அடி உதவுமா, அண்ணன் தம்பி போல

682

அடி உதவுமா, அண்ணன் தம்பி போல
சுகி – ஒரு பேப்பருக்காக

சிலர் தலைப்பைப் பார்த்ததும் மனைவிக்கு அடிப்பதைத்தானே சொல்லவருகிறீர் எனக்கேட்டலாம், அது அவரின் தவறில்லை. அடிப்பது என்றால் கணவன் என்றும் அடி வேண்டுவது என்றால் மனைவி என்பது பலரின் கருத்து.

வெளிநாட்டிற்கு பிரச்சனை என்று வந்து, முடியப்போகலாம் என்று, முடிகிறவழி தெரியாமல், இப்ப போக முடியாமல் கல்யாணமும் கட்டி, இரண்டு, மூன்று பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆகிப் பிள்ளைகள் குஞ்சு குறுமனாக இருந்தபோது, வாழ்க்கையை நன்றாக அநுபவித்து, இப்போ பிள்ளைகள் வளர்ந்ததும், எல்லாம் தலைகீழாகி விட்டது என்று அலப்பாரிப்பவர்களும் உள்ளனர்.

அடியாத மாடு படியாது என பூவரசம் தடியால் அடித்துத்தான் வளர்த்தார்கள். கணக்கு ஆசிரியர் மூளை கலங்க குட்டுவார், தமிழ் ஆசிரியர் வயிற்றில் கிள்ளி இழுப்பார். விஞ்ஞான ஆசிரியர் புறங்கையைக் காட்டச்சொல்லி கைமொழியில் அடிப்பார். இத விட அதிபர் காணுகிற இடத்தில் பெற்றோரிடம் சொல்லி, அவர்களும் தங்களுடைய பங்குக்கு அடிப்பார்கள். இப்ப நான் என்னுடைய பிள்ளைகளுக்கு இங்கு அடித்து வளர்க்க வெளிக்கிட்டால் பொலிஸ், சோசல்காரன்கள் என்று மனைவி பயந்து குறுக்க விழுகிறா. அடிக்காமல் வளர்த்தால் பிள்ளை உருப்படும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆங்கிலேயரின் நாடு ஆங்கிலேயரின் சட்டம். நாங்கள் இதைப் புள்ளி விபர ஆராய்ச்சி அறிக்கையோடுதான் சாவல் விடலாம், சாதாரணமாகச் சொல்லிப் பிரயோசனம் இல்லை. பேசாத பிள்ளைக்கு பேசினாலே பயப்படும.; கோவிக்காத பிள்ளைக்கு கோவித்தாலே மனம் ஏங்கிப்போய் விடும். எல்லாம் நாம் சிறு வயதில் இருந்து வளர்கிற முறையிலையும் இருக்கிறது. அடித்து வளர்த்தால்.பிரம்பைத் தூக்கு மட்டும் பிள்ளை அசையாது.

வீட்டு வன்முறை என்பது விபத்து அல்ல. அது பலவிதமான உள்மனச்சிக்கல்களை உருவாக்கும் காரணி. இங்கு வன்முறையில் ஈடுபடுவர்களைத்தவிர அதில் பார்வையாளார்களாக, சாட்சியாக இருப்பவர்கள் கூட வெகுவாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதில் பெரியவர்கள், சிறுவர்கள் வயோதிபர்கள் மட்டுமல்லாது கருவில் இருக்கும் குழந்தைகள் கூட இதன் பாதிப்பை உணர்வதாகச் சொல்கிறார்கள்.

உள்மனச்சிக்கல் என்பதன் காரணம், உடல் பலம் கூடியவர், குறைந்தவரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு வேறு வழிமுறைகள் இல்லாது இதைக் கையாளுவதாகக் கூறப்படுகின்றது. அத்தோடு இதைக் கையாளும் போது குறுகிய கால விளைவு கையாண்டவருக்கு சாதகமாக இருந்தாலும் நீண்ட கால விளைவு அவருக்கு பாதகமாகவே இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. அவரின் மேல் மற்றவர்கள் வைத்திருக்கும் மரியாதையும், மதிப்பும் உண்மையானவையா? அல்லது வன்முறைக்கு பயந்து அன்பும் பணிவும் உள்ளது போல நடிக்கிறார்களா? உண்மையில் அவர் அருகில் இல்லாத நேரங்களைத்தான் கூடுதலாக விரும்புகிறார்களா என்று பிரித்தறிவது கடினமாகிவிடும்.

