பிறந்த இடத்தில் இருந்து உயிரையும், மானத்தையும் காக்க என, நாடு விட்டு, நாடு வந்து,பிறகு வந்த நாடு பிடிக்கவில்லை, பிள்ளைகளுக்கென வேறு நாடு என்று, என நாம் விரும்பிஅலைந்தது ஒரு புறம், எம்மை பாதுக்காப்பான இடத்தில் சேர்க்கின்றோம் என்று நாடு நாடாக காசும் புடுக்கிய ஏனென்சி புண்ணியவான்கள் ஒருபுறம் என நாம் அலைந்துலைந்த அகதிவாழ்வு ஒருமாதிரியாக அந்தந்த நாட்டு பிரஜாவுரிமை பெற்றதும், முன்னாள் அகதி என்ற பட்டத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
சொப்பிங் பையோடோ, சில நேரம் வெறுங்கையோடோ இந்த நாடுகளுக்கு வந்து சேர்ந்த எங்களுக்கு ஏனென்சிக்கு கட்டியகாசு, ஈட்டில் இருக்கும் காணி, வீடு, அடைவு வைத்த தாலி, எம்மை நம்பி வந்த மனைவி, பிள்ளைகள், பாதியில் நிற்கும் பட்டப்படிப்பு, கல்யாணத்திற்கு நிற்கும் அக்கா, தங்கை, வருத்தத்தோடு தள்ளாடும் அம்மா, அப்பா என பல பிரச்சனைகள் பிரடியை பிடித்துத்தள்ள உழைக்க வேண்டும் என்ற வெறியில் நாய் பேய் என வேலை செய்து உழைத்தோம், எல்லா கடனும்அடைத்து, வீடு வாசல், கார், இன்னும் இரண்டுவீடு. இரண்டு கார், வருடம் ஒரு சுற்றுலா, இதற்கும் மேல் கடை, வியாபாரம், அரங்கேற்றம், சாமத்தியம், பிறந்தநாள் என்று, இவர்களா 20 வருடத்திற்கு முன் வெறுங்கையோடு வந்தார்கள் என்று நினைந்து வியக்கும் அளவுக்குபொருளாதார ரீதியில் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். அத்தோடு அரசியல், சங்கீதம், நடனம், நாடகம் என்று பல துறைகளிலும் தமிழர்கள் வேற்றின மக்களாலும் அடையாளம் காணக்கூடிய வகையில் இடம் பிடித்துள்ளார்கள்.
இது இப்படி இருக்க இங்கு பிறந்தோ அல்லது தமிழீழத்தில் பிறந்து இங்கு சிறுபிள்ளைகளாக வந்த எமது அடுத்த தலைமுறைக்கும் எமக்கும்,பலகுடும்பங்களில் பேசப்படுவது போன்று பல வேறுபாடுகள் இருக்கின்றன. சிலர் அதை கலாச்சார, சூழ்நிலை வேறுபாடு என்பார்கள். அது ஒருபுறம் இருக்க, அடிப்படையிலேயே எமக்கும் அவர்களுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. அது வாழ்வாதாரங்களுக்கான தேடுதலின் அவசியம். நாம் வரும் போது வெறும் கையுடன்வந்ததால் எமக்குரிய உணவு, உடை, உறையுள் போன்றவற்றையும், எமது குடும்பத்திற்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்தோம், இன்னவேலைதான் செய்வோம் என்று இல்லாமல், கிடைத்தவேலையைச் செய்தோம், இன்ன மாதிரியான வீட்டில் தான் இருப்போம் என்று அடம்பிடிக்காமல், வாடகை குறைந்த பாதுகாப்பான இடம்ஒன்று இருந்தால் காணும் என்று இருந்தோம்.அந்த பாதுகாப்பையும், அன்பையும், சுயாதீனமாக இயங்கக்கூடிய வலிமையையும் நாம் பிள்ளைகளுக்கு உறுதிசெய்து விட்டோம்.
இப்போ எமக்கு அடுத்ததலைமுறைக்கு எங்களை போல் எதுவும் பிரடியை பிடித்து தள்ளவில்லை. ஆகவே அவர்களுக்கு எமக்கு இருந்தது போல உந்து சக்தி, மன ஆர்வம் இல்லை. வேறுஏதாவது அது வழியில் வந்தால் ஒழிய அவர்களுக்கு பாதுகாப்பு உறுதி. அதனால் நின்று நிதானமாக பிடித்த வேலையை தேடுகிறர்கள். சிநேகிதர்கள், சுற்றுலா என தன்னிச்சையாக திரிய வெளிக்கிடுகிறார்கள். அதனால் சிலகுடும்பங்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே வாக்கு வாதங்கள் ஏற்படுகின்றன. உம்முடைய வயதில நான் அப்பிடி உழைத்தனான், இந்த செருப்புத்தான் போட்டனான், எனக்கு இது வேண்ட இவ்வளவு நாள்எடுத்தது என்று அவர்கள் முன்னே அங்கலாய்த்துக் கொள்கிறோம்.
ஒருவிதத்தில் பார்த்தால் எமது அடுத்த தலைமுறைகள் மாஸ்லொவ் இன் தேவைகளின் படிநிலையில் (Maslow’s hierarchy of needs)ஜந்தாவது படிநிலையான அறிவு, வாழ்க்கையின் அர்த்தம், ஆறாவது, ஏழாவது படிநிலையான அழகைத்தேடல், தன்னை திருப்திப்படுத்தல், தன்னை பற்றிய தேடல், தன்னை வளர்த்துக்கொள்ளல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அதனால் தான் வைத்திய படிப்பை அரைகுறையில விட்டு விட்டு, நாடு சுற்ற வெளிக்கிடுகிறார்கள். மியூசிக் கென்று திரிகிறார்கள், சும்மா ஒருவருடம் இருக்கப் போகிறேன் என்றுவெளிக்கிடுகிறார்கள். தேவைகளின் படிநிலையில் முதலாம், இரண்டாம் என்று இருக்கும் அடிப்படைப்படி நிலைகளை நாம் சிரமப்பட்டு கட்டி எழுப்பியதனால் அதை திருப்பி செய்ய வேண்டிய அவசியம் அனேகமான அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் போகிறது,பெற்றோர்களோ என்ன நடந்தது ஏன் எமது பிள்ளைகள் இப்படி இருக்கிறார்கள் எனத் தலையை பிய்த்துக்கொள்கிறார்கள்.
இதைத்தவிர அவர்கள் இரு வேறுபட்ட கலாச்சாரத்திற்கு மத்தியில் வாழவேண்டிய தேவையும், இரு பகுதியினரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள். இந்த மாஸ்லொவ் வின் தேவைகளின் படிநிலை, எமது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கும் பொருந்தும், படிநிலையின் முதலாவது படிநிலையான பாதுகாப்பு, உடை, உறைவிடம் என்பவற்றை பூர்த்தி செய்யாமல் ஜந்தாவது, ஆறு, ஏழாவது படிமுறைகளான அரசியல், அவர்களைப் பற்றிய தேடல், தம்மை வளர்ந்துக்கொள்ளல் போன்றவற்றை சிந்திக்கும் சூழ்நிலையில் அவர்கள்இல்லை. ஆகவே ஆக்கிரமிப்பு இராணுவத்தை அகற்றி அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது, தமிழ் மக்களின் அரசியலுக்கு மிக அவசியமாகிறது.