Thursday , January 23 2020
Home / அரசியல் / தமிழர் தேச வரைபடம்

தமிழர் தேச வரைபடம்

அலசுவாரம் – 93

கடந்த சில வாரங்களில் மிக முக்கிய நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன:

  •  பலராலும் கடவுளாகக் கருதப்பட்ட சிறீ சத்தியசாயி பாபா காலமானார்
  • இளவரசர் வில்லியம், கேட் திருமண வைபவம் மகிழ்வுடன் நடந்தேறியது
  • ஒசாமா பின்லாடன் வேட்டையாடப்பட்டார்
  • முள்ளி வாய்க்காலில் நடந்த தமிழினப் படுகொலை எம்மவரால் நினைவு கூரப்பட்டது
  • எல்லாவற்றுக்கும் மேலாய் ஐயா கருணாநிதிக்கும் அவரது குடும்ப வாரிசுகளுக்கும் ஏகபோக உரிமையாய் எழுதிவைக்கப்பட்டிருந்த, தமிழக அரசை ஆள்வதற்கான உரிமைச் சாசனம் அதை எழுதிக் கொடுத்த தமிழக மக்களாலேயே  கிழித்தெறியப்பட்டது.

ஒரே குடும்பத்திற்குள் பல அமைச்சர்கள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர்கள், அரச உயர் அதிகாரிகள், நாட்டின் தொலைத்தொடர்புச் சேவைகள், டிவி சனல்கள், சினிமா போன்றவற்றில் ஏகபோக உரிமை என்று கொடி கட்டிப் பறந்தது ஐயாவின் ஆட்சி.  இன்று அந்த நாட்டாண்மைத் தனங்களுக்கெல்லாம் முத்தாயப்புப் போட வேண்டிய காலம் வந்திருப்பதை நினைக்க மனதிற்கு எவ்வளவோ ஆறுதலாய் இருக்கிறது.

“குடை நிழலிருந்து குஞ்சரமூர்ந்தோர் நடைமெலிந்தோரூர் நண்ணிலும் நண்ணுவர்”  என்று ஓர் பழமொழி இருக்கிறது.  ஐயா கருணாநிதி அவர்களின் இன்றைய நிலையும் அதுதான். ஆகக் குறைந்தது எதிர்க்கட்சி வரிசையில் கூட உட்கார முடியாமல் கதிரையை இழுத்து விழுத்திவிட்டார்கள் தமிழக மக்கள்.  ஜனநாயகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது.  புரட்சிகர சக்திகளால் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும் என்று நினைத்திருந்த இத்தகைய கவிழ்ப்புகளை ஜனநாயகம் முழுப்பலத்தோடும் அனைத்துச் சக்திகளின் அங்கீகாரத்தோடும் சட்டரீதியாக நிறைவேற்றியிருப்பதன் மூலம், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை பலமடைந்திருக்கிறது.

சட்ட, தர்ம, நியாயங்களைச் சரிவரப் புரிந்துகொண்டு தக்க தருணத்தில் தங்கள் வாக்குரிமையென்னும் கோடரியினால் அராஜகத்தை முழு வீச்சில் கொத்தியெறியக்கூடிய சமூகமொன்று உருவாகிவிட்டால், புரட்சிப் போக்கை நோக்கிய பார்வை தேவையில்லையென்பது இதிலிருந்து தெளிவாகின்றது.  ஆக, தெளிவான சிந்தனையுடன்கூடிய அறிவுஜீவிகளை உருவாக்குவதே இன்றைய தேவை.  அந்தச் சமூகம் தனக்குரிய போக்கு எது என்பதை அறிவுபூர்வமாகச் சிந்தித்து செயல்படும்.

தமிழக மக்களின் கல்விநிலை நன்றாக உயர்ந்திருக்கிறது.  அதனால் அவர்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் குடும்ப ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து அதிமுகவை அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றியடைய வைத்திருக்கிறார்கள்.   அத்துடன் நின்றுவிடாமல் இனிமேல் கருணாநிதி குடும்பத்தின் தலைமையிலான திமுகவின் சகவாசமே வேண்டாமென்பதுபோல அவர்களை ஓரங்கட்டியுமிருக்கிறார்கள்.  அதிமுகவுடன் கூட்டணியமைத்துப் போட்டியிட்ட விஜயகாந்த் தரப்பினர் முன்பிருந்த நிலையிலிருந்து எவ்வளவோ முன்னேறி எதிர்க்கட்சி ஆசனங்களை அலங்கரிக்கிறார்கள்.

