அமெரிக்கத் தீர்மானமும் அதையிட்டு மோதிக்கொள்ளும் தமிழர்களும்.

1221

இன்னும் ஐந்து தினங்களில் நிறைவுக்கு வரவுள்ள ஐ.நா. மனிதவுரிமைச்சபையின் இருபத்தைந்தாவது கூட்டத்தொடர் இலங்கைத்தீவுடன் தொடர்புடையவர்களுக்கு மிகவும் சுவாரசியமானதாக அமைந்துள்ளதுபோல் தெரிகிறது. ஒட்டுமொத்த தமிழ் ஊடகங்களும் தமது கவனத்தைஜெனிவாவில் குவித்திருக்கின்றன.

தாயகத்திலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்,தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், அதன் மாகாணசபை உறுப்பினர்கள், சட்டவாளர்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் நடைப்பயணம் செய்பவர்கள், ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் என ஜெனிவாவிற்கு பலரும் சென்று திரும்புகிறார்கள். பலருக்கு ஜெனிவா நகரத்தில் ஏரிக்கு சமீபமாக இருக்கும் ஜக்கிய நாடுகள் சபை பணியகம் அமைந்துள்ள பகுதி யாத்திரைக்குச் செல்லும் திருத்தலம்போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துகிறது.

“மார்ச் மாதத்தில் நீங்கள் ஜெனிவாவுக்குச் செல்லாவிட்டால் உங்களை ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் எனக் கூறமுடியாது” என்றளவில் நிலமையிருப்பதாக தமிழ்ச் செயற்பாட்டாளரான நண்பர் ஒருவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். நடப்பு விடயங்களைப் பார்க்கும்போது அந்த நண்பர் குறிப்பிட்டதில் நியாயம் இருப்பதாகத் தெரிகிறது.

cartoonமனிதவுரிமைச்சபையில் அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தின் இரண்டு வரைபுகள் வெளியாகியுள்ள நிலையில், சிறிலங்கா அரசின் ஆதரவாளர்கள் அத்தீர்மானத்தை முழுமையாக எதிர்த்துவருகிறார்கள். வெளிப்படையாக நடைபெற்றுவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் முஸ்லீம் மக்களும் பெருமளவில் கலந்து கொண்டுவருகிறார்கள். உத்தேச தீர்மானத்தில் இலங்கைத் தீவில் மதக்குழுவினரே பாதிக்கப்பட்டு வருவதனையே முதன்மையான மனிதாபிமானப் பிரச்சனையாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், எந்தவொரு மதம்சார்ந்த அமைப்பும் (சைவ மத அமைப்புகள் உட்பட) தீர்மானத்திற்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டதாகத் தெரியவில்லை. இது இலங்கைத் தீவில் உள்ள பிரச்சனைகளை அமெரிக்கத் தீர்மானம் தாம்விரும்பிய நிறக் கண்ணாடியினூடாகப் பார்க்கமுற்பட்டுள்ளமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இறுதியாகக் கிடைத்த தீர்மான நகலில் சிறிலங்கா அரசாங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் ஒரு கோரிக்கை பின்வருமாறு அமைகிறது: கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடாத்திய தனிநபர்கள், குழுக்கள் ஆகியோர் மீது விசாரணைகளை மேற்கொள்வதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறாதிருக்கவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மதவழிபாட்டிடங்கள்,மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மதச்சிறுபான்மையினர், குடிசார் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தல்.

தீர்மான நகலில் தமிழர்கள் பற்றிய எந்தக்குறிப்பும் இல்லாதவிடத்தும், இலங்கைத்தீவிலும், வெளியிலும் வாழும் தமிழர்கள் மாத்திரமே இத்தீர்மானத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள். சர்வதேச விசாரணை ஏற்படுத்தப்படுவதன் மூலம் தமக்கு நீதி கிடைக்கும், வல்லரசுகளின் ஆதரவுடன் தமது அரசியல் அபிலாசைகளை நோக்கி நகரமுடியும் என அவர்களது எதிர்பார்ப்புவிரிந்திருக்கிறது.

அமெரிக்கத் தீர்மானம் தொடர்பில் இலங்கைத்தீவின் வடக்கிலும், தெற்கிலும் நேரெதிரான கருத்துகள் நிலவுவதைச் சுட்டிக்காட்டி ‘Two Sri Lankas’ என்ற தலைப்பில் கொழும்பிலிருந்து வெளிவரும் ‘Daily FT’   என்ற பத்திரிகையில் தரிஷா பஸ்தியன் என்பவர் கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார். கட்டுரையாளர் தரிஷாவிற்கு இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. ஏனெனில் இனப்பிரச்சனை விடயத்தில் இலங்கைத் தீவு எப்போதுமே வடக்கும் தெற்குமாகத் தான் இருந்து வருகிறது. இவ்விடயத்தில் தமிழ் மக்கள்இரண்டு பட்டு நிற்பது தான் கவனத்திற்குரியது.  இது பற்றியே இக்கட்டுரை பேச விழைகிறது.

ananthyஇங்கு நாம் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கவேண்டும. அதாவது தமிழத் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புதலைமையைச் சேர்ந்த சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களாலும், அவரகளது கருத்துருவாக்க அடியாட்களான சில அரசியல் கட்டுரையாளர்களாலும் தவறாகக் கூறப்படுவது போன்று, ஐ.நா. மனிதவுரிமைச்சபையில், அமெரிக்கா அதன் நேசநாடுகளின் துணையுடன் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதனை எந்தவொரு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரோ, அல்லது தமிழ் அமைப்போ எதிர்க்கவில்லை. மாறாக, இவ்வாறு கொண்டு வரப்படும் தீர்மானம் தீர்க்கமானதாகவும், நடைபெற்று வரும் இனப் படுகொலையிலிருந்து தமிழ் மக்களை மீட்பதாகவும், அவர்களுக்கான அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு வழிசமைப்பதாகவும் அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளவர்களுக்கு இத்தீர்மான வரைபு பெருத்த ஏமாற்றத் தையளிக்கிறது என்பதே உண்மை. தவிரவும், இத்தீர்மானத்தை தமிழ் அமைப்புகள் அதன் போதாமை கருதி விமர்சிப்பதனால், இத்தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவிருந்த நாடுகள் அதனை எதிர்த்து வாக்களிக்க நினைக்கிறார்கள்என்பது கலப்படமற்ற கற்பனையாகவே இருக்கிறது.

