Tuesday , November 12 2019
Home / அரசியல் / தமிழீழம் தவிர்ந்த எந்த ஒரு பிரகடனத்திலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இணையாது – உருத்திரகுமாரன்

தமிழீழம் தவிர்ந்த எந்த ஒரு பிரகடனத்திலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இணையாது – உருத்திரகுமாரன்

நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும், 2009 ஜனவரியில் மேற்கு நாடுகளின் பிரதிநிதிகள் முன்வைத்த சரணடைவுத்திட்டம் தொடர்பாகவும் அறிந்து கொள்ள நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரனை செவ்விகாண நாம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்க வில்லை. அதனைத் தொடர்ந்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்த கேள்விகளுக்கு அவர் தனது பதில்களை வழங்கியிருந்தார். அவற்றை இங்கு பிரசுரிக்கிறோம்.

நாடு கடந்த அரசாங்கம், உலகத்தமிழர் பேரவை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஒரு பொதுப் பிரகடனத்தில் கைச்சாத்திடவுள்ளதாக அறிகிறோம். இவ் விடயம் பற்றிய உங்களது கருத்தினை தெரிவிப்பீர்களா?

உருத்திரகுமாரன்:  இன்றைய சூழலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இரண்டு தளங்களில் தனது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. தமிழீழத் தனியரசே ஈழத்தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்படுவது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தளம்.இதுவேதான் அரசியல் தீர்வு சார்ந்த எமது அடிப்படையான நிலைப்பாடு. தமிழீழத் தனியரசுக்கான ஆதரவினை வென்றெடுப்பதற்காக அரசியல் இராஜதந்திரத் தளங்களில் நாம் செயற்படுகிறோம். புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழகம் மற்றும் உலகத் தமிழ் மக்கள் ஆதரவுடன் நீதிக்காகக் குரல்தரக்கூடிய அனைத்துலக சிவில் சமூகத்தினைச் சேர்ந்தவர்களையும் இணைத்து தமிழீழ தனியரசுக்கான ஆதரவினை வென்றெடுக்க செயற்படுகிறோம்.

இரண்டாவது தளம் தாயகத்தில் உள்ள மக்களைப் பாதுகாப்பது, முள்ளிவாய்க்காலில் எமது மக்களை இனஅழிப்புக்குள்ளாக்கியவர்களை நீதியின் முன்னால் நிறுத்துவது, புலத்தில் வாழும் நமது மக்களின் நலன்களை மேம் படுத்துவது போன்ற நோக்கங்களைக் கொண்டு செயற்படும் தளம். இரண்டாவது தளத்தில் நாம் மற்றைய அமைப்புக்களுடன், அவை தமிழீழ இலட்சியத்துக்காக செயற்படாவிட்டாலும்கூட, இணைந்து செயற்படுவது எமது மென்வலுவை அதிகரிக்க உதவும் எனக் கருதுகிறோம். மேலும் எமது அரசியலமைப்பு சட்டப் பிரிவு 1.10.1 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கட்டமைப்புக்கள் இந்த அரசமைப்பின் குறிக்கோள்களுக்கு முரணாகாத நோக்கங்கள் கொண்ட ஏனைய அமைப்புக்களோடு கூட்டாக வேலை செய்யலாம் என பிர கடனப்படுத்துவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தமிழீழ மக்களின் தேசியப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, தமிழீழம் தவிர்ந்த எந்த ஒரு பிரகடனத்திலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இணையாது என்பதனைத் திட்ட வட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை வலீயுறுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமிழீழக் கோரிக்கையை அரசியல் யாப்பில் ஏற்றுக் கொண்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இணைந்து ஒரு பிரகடனத்தை கையெழுத்திடுவது சாத்தியமாகுமா?

உருத்திர குமாரன்:  இந்தக் கேள்விக்கு நான் முதற்கேள்விக்கு அளித்த பதில் பொருந்தும் எனக் கருதுகிறேன்.

இவ்வாறான உத்தேச பிரகடனத்தில் தமிழ் மக்களின் குறைந்த பட்ச அரசியல் உரிமைகளாக எவற்றை ஏற்றுக் கொள்வீர்கள்?

உருத்திர குமாரன்:  ஏற்கெனவே குறிப்பிட்டபடி சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழம் தான் தமிழீழ மக்களின் தேசியப்பிரச்சினைக்கான ஒரே ஒரு அரசியல் தீர்வாக அமைய முடியும் என்பதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு. இதனால் எம்மைப் பொறுத்தவரை இங்கு குறைந்தபட்சம், கூடியபட்சம் போன்ற கேள்விகளுக்கு இடமில்லை.

அண்மையில் லண்டனில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய எரிக் சொல்ஹெய்ம், “2009 ஜனவரியில் தம்மால் முன் வைக்கப்பட்ட சரணடைவுத் திட்டத்தை திரு. பிரபாகரன் ஏற்றிருந்தால் இத்தனை அழிவுகள் ஏற்பட்டிருக்காது” என குறிப்பிட்டிருந்தார், அதற்கு பதிலளிக்கும் வகையில் பி.பி.சி தமிழ்ச் சேவைக்கு நீங்கள் வழங்கிய செவ்வியில். நோர்வே மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுடன் கோலாலம்பூரில் நடை பெற்ற சந்திப்பில் நீங்கள் கலந்து கொண்டதாகவும் அச்சந்திப்பில் குறித்த திட்டம் பற்றிகலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேற்படி சரணடைவுத் திட்டத்தில், விடுதலைப்புலிகள் முன்வைத்து வந்த அரசியல் கோரிக்கைகளை கைவிடுமாறு கோரப்பட்டதா?

உருத்திரகுமாரன்:  கோலாலம்பூரில் இடம் பெற்ற சந்திப்பில் நிபந்தனையற்ற ஒரு யுத்தநிறுத்தத்துக்கான அவசியம் குறித்துத்தான் விடுதலைப்புலிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அரசியல் கோரிக்ககைகள் தொடர்பாகவோ அல்லது அரசியல் தீர்வு தொடர்பாகவோ எதுவும் பேசப்படவில்லை

விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்த கே.பி. என்கிற செல்வராசா பத்மநாதன் மேற்படி திட்டத்திற்கு உடன்பட்டதாக சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கிறார். சொல்ஹெய்ம் குறிப்பிட்டது போன்று கே.பி. இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டாரா?

உருத்திரகுமாரன்:  எனக்கு தெரிந்தவரை கே.பி அவ்வாறான திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

கே.பி. தவிர வேறு யாராவது வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டார்களா? அவ்வாறாயின் அவர் களது பெயர்களை வெளியிட முடியுமா?

உருத்திரகுமாரன்:  எனக்கு தெரிந்தவரை ஒருவரும் அவ்வாறான திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

corbyn

எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும், தமிழர்கள் செய்ய வேண்டியதும்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற …

Leave a Reply