Saturday , February 22 2020
Home / அரசியல் / ஜெனீவாவில் இந்தியா வாக்காமையினால் இந்தியப் பலவீனம் அம்பலமானது

ஜெனீவாவில் இந்தியா வாக்காமையினால் இந்தியப் பலவீனம் அம்பலமானது

விகடனில் பல்துலக்கி, குமுதத்தில் முகம் கழுவி, கல்கியில் விபூதி பூசி, காந்தியினதும் நேருவினதும் படங்களைப்பார்த்து, நாட்களை ஆரம்பித்த ஈழத்தமிழினத்தில் இன்னும் சிலர்தமக்கான விடிவு இந்தியாவில் இருந்து உதயமாகும் என நம்புகின்றனர். நிலாந்தன் என்பவர்புது டில்லி நகர்ந்தால் தான் ஜெனிவா நகரும்என்று எழுதிய மை காயமுன்னர் இந்தியாவின்ஆதரவின்றி இலங்கை தொடர்பான தீர்மானம்ஒன்று ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்தியா வாக்களித்த முன்மொழிவு ஒன்றுதோற்கடிக்கப்பட்டது.

ஐக்கிய அமெரிக்காவின் அனுசரணையுடன் இலங்கைத் தீவில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத் தீர்மானத்தின் படி மனித உரிமைக் கழக ஆணையாளர் இலங்கையில் 2002-ம் ஆண்டில்இருந்து 2009-ம் ஆண்டுவரை நடந்த அத்து மீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

ஆர்ஜென்ரீனா, ஒஸ்ரியா, பெனின், பொட்ஸ்வானா, பிரேசில், சிலி, கொஸ்ர ரிக்கா, ஐவரிக்கோஸ்ற், செக் குடியரசு, எஸ்ரோனியா, பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, மெக்சிக்கோ, இத்தாலி, மொன்ரினிக்ரோ, பெரு, கொரியக் குடியரசு, ருமேனியா,சீராலியோன், மசடோனியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய23நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து மொரிசியஸ், மொன்ரினிக்ரோ, செக் குடியரசு ஆகிய நாடுகள் இணைந்து முன்வைத்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.

அல்ஜீரியா, சீனா, கொங்கோ, கியூபா, கென்யா, மாலைதீவு, பாக்கிஸ்த்தான், இரசியா, சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசூலா, வியட்னாம் ஆகிய 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. பேர்கினா ஃபாசோ,எதியோப்பியா, கபன், இந்தியா, இந்தோனோசியா, ஜப்பான், காஜக்ஸ்த்தான், குவைத், மொரொக்கோ, நமீபியா, பிலிப்பைன்ஸ், தென் ஆபிரிக்கா ஆகிய 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

காணாமல் போன படைக் குறைப்பு
தீர்மானம் நிறைவேற்றப்பட முன்னர் இலங்கை தொடர்பாக மனித உரிமைக்கழக ஆணையாளரின் அறிக்கையில் உரையாற்றியஅமெரிக்கப் பிரதிநிதி தமிழர் பகுதிகளில் அளவுக்கு அதிகமான படையினர் இருப்பதைப்பற்றிக் குறிப்பிட்டார். ஆனால் தீர்மானத்தில் தமிழர் பகுதிகளில் படையினர் குறைக்கப்படவேண்டும் (demilitarisation) என்ற பதத்தை இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா நீக்கி இருந்தது.

முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றியாம்.
2014 மார்ச் 27-ம் திகதி ஐநா மனித உரிமைக்கழகத்தில் நிறைவேற்றப்பட்ட் தீர்மானம் முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றி என மேற்கத்தைய ஊடகங்களும் சம்பந்தன் ஐயாவும் கூறுகின்றார்கள். ஆனால் இலங்கைஊடகங்களின் கருத்துக்களின் படி தீர்மானத்தை சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் வரவேற்கவில்லை. அவர்கள் நடந்தபோர்க்குற்றத்தை மறைப்பதையே விரும்புகின்றனர். இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது என சிங்கள மக்கள் கருதுகின்றனர்.

