Home / Blogs / செய்திகள் / பி.பி.சி தமிழோசை: லண்டனிலிருந்து டெல்லிக்கு
tamil_twitter_73x73_400x400

பி.பி.சி தமிழோசை: லண்டனிலிருந்து டெல்லிக்கு

பிபிசியின் உலகசேவையின் ஒருபகுதியான, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான பன்மொழி ஒலிபரப்புகளில் ஒன்றாக லண்டனிலிருந்து இயங்கிவரும் தமிழோசை அடுத்த ஆண்டளவில் இந்தியத் தலைநகர் டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகவிருக்கிறது. பிபிசியின் செலவுக்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்திய மொழிகளில் ஒலிபரப்பாகும்வானொலி நிகழ்ச்சிகள் டெல்லிக்கு மாறப்படவுள்ளன எனத் தெரியவருகிறது. இந்நடவடிக்கை மூலம், லண்டனில் பணியாற்றும் தமிழோசையின் பணியாளர்கள் அனைவரும்பதவியிழப்பர். இருப்பினும் இவர்கள் இந்தியாவிலிருந்து பணிபுரிய விரும்பினால், வெற்றிடமாகவுள்ள பதவிகளுக்கு மீள விண்ணப்பிக்க முடியும் எனத் தெரியவருகிறது. ஆனால் இந்தியக் குடியுரிமை இல்லாதவர்களும் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா என்பது தெரியவில்லை.

1941ம் ஆண்டு மே 3ம் திகதி பிபிசி தமிழோசைஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் பதினைந்து நிமிட ஒலிபரப்பாகிவந்த தமிழோசை பின்னர் வாரத்தில் ஐந்து நாட்கள் நாளொன்றுக்கு அரை மணி நேரம் ஒலிபரப்பானது. தற்போது வாரத்தில் எல்லா நாட்களும் கிறெனெச் நேரப்படி மாலை 3.45 மணியிலிருந்து 4.15 மணி வரை அரைமணி நேரம் ஒலிபரப்பாகிறது. இந்தியா, இலங்கை, மற்றும் கனடா போன்ற புலம்பெயர்நாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வானொலி பிரபலமாக இருப்பினும் பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் இவ்வானொலியை செவிமடுப்பது அரிதாகவே உள்ளது.

எண்பதுகளில் ஈழத்தில் போர் உக்கிரமடைந்த காலத்தில் பிபிசி தமிழோசையே ஒரே ஒரு நம்பகத்தன்மை கொண்ட வானொலியாக இருந்து வந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை `லங்கா புவத்’ என்ற அரச செய்திச் சேவையின் பொய்ச் செய்திகளை ஒலிபரப்பியதும் இதற்கு ஒரு காரணம். போரின் நெருக்கடிகளிலும், மின்சாரமின்மை, மின்கலங்களுக்கு (பற்றரி) தடை என்பனவற்றுக்கு மத்தியிலும் சைக்கிள் டைனமோக்கள் மூலம் வானொலியை இயக்கி பி.பி.சி வானொலியை ஈழத்தமிழ்மக்கள் கேட்டுவந்தனர். தமிழோசையின் அப்போதைய பொறுப்பாளர் சங்கர் அண்ணா என அன்பாக அழைக்கப்படும் சங்கரமூர்த்தி, ஆனந்தி அக்கா என அன்பாக அழைக்கப்படும் மூத்த ஒலிபரப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் ஆகிய இருவரும் அக்காலத்தில் மக்களின் பேரபிமானம் பெற்ற ஒலிபரப்பாளர்களாக இருந்தார்கள். இவர்களது குரலைக் கேட்க இரவு 9மணிக்கு வானொலியை சிற்றலை வரிசைக்கு திருப்புவது ஈழத்தமிழர்களது வழக்கமாகவிருந்தது.

