Home / Blogs / பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு வாக்களிப்பது ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதாக அமையும்

பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு வாக்களிப்பது ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதாக அமையும்

தமிழ் சிவில் சமூக அமையம்

“சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களது பிரச்சனைகள் தொடர்பாக நிலைப்பாடெடுத்து அவர்களது வாக்குகளைக் கோரி நிற்கவில்லை. மாறாகத் தமிழர்களுக்கு தனித்துவமான பிரச்சனைகள் இருப்பதனை மறுதலிக்கின்றனர். தமிழர் நலனுக்கு முரணான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். எனவே இத்தேர்தல் தொடர்பில் ஓர் கூட்டு நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கில்லை. பிரதான வேட்பாளர் எவருக்கும் வெளிப்படையாக வாக்களிக்க எடுக்கும் முடிவானது ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதாகவும் சர்வதேச விசாரணையை மறுத்ததாகவும் அர்த்தம் கொள்ளப்படும்.” இவ்வாறு சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையம் இன்று (டிசம்பர் 23) வெயிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின் முழுமையையும் இங்கு தருகிறோம்.

எதிர்வரும் ஜனவரி 8, 2015 அன்று நடைபெறவிருக்கும் சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வகிபாகம் தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தும் பொருட்டு இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.
இத்தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் இருவர் களத்தில் உள்ளனர். ஒருவர் தற்போது பதவியிலிருக்கும் திரு. மகிந்த ராஜபக்ச. மற்றையவர் அண்மைக் காலம் வரை தற்போதைய சனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அமைச்சரவையில் ஏறத்தாள 10 வருடங்கள் முன்ணணி அமைச்சர்களில் ஒருவராகவிருந்து இப்போது எதிரணியின் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடும்; திரு. மைத்ரிபால சிறிசேன.

தற்போதைய சனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் சொல்லொணாத் துன்பங்கள் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. இவரது ஆட்சியின் கீழேயே தமிழ் மக்களுக்கெதிரான நீண்ட கால இனப்படுகொலைச் செயன்முறையின் மிக மோசமான, மிகவும் துன்பகரமான அத்தியாயம் அரங்கேற்றப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் பல்வேறு வழிகளில் தமிழர்களது கூட்டு இருப்பை இல்லாதொழிக்கும் இனப்படுகொலைச் செயற்திட்டங்கள் பலவற்றை இந்த அரசாங்கம் தொடர்ந்து மூர்க்கமாக முன்னெடுத்து வருகிறது. நில அபகரிப்பு, சிங்கள பௌத்த மயமாக்கல், இராணுவ மயமாக்கல், முன்னாள் போராளிகளுக்கெதிரான வன்முறை, சட்டத்திற்கு முரணான கைதுகள், என்று பல்வேறு வழிகளில் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்;. எனவே பதவியில் இருக்கும் சனாதிபதிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது என்பது ஒரு போதும் ஒரு தெரிவாக இருக்க முடியாது.
அதேவேளை ஆட்சி மாற்றம் ஏற்படுவதன் மூலமாக தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பானது வரலாற்று ரீதியாகப் பொய்யானது என எண்பிக்கப்பட்டுள்ளது. தெற்கின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் சிங்கள பௌத்த பேரினவாத தமிழர் விரோத அரசியலைத் தமது கருத்தியல்; மற்றும் தொழிற்பாட்டு அரசியலாக வரித்துக் கொண்டவர்கள். அவர்களிடம் தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் ஒரு குறைந்தபட்ச நியாயமான நிலைப்பாடுதானும் இல்லை. உதாரணமாக சிங்கள தேசத்தின் இரு பிரதான கட்சியினருமே ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு அப்பாலான தீர்வொன்றைப் பற்றி இன்று வரை கலந்துரையாடக் கூட தயாரில்லாதவர்கள்;, சர்வதேச விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள். சிங்கள பௌத்த கட்சிகளின் இந்த வேறுபாடில்லாத் தன்மையை நாம் காலம் காலமாக தெற்குச் சிங்கள பௌத்த அரசியலின் பொதுவான குணாம்சமாக அனுபவ வாயிலாக அறிந்ததே. பொது எதிரணியின் வேட்பாளரும் கூட அரசியற் தீர்வு, தமிழர்களுக்கெதிராக நடாத்தப்பட்ட குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் என்ற இரண்டு விடயங்கள் தொடர்பிலும் தமக்கும் பதவியிலிருக்கும் சனாதிபதிக்குமிடையே எந்த கருத்து வேறுப்பாடும் இல்லை என்பதைப் பல்வேறு தடவைகள் பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தி வருகின்றார்.
எதிரணியின் பொது வேட்பாளர் நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிப்பது என்ற பிரதான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே போட்டியிடுவதாகக் கூறுகிறார் இந்;தக் கோசம் அல்லது நிகழ்ச்சி நிரல்தான் தற்போது அனைவரதும் கவனத்திற்குமுரியதாக முன்னிலையில் உள்ளது.

