Saturday , February 22 2020
Home / தாய் நாடு / ஊரின் வாசம் / பதவி மோகங்களால் பரிதவிக்கும் அமைப்புகள்

பதவி மோகங்களால் பரிதவிக்கும் அமைப்புகள்

பதவி மோகங்களால் பரிதவிக்கும் அமைப்புகள்
ஊரின் வாசம் – ப.வை ஜெயபாலன்

புலம்பெயர் நாடு ஒன்றில் 25 ஆண்டுகளாக இயங்கும் ஓர் பிள்ளையார் ஆலயம். இலங்கைத் தமிழரால் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. அவர்தான் நிர்வாகி. சுற்றிவர நம்பிக்கையான ஒரு தொண்டர் வட்டம். நிர்வகிப்புக்கு உதவியாளர்கள் அவர்கள். சேவையை அர்ப்பணிப்புடன் செயல்படுத்தும் சிறப்பான நிர்வாகி அவர். நிர்வாக சபையைப் பற்றி உரையாடியபோது கோயிலின் வெற்றிக்கு இன்னொருவரை இணைத்து இயக்காததே காரணம் என்றார். கூட இருந்து குழி பறிக்கும் குணம் எங்கள் இனத்தின் சாபக்கேடுகளில் ஒன்று என்று குறிப்பிட்ட அவர் தன்னுடைய விருப்பம் ஆரம்பித்தேன், வளர்த்தேன், இயக்குகிறேன், இன்னொருவரைச் சேர்த்திருந்தால் இவ்வாறு இயக்கியிருக்க முடியாது என்பதாக அவர் கருத்து அமைந்திருந்தது.

இலண்டனிலும் சிறப்பாக இயங்கும் இன்னொரு ஆலயம். இதுவும் ஒரு அறக்கட்டளை. பிரித்தானிய அறக்கட்டளைச் சட்டத்திற்கு அமைய 5 நிரந்தர அங்கத்தவர்களைக் கொண்டு அது இயங்குகின்றது. ஆரம்பித்த ஸ்தாபகர் அந்த ஏனைய நால்வரையும் இணைத்துக்கொண்டு தன்னுடைய தலைமையில் அதை இயக்கிவருகின்றார். தன் பள்ளி வயதுக் காலத்திலேயே ஜனனாயகத்தில் சர்வாதிகாரம் சார்ந்த நிர்வாகம் என்ற தலைப்பில் தான் கட்டுரை எழுதி பரிசு பெற்றதையும் ஆலய உயர்வுக்கு அதே கொள்கை அமைப்போடு இயக்குவதே வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் பெருமையுடன் குறிப்பிடுவார். இன்னொரு நிர்வாகத்தில் தான் சிறப்பாக இயங்கியபோதும் கூடஇருந்தே குழிபறித்தோரால் தான் தோற்கடிக்கப்பட்ட ஆதங்கம் தன்னுடைய இந்த ஆலயத்தைத் தொடர்வதற்கும், நிர்வாகம் செய்வதற்குமான காரணமாக அமைந்தது என்பார். அந்த ஆலயமும் சிறப்புடன் இயங்குகின்ற ஒன்று. அதை உடைக்க, பிரிக்க, தம்முடையதாக்க, இவரைப் பதவியால் கவிழ்க்க அவ்வப்போது சுற்றிநின்ற ஐவரில் ஓரிருவரால் முயற்சிகள் எடுக்கப்பட்டன. பயனளிக்காது தோல்வியில் முடிந்தன. இறுக்கமாக தன்னுடைய கைப்பிடிக்குள் வைத்து இயக்குகின்றார், சிறப்பாக இயங்குகிறது. 16 ஆண்டுகளாக அதன் நிர்வாகம் விரிவாக்கம் கண்டதோடு இயங்குகின்றது. விமர்சனங்கள் அவ்வப்போது எழும். காலஓட்டத்தில் அடங்கிவிடும்.

சேர சோழ பாண்டியர் காலத்திலிருந்தே மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை போன்றவற்றால் தமக்குள் அடிபடுகின்ற, சகோதர யுத்தங்களால் சீரழிகின்ற நிலைப்பாடுகள் அரசிலும், பொது அமைப்பிலும் தொடர்கின்றன. தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அதற்கொரு குணம் உண்டு என்று நாம் பெருமைப்படுகின்றோம். ஆனால் அது பதவியாசையை, கூட இருந்து குழிபறிக்கின்ற குணத்தைக் குறிக்கின்றதோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. இதிகாச காலத்தில்கூட இராமாயணம், மகாபாரதம் என்பன மண்ணாசை, காட்டிக்கொடுப்பு, வஞ்சகம், சூழ்ச்சி என்பவற்றையே விபரிக்கின்றன. கால ஓட்டத்திலும், நடைபெற்ற பல்வேறு அரசியல் போராட்டங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மன் காலம் முதலான, நடைபெற்ற மன்னராட்சிக் காலங்களிலும்கூட காட்டிக்கொடுப்புகள், துரோகங்கள், பதவிக்காகவும், குறுநில ஆட்சிக்காகவும், பெண்ணுக்காகவும் இடம்பெற்ற சூழ்ச்சிகள் ஆகியனவற்றையே சரித்திமாகப் பார்க்கின்றோம். எங்கள் பள்ளிக்காலத்திலும் அதிபர் நியமனம், ஆசிரிய இடமாற்றம் என்பவற்றில் அரசியல் செல்வாக்குகள் பாடசாலையை ஆட்டிப்படைத்ததைப் பார்த்தோம். இன்றும்கூட இது அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது. அதிபர் நியமனங்களோ, ஆசிரியர் இடமாற்றங்களோ அரசாங்க செல்வாக்குகளால் அமைவதும் மாணவர்கள் பள்ளிப் புறக்கணிப்புப் போராட்டங்களைத் தொடர்வதும் ஆங்காங்கே செய்திகளாக வந்துகொண்டே இருக்கின்றன. சனசமூக நிலையங்கள், கலைமன்றங்கள், அரசியல்கட்சிக் கட்சி கிளை நிர்வாகங்கள் எனப் பொதுக்களங்களிலும் இவ்வாறான பதவிப்போட்டிகள் அவதானிக்கப்படுகின்றது. புலம்பெயர் வாழ்விலும் ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், பழையமாணவர் சங்கங்கள், இவற்றுக்காக இயங்கும் ஒன்றியங்கள் என்பவற்றிலும் இக்காலத்திலும் போட்டிநிலைப்பாடு, கோஷ்டி மனப்பான்மை, உடைவுகள், பிரிவுகள், இன்னொன்று உதயமாகின்ற செயல்பாடு ஆகிய சீர்கேடுகள்.