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில், ஐபிசி போன்ற புலம்பெயர் வானொலிகள், தமிழ்நெற் இணையதளம் ஆகியவை செயற்பட ஆரம்பித்ததும் தாயகச் செய்திகளுக்காக பிபிசி தமிழோசையின் அரை மணி நேரச் செய்திகளுக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. குறிப்பாக பிபிசியில்பணிபுரிந்த மூத்த ஒலிபரப்பாளர் ஏ.சி.தாசீசியஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் – தமிழ் (ஐ.பி.சி), இருபத்தினான்கு மணி நேர வானொலியாக பணியாற்றியது. தாயகச் செய்தியாளர்களின் துணிகரமான முயற்சிகளால் செய்திகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டமையால், செய்திகளுக்கு பிபிசி தமிழோசைக்காக காத்திருக்க வேண்டிய நிலை மாறியது.

அண்மைய வருடங்களில் பிபிசி தமிழ்ச் சேவை,ஒரு பிரதான செய்தி ஊடகம் என்ற நிலையிலிருந்து ஒரு மாற்று ஊடகம் என்ற நிலைக்குவந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுமளவிற்கு அதன் நடவக்கைகள் அமைந்திருக்கின்றன. மையத் தமிழ் ஊடகங்களில், குறிப்பாக புலம்பெயர்நாடுகளில் இயங்கும் ஊடகங்களில் முதன்மை பெறாத தரப்புகளுக்கு பிபிசிதமிழ்ச் சேவை முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அதிலும் சிறிலங்கா ஆயுதப்படைகளுடன் துணைக்குழுக்களாக இயங்கியவர்களின் பிரதிநிதிகளுக்கும், வெளிப்படையான புலி எதிர்ப்பாளர்களுக்கும் தமிழோசையில் கருத்துக்கூறும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழோசையின் நடுநிலைத்தன்மையை வெளிக்காட்டுகிறது என்ற கருத்து மக்கள்மத்தியில் நிலவினாலும், முக்கிய நிகழ்வுகளை அது புறக்கணித்து வருவது தமிழோசையின் மீது அவர்களுக்கு விசனத்தை ஏற்படுத்துகிறது. புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற பல முக்கிய தமிழர் நிகழ்வுகளுக்கு தமிழோசையில் உரிய இடம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதேசமயம் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலி எதிர்ப்பாளர்களால் நடாத்தப்படும் `இலக்கியச் சந்திப்புபி போன்ற சிறு நிகழ்ச்சிகளுக்கு இன்றும் தமிழோசை மிகுந்த முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிபிசி தமிழோசை குறிப்பிட்டளவு முக்கியத்துவம் பெறவில்லை, பொதுவில் அதிகம் அறியப்படாத ஒரு ஒலிபரப்பாகவே இருந்து வருகிறது. அதுவும் தனியார் தொலைக்காட்சி வலையமைப்புகள், பண்பலை வானொலிகள் இருபத்தினான்கு மணிநேரமும் இயங்கிக்கொண்டிருக்க, தமிழோசையின் அரைமணி நேர ஒலிபரப்பிற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. ஆனால் பிபிசி தமிழோசையை கேட்பவர்களின் தொகை இந்தியாவில் அதிரித்து வருவதால் பிபிசி இந்திச் சேவையைப்போன்று தமிழ்ச் சேவையும் டெல்லிக்கு மாற்றப்படுவதாக பிபிசி உலக சேவையின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். இருப்பினும் இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கும் தமது சேவையை தொடரவிருப்பதாகவும் அந்தப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.

