Thursday , January 23 2020
Home / தாய் நாடு / ஊரின் வாசம் / மாவைக் கந்தன் அன்றும் இன்றும்.
image

மாவைக் கந்தன் அன்றும் இன்றும்.

தாயக திருத்தலங்களைப் போல புலம் பெயர் நாட்டிலும் கோடைகாலம் கோயில்களின் உற்சவங்களால் கலகலத்தது. தாயகத்தில் பெயர் பெற்ற பண்டைய திருத்தலங்கள் சில யுத்த அனர்த்தங்களாலும் ஊர் மக்களின் இடம்பெயர்வாலும் நித்தியக் கிரியைகள் நீண்ட காலம் நிறுத்தப்பட்டிருந்தன. அரச படைகளில் ஷெல் பொம்பர் தாக்குதலிலும் அவற்றில் சில சேதம் கண்டன. வடக்கில் முக்கிய தலங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமியாராலம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் ஆகியனவும் அடங்குகின்றன. இரண்டும் அருகாமையில் அமைந்த திருத்தலங்கள். மாவைக்கந்தன் தீர்த்த உற்சவமும் ஆண்டாண்டு காலமாக கீரிமலைத் திருத்தலத்தில் நடைபெறுகிறது. வலிகாமம் வடக்கு மக்கள் இரு கோயிலிலும் நித்திய பக்தர்கள். இதனால் இரு தலங்களுக்குள்ளும் ஒரு ஐக்கியம் நிலவுகின்றது.

சோழ நாட்டு இளவரசி மாருதப்புரவீரவல்லி தன் குதிரை முகம் நீங்க மாவைக் கந்தன் அருள் காரணமாக அமைந்ததால, ஆலயத்தைக் கட்டி எழுப்பினாள் என்பது திருத்தல வரலாறு. அதியுயர் அழகு கோபுரத்தோடும் ஐந்து வீதிகளோடும்  எழில் ஒச்சும் ஆலயமாக பல நூற்றாண்டுகளாக அது நிலைத்து நின்றது. கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயமும் நகுல முனிவரின் கீரி முகம் நீங்கப்பெற்ற அருளினால் எழிலானது என்பது தல சரித்திரம். மாவைக் கந்தன் ஆலயத்தோடு சுற்றுக் கிராமங்களிலும் மாருதப்புரவீகவல்லி ஏழு பிள்ளையார் ஆலயங்களையும் கட்டி எழுப்பி இருந்தார்.

எனது பால பருவத்திலிருந்தே மாவைக் கந்தன் ஆலய இருபத்தைந்து நாட்கள் உற்சவத்துக்கும் விரதம் குடும்பத்தார் அனைவரும் இருப்பது வழக்கம். கொடியேற்றத்துக்கு சில நாட்கள் முன்பாகவே மாமிசப் போசனம் நிறுத்தப்பட்டுவிடும். மச்ச சட்டிகள் எல்லாம் வீட்டுக் கோடிக்குள் கவிழ்;க்ப்படும். தேவை அறிந்து தெருத் தெருவாக மண் சட்டி பானைகளை விற்கும் மாட்டு வண்டில் விற்பனையாளர்கள் வருவார்கள். புதுப்பானை சட்டி விரத காலத்தில் அடுப்பை அலங்கரிக்கும். கால ஓட்டத்தில் மண் பாண்டங்கள் புதிய அலுமினியப் பாத்திரங்களாயின.

மண்வீடானால் சாணகத்தால் முழுதாக மெழுகப்படும் கல்வீடானால் விறாந்தைகளெல்லாம் கழுவப்பட்டும், தூசி தட்டப்பட்டும் வீடுகள் கொடியேற்றத்துக்கு முன்பாகவே சுத்தம் காணும். கொடியேற்றம் ஆரம்பித்தால் போதும் வீட்டு முற்றம் சாணகத் தெளிப்பால் பசுந்தரையாகக் காட்சியளிக்கும். வீட்டுச் சாமிப்படங்களிலும் விளக்குப்பூ, வீட்டில் சாம்பிராணி மணம், விரத்ததுக்கென விசேட மரக்கறிகள் சமைப்பதால் சமையல் அறையில் இருந்து எழும் தாளித வாசம், காலை மதிய இரவு கொடித்தம்பப் பூசைகளைக் கான வீதியில் பக்தர்கள் போக்குவரத்து, இதனால் எந்நேரமும் வீதியில் கலகலப்பு என்பன அந்த புறங்களில் உற்சவகால வாடிக்கை.

வேட்டைத்திருவிழா, கார்த்திகைத் திருவிழா, சப்பறத்திருவிழா குறிப்பாக தேர் தீர்த்தம் என்றால் வயல் பிரதேசங்களால் வரும் பக்தர்களாலும் அந்த பிரதேசம் முழுதும் சனத்திரள் மயமாகக் காட்சியளிக்கும். ‘திர்த்தக்கரை மாதிரிச் சனம்’ என்பது தான் பேச்சுவழக்கில் இந்தப்பிரதேசத்தில் சனம் கூடிய வைபவங்கள் பற்றி கூறப்படும் வர்ணனை.

