Home / Blogs / செய்தியாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

செய்தியாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

அளுத்கம மற்றும் பேருவல பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக, செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கும் அச்சுறுத்தப்பட்டமைக்கும் லண்டனைத்தனமாகக் கொண்டியங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கண்டனம் வெளியிட்டிருக்கிறது.

இவ்வறிக்கையில மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த யூன் 15ம் திகதி பொது பல சேன என்ற சிங்கள அடிப்படைவாதக் குழுவுக்கும், முஸ்லிம்களின் ஒரு குழுவுக்குமிடையில் அளுத்கமை தர்க்கா நகரப் பகுதியில் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வன்முறை களுத்துறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலாக மாற்றமடைந்ததோடு, களுத்துறை மாவட்டத்தின் வேறு பகுதிகளுக்கும் பரவலடைந்தது.

இந்த சம்பவங்கள் தொடர்பான செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்களில் அல்-ஜசீரா, சண்டே லீடர் மற்றும் இருதின ஆகிய ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதோடு அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். அதேவேளை, இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு, உள்ளுர் ஊடகங்களுக்கு சிறீலங்காவின் அதிகார பீடங்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட இரு சம்பவங்களையும் நாம் வன்மையாக கண்டிப்பதோடு, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் எடுப்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இலங்கைத் தீவில் தொடர்ச்சியாக ஊடகச் சுதந்திரம் நசுக்கப்பட்டு வருவதையும், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதையும் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான பொறிமுறைகள் தொடர்பாக சர்வதேச சமூகம் பொருத்தமான நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.

தமிழ் சிவில் சமூகம் வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கையின் தென் மேற்குப் பகுதியில் – குறிப்பாக அளுத்கம மற்றும் பேருவளையில் – முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை தமிழ் சிவில் சமூக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது. வன்முறையில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு எமது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு இந்தக் கடினமான வேளையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எமது முழுமையான சகோதரத்துவ ஆதரவையும் விளங்கிக்கொள்ளலையும் வெளிப்படுத்துகிறோம்.

இத்தாக்குதல்களுக்கு காரணமான பிரதான காரணகர்த்தாக்கள் இன்னும்கைது செய்யப்படாமல் இருப்பதையிட்டு கலக்கமடைகின்ற போதிலும் நாம் ஆச்சரியப்படவில்லை. இத்தாக்குதல்களுக்கு மூல காரணமாக இருந்தோர்பாதுகாப்புத் துறையின் மேலிடத்தோடு நெருக்கமாக இருப்பவர்கள் என்பதால் நாம் ஆச்சரியப்படவில்லை. நாங்கள் இதில் ஆச்சரியப்படாமைக்கான மற்றொரு காரணம் இத்தகைய வன்முறைகள் முன்னர் இடம்பெற்ற போதெல்லாம் சட்டத்தின் மௌனம் தொடர்ந்து நிலவி வந்தமையினால் ஆகும். இது இலங்கை வரலாற்றின் ஒரு அம்சமாகும்.

இவ் வன்முறைகள் இயல்பாக (திட்டமிடாமல்) நடைபெற்ற ஒன்றாகவோ, ஒரு புதிய நிகழ்வாகவோ விளங்கிக் கொள்ளப்படக் கூடாது. தாக்குதல்களின் ஆரம்ப கட்டத்தில் கிடைக்கப்பட்ட, நன்கு உய்த்தறியப்பட்ட செய்திகள் இத்தாக்ககுதல்களை நடாத்திய சிங்களக் காடையர் கும்பல்களை தடுத்து நிறுத்துவதற்கு காவல் துறையினரோ விசேட அதிரடிப் படையினரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

வெகு நீண்டகாலமாக சிங்கள பௌத்த அரசினால் இந்நாட்டின் ஏனைய சமூகங்கள் மீது அவர்கள் சமூக, கலாச்சார, அரசியல் பொருளாதார ரீதியாக முன்னேறக் கூடாது – அதற்கு இடமளிக்கக் கூடாது – என்பதை நோக்கமாகக் கொண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்களின் ஓர் அங்கமாகவே அளுத்கமவில் நடந்த தாக்குதல்களும் பார்க்கப்பட வேண்டும். இந்தத் தாக்குதல்களின் காரணகர்த்தாக்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவது முக்கியமே.

ஆனால் அது போதுமானதாக இருக்காது. இப்பிரச்சனை ஒரு குறிப்பிட்ட அமைப்பு தொடர்பானதோ அல்லது ஒரு கட்சி தொடர்பானதோ அல்ல. இப்பிரச்சனை இலங்கையில் ஒரு வேரோடிப் போன பிரச்சனை. இது விளங்கப்படாவிட்டால், இதில் மாற்றம் வராவிட்டால் அளுத்கமவில் நடந்தவை இவ்வாறான தாக்குதல்களின் வரலாற்றின் முடிவான அத்தியாயம் அல்ல என்றே நாம் கருதுகிறோம். அளுத்கம எமக்கு ஞாபகப்படுத்தும் இந்த சிக்கலான புரிதலை விளங்கிகொள்ளவும் அதன் அடிப்படையில் செயற்படவும் அனைவரையும் வேண்டுகிறோம்.

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

lakshmana-photo-kovan-tamil-photo-folk-singer_5bfe9146-7fdf-11e5-ba56-8cfa9414553d

எமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்

எமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்! கலை என்பது பிழைப்பிற்கானது அல்ல! மக்களுக்கானது! நமது …

Leave a Reply