அகவை 80 காணும் அருட்தந்தை

1037

ஆன்மிகப்பணியிலும் தமிழ் மக்களின் விடுதலைக்கான செயற்பாடுகளிலும் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு செயலாற்றிவரும் அருட்தந்தை சீமாம்பிள்ளை ஜோசப் இமானுவல் அடிகளார் தனது எண்பதாவது அகவையினை இம்மாதம் ஆறாம் திகதி நிறைவு செய்துள்ளார்.

1934ம் ஆண்டு ஜனவரி ஆறாம் திகதி பிறந்த அடிகளார் யாழ் சென்ற் ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் கொழும்புபல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்பினை மேற்கொண்ட அவர் சிறிது காலம் இரசாயன பாடத்தைகற்பிக்கும் ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் தொழில் புரிந்தார்.

1966ம் ஆண்டு டிசம்பர் மாதம் உரோமிலுள்ள St Peter’s Basilica இல் கத்தோலிக்க குருத்துவ நிலையை எய்தினார். அதன்பின்னர்நாடு திரும்பி மதப்பணியில் ஈடுபட்டார். 1976இல்மீளவும் இத்தாலிக்குச் சென்று ஆன்மீகத்துறையில் ஆய்வு மாணவனாகி முனைவர் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார்.

1986ம் ஆண்டிலிருந்து 1995ம் ஆண்டு வரையாழ்பாணத்தில் குருத்துவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1995ம் ஆண்டு இடப்பெயர்வின்போது வன்னிக்கு சென்ற இமானுவல் அடிகளார், அங்கிருந்த காலத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து நிவாரணப்பணிகளில் ஈடுபட்டார். தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் அன்பினையும் மதிப்பினையும் பெற்றுக்கொண்ட அடிகளாருக்கு தலைவர் அவர்கள் தனது அன்பினை பரிமாறுமுகமாக கைக்கடிகாரம் ஒன்றினை பரிசளித்தார். அடிகளார் இப்போதும் அக் கடிகாரத்தை அணிந்து கொள்வதுண்டு.

1997ம் ஆண்டில் ஜேர்மனிக்கு புலம்பெயரந்தஅடிகளார் அங்கிருந்து தனது ஆன்மீகப்பணியினைத் தொடர்வதுடன், 2010ம் ஆண்டிலிருந்து உலகத் தமிழர் பேரவையின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.

இவ்வயதிலும் அடிக்கடி பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து தமிழ் மக்களையும், சர்வதேச இராசதந்திரிகளையும் சந்தித்து வருகிறார்.

மக்கள் பணியில் தன்னை முழுமையாக இணைத்து அர்ப்பணிப்புடன் செயலாற்றும் இமானுவல் அடிகளாரை வணங்கி நிற்கிறோம்.