Thursday , January 23 2020
Home / அரசியல் / தேசியத்தைக் கெடுக்கும் சாதீயம்

தேசியத்தைக் கெடுக்கும் சாதீயம்

அலசுவாரம் – 97

உள்ளுராட்சித் தேர்தல்கள் முடிந்துவிட்டன.  வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது.  ஆனாலும் தீவுப்பகுதிகளிலும் ஏனைய இடங்களிலும் மக்கள் கணிசமான அளவு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பான ஆளும் தரப்புக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.  அவர்கள் தீவுப்பகுதிகளில் வெற்றியடைந் திருப்பதோடு மட்டுமல்லாமல் வடபகுதியின் கணிசமான உள்ள+ராட்சிச் சபைகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 20 வீதத்த்திற்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றுள்ளார்கள்.  அதற்கும் மேலாய் தெற்கில் அனைத்துச் சபைகளையும் ஆளும் தரப்பு கைப்பற்றியிருக்கிறது.

இலங்கை ஜனாதிபதி தனது மகன், தம்பிமார் உட்பட சகபரிவாரங்களுடன் வடக்கில் முகாமிட்டு எப்படியாவது இந்தத் தேர்தலில் வெற்றியீட்டி, உலகில் தற்போது சரிந்து போயிருக்கும் தமது செல்வாக்கை நிமிர்த்திவிட வேண்டுமென்று பாடுபட்டும், மகிழ்ச்சியடையும்; அளவுக்கு வெற்றி கிடைக்காவிடினும், ஏதோ ஒருவகையில் திருப்தியடையும் அளவுக்காவது இந்தத் தேர்தல் அவர்களுக்கு அமைந்திருக்கிறது. இதை மறுக்க முடியாது.

தமிழர்களை நெருங்குவது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவதைப் போல என்ற நிலைமாறி, இன்று அது சாத்தியப்படக் கூடியதே என்ற எண்ணத்தை பேரினவாதம் தன்னுள் உருவாக்கிக்கொண்டு வருவது ஆரோக்கியமானதாகப் படவில்லை.

நம்முள் சாதி சமயம் என்று ஆயிரம் உட்பிரிவுகளையும் அவைசார்ந்த குரோதங்களையும் வளர்த்து வைத்துக்கொண்டு தேசியத்திற்காகப் போராடப் புறப்பட்டது கொஞ்சம் அவசரப்பட்ட செயலாகப் போய்விட்டது.

ஆட்டை வெட்டும் முன் அதன் விதைகளையாவது பிடுங்கி விடுவோமென்ற தோரணையில்  ஆரம்பித்த தேசிய விடுதலைப் போரை நசுக்கோ நசுக்கென்று நசுக்கிவிட்ட சிங்களம், இன்று அந்த நசுக்கியழிக்கப்பட்ட மக்களிடமே சென்று, தமக்கான ஆதரவை 20 வீதத்திற்கும் அதிகமாகப் பெற்றிருப்பதை இலகுவாக ஜீரணிக்க முடியவில்லை.

பலரிடமும் ஆராய்ந்து பார்த்ததில் நம்மிடையே இருக்கும் ஜாதி வேறுபாடுகளும் இதற்கொரு காரணமென்கிறார்கள். நம்மிடையேயுள்ள இந்த இழிநிலையால் பேரினவாதத்திடம் தமிழ்த்தேசியவுணர்வு சரணடைவதுபோன்ற தோற்றப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக்கொண்டு வருகிறது.  அது தோற்றத் திலேயே நின்றுவிடவேண்டுமென்று இறைவனை யாசிப்போம்.

சாதீயம் தொழில்முறைப் பாகுபாட்டின் அடிப்படையில் உருவானது.  ஆரம்பத்தில் வர்ணாச்சிரம தர்மக் கொள்கைகள் உருவானபோது பிரம்ம, சத்திரிய, வைசிய, சூத்திரர்களென மக்கள் குழுக்களாக வகுக்கப்பட்டார்கள்.  அதன்படி, வேளாண் குலத்தவர்களும் சூத்திரர்களே.  காலப்போக்கில் நிலவுடைமை அதிகரித்ததனால் அரசர்களுடனான தொடர்பு மேம்பட்டு சத்திரிய வம்சக்கலப்பினால் இரண்டாம் சாதியாரானார்கள். உதாரணமாக மட்டக்களப்புப் பிரதேசங்களில் வேளாண்மக்களிடையே குடிவழிக் கோயிலுரிமை நிலவுரிமை போன்றன ஏற்பட அரச வம்சத்தினருடன் ஏற்பட்ட உறவுகள் காரணமாயிருந்தன.  வேளாண் மக்களிடமிருந்த நிலவுடைமை காரணமாக அரசவம்சத்தினர் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதால் சமூக அமைப்பில் வேளாண்குலத்தினர் உயர்ந்தவராகிவிட்டனர்.