இலங்கை தனக்குக் கிடைத்த வெற்றி என்கிறது.
அமெரிக்கா மனித உரிமைக் கழகத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு வாக்குரிமையுள்ள 47 நாடுகளில் 12 நாடுகள் எதிர்த்து வாக்களித்தமையும் 12 நாடுகள் வாக்கெடுப்பில்கலந்து கொள்ளாமையும் அதை பெரும்பான்மையான 24 நாடுகள் ஆதரிக்கவில்லை. 23 நாடுகள் மட்டுமே ஆதரித்தன. இது இலங்கைக்குக் கிடைத்த வெற்றி என்கின்றது இலங்கை அரசு.

உண்மையைத் திரிக்கும் தீர்மானம்
அயர்லாந்தில் கூடிய டப்ளின் தீர்ப்பாயமும் ஜேர்மனியில் கூடிய பிறீமன் தீர்ப்பாயமும் இலங்கையில் நடந்தது ஒரு இனக்கொலை என்றன. ஐநா பொதுச் செயலர் நியமித்த நிபுணர்குழு இலங்கையில் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரானகுற்றம் இழைக்கப் பட்டமைக்கும் காத்திரமானஆதாரங்கள் இருப்பதாக தனது அறிக்கையில் தெரிவித்தது. ஆனால் அமெரிக்கா இந்தப் போர்க்குற்றங்களையும் இனக் கொலையையும் கருத்தில் கொள்ளாமல் இலங்கையில் நடந்ததும் நடப்பதும் ஒரு மனித உரிமைப் பிரச்சனையே என தான் 2014 மார்ச் மாதம் 27-ம் திகதி மனித உரிமைக் கழகத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம் திரிக்கின்றது. பிறீமன் தீர்ப்பாயம் இலங்கையுடன் இணைந்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் போர்க் குற்றம் புரிந்ததாகத் தெரிவித்தது. இப்போது ஒரு குற்றவாளி இன்னொரு குற்றவாளியை நீதிபதியாக்குகின்றார்.

அம்பலமான இந்திய அயோக்கியத்தனம்
இதற்கு முன்னர் அமெரிக்கா கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களையும் திரைமறைவுச் சதி மூலம் நீர்த்துப் போகச் செய்தவிட்டு பின்னர்அந்தத் தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கிய இந்தியா இந்த முறை தான் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றது. இந்தியா1987-ம் ஆண்டு ஈழத் தமிழர்களின் பாதுகாப்பிற்கு தான் பொறுப்பு என்று சொல்லி ஈழ அமைப்புக்கள் தமது படைக்கலன்களை ஒப்படைக்க வேண்டும் என்றது. ஆனால் அதன் பின்னர் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்தியா உதவி செய்தது. தொடரும் இனக்கொலைக்கு உதவிக் கொண்டே இருக்கின்றது. சிங்கள அரசுக்கு பொருளுதவி, படைக்கல உதவி, படையினருக்கு பயிற்சி போன்றவற்றைச் செய்து கொண்டே இருக்கிறது. முதலில்இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் தம்மை ஏமாற்றிவிட்டது என புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சம்பந்தர் ஐயா பின்னர் சிங்களவர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் இந்துப் பத்திரிகைக்குப் பேட்டியளிக்கையில் இந்தியா வாக்கெடுப்பில் பங்கு பற்றாமைக்கு ஏதாவது காத்திரமான காரணம் இருக்க வேண்டும் என்று தனது இந்தி விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமைக்கான காரணங்கள்
இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளதாம். ஆனால் 2009-ம் ஆண்டு இலங்கையைக் கண்டிக்க கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா தலைகீழாக மாற்றி இலங்கையைப் பாராட்டும் தீர்மானமாக மாற்றியது என்பதனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

