அந்த உரல் – அம்மிக்கல் உறவு

272

அண்மையில் இங்கே வாழும் ஒரு பெரியவர் பழம் சோற்றை இங்கு மகளிடம் கேட்டு தயார் செய்து உண்டு பார்த்ததாக சொன்னார். ஆனால் ஊரில் வாழும் தன் பேரன் பழம் சோறு என்றால், என்னவென்று தெரியாது என்கிறான் என்று சொல்லி அங்கலாய்த்தார். அந்த நாள் பழம் சோற்று நிகழ்வுகளை நினைவிற்கு கொண்டு வந்தார். உரையாடல் பழைய ஞாபகங்களை நோக்கி நகர்ந்தது. எண்ணிப் பார்க்கின்றபோது விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவு தூரம் வசதியானவர்களாகவும், வருத்தக்காரர்களாகவும் எம்மை ஆக்கி விட்டது என்பதை புலப்படுத்தி விட்டது.

தாயகத்தில் எங்கள் சிறுவயதில் எளிமையும் சிக்கனமும் நிறைந்த உழைப்பை மூலதனமாக்கி திடகாத்திரமாக வளர்ந்து உறவுக்கு கை கொடுத்து ஒருவர் துன்பத்தில் ஒருவர் பகிர்ந்து வாழ்ந்த அந்த கிராமியவாழ்க்கை நிம்மதியானதென்று வாழ்ந்து அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள். உரல் என்பதை பாலர் வகுப்புப் பிள்ளைகளுக்கு புரிய வைக்க உரல் படத்தைப் போட்ட தாயகப் புத்தகத்தை காட்டி படிப்பிக்க முடியுமா என்பது இங்கு ஒரு தமிழ்ப் பள்ளியின் ஆசிரியை ஒருவரின் கேள்வி. உண்மை தான் பாவனைப் பொருட்கள் மாறி விட்டன. உரலுக்கு உதாரணம் தேடினால் ஆங்கிலத்தின்பெயர் தான் மூளையில் எழுகிறது. ஜிம்முக்கு பணம் கொடுக்காமல் உடலை திடமாக வைத்திருக்க அம்மம்மா,அம்மா வீட்டுக்காரிகளாக வாழ்ந்த முறையும் துலா மிதித்து மண்வெட்டியால் கொத்தி தோட்டம் செய்து கோடரியால் விறகு வெட்டி அப்பன் பாட்டன் வாழ்ந்த திடகாத்திரமான வாழ்வும் நினைவில் நிழலாடியது.

a0e81f73-e591-4559-971b-b5e85c05b03b_S_secvpfவாராந்தம் இரண்டு மூன்று தடவையேனும் பயன்படுத்தப்படும் உரல் மற்றும் உலக்கை ஊரில் எங்கள்வீட்டு முற்றத்தில் ஒரு புறமாகக் கிடக்கும். மதிய உணவுக்குப் பின் அயல்வீட்டு உறவுக்காரர் உரலில் நனைய விட்ட அரிசி மாவை இடிக்க, ஒரு கை கொடுப்பார்கள். ஒவ்வொரு புறமாக நின்று இருவர் மாறி மாறி உலக்கை போடும் அழகே தனி அழகு தான். இடித்த மாவை சுளகில்அரிக்கன் தட்டால் அரிப்பதும் கப்பி என்று அரிக்கன் தட்டில் தேங்குவதை மீண்டும் உரலில் இட்டு இடிப்பதும் வீணாக்கலை தவிர்க்கும் செயற்பாடாக இருந்தது. பெரிய இரும்புச் சட்டியில் வெளி அடுப்பில் இடித்த அரிசி மாவை வறுத்து சுளகில் ஆறவிட்டு பக்குவப்படுத்தி வைப்பதும் தேவைக்கு எடுத்து பிட்டு, இடியப்பம் என்று செய்ய வசதியாக அந்தக் காலத்தில் இருந்த வழக்கம்.

செத்தல் மிளகாயை இரும்புச்சட்டியில் சூடாக்கி இதேபோல வறுத்து ஆழத்துக்கு நீளம் கொண்ட இன்னொரு உரலில் இடித்து கறித்துாள் அரித்து எடுக்கப்படுவதும், அந்த நாட்களில் எங்கள் வீட்டில் மாதம் இருமுறை நடக்கும் நிகழ்வு. இது மிளகாய்த் துாள் கறிக்கு சேர்க்கும்முறையாக வீட்டில் இருந்தது. இதே உரலில் பனங்கிழங்கு கிண்டி எடுக்கப்படும் பருவத்தில் அதை அவித்துதுண்டுகளாக்கி போட்டு மிளகாய்த்துாள் போட்டு அம்மம்மா சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து தரும் பனங்கிழங்கு துவையல் இன்றும் மனதில் இனிக்கும் ஒரு பண்டம்.

