அடிபணிவு அரசியலுக்கு வித்திடும் கூட்டமைப்பு

1427

வடமாகாண சபை முதலமைச்சராக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் விக்னேஸ்வரன் கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் மகிந்த இராஜபக்சவின் முன் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவிருப்பதாகத் தெரியவருகிறது. ‘ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு’, ‘சிங்கள மக்களுடனான நல்லிணக்கம்’ ஆகிய விடயங்களில் தாம் உறுதியாக இருக்கிறோம் என்பதனை வெளியுலகத்திற்கு காட்டுவதற்காக கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை இம்முடிவினை எடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இம்முடிவினை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அதேசமயம் அவர்களது கருத்தினை அறிந்து கொள்வதற்கான எந்த நடவடிக்கைiயும் எடுக்கப்படாமலே தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், விக்கினேஸ்வரனுக்கு அடுத்தபடியாக எண்பதாயிரத்துக்கு அதிகமான விருப்பு வாக்கினைப் பெற்ற அனந்தி சசிதரன் ஒரு பேப்பர் க்கு தெரிவித்தார்.

மேற்படி தகவல்கள், கூட்டமைப்பு பற்றிய எதிர்பார்ப்புடன், வாக்களித்து இன்னமும் விரலில் பூசிய மை அழியாமல் இருக்கும் வடமாகாண மக்களை மாத்திரமல்லாது உலகத் தமிழர்களையே கலவரப்படுத்துகிறது. ஒரு புறம் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகளைக் கோரிக்கொண்டு, இனப்படுகொலைகளுக்கு பொறுப்பானவர் என தமிழ் மக்கள் கருதும் மகிந்த இராஜபக்சவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வது கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தீவிர தேசியவாதக்கருத்துகளைக் கூறி தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, இனவாத அரசுகளுடன் ஒட்டி உறவாடுவது என்ற தமிழ் கட்சிகளின் வழமையான நடைமுறையை அரசியலுக்கு புதியவரான விக்னேஸ்வரனும் கடைப்பிடிக்க முனைகிறார்.

மாகாண முதலமைச்சர்கள் சிறிலங்காவின் அதிபர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்ற எந்த சட்ட விதிமுறையும் இல்லாதநிலையில், கூட்டமைப்பின் தலைமை எதற்காக மகிந்த இராஜபக்சவிற்கு அங்கீகாரம் வழங்க முன்வந்துள்ளது? வெளித்தரப்பினர் கேட்டு இவ்வாறு நடக்கிறார்களா அல்லது இது முன்கூட்டியே திட்டமிட்ட நடவடிக்கையா என்பதனையிட்டு கூட்டமைப்பின் தலைமை விளக்கமளிக்க வேண்டும்.

சிறிலங்கா இனவெறி அரசாங்கத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்தும் உலகத்தமிழர்களின் முயற்சிகளிலிருந்து அதனை காப்பாற்ற கூட்டமைப்பு முயற்சிக்குமானால், வாக்களித்த மக்களாலே அவர்கள் தூக்கியெறியப்படுவர்.