நிறைவேற்று அதிகார சனாதிபதி தலைமையிலான அரசாங்க முறைமை அதிகாரங்களை ஒரு நபரிடம் அளவுக்கு மிஞ்சி குவிக்கும் தன்மையானது, சனநாயக விரோதமானது என்பது உண்மையே. குறிப்பாக இலங்கையின் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு முன்னிலைப்படுத்தும் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறைமை உலகிலுள்ள ஏனைய சனாதிபதி முறைமைகளோடு ஒப்பிடும் போது பெருமளவு சனநாயக விரோதப் பண்புகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக எதிரணியின் பொது வேட்பாளரும் ஆதரவளித்து 2010 இல் நிறைவேற்றப்பட்ட 18ஆவது திருத்தமானது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை படு மோசமான ஒரு அதிகார மையமாக மாற்றியுள்ளது. இம் முறைமையை ஒழிப்பதென்பது எழுந்தமானமாக, தனித்தவொரு விடயமாகப் பார்க்குமிடத்து சனநாயக மறுசீரமைப்பு என்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு முக்கியமானதே.

ஆயினும் தூரநோக்கில் தமிழ் மக்களது நலன்கள் மற்றும் நிலைத்து நிற்கக் கூடிய சனநாயகமயப்படுத்தல் என்ற பார்வையில், பின்வரும் விடயங்களை நாம் பதிவு செய்ய விரும்புகிறோம்:

அ. 1978 அரசியலமைப்பிற்கு முந்தைய பாராளுமன்ற முறைமை ஆட்சியின் கீழ் வந்த அரசாங்கங்களாலும் தமிழர்களுக்கு எதிராக, எங்களது இருப்புக்கெதிராக பல அநீதிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 1956ன் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது இருந்ததும் ஒரு பாராளுமன்ற முறை அரசாங்கமே. இந்த உண்மை ஒன்றே எந்த அரசாங்க முறைமையை சிங்கள பௌத்த அரசியல் தலைமைகள் தெரிவு செய்கிறார்கள் என்பது தமிழர்களைப் பொறுத்த வரையில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியதில்லை, ஏற்படுத்தப்போவதில்லை என்பதைக் கோடிட்டுக்காட்டப் போதுமானது. இலங்கையின் சனநாயக அரசியலானது பேரினவாத பெரும்பான்மை அணுகுமுறையால் வழி நடாத்தப்படுகின்ற கலாசாரம் மாறாத வரை தமிழர்களுக்கு அரசாங்க முறைமையை மாற்றுவதால் நன்மைகள் ஏதும் ஏற்படப் போவதில்லை.

ஆ. இன்று வரை தமிழ்த் தரப்பானது இலங்கையின் அரசியல் யாப்புக்கள் எவற்றினதும் உருவாக்கத்தில் பங்காளிகளாகச் சேர்க்கப்பட்டதில்லை. முற்றிலும் தமிழர்களுக்கு விரோதமாகவுள்ள ஒரு அரசியலமைப்பின் ஒரு பகுதிக்கு மட்டும் செய்யப்படும் சீர்திருத்தம் தமிழருக்கு அவர்களது நீண்ட கால, சமகால இருப்புப் பிரச்னைகளுக்குத் தீர்வைத் தராது.