யுத்த அனர்-Maavittapuram_Kandasamyத்தங்களின் பின் மீண்டும் சென்ற ஆண்டு முதல் மாவைக் கந்தன் ஆலயம் உற்சவம் காண்கிறது. இவ்வாண்டு இதனை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.அன்றும் இன்றும் என ஒப்பு நோக்கிய என் நெஞ்சம் கவலையில் கனத்தது. குண்டும் குழியுமாக இடிபாடுகளுடன் கூடிய காங்கேசன்துறை வீதி. தெல்லிப்பழை சந்தியிலிருந்து மாவிட்டபுரம் வரையாக வீதியின் இரு மருங்கிலும்அமைந்திருந்த ஐநூறுக்கும் அதிகமான கல்வீடுகள் அனைத்துமே இன்றும் இடிபாடுகளோடு அப்படியே இருக்கின்றன. குடியிருப்பாளர்களோ திருத்தம்; மேற்கொள்ளும் முயற்சிகளோ எதுவுமில்லை. வலப்புறமாக ஒரேயொரு வீடு மட்டும் திருத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

காங்கேசன்துறை மயிலிட்டி, வீமன்காமம், கிராமங்களிலும் மீள்குடியேறும் தொகை மிகவும் குறைவு. அம்பனை முதல் மாவிட்டபுரம் கீரிமலை என இரு பிரிவாகப் பிரியும் வீதிகள் வரையான கொல்லங்கலட்டி வீதியிலும் புனரமைக்கப்பட்ட வீடுகளின் தொகை மூன்று மடடுமே. அளவெட்டி பன்னாலை கருகம்பனை மாத்தனை தெல்லிப்பளை பகுதிகள் உட்புறமாக மீள்குடியிருப்புக்கள் சில அமைந்திருக்கின்றன.

ஆலய உற்சவங்களும் களைகட்டவில்லை. ஐந்து தேர் அலங்காரமாக உலாப் போகும் மாவைக் கந்தன் திருவிழாவில் ஆக ஒரு தேர் மடடுமே இம்முறை வீதிபவனி வந்தது. அதுவும் சகடையில் அலங்கரிக்கப்பட்ட ஓர் தெர் ஊர்தி. திருத்தங்களை வேண்டி நிற்கும் ஆலயக் கட்டடம் எழுப்படவேண்டிய வசந்த மண்டபம் அங்கொன்று இங்கொன்றாகக் காணப்படும் மணிக்கடைகள். சில கடலைக்காரர்கள். ஆயிரத்துக்கும் உள்ளாக மட்டும் அமைந்த தேர்திருவிழாவுக்கான பக்தர் கூட்டம் என தேர் உற்சவம் ஆராவாரமின்றியே இவ்வாண்டு காணப்பட்டு ஆனால் இவ்வாண்டு கண்காணிப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை நூற்றுக்கு மேலாக இருந்தது.

ஆலயத்தின் தேரின் அடிப்பாகங்கள் மிகச் சிதைந்த நிலையில் உக்கிப் போனதாக ஒவ்வொரு புறத்திலும் காணப்பட்டது மிக வேதனை தரும் அம்சமாக இருந்தது. தீர்த்த உற்சவத்தின் நிலையும் மந்தம் தான். சுமார் மூவாயிரத்துக்கும் குறைவாகவே அமைந்த பக்தர் தொகை எள்ளும் தண்ணியும் இறைத்து பிதிர்க்கடன் தீர்க்கும் பக்தர்களும் ஐயர்மார்களும் கீரிமலைக் கடல்கரையை நிறைத்திருந்தார்கள். தீர்த்தமாடிய மாவை முருகன் கடலை நோக்கி வீற்றிருக்க கற்பூர சுடர் ஒளி மணல் தரையில் உயர தொடர்ந்து எழுந்து எரிந்து முன்னைய நிலையை நினைவூட்டின. கடல்க்கரையில் எள்ளும் தண்ணியும் கடன் நிறைவேற்றும் அடியார்களுக்காக அமைந்திருந்த ஐயர்மார் செயற்பாட்டிலும் ஒரு இயந்திரத்தன்மை. உயிரோட்டமில்லாத கடன் கழிப்பு.

பலநூற்றுக்கணக்கில் வீதியின் இருபுறமும் காணப்பட்ட பிச்சைக்காரர் தொகையும் இப்போது வெகு குறைவு. காத்தோட்டிக்காய் பனங்குட்டான் பாய் பெட்டி கடகம் மணிக்கடைகளென அணிவகுக்கும் கடைகளின் ஆரவாரம் இல்லை. கீரிமலை சிவன் ஆலய இராஜகோபுரம் இருபதாண்டுகளாக இன்னும் அடியார்களின் ஒத்துழைப்பைக் கோரி நிறைவு பெறாத தோற்றத்தில் நிற்கிறது. அன்னதான ஆரவாரங்களும் வழமைபோல் இல்லை. போர் அழிவுகளின் இடிபாடுகள் இடம்பெயர்வுகள் வலி வடக்கிலும் இன்னும் நிவர்த்தியாகவில்லை இந்நிலையில் ஆலய உற்சவம் உற்சாகம் பெறுவது எப்படி?

வடக்கின் வசந்தம் வலி வடக்கிலும் மந்தம் தான்.

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

pongal

முற்றத்து தைப்பொங்கல்

தைப்பொங்கல் என்றால் சிறுபராயத்தில் ஊரில் எங்கள் வீட்டு முற்றத்தில் பொங்கி மகிழ்ந்த நினைவு தான் எழுகின்றது. பொங்கலைப் போலவே அந்த …

Leave a Reply