சில பிரதேசங்களில் சாதீயம் போலித்தனமானதாகிவிட்டது: அரைப்பரப்புக் காணியுமில்லாமல் தங்களை வேளாண் குலத்தவர்கள் என்று அலட்டிக் கொள்பவர்கள் அனேகர்.  அதேவேளை சில பிரதேசங்களில் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்தாலும்; இதுபற்றி அலட்டிக் கொள்ளாமலேயே வாழும் வேளாண் சமூகத்தவர்களும் உண்டு.  ஆக மொத்தத்தில் கருத்தற்ற உயர்வு தாழ்வுப் பிரிவினைகளையுருவாக்கி குழுக்களாகப் பிரிந்து நிற்கிறது நமது சமூகம்.  சாதீயம் அவரவர் தனிப்பட்ட வாழ்வு முறைமையில் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் அது தேசியத்தையும் எமது சமூக முன்னேற்றத்தையும் கெடுக்கும் காரணயாக மாறும்போதுதான் அந்த நச்சுப் பாம்பை எப்படியாவது அடித்து விரட்டிவிட வேண்டு மென்னும் உணர்வு தோன்றுகிறது.

தற்போதைய நிலைவரப்படி பார்த்தால் தமிழரிடையே சாதீயம் ஒளிவதாயில்லை, அது உருமாறி விசுவரூபமெடுக்ககவே முயல்கிறது. பலரும் தங்களை சாதியினடிப்படையில் அடையாளப்படுத்த முனைகிறார்கள்: தமிழ்நாட்டில் சாதீய அரசியல். உயர் கல்வியில், உத்தியோகத்தில் சாதீய அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறைகள் என்று பலவிடயங்கள் வந்துவிட்டன.  தற்போது அங்கு சாதி ஒரு வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் காரணியாக மாறிவிட்டது.  மேலும் எம்மிடையே திருமண சேவைகள் சாதீயத்தை அடிப்படையாக வைத்தே செயலப்;படுகின்றன.  யாரும் தங்களது சாதி தவிர்ந்த பிற சாதியினரோடு திருமண உறவுகளை வைக்க விரும்புவதில்லை.

புலம்பெயர்ந்த தமிழர்களிடத்தில் சாதியம் வாழ்கிறது.  ஆனாலும் அது வெளிப்படையாக ஒரு சமுதாயத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இல்லை.  அதாவது கோயில்களில் உட்செல்லத் தடைசெய்தல் போன்ற செயல்களை புலம் பெயர்ந்த தேசத்தில் செய்யமுடியாது.  அதனால் சாதீயம் இங்கே பெரிய விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.  ஆனாலும், பொதுவாக மறைமுகமாக இங்கு அது உள்ளது. பேசிச் செய்யப்படும் திருமணங்களில் சாதி பார்க்காமல் விடமாட்டார்கள்.

காதல் திருமணங்களில் சிலவேளை சாதியத்தைக் கருத்தில் கொள்ளாமல் விடக்கூடும்.  பொதுவாக இலங்கையில் சில சமூகங்கள் தங்கள் திருமண உறவுகளில் காதலைப் பெரிது படுத்தாமலேயே இருந்தன.  காதல் பொதுவாக ஐகெயவரயவழைn எனப்படும் காமம் சார்ந்ததென்று கருதி பல்கலைக் கழகங்களில்கூட மிகவும் புத்திசாலித்தனமாகவே காதலித்தார்கள்.  அதாவது காதலிப்பவர்கள் தாங்கள் படிக்கும் பீடத்தைப் பொறுத்து, ஊரிலுள்ள குடும்ப நிலையைப் பொறுத்து, அவரவர் சாதியைப் பொறுத்து சோடி சேர்ந்து, பின்னர் சீதனமுறைமையின் கீழ் திருமணத்தையும் செய்து கொண்டார்கள்.  எதையும் சிந்திக்காமல்  கண்மூடித்தனமாகக் காதல் செய்யும் பழக்கம் எம்மிடமில்லை.  இதுவே கலப்புத் திருமணங்கள் ஏற்படாமல் சாதியமைப்பு எம்மிடையே நிலைபெற்றுப் போனதற்கான காரணமாகும்.  சில தம்பதிகள் பெரிய காதலர்கள்போல நடிப்பார்கள் ஆனால் ஆராய்ந்து பார்த்தால் கொழுத்த சீதனத்துடன் பேசிக் கலியாணஞ் செய்தவர்களாயிருப்பார்கள்.