தமிழ் மக்கள் அமெரிக்கத் தீரமானத்தை ஆதரிக்காவிடில், இத்தீர்மானம் தோற்றுப்போகலாம் என அச்சம் தெரிவிப்பவர்கள், 2009 இல் மேற்கத்தைய நகரங்களில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் வீதிக்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்தபோது என்னநடந்தது என்பதனை மறந்திருக்க மாட்டார்கள்இத்தனை எதிர்ப்புக்கும் பின்னர்தான் சிறிலங்காவை பாராட்டும் தீர்மானம் இதே ஜநா மனிதவுரிமைச்சபையில் நிறைவேறியது என்பதனையும் நாம் இவ்விடத்தில் மனங்கொள்வது அவசியமானது. ஆகவே சிக்கலான சர்வதேச உறவுகள் தொடர்பாக பாமர மக்களே சரியாகச் சிந்திக்க ஆரம்பித்துள்ள நிலையில், கொழும்புச் சட்டத்தரணிகள் மக்களை குழப்ப முனைகிறார்கள் என்பது தெரிகிறது.

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற அடிப்படையில் அமெரிக்காவையும், அதனை ஆதரித்து நிற்கும்மேற்கத்தைய நாடுகளையும் காரணங்காட்டி அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்கும் `ஏகாதிபத்திய எதிரப்பாளர்கள்’ சிலரையிட்டு நாம் அதிகஅக்கறை செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அவர்களுக்கு நிகராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமையும், அதன் புலம் பெயர் பங்காளிகளும் தமது எஜமான விசுவாசத்துடன் இத்தீர்மானத்தை ஆதரித்து நிற்பதனையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். இவர்கள் அமெரிக்கா கொண்டுவரும் எத்தகைய தீர்மானத்தையும் மறு கேள்விக்கு இடமில்லாமல் ஆதரிப்பார்கள் என்பதனை இந்நடவடிக்கையின் மூலம் மறுபடியும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள். இன்னொரு வகையில் கூறுவதானால், தமிழ்மக்களைமீள் காலனித்துவ நிலைக்கு கொண்டுசெல்வதிலேயே இவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

உத்தேச தீர்மானத்தில், பரிந்துரை 8 இல் குறிப்பிடப்பட்டுள்ளவையே தமிழ்த் தரப்பினரிடையே பெருமளவில் சர்ச்சையை கிளப்புவதாக அமைந்திருக்கிறது.

நம்பகத்தன்மையுடைய சுயாதீன விசாரணை ஒன்றை நடாத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ள அதே வேளையில் அங்கு இரண்டுதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மீறல்கள், குற்றச்செயல்கள் தொடர்பில் ஒரு முழுமையான விசாரணையை நடாத்துமாறுஐக்கியநாடுகள் மனிதவுரிமைச் சபையின் ஆணையாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மனிதவுரிமைச் சபையின் ஆணையாளருக்கு இவ்வாறான விசாரணையை நடாத்துவதற்கு அதிகாரம் இல்லை என சிறிலங்காவிற்கு சார்பான நாடுகளான ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் வாதிட்ட போதிலும், அதற்கான அதிகாரம் தனக்கு உள்ளதாக ஆணையாளர் திருமதி. நவநீதம்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.

இங்கு குறிப்பிட்ப்பட்டிருக்கும் விசாரணைப் பொறிமுறை, அண்மையில் சிரியாவின் மீது நடாத்தப்பட்டது போன்ற ஐ.நா. மனிதவுரிமைச் சபையின்விசாரணைப் பொறிமுறையான ‘Commission of Inquiry’ அல்ல என்பதனை கவனத்திற்கொண்டால், இது ஒரு பலவீனமான விசாரணைப் பொறிமுறைஎன்பதனை விளங்கிக் கொள்ள முடியும். இருப்பினும் ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் தலைவரினால் நடாத்தப்படும் விசாரணை வெளியிலிருந்து நடாத்தப்படுவதால் அதனை `சர்வதேசசுயாதீன விசாரணை’ என தமிழ்மக்களை ஏமாற்ற கூட்டமைப்பினர் தலைப்பட்டுள்ளனர்.ஒரு வேளைஇந்த விசாரணையைக் கூட இத் தீர்மானத்தில் குறிப்பிடாவிட்டாலும் அதனை கூட்டமைப்பு ஆதரிக்கும் என்பது வேறுவிடயம்.

தமிழ்மக்களின் நலனில் அக்கறைகொள்ளாமல், வெளிச்சக்திகளை நம்பியிருக்கும் நிலையிலிருந்து மீண்டுவராமல் தமிழ் அரசியல் முன்னோக்கி நகரமுடியாது என்பதனை அடுத்தவாரம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் தீர்மானம் உறுதிசெய்யும் என எதிர்பார்க்கலாம்.