அப்ருவர் ஐயர்… உபயம் இனியொரு…

809

அப்ருவர் ஐயர்… உபயம் இனியொரு…
மௌலி
ஒரு பேப்பருக்காக

கணேசன் ஐயர் என்பவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒரு அங்கத்தவராக இருந்தவர். 1979ம் ஆண்டு இயக்கத்தின் ஆயுதங்களுடனும் பணத்துடனும் இயக்கத்தைவிட்டு வெளியேறிய அவர் சுமார் நான்கு ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்கிறார். இந்த அனுபவத்தை வைத்து மூன்று பத்தாண்டுகளுக்கு மேலாக போராடிய தேசியத்தலைவர் அவர்களையும் இயக்கத்தையும் சுயவிமர்சனம் செய்யும் வகையில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஐயர் குறிப்பிட்ட விடயங்களைக் கொண்டு இன்னொருவரே இப்புத்தகத்தை எழுதியதாக பரவலாகப் பேசப்படுகிறது.

இப்புத்தகத்தின் வெளியீட்டுவிழா அண்மையில் லண்டனில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய வி.ஏ.காதர், எழுபதுகளில் தமிழ் மாணவர் பேரவையை நிறுவியவருமான பொன். சத்தியசீலன் ஆகியோர் கூட்டாக சுயவிமர்சனம் பற்றியும் அதற்கு வழிகாட்டியாக ஐயரின் சுய விமர்சன விதிகளை மீறிய உளறலையும் பாடியும் போற்றியும் கூத்து ஒன்று நடத்தி உள்ளனர்.
இனியொரு இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் சுயவிமர்சனம் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“விமர்சனமும் சுய விமர்சனமும் எதிரிகளின் பயன்பாட்டுக்கானவையல்ல”.

ஐயரின் புத்தகம் எதிரிகளின் பயன்பாட்டுக்காக தகவல்களை வழங்க, இனியொருவும் வசதியாக தனது விதிகளையே மீறியிருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் நான்குவருடங்கள் மட்டுமே இயக்கத்தில் இணைந்திருந்த ஐயர் அப்ரூவர் ஆகி இருக்கிறார். இனியொரு இணையதளத்தை நடாத்தும் நாவலன் துணை போயிருக்கின்றார். ஹிட்லருடன் கூட இருந்தவர்கள் இன்றும் தேடித் தேடி கைது செய்யப்படுகையில், ஐயரின் தகவல்கள் யாருக்கு பயன்படபோகின்றது என்பதனை யாரும் இலகுவில் ஊகித்தறிந்து கொள்ள முடியும்.

சுய விமர்சனம் என்ற நோக்கத்தோடு வெளியிடப்பட்ட ஐயரின் புத்தகத்தில், ராகவன், ரவி, குலம், தனி, சற்குணம், ஞானம், கறுப்பி, சாந்தன், மதி, வாத்தி போன்ற பத்துக்கு மேற்பட்டோர் தொடர்பான தகவல்கள் உண்டு. இன்று வேறுவேறு நாடுகளில் வசிக்கும் இவர்களுடன் கலந்தாலோசிக்கப்படாமல் தவறான தகவல்களுடன், உண்மைக்கு புறம்பான கற்பனைகளுடன் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது எனத் தெரிய வருகின்றது.

பல்வேறு நாடுகளில் வேறுபட்ட சூழல்களில் வாழும் இவர்களைக் காட்டிக் கொடுத்த ஒரு காட்டிக் கொடுப்பாளனின் ஒப்புதல் வாக்குமூலமே ஐயரின் புத்தகமாகும் . உலகமெல்லாம் பல ஆயிரக்கணக்கில் போராட்டத்தோடு தொடர்புடையவர்கள் இருக்கின்றார்கள் . ஒவ்வொருவரும் இப்படி எழுதினால் எத்தனை பேரின் வாழக்கை ஆபத்துக்கு உள்ளாகும். சில போராட்ட செயல்பாடுகளும் எதிரியால் கண்காணிக்கப்படும் அபாயம் உண்டு. இன்னமும் அவர்கள் செயல்பட்டுக் கொன்டிருந்தால், அவர்கள் அடையாளம் காணப்பட்டு ஏதாவது நடந்தால் நிலைமை என்னவாகும் என எண்ணும் போது ஐயரை தேச விரோதி என அழைக்கலாம் போல இருக்கின்றது.

இந்த சுய விமர்சனம் என்ற விடயத்தை கேள்விப்பட்டவர்கள் அதன் தாற்பரியம் இ அது செய்யப்படவேண்டிய முறை புரியாமல் செய்திருக்கின்றார்கள் . இவர்களுக்கு மார்க்சிசமும் தெரியாது மனிதாபிமானமும் தெரியாது.

1980 களில் இப்படி ஒருவர் இருந்தார் . அவர் படித்த மார்க்சிச புத்தகத்தில் அரசு இயந்திரத்தை தகர்க்க வேண்டும் என்று இருந்ததாம். அவரின் கண்ணில் தெரிந்த அரசு இயந்திரம், உபதபால் நிலைய தொலைபேசிகளும், யாழ்தேவி வண்டியும் தான் . அவர் அடித்து உடைத்து கொழுத்தி விட்டார். அதே மாதிரியான முட்டாள் தனமான வேலையை ஐயரும், இனியொருவும் சுய விமர்சனத்தை புரியாது செய்து காட்டிக் கொடுப்பில் ஈடுபடுகின்றார்கள்.

