அடிப்படை உரிமைகளைத் தாரை வார்க்க முடியாது!

1236

ஈழத்தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் தடுத்து நிறுத்த முயலவில்லை என்ற ஆதங்கம் உலகத் தமிழ் மக்களிடம் உள்ளது. இவ்வற்றுள் குறிப்பாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் இந்திய மைய அரசாங்கத்திற்கு இருந்த நேரடித் தொடர்புபற்றி முன்னர் பரவலாகப் பேசப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையிலான தகவல்களை அண்மையில் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டிருந்தது.

Issue : 153

ஏற்கனவே தமிழ்த் தரப்புகளினால் நம்பப்பட்டது போன்று, இந்திய பாதுகாப்பு ஆலோசகராகராக இருந்த எம். கே. நாரயணன் என்பவரே, தனது தமிழர் விரோதப் போக்கினால் இந்தியப் பிரதமரை தவறான ஆலோசனைகளை வழங்கி வழி நடத்தியதாகவும் விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்தவரை, இவை ஒன்றும் ஆச்சரியம் தருகின்ற செய்திகளாக அமையவில்லை.

இந்திய மைய அரசானது, தனது புவிசார் அரசியல் நலன்களைப் புறந்தள்ளிவிட்டு, ஈழத்தமிழர் நலன்களைப் பாதுகாக்க முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்று தமிழ் மக்களிடம் இல்லை. இருப்பினும் பல்லின மக்கள் வாழ்கின்ற, சனநாயக விழுமியங்களை ஒரளவுக்கேனும் மதித்து நடக்கிற இந்திய அரசாங்கம், இவ்விடயத்தில், மேற்குநாடுகளைப் போல் மனிதாபிமான ரீதியாக செயற்படும் என்ற நம்பிக்கை மாத்திரம் இன்னமும் உள்ளது. அந்த வகையில் இந்தியஅரசுக்கு அழுதங்களை ஏற்படுத்தும் போராட்டங்கள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறிலங்கா தொடர்பான இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவேண்டும் என்ற கருத்து, இந்தியப் புத்திஜீவிகளால் இப்போது வெளியிடப்படுகிறது. இந்திய – சிறிலங்கா பொருளாதார உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் காரணமாகவும், சீனா – சிறிலங்காவுக்கு இடையில் அதிகரிக்கும் நெருக்கம் காரணமாகவும் இவ்வாறான கருத்துகள் வெளியாகின்ற போதிலும், உள்நாட்டில் ஏற்பட்டுவரும் கருத்துருவாக்கத்தை இந்திய அரசு இலகுவில் புறந்தள்ளிவிடமுடியாது.

இந்நிலையில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள், இந்திய அரசினை எஜமானர்களாகஏற்றுக் கொண்டு அவர்கள் இழுத்த இழுப்புக்கு தலையசைக்கும் பொம்மைகளாகமாறுவதனையும், எமது அரசியல் அபிலாசைகளை இந்திய அரசின் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதனையும் நாம் அனுமதிக்க முடியாது.

Issue 153