இ. சனாதிபதி முறை ஆட்சியை ஒழிப்பதன் மூலம் சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி, நீதித்துறையின் சுதந்திரம் ஆகியன சீர்பட வாய்ப்புள்ளது. அதனைக் காரணமாகக்காட்டியே தமது அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டாலும் தமிழர்கள் பொது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வாதம் முன் வைக்கப்படுகின்றது. இது எம்மைப் பொறுத்த வரையில் ஒரு குறைந்தபட்ச வாதமாகவே உள்ளது. எக்காலத்திலும் (கடந்த 66 வருடங்களில்) எந்த ஒரு ஆட்சி முறைமையிலும் தமிழர்கள் மீதான சனநாயக மறுப்புகள், இன ஒடுக்குமுறைகள், அழிப்பு முயற்சிகள் அகன்றதில்லை, ஓய்ந்ததில்லை. மூர்க்கம் மட்டுமே கூடிக்குறைந்தது என்பதை நாம் மறக்க முடியாது. சட்டத்தின் ஆட்சி செவ்வனே இருந்ததாக சொல்லப்பட்ட 1950களில் கூட சட்டத்தின் ஆட்சி தமிழர்களைப் பொறுத்த வரையில் மௌனமாய் இருந்தமை 1958 கலவரத்தின் மூலம் அறியப்படும். சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுகிறோம் என்ற ஆணையோடு ஆட்சிக்கு வந்த பல அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்து சில வருடங்களிலேயே தமிழ் விவகாரங்கள் தொடர்பில் செயற்பட்ட விதமும் நாம் அறிந்தவையே. கடந்த 30 வருடங்களாக நீதியை வழங்குவதற்கென்ற பெயரில் நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களாலும் எவ்வித பயனும் ஏற்பட்டதில்லை. தமிழர்களைப் பொறுத்த வரையில் இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் ஒரு போதும் இருந்ததில்லை. மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமை 1948 இல் பறிக்கப்பட்ட போது அதைத் தடுத்து நிறுத்தாத அப்போதைய நீதித்துறை, ‘சுதந்திரமான நீதித்துறை”-யாகவே கருதப்பட்டது. எனவே சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துகிறோம், நீதித் துறைச் சுதந்திரத்தை நிலை நாட்டுகிறோம் என்ற முன்வைப்புகள் மட்டுமே தமிழ் வாக்குகளை பெறுவதற்கு போதுமானதல்ல.
சிங்கள மக்களின் பிரச்சனைகளில் எமக்கு அக்கறையில்லாமல் இல்லை. உண்மையில் இன்று சிங்கள மக்களும் எதிர்கொள்ளும் சனநாயக மறுதலிப்பானது, காலம்காலமாக தொடர்ந்து வந்த அரசுகளின் தமிழன விரோத அரசியலின் ஒன்று திரண்ட வெளிப்பாடே. தமிழ் மக்களுக்கெதிரான சகல ஒடுக்குமுறைகளுக்கும் மௌன சாட்சிகளாக மட்டுமன்றி அங்கீகாரம் வழங்குபவர்களாகவும் சிங்கள தேசம் இருந்து வந்ததன், வருவதன் பக்கவிளைவே இன்று அவர்கள் எதிர் கொள்ளும் இந்தச் சனநாயக மறுப்பாகும்;. எம்மைப் பொறுத்தவரையில் தெற்கிலும் முழு இலங்கைத் தீவிலும் உண்மையான சனநாயகம் தோன்றுவதற்கான வாய்ப்பு தேசியப் பிரச்சனை தொடர்பில் ஒரு நேர்மையான நிலைப்பாட்டை முன் வைப்பதன் மூலம் திறக்கப்படக் கூடிய உரையாடலின் ஊடாக மட்டுமே உருவாக முடியும்;. சனநாயகத்திற்கு வேறு மாற்று வழிகளும் இல்லை. குறுக்கு வழிகளும்; இல்லை என்பதைச் சிங்கள அரசியல் தலைவர்களும் குறிப்பாக சிங்கள மக்களும் உணர வேண்டும்.