போட்டிகள் ஜனனாயகத்தின் மரபு. திறமையென்பதைவிட சொந்தம், நட்பு, தான்சார்ந்த குழு, தன்னுடைய சாதி, சகவகுப்பு மாணவர் என்கின்ற பலவையும் ஜனனாயகத்துக்குள் ஒருவருக்கான பிரிவை செயல்படுத்துவதற்கு காரணமாக அமைகின்றன. ஆயினும் ஜனனாயகம் என்கின்ற நிலைமையின் கீழ் இவ்வாறான பிரிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. காலாகாலமாக வாழ்ந்த ஊர், உறவு, காணி, தோட்டம், வயல், வாகனம், சொத்து, சேமிப்பு என அனைத்தையும்விட்டு அகதிகளாக, புது வாழ்வுதேடி, உயிரைக்காப்பாற்ற, அமைதியாக வாழ என்று புலம்பெயர்ந்தோம். இங்கும் வந்து புதிய சூழல், புதிய வாழ்க்கை, வீடு சொத்து சேர்ப்பு ஆகியனவற்றுக்காக இரவு பகலாக உழைக்கின்றோம். பிள்ளைகளினுடைய கல்வி வளர்ச்சிக்காக கடுமையாகப் பாடுபடுகின்றோம். வெற்றியும் காண்கின்றோம். இவற்றிற்கிடையேயும் எங்களைச் சார்ந்த சமூகத் தேவைகளான ஆலயங்கள், பொது அமைப்புகளில் ஈடுபடுகின்ற போது அதில் ஒருசிலர் மட்டும் இயங்குவதும், ஏனையோர் அந்தப் பதவிகளில் ஒட்டிக்கொள்வதும், தேவையானபோது பிரச்சினைகள், பதவிக்கவிழ்ப்புகள் ஆகியனவற்றில் ஈடுபடுவதும் கூட தொடர்கதையாகிக்கொண்டே வருகின்றது. சங்கங்களிலே வங்கிக் கணக்குடன் கூடிய பொது அமைப்பு, இலாப நோக்கத்தைக் கொண்டிராத கம்பனிச்சட்டப் பதிவு, அறக்கட்டளை அமைப்பு எனப் பல்வேறாக புலம்பெயர் நாடுகளில் அமைப்புகள் செயற்படுகின்றன. பதவியென்று வரும்போது பலரும் வந்து ஒட்டிக்கொள்வதும், ஓரிருவர் அதில் ஓடியாடி உழைத்து அமைப்பை உயர்த்துவதும் எல்லா ஜனனாயகச் சங்களிலும் காணப்படுகின்றது. பதவிக்கவிழ்ப்பு போட்டிகள் சங்கத்தை அல்லலுக்குள்ளாக்குவதும், காலாகதியில் அந்தச் சங்கங்கள் அழிந்துபோவதும் இயல்பாகி விடுகின்றன. பொதுப்பணியில் பணத்தை சூறையாடுவதையோ, தன்னைச்சார்ந்தவர்கள் பொதுப்பணிக்காகப் பெற்ற பணத்தின் மூலமாக பயனாளிகள் ஆக்கப்படுவதையோ அனுமதிக்க முடியாது. ஆயினும் இக்குறைபாடுகள் கண்காணிக்கப்படக்கூடிய முறையில் ஒரு அமைப்பு இயங்கும்போது தான் வெற்றிபெறும் என்ற அனுபவ உண்மைகளையே மேற்கூறிய நிர்வாகிகள் காட்டிய பலவற்றிலும் காணமுடிகின்றது. இது சரியானதா? காலம் பதில் கூறட்டும்.

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

pongal

முற்றத்து தைப்பொங்கல்

தைப்பொங்கல் என்றால் சிறுபராயத்தில் ஊரில் எங்கள் வீட்டு முற்றத்தில் பொங்கி மகிழ்ந்த நினைவு தான் எழுகின்றது. பொங்கலைப் போலவே அந்த …

Leave a Reply