பிள்ளைகள், குழந்தைகளுக்கு உரிய விளக்கத்தைக் கொடுத்து அவர்களை கட்டுப்படுத்தாமல், நேரமின்மையால் “நான் சொல்கிறேன் நீ செய்” என்றோ “ ஒரு கதையும் வேண்டாம் சொன்னதைச் செய்” என்றோ சொல்வது அவர்களின் நியாயமான தேடுதலையும், வாழ்க்கை பற்றிய அறிதலையும் இல்லாமல் செய்கிறது. நாம் தொலைபேசி, தொலைக்காட்சி, எமக்குரிய வேலை எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு ஒவ்வொரு பிள்ளைகளுடன் அவர்களுக்கு பிடித்த விடயத்தில், விளையாட்டில், அவர்களுக்கு அந்த நேரத்தை (10 நிமிடத்தை) ஆளும் உரிமையைக் கொடுத்து நீங்கள் ஒரு நண்பர்போல நடந்து கொண்டால் பிள்ளைகளுக்கு உங்களிடம் உள்ள நம்பிக்கையும், நீங்கள் தன்னை புரிந்து கொள்வீர்கள் என்ற மனப்பாங்கும் அதிகரித்து ஒரு நெருக்கம் நாளடைவில் வளரும். இது அவர்களுக்கு பதின்ம வயதினை (13-19) அடையும் போது அவர்களுக்கு வரும் உள, உருவ, நண்பர்கள், பழக்க வழக்கங்கள் முதலான மாற்றங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் தோழமையையும் நம்பிக்கையினையும் உண்டு பண்ணும்.

இப்படி நடந்து கொண்டால் கூட, எல்லாவற்றையும் உங்களிடம் சொல்வார்கள் என்பதில்லை ஏனெனில் நீங்கள் பிள்ளைகளைப்பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பது போல அவர்களும் உங்களின் ஆளுமை, விடையதானம், சுயநலம், அகம்பாவம், இரகசியத்தை பேணாத்தன்மை, குத்திக்காட்டுதல், நையாண்டிபண்ணல் என்று எல்லாவற்றையும் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். ஆகவே இரசாயன முடிவு மாதிரி எப்போதும் ஒரே விளைவுதான் வரும் என்பதில்லை. ஆனால் இதுவே வன்முறையாக இருந்தால் புரிந்துணர்வுக்கும், வாத பிரதி வாதங்களும் இடமின்றிப்போகிறதால் மனவழுத்தம் அதிகமாகும். உடல் பலத்தால் கட்டுபடுத்தி வைத்திருக்கும் பெற்றோர் எப்படியும் அதை பிள்ளைகள் வளரும் போது கைவிட வேண்டியவர்கள் ஆகுகிறார்கள், ஏனெனில் அங்கு பலப்பரீட்சை வருகிறது. சில குடும்பங்களின் முதல் பிள்ளை அந்த இடத்தை பிடித்து தனக்கு கீழ் உள்ள சகோதரங்களை வன்முறையை பாவித்து அதே பாணியில் கட்டுபடுத்த தொடங்குவார்கள். ஆனாலும் அவர்களில் கணவன், மனைவியினர், பிளளைகள் தலைப்போடும் சந்தர்பம் இருந்தால் ஒழிய, வன்முறையைக் கைவிடுவது குறைவு, வயதாகி ஒருவரின் பலம் குறையும் போது சந்தர்ப்பத்தை பாவித்து மற்றவர் சிலநேரம் வெளியேறி விட எத்தனிப்பார்கள். இது மற்றவரின் உளச்சிக்கலை இன்னும் அதிகரிக்கும்.

வீட்டு வன்முறைக்கு (Domestic violence) பல நிறுவனங்கள் உதவிபுரிகின்றன. ஒரு சில தமிழ் நிறுவனங்கள் கூட இதில் அடங்கும். அவர்களுக்கு என உதவிப்பண (funding) வரையறை இருந்தாலும் சரியான திசையில் பயணிப்பதற்கு கைகாட்டலாம். உதாரணமாக தெற்கு லண்டன் தமிழர் நலன் நிறை அமைப்பு (funding) அப்பகுதி வாழ் மக்களுக்கு இதற்குரிய உதவியை வழங்கி வருகிறது.