ஈ. பொது எதிரணி வேட்பாளர் உண்மையில் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை ஒழித்தல் என்ற ஒற்றை நிகழ்ச்சி நிரலுக்குரியவரா என்பதுகூட அவர் ஜாதிக ஹெல உறுமயவோடு செய்திருக்கும் ஒப்பந்தத்தின் மூலம் சந்தேத்துக்துக்குரியதாகின்றது.
நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை ஒழித்தல் என்ற பிரதான நிகழ்ச்சிநிரலையும் தாண்டி ஒற்றையாட்சி முறையை தக்க வைப்பேன், சர்வதேச விசாரணைக்கு இடமளியேன் போன்றவற்றை உள்ளடக்கி அவர் ஜாதிக ஹெல உறுமயவோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். (இவற்றைத் தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உறுதிப்படுத்தியுள்ளார்) வெறுமனே சிங்கள வாக்குகளைப் பெறுவதற்கான உத்தியாகவும் இந்த ஒப்பந்தத்தைப் பார்க்க முடியாது. மேலதிகமாக தமிழ் வாக்குகளைப் பெறுவதில் பொது எதிரணி வேட்பாளரது உதாசீனமான எண்ணப்பாங்கையும் இது வெளிப்படுத்துகின்றது.

தமிழர் விடயத்தில் நீதியாக நடந்து கொள்வேன் என்ற நிலைப்பாடு தேர்தற் காலத்தில் சிங்கள வாக்குகளைப் பெறுவதற்கு தடையாக இருக்குமென்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின் சிங்கள மக்களுடைய ஆதரவைத் தமிழர் நலன் சார் விடயங்களில் எப்படி பெற்றுக் கொள்வார்கள் என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழர் நலன்கள் தொடர்பில் சரியான நிலைப்பாடு ஒன்றைத் தேர்தற் காலத்தில் எடுக்க முடியாது என்று கூறும் சிங்களத் தலைவர் ஒருவர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அப்படியான நிலைப்பாட்டை எவ்வாறு எடுப்பார் என்ற நியாயமான கேள்வியும் எழுகின்றது. இத் தேர்தலானது சிங்கள மக்களை மாத்திரம் பிரதானப்படுத்திய, அவர்களது எதிர்காலம் தொடர்பான ஒரு தேர்தல் மாத்திரம் என்பதையே இரண்டு பிரதான வேட்பாளர்களும் முன்னிலைப்படுத்துகின்றார்கள்.

இரு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களது பிரச்சனைகள் தொடர்பாக நிலைப்பாடெடுத்து அவர்களது வாக்குகளைக் கோரி நிற்கவில்லை. மாறாகத் தமிழர்களுக்கு தனித்துவமான பிரச்சனைகள் இருப்பதனை மறுதலிக்கின்றனர்;. தமிழர் நலனுக்கு முரணான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். எனவே இத்தேர்தல் தொடர்பில் ஓர் கூட்டு நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கில்லை. பிரதான வேட்பாளர் எவருக்கும் வெளிப்படையாக வாக்களிக்க எடுக்கும் முடிவானது ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதாகவும் சர்வதேச விசாரணையை மறுத்ததாகவும் அர்த்தம் கொள்ளப்படும்.

இன்றைய நிலையில் தமிழ் மக்கள் தமக்கென, தமது அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை உருவாக்குவதும் அதற்காக மக்கள் அணிதிரள்வதும், அணிதிரட்டப்படுவதுமே முக்கியமானவை. அத்தகைய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தெற்கில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நாங்களும் எமது அரசியல் தலைவர்களும் பிரிக்க முடியாத தமிழர் தாயகம், மறுக்க முடியாத தமிழ்த் தேசிய அடையாளம், அதன்வழி வந்த எமக்கான சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி, இன்றைய உலக ஒழுங்கை மேற்சொன்ன வரையறைக்குள் எமக்கு சாதகமாக்கி எமது அரசியலை முன்னகர்த்த முயற்சிப்பதே முக்கியமானது.
மேற்சொன்னவற்றைக் கருத்திற் கொண்டு, எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும்; தமது மனச்சாட்சிக்கும், நீண்ட கால நோக்கில் தமிழ்ச் சமூகத்திற்கும், பொருத்தமான முடிவு எது என்பதைத் தனிப்பட்ட ரீதியாக ஆழமாகச் சிந்தித்து முடிவெடுக்குமாறு வேண்டுகிறோம்.

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

மீண்டும் ஒரு அஞ்சலிக்குறிப்பு; இராசநாயகம் என்ற முரளிக்கு

எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தேசியத்தின் மீது உணர்வு பூர்வமானஅக்கறை கொண்ட இராசநாயகம் அவர்களின் பணிகள் சில மகத்தானவை. 1981 மே 31 …

Leave a Reply