Home / அரசியல் / அலசுவாரம் / முதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்
tamilini

முதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிரணியின் அரசியற் துறைப் பொறுப்பாளராயிருந்த தமிழினியும் மற்றுமோர் விடுதலைப் போராளியான தாருஜாவும் மிக இளம் வயதில் மரணத்தைத் தழுவிக்கொண்டது மிகவும் வேதனையளிப்பதாகவுள்ளது. அவர்கள் பல துன்பங்களைத் தாங்கி அந்த விழுப்புண்களாற்தான் இவ்வாறு இறந்து போனார்கள் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. சில வருடங்களுக்கு முன் அவர்கள் சரணடைந்தபோது செய்யப்பட்ட சித்திரவதைகளே அவர்களின் இளவயது மரணத்திற்கான காரணம் என்பதை இலகுவில் மறுத்துவிட முடியாது. இருப்பினும் அதற்கான போதிய சான்றுகளைத் தரமுடியாததால் இந்த மரணங்களின் உண்மைக் காரணங்கள் காலத்தோடு கரைந்துபோனவையாகவே இருக்கப் போகின்றன.

அவர்களின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திப்பதோடு, அவர்களை இழந்து கவலையில் வாடும்அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை அலசுவாரம் வாசகர்கள் சார்பில் சமர்ப்பிக்கிறேன்.

வடமாகாண முதல்வர் நீதியரசர் திரு க. வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழினியினது கணவருக்கும் குடும்பத்தினருக்கும் உத்தியோக பூர்வமான அனுதாபச் செய்தியில் அந்த வீராங்கனையின் ஈழ விடுதலைக்கான செயற்பாடுகளை மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பாராட்டியிருப்பது, தமிழ் தேசியத்தின் பாற்பட்ட அவரது தளராத ஆர்வத்தையும் ஆதரவையும் வெளிக்காட்டுகின்றது. முந்தையகாலங்களாயிருந்தால் இத்தகைய அறிக்கைகளைப் பற்றிய பெரும்பான்மையினரது விமர்சனங்களும் புலன் விசாரணையாளர்களின் தொல்லையும் கணக்கிலடங்காததாக இருந்திருக்கும். ஏதோ இலங்கையில் தற்போது எழுத்து,பேச்சு, கருத்துச் சுதந்திரங்களும் மனிதவுரிமையும் தப்பிப் பிழைத்து உயிர்வாழத் தொடங்கியிருப்பதாகவே கருதத் தோன்றுகின்றது. இருப்பினும், இன்னும் நெடுநாட்கள் சென்றுவிடவில்லை. முதலமைச்சரை இது தொடர்பாய் விமர்சிக்க யார்யார் எப்போது தொடங்குவார்களோ தெரியாது.

சிலவேளை, தாங்கள் பெரும்பான்மையினராக இருக்கும் கொழும்புப் பாராளுமன்றத்தில், வடமாகாண முதலமைச்சர் உத்தியோக பூர்வமாக ஒரு புலிப்போராளியின் மரணத்திற்காக அறிக்கைவிட்டதற்காகக் கண்டனப் பிரேரணையொன்றையோ அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றையோ கொண்டு வந்து அவரை வீட்டுக்கனுப்ப முயன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அப்படியொரு விடயம் நடைபெறுமானால் அதுவும் உலகிற்கு ஒரு செய்தியை – `அதாவது, இலங்கையில் பெரும்பான்மையினரின் கீழ்சிறுபான்மைத் தேசிய இனமான தமிழினம் ஒற்றையாட்சி அமைப்பொன்றில் அடக்கு முறைக்குள்ளாவதையும் அவர்களது குரல்வளைகள் நசுக்கப்பட்டு, பேச்சு, கருத்து, எழுத்துச் சுதந்திரங்கள் முற்றாகப் பறிக்கப்பட்டிருப்பதையும்’ தெரிவிக்கும்.
முதலமைச்சர் தனது அனுதாபச் செய்தியில், தான் வகிக்கும் பதவி பற்றிய எவ்வித கவலையும் கொள்ளாமல் விடுதலைப் போரில் பெண்போராளிகளின் பங்களிப்பை நியாயப் படுத்தி எழுதியிருப்பதை, நமது தேசிய உணர்விற்கு வார்க்கப்பட்ட எண்ணெயாகவே கருதவேண்டும். இத்தகைய துணிவுமிக்கவோர் தலைவனைக் காலங்கடந்தாவது ஈழத்தமிழினம் பெற்றிருப்பது நமது அதிஷ்டமேயாகும். அவ்வகையில் வடமாகாண முதலமைச்சரின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமைஈழத்தமிழர்கள் அனைவருக்குமுண்டு.