ஐயரின் புத்தகத்தில் உள்ளவை பிழை என்று வாதிடவருபவர்கள் தங்களை வெளிப்படுத்த வேண்டியதுடன் தங்களது செயற்பாடுகளையும் கூறவேண்டியிருக்கும். விவாதத்துக்கு வரட்டும் எல்லோரையும் மாட்டுவோம் என்ற பெரிய சதியின் அங்கமாகவும் இது இருக்கலாம். ஆகையால் ஐயரின் புத்தகத்தை விமர்சிக்க சம்பந்தப்பட்டவர்கள் இப்போதைக்கு தயாரில்லை என அறியக் கிடைக்கிறது.

ஐயரின் சூழ்நிலை வித்தியாசமானது போல் தெரிகிறது. ஏனெனில், ஈழத்தமிழர்கள் அகதி முகாமை விட்டே வெளியேறி சுதந்திரமாக நடமாட இந்திய காவல் துறை அனுமதிக்காத காலத்தில், கொலைகளுக்கு துணை போனேன், சேர்ந்தியங்கினேன் எனச் சொல்லிக் கொண்டு ஆயுதப் போராட்டத்துக்கு தயார் என்று சொல்லிக் கொண்டு ஐயர் எப்படி இந்தியாவில், பல வாகன்களின் சொந்தக்காரனாக எந்த பயமும் இன்றி சுதந்திரமாக உலவ முடிகின்றது.ஒரு இரகசிய அமைப்பில் எல்லாம் எல்லாருக்கும் தெரிந்திருக்க முடியாது. என்வே தொடர்புடையவர்கள் கலந்தாலோசிக்காமல் செய்தது எந்த ‘இசத்துக்கும்’ பொருந்தாதது.

மேலே குறிப்பிட்ட பலருடன் நான் பேசிப் பார்த்தேன் ஐயர் குறிபிட்ட தகவல்கள் பல உண்மைக்கு புறம்பானவைஇ சம்பவ சூழநிலைகளைப் புரிந்து கொள்ளாமல் தவறாக விளக்கம் தேடப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்கள். “கோவிலில் சேரும் உண்டியல் காசையும் இ மோதகத்தையும் பிரிச்சுக்குடுக்கிற கெட்டிக்காரன் எண்ட படியால் காசை பிரிச்சுக் கொடுக்கவிட்டனாங்கள் உந்தாளுக்கு அதுக்கு மேலை அங்கை நடக்கிற விஷயம் ஒண்டும் தெரியாமல் தான் இருந்தார்” என்று ஒருவர் நகைச்சுவையாக குறிப்பி;ட்டார். 1976 ஆம் ஆண்டு 28 வயதாக இருந்த ஐயர் ஏன் சன்முகதாசனையோ மற்ற போராட்டங்களையோ காணவில்லையா எண்டும் கேள்வி மேல் கேட்டார். ஐயரை யாரோ ஏதோ நோக்கத்துக்காக பாவித்துள்ளார்கள் என்று அவர்கள் உண்மையாக நம்புகின்றார்கள்.

மேலே சொன்ன பத்துப்பேரும் இருந்த இயக்கத்தில் நான் இருக்கவில்லை . ஆனால் சமூக ஈடுபாடு காரணமாக இவர்களில் பலரை பின்னாளில் சந்தித்து இருக்கின்றேன் . இப்பொழுதும் சிலரைச் சந்தித்து வருகிறேன். சிலருடன் அவசியம் கருதி பேசியிருக்கிறேன் . அவர்களது கருத்துக்களுடன் ஒத்துப் போக முடியாவிட்டாலும் அவர்களை நான் மதிக்கின்றேன். நண்பர்கள் கொள்கை முரண்பாட்டை பகை முரண்பாடாக பார்க்காதவர்களாக இன்னமும் இருக்கின்றார்கள் . அவர்கள் பண்பானவர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் கொள்கை ஒருவரோடொருவர் அரசியல் கொள்கை ரீதியாக ஒத்துப் போகவில்லை என்பது வேறு விடயம் . ஐயரைப் போல அப்ருவராக மாறவில்லை .

ஐயர் இந்த மனிதர்களுடன் ஏன் பேசவில்லை? இவரை விட மற்றயவர்கள் எல்லாரும் பிசாசுகள் என வருணாச்சிரம தர்மம் சொல்லுகிறதா ? மார்க்சிசம் சொல்லுகிறதா? சுய விமர்சனத்தின் அடிப்படையை மீறிய ஐயரின் தான் தோன்றித் தனத்தை எதிர்காலத்தில் ஒவ்வொரு நாடும் எடுக்கும் அரசியல் முடிவுகளுக்கு ஏற்ப என்ன நடக்குமோ? என்ற நிலையற்ற தன்மையை உருவாக்கிய ஐயரும் அவருடன் இணைந்து இச்செயலுக்கு துணை போனவர்களும் எந்த இசத்துக்கும் பொருந்தாதாதவர்கள். ஏற்கனவே இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் டானியல் என்பவர் அவர் வாழும் மேற்குநாட்டில் சட்டரீதியான சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக அவரது உறவினர்கள் மூலம் தெரிய வருகிறது.

இவை எந்த வகையில் சமூக நீதிக்கு பொருந்தும் என இந்தப்புத்தகத்திற்கு வக்காலத்து வாங்கும் காதரும், சத்திய சீலனும் தான் வெளிப்படுத்த வேண்டும். (இவர்கள் எங்கே போராடினார்கள் இந்த வலிகளையும் வேதனையும் புரிந்து கொள்வதற்கு)