இத்தகைய அரசியல் மாற்றங்களெல்லாம் ஈழத்தமிழர்களாகிய எமக்கு எத்தகைய பலனைத் தரப்போகின்றன என்பது தெரியவில்லை.  நொந்து நொடிந்து போயிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு எத்தகைய அனுதாபத்தை ஜெயலலிதா அரசு காட்டுமோ தெரியவில்லை.  இலங்கையில் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்னும் முயற்சியில் அதிமுக இறங்கி நட்புக் கரம் நீட்டும் மத்திய அரசுடன் நிபந்தனை அடிப்படையிலான பேரம் ஒன்றைப் பேசுமளவுக்கு அதிமுகவிடம் போதிய பாராளுமன்றப் பலமும் இல்லை.  டெல்லியை ஆள்பவர்களுடன் திமுகவினரே கூட்டு வைத்திருக்கிறார்கள்.  

தமிழ்நாட்டு மக்களும் ஏதோ இலங்கை விவகாரத்தில் போதிய கரிசனை காட்டவில்லை யென்பதற்காகத்தான் கருணாநிதி அரசைப் புறந்தள்ளினார்கள் என்று வாதிக்க முடியாது. அந்த அளவுக்கு அனுதாப அலை எமக்காக அங்கு இருப்பதாகக்  கருதமுடியாது. ஈழ ஆதரவுக்குழுக்கள் இரண்டு பக்கத்திலுமிருந்தன. இதைவிட வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு நிறைய இருந்தன. அதனால், குடும்ப ஆதிக்கத்துடன் கூடிய ஏதேச்சதிகாரப் போக்கினாற்தான் திமுகவிற்கு இந்த வீழ்ச்சியேற்பட்டது என்றுதான் ஊகிக்க முடிகிறது.  ஆனாலும், அதிமுகவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஈழ ஆதரவுக்குழுக்கள் ஈழப்பிரச்சனையையும், தமிழக மீனவர் பிரச்சனையையும் தங்கள் தேர்தல் பிரசாரங்களின்போது முன்வைத்து மக்களிடம் ஆதரவு தேடியதையும் மறுக்க முடியாது.  மொத்தத்தில், ஈழத்தமிழர்களாகிய நாமும் தமிழகத்தில் ஏற்பட்டுவிட்ட ஆட்சிமாற்றத்திற்கு ஒருவிதத்தில் காரணமாயிருந்திருக்கிறோம் என்பதையும் ஓரளவு ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இது, இவ்வளவு காலமும் நாம் உலக அரங்கில் அரசியல் அநாதைகளாக கைவிடப்பட்ட நிலையிலிருந்து தாவியவோர் மகிழ்ச்சி தரத்தக்க மாற்றமே.  
தமிழகத்தின் ஆறுகோடித் தமிழர்கள் ஈழத்தமிழர்களைக் கருத்திற்கொண்டு இவ்வளவு காலமும் தாங்கள் ஆதரித்த திமுகவை  மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.  இந்தியா, சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த மாற்றத்தையும் தமிழக மக்களின் உணர்வலையையும் அவதானிக்காமல் விடப்போவதில்லை.

பாக்கு நீரிணையின் இருகரைகளிலும் நீறு பூத்த நெருப்பாக உள்ளடங்கியிருக்கும் தமிழ்த்தேசியம், இந்தத் தேர்தலில்தான் ஓரளவுக்காயினும் தன்னை உலகுக்கு வெளிக்காட்டியிருக்கிறது.  இனிவரும் காலங்களில் இந்தத் தேசியவுணர்வை தெற்காசியப் பிராந்தியத்தில் ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க வேண்டிய கடமை இருகரையிலுமுள்ள தமிழர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது.

இந்திய உபகண்டத்தின் மிகப்பலம்வாய்ந்த சமூகமாக அரசியல்பொருளாதார ரீதியில் தமிழினம் வளர்ந்து வரும்போது அதன் பிரதிகூலமாய் இந்திய தேசியத்தினாலும், உலகமயமாக்கலாலும்  தமிழ் இனத்துவ அடையாளங்கள் அழிக்கப்பட்டுவிடாமல் பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் உரிய முறையில் நிறுவன ரீதியில் மேற்கொள்ளப்படுமாயின் தமிழ்த்தேசியம் தானாகவே தனது சுயஉருவைப் பரிணமிக்கும்.