எமது அன்னை மண்ணை மீட்கப்புறப்பட்ட எம் குலத்து வீரமறத்திகளுக்காக நான் இதுவரை அஞசலிக் கவிதையொன்றையும் எழுதவில்லை. தமிழினியும் தாருஜாவும் தம் வாழ்வைமுடித்துக் கொண்ட இச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்காகவும் வீரச்சாவடைந்த ஏனைய எம் ஏனைய சகோதரிகளுக்காகவும் இவ் அஞ்சலிக் கவிதையை அலசுவாரம் வாசகர்கள் சார்பில் சமர்ப்பிக்கிறேன்.

மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக….

அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே
இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர்
பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட
மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர்
உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது
செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது

நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த
அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே!

எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர்
இம்மியளவும் இதயம் பயமறியா

வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து
ஆரத்தழுவிய எம் அக்காமார் தங்கையர்கள்
வாழ்ந்தார்கள் ஓர்கால் வரலாறெமக்குண்டு
தாழ்ந்தாலும் அன்று தமிழீழத் தாய்மண்ணில்
வெற்றிக் கொடிநாட்டி விரட்டிப் பகைதன்னை
கொற்றவைகளாகக் குலங்காத்தார் எம் பெண்கள்
என்று பெருமிதத்தோடியம்புதற்குச் செய்திட்ட
நன்றி மறக்காது நமக்கும் எம் சந்ததிக்கும்

இந்த உலகினிலே ஈழத் தமிழ் பெண்கள்
சொந்த மண் மீட்க தூக்கினர் தம் ஆயுதத்தை
அந்த மறம் போல அகிலம் முழுவதிலும்
எந்த இனப் பெண்ணிடமும்
இருக்கவில்லை நெஞ்சிலுரம்
என்றடித்துக் கூற எமக்குண்டு யோக்கியதை

தங்கை தமிழினியே தாருஜாச் சோதரியே
உங்கள் இறப்பெமது உள்ளத்தைத் தாக்கிடினும்
பெண்மைக்குதாரணமாய் பெருவீரம் காட்டிய உம்
வன்மையும் நெஞ்சுரமும் வரலாற்றில் நிலை நிற்கும்
ஆதலினால் எங்கள் அகம் நிறைந்து வாழ்ந்திடுவீர்
சாதலுக்கு அஞ்சா உம் சரித்திரத்தை நாம் மறவோம்.

தோற்று மனஞ்சோர்ந்து துயரடைந்து வீழ்ந்ததெல்லாம்
நேற்று, இனியும் நெடுங்காலம் நமக்குண்டு
ஆற்றலுண்டு மேலும் அறிவுண்டு வளமுண்டு
காற்றிலொன்றும் இன்னும் கரைந்தழிந்து போகவில்லை

எங்கள் தாய் மண்ணை ஈழத்தமிழகத்தை
பொங்கி யெழுந்து புதுப்பித்துப் போரழித்த
நாட்டை நமதாக்கி நமதுயிராம் தாயகத்தை
ஆட்டிப்படைக்கும் அயல்நாட்டான் வாய்மூட
வெற்றிக் கொடி நாட்டும் வேளை வந்தே தீரும்

எவன் என்ன சொன்னாலும் ஈழத்தாய் மண்ணதனை
மீட்கும் வரை தமிழன் விழி மூடப்போவதில்லை
இன்றில்லா விட்டாலும் என்றோ ஒரு நாளில்
எங்கள் தமிழீழம் இனிதே உருவாகும்

அந்த நாள் தன்னில் தம் ஆருயிரை ஈந்திட்ட
சொந்தங்காள் உம்மைக் கை
தூக்கி வணங்குதற்காய்
ஆலயங்கள் கட்டி அதிலும்மைப் பூசித்து
தெய்வங்களாக்கி சிரம் தாழ்த்தி நாம்பணிவோம்

இன்றுமது கல்லறைகள் இடித்துடைக்கப் பட்டாலும்
என்றும் எம் நெஞ்சில் இருப்பீர் எம் தேவதைகாள்
என்றுரைத்திவ் அஞ்சலியை இனிதே முடிக்கின்றேன்
நன்றே நடக்கும் நமக்கு.

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

youtubee

தமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு

பிரித்தானியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு

Leave a Reply