அதன் பின்னர் நிறைவேற்றப்பட்ட இலங்கைதொடர்பான இரண்டு தீர்மானங்களுக்குஇந்தியா ஆதரவாக வாக்களித்தமைதான் இந்தியாவின் தமிழின விரோத செயற்பாட்டைஅறிந்தவர்க்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இந்தியா வாக்கெடுப்பின் கலந்து கொள்ளாமைக்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கையின் இறையாண்மைக்குள்தலையிடுவதால் இந்தியா வாக்களிக்காது என்றார் ஐநா மனித உரிமைக்கழகத்திற்கான இந்தியப் பிரதிநிதி. வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமையால் இலங்கையில் தமிழர்களுக்கு நன்மை செய்ததாக இந்திய வெளியுறவுத் துறை சொல்ல ஆளும் காங்கிரசுக் கட்சியின் முக்கிய அமைச்சராக இருந்த ப. சிதம்பரம்இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும் என்கின்றார். மன்னார் ஆயர்இந்தியா போர்க்குற்றத்தில் தனது பங்களிப்பு அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தினால் அது இலங்கையில் ஒரு பன்னாட்டு விசாரணையைவிரும்பவில்லை என்கின்றார். இலங்கையிடம் இலங்கைப் போரில் இந்தியாவின் போர்க்குற்றத்திற்கான பங்களிப்பு தொடர்பான ஆதாரங்களை இருக்கின்றன. அவற்றை வெளியிடுவோம் என இலங்கை மிரட்டியதால் இந்தியாஅஞ்சி வாக்கெடுப்பின் கலந்து கொள்ளவில்லை என்கின்றார் நெடுமாறன் ஐயா. இந்தியப் பொதுத்தேர்தலில் மோடி வெற்றி பெறலாம் என்பதால் ஐக்கிய அமெரிக்கா காங்கிரசைக் கைவிட்டு பாரதிய ஜதாக் கட்சியுடன் இரகசியமாகக் கைகோர்த்து விட்டதால் அமெரிக்காவிற்கும் காங்கிரசுக்கும் இடையில் முறுகல்ஏற்பட்டுவிட்டது. இதனால் இந்தியா கிறிமியாவைஇரசியா இணைத்தமையை ஆதரித்ததுடன்அமெரிக்கா இலங்கை தொடர்பாகக் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை எனவும் கருத இடமுண்டு. இலங்கையில் இந்திய பெரு முதலாளிகள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதாவது ஒரு இலட்சம் கோடிக்கு அதிகமான முதலீட்டைச் செய்துள்ளன. இந்த முதலீட்டிற்குப் பாதுகாப்பு வேண்டுமாயின் இலங்கை இந்திய உறவு சீராக இருக்க வேண்டும்.

மீனவர் விடுதலை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தில் இலங்கைதொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்காமல்தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தமை ஏதோ ஏற்கனவே இலங்கை இந்திய அரசுகள் திட்டமிட்டும் வாக்கு வேட்டை அரசியலை மனதில்கொண்டு ஆடிய நாடகம் போல் தோன்றுகிறது.

இந்தியா இல்லாமல் இனிச் செயற்படலாம்
இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இருந்துபத்தாம் பந்தியை நீக்க வேண்டும் என இந்தியாவின் எதிரி நாடான பாக்கிஸ்த்தன் கொண்டு வந்த முன்மொழிவுக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தும் அது தோற்கடிக்கப்பட்டது. இதுவரை இலங்கை தொடர்பான தீர்மானங்கள் கொண்டு வரும் போது இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக இந்தியாவுடன் தொடர் ஆலோசனைகள் செய்யப்பட்டன. இந்தியா தீர்மானங்களின் வலுவைக் குறைத்தது. இனி இந்தியாவின் ஆதரவு இல்லாமல் இந்தியாவுடன் ஆலோசிக்காமல் தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு அல்லஅது ஒரு பலவீனமான நாடு என்ற உண்மைஅம்பலமாக்கப்பட்டுள்ளது.

About வேல் தர்மா

வேல் தர்மா
"தமிழன் இல்லாத நாடில்லை". "தமிழனுக்கு என்று ஒரு நாய் கூட இல்லை" கருத்துக்களுக்கு : [email protected]

Check Also

LTTE 40 FINAL.-onREDBg

தமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுந்த நான்கு பத்தாண்டுகள்

இம்மாதம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய பதிவுகளாக அமைந்துவிட்ட இரண்டு சம்பவங்களின் நாற்பதாண்டு நிறைவு நினைவுகூரப்படுகிறது. ஒன்று தமிழ்ப் …

Leave a Reply