகமானது எனஅண்மையில் சுமந்திரன் கூறியிருந்ததாக ஊடகங்களில் செய்தி வந்திருந்த்து. தாம் ஒரு பொது வாக்காளரை அடையாயப்படுத்தினால் தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற அர்த்தத்திலேயே சுமந்திரன் இவ்வாறு கூறியிருந்தார். ஆகவே எதிர்வரும் அதிபர் தேர்தலிலும் பொதுவாக்காளர் ஒருவரை முன்னிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தரப்புகளுடன் கூட்டமைப்பும் கைகோர்த்துள்ளது.

சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தல் வரும்ஜனவரி மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வளவு விரைவில் தேர்தலை நடாத்த முடியுமோ அவ்வளவு விரைவில் நடாத்துவதன் மூலமே தனது வெற்றி வாய்ப்பினை தக்க வைக்க முடியும் என்பதனை இராஜபக்ச அறிந்து வைத்திருக்கிறார். சிறிலங்கா அரசியலமைப்பின் பதினெட்டாம் திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் ஒருவர் எத்தனை தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என்றபோதிலும், எத்தனை தடவைபோட்டியிட்டாலும் வெற்றிபெறுவார் என்ற நிலையில் மகிந்த இல்லை. (முன்னாள் தமிழக முதல்வர்எம்.ஜி. இராமச்சந்திரன் அவ்வாறான நிலையிலிருந்தார்). பொருளாதாரச் சுமை, இராஜபக்ச குழாமினதும் அதன் ஆதரவாளர்களினது அத்துமீறிய நடவடிக்கைகள் என்பன அவரது செல்வாக்கினைவீழ்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்நிலையில்இன்னும் எத்தனை காலத்துக்கு தான் புலிகளைவென்ற கதையைக்கூறி அவர் வாக்குக் கேட்கலாம்?இதனை இராஜபக்ச அறிவாரோ என்னவோ அவரதுஆலோசகர்கள் நன்கறிந்து வைத்திருக்கிறார்கள்.அதேசமயம், வெளித்தரப்புகள், குறிப்பாக மேற்குலக சக்திகள், ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தத்தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதனையும், காலம் செல்லச்செல்ல அதற்கானவாய்ப்புகள் அதிகரித்துச் செல்லும் என்பதனையிட்டும் இராஜபக்சவின் ஆலோசகர்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளார்கள்.

வரும் ஜனவரியில் அதிபர் தேர்தல் நடைபெறுமானால் அதற்கு முன்பதாக வேறொரு தேர்தலும்நடைபெறமாட்டாது. இந்நிலையில் வாக்காளர்களின் மனநிலையை அறியும் ஒரு தேர்தலாக ஊவா மாகாண சபைத் தேர்தல் அமைந்திருந்தது. இத்தேர்தலில் இராஜபக்சவின் ஐக்கிய சுந்திர முன்னணி வெற்றி பெற்றபோதிலும் 40 விழுக்காட்டிற்கு சற்று அதிகமான வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி பற்றியே இலங்கை தீவின் அரசியல் விடயங்களில் அக்கறை கொண்டவர்கள் மத்தியில் பேசப்படுகிறது. குறிப்பாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கிய இளைஞர் ஹரின் பெர்ணான்டோ விடயத்தில் இராஜபக்சவின் விசுவாசிகளே சிறிது அச்சப்படுகிறார்கள். ஜக்கிய தேசியக்கட்சியில் இத்தகைய இளைஞர்கள் முன்னணிக்கு வந்தால், அது இராஜபக்சவின் அரசியல் செல்வாக்கினை வீழ்ச்சியடையச் செய்யலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையில் சேடம் இழுத்துக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சிக்கு இந்த இளைஞர்கள ஒட்சிசன் கொடுக்கிறார்கள் என்பதனை ஐக்கியதேசியக் கட்சியும் உணரத் தொடங்கியிருக்கிறது. ஆதலால் ஊவா தேர்தல் முடிவடைந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே சஜித் பிரேமதாச அக்கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இப்புறச் சூழலில், முன்னர் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கோரியகூட்டமைப்பும், தமிழர்களில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களான சிறுமுதலாளிகளும் மகிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்றகோசத்துடன் தமிழ் மக்களிடம் வாக்குக் கோரி வரலாம். ஆனால், மகிந்தவை தேர்தலில் தோற்கடித்துவிட்டால், ஒரு அரசாங்க மாற்றம் ஏற்பட்டால் என்ன நடைபெறும் என்பதனை கவனத்தில் எடுக்கவேண்டியவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்.இன்றைக்கு, சர்வதேச விசாரணை, ஐ நா மனிதவுரிமைச்சபையில் தீர்மானம் என்றளவில் மந்த கதியிலாவது இயங்குகிற மேற்குலகம். ஆட்சி மாற்றத்துடன் இவற்றை உடப்பில் போட்டுவிடுவதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாகவுள்ளது. இல்லாவிடினும், புதிய அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்குகிறோம் என்று இன்னமும் கால அவகாசம் வழங்கப்படும். மகிந்த இராஜபக்சவினைப்போலன்றி, ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் தாராண்மைவாத ஒழுங்கிற்குள் உடனடியாகவே வந்துவிடும்.

சிங்கள அரசை (sinhala state) மேற்குடன் தொடர்ந்து முரண்பாட்டுக்குள் வைத்திருக்க மகிந்த இராஜபக்சவே மீண்டும் அதிபராகத் தெரிவு செய்யப்படவேண்டும். இதனை மேற்குலனை பகைக்காதவகையில் செய்து முடிக்கவேண்டும் என்பதனை தமிழ் வாக்காளார்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புவோமாக.

About கோபி

Check Also

gajen

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்

தமிழ் மக்கள் பேரவையின் அரசியற் தீர்வு தொடர்பான முதல் வரைபு வெளிவந்து மூன்றுவாரங்கள் கடந்துவிட்டன. ஜனவரி முப்பதியோராம் திகதியாழ்ப்பாணத்தில் நடைபெற்ற …

Leave a Reply