அடுத்த நாள் தோசை அல்லது இட்டலி என்றால் பொங்கல், தீபாவளி, துவசம் என்றால் வடை சுடுவதற்கு பயன்படுத்தப்படும் உழுந்து ஆட்ட மாவாக்கப் பயன்படுத்தப்படும் ஆட்டுக்கல், உள் வீட்டு விறாந்தையை அலங்கரித்திருந்தது. அவ்வப்போது பலகையில் இருந்து நாங்கள் ஆட்டிக் கொடுக்க அம்மா கையால் உருட்டி உருட்டி ஆட்டுக்கல்லுக்குள் தள்ள உழுத்தம் மாவை அடுத்த நாளைய தேவைக்கு தயாராக்கி வைப்பது எங்கள் வீட்டு வழக்கமாக இருந்தது. இதற்குப் பயன்பட்டது அந்த ஆட்டுக்கல் தான். அடுத்த நாள் அப்பம்என்றால் அந்த மாவுக்குள் கள்ளு ஊற்றி நொதிக்கவிடப்படும். அப்படி இல்லையென்றால் அது தோசை. அப்பம் என்றால் குசினி புகட்டு அடுப்பில் கீழே பொச்சு மட்டைகள் தனலாகி எரிந்து சூடு கொடுக்க மேல் சட்டியில் அப்பத்திற்கு மாவை ஊற்றி வட்டமாக அது பரவ சட்டியை சுற்றி அடுப்பில் வைத்து சுடும் வழக்கம், அந்தக் காலத்தில் இருந்தது. சுற்றி வர பொன்னிறத்தில் கருகி நடுவில் தேங்காய்ப் பால் பொங்கி அந்த அம்மாவின் கையால் உருவாகி உண்டு கழித்த அப்பத்தை இன்று கனடாவில் அண்ணரோடு சேர்ந்து தேடியும் எங்கும் காணவில்லை.

பட உதவி : Nishanth Jois - flickr
பட உதவி : Nishanth Jois – flickr

தோசை என்றால் அதில் ஒரு அளவான கருகல் சுவை இருக்கும். அவ்வப்போது எங்கள் ஆசைக்கு எண்ணெய்த் தோசையும் அம்மம்மா சுட்டுத்தருவா. இட்டலி என்றால் தொட்டுச் சுவைக்க கடுகு, கருவேப்பிலை வதக்கிப் போட்டு மிதக்கும் சுவையான சட்டினி, தோசை, குண்டுத்தோசை என்றால் அம்மியில் செத்தல் மிளகாய், வெங்காயம், உப்புப் போட்டு ஆட்டி ஆட்டி செய்த சம்பல்இல்லையென்றால் அவ்வப்போது தாளித்து எடுத்த சம்பல், பிட்டுக்கோ இடியப்பத்துக்கோ இதே சம்பல் தான் தொட்டுச் சுவைக்க விரும்புவோம்.

ஆளுக்கொரு அலுமினியக் கோப்பை, மச்சக் கோப்பை என்று ஒரு பீங்கான் கோப்பை என்று அந்தக் காலத்தில் குசினி மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மச்ச உணவுக்கு பூப்போட்ட பீங்கான் கோப்பையும் பின்னர் பயன்படுத்தப்பட்டது. புளிபோட்டு மினுக்கி அன்றாடம் மினுமினுக்கும் செப்பு மூக்குப் பேணி தான் காலை, மாலை கோப்பி, தேனீருக்கு பயன்படுத்திய பாத்திரம். கோப்பி என்றால் அம்மம்மா வளர்த்த செவியன் ஆடுகள்குட்டி போட்டிருந்தால், ஆட்டுப் பால் கோப்பி. அம்மம்மா தளர்ந்து போகும் வரை மாடும் வளர்த்தார். இரவு படுக்கப் போகும் முன்னர் குடிக்க கோப்பி, தேனீருக்கு அந்த மாட்டுப் பால் பயன்பட்டது.

பிற்காலத்தில் மாலை அல்லது காலை சுப்பர் வீட்டில் பால் வாங்கி வருவோம். இடையே ஏகாம்பரம் வீட்டுக்கு பால் கொண்டு வந்து தந்ததும் நினைவு. எங்கள் வீட்டு விறாந்தையில் இருந்த பெரிய வெற்றிலைச் சட்டம், பாக்குஉரல் இன்றும் நினைவில் வருகிறது. வீட்டுக்கு வருவோருக்கு முதலில் நீட்டப்படுவது இந்த வெற்றிலைத் தட்டுத் தான். பெரிய வட்டவடிவான உட்புறம் பூபோட்டஅலங்காரம் கொண்ட செப்புத் தட்டம். அதில் வெற்றிலைப் பாக்கு, நுங்குப் பாக்கு, துண்டுப் புகையிலை, சுண்ணாம்பு என்று எல்லாம் இருக்கும். வெற்றிலை வாடாமல் இருக்க ஈரத்துணியில் சுற்றி வைப்பார்கள். அன்றாடம் கோப்பி கொடுக்கப் பயன்பட்டதும் இதே மூக்குப் பேணிகள் தான்.

வேலிக்கதியாலில் தகரப் பேணி அல்லது கிளாஸ் ஒரு சிலருக்கு வைக்கப்பட்டிருந்ததும் நினைவிற்கு வருகிறது. ஒரு சமூகமாக, உறவாக, கூட்டுக்குடும்பமாக, சமுதாயமாக ஒரே ஊர்க்காரராக, கூக்குரலுக்கு ஓடி வரும் அந்த உறவு, பழக்கவழக்கங்கள் எல்லாமே ஊரை விட்டு ஓடிவிட்டனவா?
அது உண்மையா? ?

வாருங்கள் தேடிப்பார்ப்போம்.