புலம்பெயர் சமூகத்தவரிடையேயும் சாதியமைப்பு மறைமுகமாக உள்ளதால் அதன் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இன்றைய இளஞ்சமூகம் கூட இத்தகைய கட்டுகளிலிருந்து விடுபடக்கூடிய நிலையிலில்லை.  இதன் விளைவாக கருத்தொற்றுமையுடனும்; அன்பான குடும்ப வாழ்க்கைக்கேற்ற  எல்லாவகைத் தகுதிகளுடனும் உள்ள இரண்டு இளம் உள்ளங்களைச் சேர்த்துவைக்க முடியாமல் போய்விடுகிறது.  சாதி, சாத்திரம் போன்ற விடயங்கள் சமூகத்தில் ஓர் நல்ல குடும்ப அலகை உருவாக்குவதில் தடைக்கல்லாய் நிற்கின்றன.  இதனால் அனேக இளம்பெண்களின் வாழ்வு பாழாகிவிடுகிறது.  உரிய காலத்தில் அவர்களது திருமணம் நடப்பதில்லை. ஒரு சமூகத்தில் மனமொத்த திருமணங்கள் நடைபெறாதபோது நல்ல குடும்ப அலகுகள் உருவாகாமல் போய்விடுவதால் அந்தச் சமூகத்தின் வளர்ச்சியும் பாழடிக்கப்பட்டு விடுகிறது.

சாதி வேற்றுமைகளற்ற ஒரு திறந்த சமூகமாக நாம் மாறும்போதுதான் எமது சமுதாய வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் செல்லமுடியும். நமது சமூகத்தின் முன்னேற்றத்தைக் கெடுக்கும் சாதியம் ஒட்டு மொத்த தமிழினத்தின் அடிப்படையுரிமைகளுக்கும், தேசியவுணர்வுக்குமெதிராகச் செயற்பட்டுவிடாமல் பார்க்க வேண்டியது தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

உள்ளுராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் செல்வாக்கினைக் கூடப் பொருட்படுத்தாமல் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகப் வாக்களித்து பெரும்பாலான மக்கள் தங்களது கடமையைச் செய்திருக்கிறார்கள்.  மக்களின் இந்த ஆதரவைத் தக்க முறையில் பயன்படுத்த வேண்டியது தேசியக் கூட்டமைப்பின் தலையாய கடமையாக இருக்கிறது.  அரசாங்கத்தை எதிர்த்து தம்மை ஆதரித்த மக்கள் சக்தியை அரசின் அசூயைக்கு ஆளாக்காமல் ஓர் பெரிய பலம்மிக்க சக்தியாக மாற்றியமைக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளிலேயே தங்கியுள்ளது. அரச செல்வாக்குமிக்க தேசிய எதிர்ப்புச் சக்திகள் தம்மை ஆதரிப்பவர்களுக்குச் செய்யும் நன்மைகளைவிடப் பன்மடங்கு நன்மைகளை தேசியக் கூட்டமைப்பினர் தமது ஆதரவாளர்களுக்குச் செய்யக்கூடிய விதத்தில் அரசுடன் பேச்சு வார்த்தைகளை நடத்திச் செய்யத் தொடங்குவார்களாயின்,  தேசிய எதிர்ப்பாளர்களின் செல்வாக்கை இல்லாமல் செய்துவிட முடியும்.  இதனால் சாதீயம் போன்ற தடைக்கற்களை உடைத்தெறிந்து எமது தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுக்க மக்களுக்குப் போதிய அறிவூட்டலும், நலன்புரிதலும் இன்றியமையாததாய் இருக்கின்றன.

தற்போது தேசிய எதிர்ப்பாளர்கள் அரசாங்கத்தின் உதவியாடு தமது ஆதரவாளர்களுக்குப் பல்வேறு நன்மைகளையும் செய்வதால் அவர்களின் ஆதரவைப் படிப்படியாகப் பெற்று வருகின்றனர்.  அரச ஆதரவின்றி எதையும் சாதிக்க முடியாதாகையால் ஒத்துழைப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் போதிய நன்மைகளைத் தமிழ் மக்கள் பெறக்கூடிய விதத்தில் கூட்டமைப்பினர் அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டியதே இன்றுள்ள தேவையாகும்.

தமிழ் மக்கள் சாதீய அடிப்படையில் தனிக்குழுக்களாகத் திரண்டு அனைத்தையும் குட்டிச் சுவராக்கும் நிலைமையைத் தமிழ்த்தேசியத்தை தற்போது வழிநடத்தும் தலைமைகள் சும்மா பார்த்துக் கொண்டி ருக்காமல்,  சாதீயத்துக் கெதிராகப் போராடவேண்டிய காலம் வந்திருக்கிறது. அத்தகைய போராட்டங்களை எப்படி முன்னெடுப்பது என்பதே இன்றுள்ள கேள்வி.

தொடருவம்….

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

corbyn

எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும், தமிழர்கள் செய்ய வேண்டியதும்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற …

Leave a Reply