தமிழக அரசும் புலம்பெயர்ந்தோர் தமிழீழ அரசும் இதற்கெனத் தனிஅமைச்சுக்களை உருவாக்கிச் செயற்பட முடியும்.  ஈழதேசியம் சார்ந்த ஜனநாயக அமைப்புக்களை இனிமேலும் புறக்கணிக்காது ஆகக்குறைந்தது உத்தியோகப்பற்றற்ற தொடர்புகளையாவது ஜெயலலிதா அரசுபேணுமாயின் தமிழர் தேசியத்திற்கான் அடிக்கல் உரிய முறையில நாட்டப்பட்டுவிடும்.  

வங்காளவிரிகுடாவில் தமிழர் தேசியத்தின் இடையீடற்ற தொடர்பரம்பலைக் குறிக்கும் நிலவரைபடமொன்றை தமிழக அரசு உத்தியோகப+ர்வமாக, சர்வதேசத்தினதும் பார்வையில் படக்கூடிய விதத்தில் வெளியிடுமாயின் அது ஈழத்தமிழர்களின் ஆதரவற்ற இன்றைய நிலைக்கு ஓர் நிவர்த்தியாயமையும். இது இந்தியாவுக்கு ஆரம்பத்தில் அரசியல் ராஜதந்திர ரீதியில் சில தொல்லைகளை ஏற்படுத்தினாலும், தற்போது இலங்கையில் இந்தியாவின் தலையீடுகளை நியாயப்படுத்தவும், பாக்கு நீரிணையில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தலையீடுகளைக் கட்டுப்படுத்தவும் உதவும்.  தமிழர் தேசியம்; வளர்த்தெடுக்கப்படவும், அதேவேளையில் அதைக் காரணங்காட்டி இந்திய உபகண்டத்தின்; பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும் இத்தகைய தேசிய இனப்பரம்பல் வரைபடங்கள் மிக அவசியமானவை.

ஐக்கிய நாடுகள் சபை என்னும் சொல் தமிழில் மிகத்தவறாக மொழிபெயர்க்கப்பட்டவோர் சொல்லாகும்.   ஐக்கிய தேசிய சபை என்னும் சொல்லே மிகப் பொருத்தமானது.  தேசியம் தேசியமென்று அதிகம் சிந்திப்பவர்களும் அதற்காகப் போராடுபவர்களும் நாங்களே. ஆனாலும் ஐநா வென்று தவறாக மொழிபெயர்த்திருக்கிறோம்.  உலக தேசிய இனங்கள் அனைத்தினதும் கூட்டமைப்பாக ஐநா இருக்கவேண்டுமென்ற நோக்கிலேயே யுனைட்டெட் நேசன்ஸ் என்ற பெயர் அதற்கு ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்டது.  நாடொன்று இல்லாதவோர் தேசிய இனத்திற்கும் அங்கு இடமுண்டு.  தமக்கெனவோர் நாடில்லாவிடினும் இடையீடற்ற குடிப் பரம்பலைக் கொண்ட தமிழர் தேசம் பாக்கு நீரிணையின் இருபுறத்திலும் இருப்பதனால், தமிழர்தேசியம் அதாவது நேசன் என்ற தகுதிக்குச் சற்றும் குறையாதவர்களாகவே தமிழகத் தமிழர்களும் ஈழத்தமிழர்களும் வாழ்கின்றனர். ஆனால் இந்தத் தகுதியை உலகுக்கு வெளிப்படுத்த ஈழத்தமிழர்கள் மட்டுமே தியாக வேள்வி நடத்தினார்கள்.   தமிழகம் அதைப் பார்த்துக்கொண்டு வாழாவிருந்தது.  தாங்களும் அந்தத் தமிழ்த் தேசியத்தின் ஓரங்கம் அதுவும் பிரதான அங்கமென்பதை உலகுக்கு உரியமுறையில் வெளிப்படுத்தவில்லை. தற்போது தமிழக அரசுடன் இணைந்துள்ள ஈழ ஆதரவுக்குழுக்கள் தமிழர்களின் குடிப்பரம்பலை தெளிவாக்கும் தமிழர்தேசிய வரைபடத்தை ஈழத்தமிழர்களுடன் சேர்ந்து உருவாக்கி அதனை எதிர்கால சந்ததியும் அறிந்துகொள்ளும் வகையில் புவியியல் பாடத்திட்டத்திலும் இணைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதுவே தமிழர்தேசக் கட்டுமானத்தின் ஆரம்;பப் படிக்கல்லாயமையும்.

தொடருவம்…

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

corbyn

எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும், தமிழர்கள் செய்ய வேண்டியதும்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற …

Leave a Reply