பிபிசி தமிழோசை டெல்லிக்கு கொண்டு செல்லப்படுவதற்கு எதிராக மக்களைத் திரட்டும் முயற்சிகளில் பிபிசி தமிழ்ச் சேவையில் பணிபுரிவர்கள் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது. டெல்லிக்கு கொண்டு செல்லப்படுவதன் மூலம் தமிழோசையின் நடுநிலைத்தன்மை பாதிக்கப்பட்டு விடும் என்பதேஇவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கும் காரணமாகும். தமிழோசையில் அமையா அமைய முறையில் பணிபுரியும் விக்கினராஜா என்பவர் இந்த முயற்சிகளுக்கு ஆதரவாக unsolicited  வகையிலான மின்னஞ்சல்களை அனுப்பிவருகிறார். மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்க  On-line petition  ஒன்று செப்ரெம்பர் 26ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைக்கு ஆதரவாக இதுவரை 371 பேர் மாத்திரமே பதிவு செய்துள்ளனர். இப்பட்டியலில் பிபிசி தமிழோசையின் மிக நீண்டகாலமாகவே அமையா அமைய அடிப்படையில் பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன், மற்றும் திருநாவுக்கரசு விக்கினராஜா அவரது மனைவி கலாதேவி விக்கினராஜா ஆகியோரும் அடங்குகின்றனர். நிரந்தப் பணியார்களாகப் பணியாற்றுபவர்களின் விபரங்கள் இப்பட்டியலில் காணப்படாத போதிலும் அவர்களும் இந்தநடவடிக்கைகளுக்கு ஆதரவினைத் தேடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இருப்பினும் இந்த முயற்சிக்கு பெருத்த ஆதரவு மக்கள் மத்தியில் காணப்படவில்லை. தமிழ் தேசிய அமைப்புகளும் இவ்விடயத்தில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. இதனால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் அமிர்தலிங்கம் பகீரதன், மற்றும் சில தமிழ் உள்ளுராட்சி உறுப்பினர்களின் உதவியை இவர்கள் நாடியுள்ளனர்.

தமிழோசை டெல்லியிலிக்கு இடம்மாற்றப்படுவது பற்றி ஒருபேப்பருக்கு கருத்து வெளியிட்ட நீண்டகாலமாக இயங்கி வரும் முன்னணி தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் ஒருவர்  ”பல வருடங்களாகவே பிபிசி தமிழோசையானது இந்திய ஆட்சிமையத்தின் நலன்னை முன்னிறுத்திச் செயற்பட்டு வருகிறது. ஆகவே அது டெல்லிக்கு செல்வதனால் புதிதாக என்ன மாற்றம் ஏற்றுபட்டு விடப்போகிறது” எனக் கேள்வி எழுப்பினார்.

தற்போது நிரந்தரப்பணியாளர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக குடும்பத்துடன் லண்டனில் வாழ்வதனால் அவர்கள் மீளவும் இந்தியாவுக்கு திரும்பி, இந்திய வேதனத்தில் பணிபுரிவதை விரும்பவில்லை. இதனால் அவர்கள் டெல்லிக்கு இடம் மாற்றப்படுவதை எதிர்த்து வருவதாக பிபிசி தமிழோசை பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிவரும் பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் éக்கு தெரிவித்தார். தமது தாய் நாட்டுக்கு திரும்பிச் சென்று அங்கிருந்து பணிபுரிவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பையிட்டு மகிழ்வடைவதனை விடுத்து அவர்கள் இவ்வாறு எதிர்க்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் இப்பணியாளரகள் மீள நாடு திரும்ப விரும்பினால் கூட லண்டன் வாழ்க்கைக்கு பழகிவிட்ட இவர்களது பிள்ளைகள் நாடு திரும்ப விரும்பவில்லை என்ற விடயத்தையும் அவ் அரசியல் செயற்பாட்டாளர் தெரிவித்தார்.

எது எப்படியோ தகவல் தொழில்நுட்பம் அபரிதமாக வளர்ச்சி கண்டுள்ள இன்றைய நிலையில், ஒரு ஊடகம் அண்மையில் இருந்தால் மட்டுமே அதனை அதன் தலைமைப்பணியகத்தினால் நெறிப்படுத்த முடியும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. அதுவும் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு எனப்பரப்புரை செய்து வந்த பிபிசி தமிழோசையினர், தாம் இந்தியாவிற்கு சென்றால் தம்மால் நடு நிலையாகச் செயற்பட முடியாது போய்விடும் எனக் குறிப்பிடுவது நேர்மையான வாதமாகப் படவில்லை.

தே.இரவிசங்கர்

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

UKumar

ஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழககட்சிகளுக்கும் மக்களுக்கும் நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் கோரிக்கை …

Leave a Reply