அமெரிக்கத் தீர்மானமும் புவிசார் அரசியலும்

74

கடந்தவாரம் ஜ.நா. மனிதவுரிமைச்சபையில் சிறிலங்காவின் இணக்கத்துடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவருவதனை அவதானிக்க முடிகிறது. முன்னர்சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வந்த தமிழ் அமைப்புகள் கூட இத்தீர்மானம் `ஒரு வரலாற்று நிகழ்வு’, `திருப்பு முனையானசம்பவம்’, `முதற்கட்டம் ? எனப் புகழ்வதை தமிழ்த்தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்துகின்றன. மறுபுறத்தில், இந்தத் தீர்மானத்தையிட்டு ஏமாற்றமடைந்துள்ளவர்கள் கூட தமது கருத்துகளை பொதுத்தளங்களில் வெளியிடுவதனை தவிர்த்து வருகின்றனர். அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தினதும் உள்ளடக்கம்எவ்வாறு இருந்தாலும் மேற்குறித்த தமிழ் அமைப்புகளின் எதிர்வினை ஒரே மாதிரியானதாகவே இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். இந் நிலையில், இப்போது கொண்டு வரப்பட்ட தீர்மானம் அரைவாசி திரவத்தால் நிரம்பிய குவளையை போன்றதா? அதாவது, ஒருசாரார் `அரைவாசி நிறையவில்லை’ என்று குறை கூறுகையில் இன்னுமொரு சாரார் `அரைவாசி நிறைந்திருக்கிறது’ திருப்தியடையும் நிலையை ஒத்திருக்கிறதா ? அல்லது இதில் ஒருசாராரின் கருத்துத்தான் சரியானதா?

இவ்விடயம் தொடர்பாக அலசுவதற்கு, தமிழ் மக்கள் இவ்விசாரணைப் பொறிமுறை மூலம்எதனை அடைவதற்கு விழைகிறார்கள் என்பதிலிருந்து ஆரம்பிப்போம். பெரும்பாலான தமிழ் மக்களைப்பொறுத்தவரை, போரில் சிறிலங்கா இராணுவம் இழைத்த மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், கடந்த அறுபது ஆண்டுகளாக மாறி மாறிவரும் சிங்கள அரசாங்கங்களால் நடாத்தப்பட்ட இனவழிப்பின் தொடர்ச்சி என்றே உறுதியாக நம்புகிறார்கள். இவை சர்வதேச அளவில் விசாரிக்கப்பட்டு, சர்வதேச அனுசரணையுடன் (அல்லது பாதுகாப்புடன்) நிரந்தர அரசியற் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் சிறிலங்கா அரசதரப்பினரால் நடாத்தப்படும் எந்தவொரு விசாரணையிலிருந்தும் அவ்வாறான முடிவு எட்டப்படாது அல்லது அவ்விசாரணையின் மூலம் இனப்பிரச்சனைக்கான மூலக்காரணிகள் கண்டறியப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்ட்டாலும்கூட அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குரிய அரசியல் விருப்பு சிறிலங்கா அரசாங்கத்திடம் இல்லை என்பதே தமிழ் மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறான முடிவிற்கு அவர்கள் வருவதற்கு, இதற்கு முன்னர்சிறிலங்கா தரப்பால் ஏற்படுத்தப்பட்ட விசாரணைகள் முன்னுதாரணங்களாக அமைகின்றன. சமீபத்திய உதாரணம் – இராஜபக்ச அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட `உண்மையக் கண்டறிவதற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு'(LLRC).

இவ்வாறு கூறும்போது, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிட்டவேண்டும், குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களில் தமிழ்மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று அர்த்தப்படுத்த வேண்டியதில்லை. மாறாக,தனித்து இவ்வாறான விடயங்களுடன் நின்றுவிடாது நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு அரசியற்தீர்வே இவ்விசாரணைகளின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே உள்ளக விசாரணைப் பொறிமுறை போதுமானதா அல்லது சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமானதா என்ற முடிவிற்கு தமிழ்மக்கள் வருகிறார்கள். ஆனால் தமிழ் அரசியற்கட்சிகளை அல்லது அமைப்புகளைப் பொறுத்தவரை அவர்களும் இவ்வாறுதான் முடிவிற்கு வருவார்கள் என்று யாரும்எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் யாருடைய நிகழ்ச்சித் திட்டத்திற்கு உட்பட்டுள்ளார்கள் என்பதைப் பொறுத்து அவர்களது நிலைப்பாடுகள் அமையும்.

ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா மற்றும்அவர்களது அணிசேர் நாடுகளைப் பொறுத்தவரையில், அவை இலங்கைத் தீவில் நிலைத்த ஸ்திரத்தன்மையும், வினைத்திறனுள்ள நிறுவனங்களைக்கொண்ட `நல்லாட்சியும்’ ஏற்பட வேண்டும். அவ்வாட்சி தமது ஒழுங்கிற்குள் நின்று செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றன. இவ்விடயங்களை அடைந்துகொள்ள `மனிதவுரிமைகளைப் பேணுதல்’ எனற உபாயம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜ.நா. மனிதவுரிமைச் சபை போன்ற நிறுவனங்கள் அதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இங்கே தமிழ்மக்கள், வல்லாண்மை நாடுகள் ஆகிய இரு தரப்புகளின் நலனும் கூடிவருகிற விடயங்கள் இருக்கின்றன என்பதனை மறுப்பதற்கில்லை. இருப்பினும், இரண்டு தரப்பினரதும் இலக்கு ஒன்றாக இல்லை என்பதனைக் கவனத்தில் எடுக்கவேண்டியுள்ளது. இத்தகைய புரிதலிலேயே ஜ.நா. மனிதவுரிமைச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நாம் அணுகவேண்டும்.

ஐக்கிய அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் ஆறுநாடுகள் இணைந்திருந்தபோதிலும் அது முழுக்க முழுக்க அமெரிக்க நலனை மையப்படுத்திக் கொண்டுவரப்பட்ட தீர்மானம். இதுவரை இலங்கைத் தீவு தொடர்பாக மனிதவுரிமைச் சபையினால் கொண்டுவரப்பட்ட நான்கு தீர்மானங்களும் ஜக்கிய அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டவையே. அந்நாட்டின் முழு ஆதரவின்றி வேறெந்த நாட்டினாலும் இலங்கை தொடர்பான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்க முடியாது என்ற விடயத்தில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இதனை சர்வதேச நீதியை ஏற்படுத்துவதில் ஜக்கிய அமெரிக்காவிற்குரிய வேணவாவில் ஏற்பட்டதாக அர்த்தப்படுத்திக் கொள்ளவதுதான் தவறு. இவ்வாறு கூறுவதற்கு வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் குவிந்து கிடக்கின்றன. மிக அண்மைய உதாரணமாக இம்மாதம் 3ம் திகதி ஆப்கானிஸ்தானின்குண்டுஸ் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லாவிமானத் (drone) தாக்குதலில் பிரஞ்சு உதவிநிறுவனமான Médecins Sans Frontières (MSF) அமைப்பின் பன்னிரண்டு ஊழியர்களும் அவர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த பத்து நோயாளிகளும் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கூறலாம். இவ்விடயத்தை போர்க்குற்றம் எனவும் அதற்காக சுயாதீன விசாரணையை நடாத்துமாறும் அந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இவ்வாறான குற்றச்செயல்களுக்காக ஜக்கிய அமெரிக்காவிற்கு எதிராக ஒரு தீர்மானத்தை எந்தவொரு நாடும் ஜ.நா. மனிதவுரிமைச்சபையில் கொண்டுவர எத்தனிக்காது என்பதிலிருந்து சர்வேதேச நீதி விடயத்தில் இந்த நாடுகளிற்குரிய அக்கறையை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

கடந்தவாரம் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒரு உள்ளகப்பொறிமுறையை வலியுறுத்துவதாக அமையும் என்பது கடந்த ஜனவரிமாத இறுதியிலேயே தெரியவந்துவிட்டது. ஜனாதிபதித் தேர்தலின்(ஆட்சிமாற்றத்தின்) பின்னர் இலங்கைக்குப் பயணம் செய்த அமெரிக்காவின் தெற்காசியாவிற்கான துணை வெளியுறவுத்துறைச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் தெரிவித்த இத்தகவலை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகிரங்கப்படுத்தியிருந்தார். பொதுத்தேர்தல் அறிவிக்கும் வரை, சுமந்திரன் போன்றவர்களும் உள்ளக விசாரணை பற்றியே பேசிவந்தனர்.புலம்பெயர் தமிழ் Lobby அமைப்புகளுக்கும் இவ்விடயம் தெரிந்திருந்தாலும் சாட்சாத் அரசியல்வாதிகள் போன்று அவையும் `சர்வதேச விசாரணைப் பொறிமுறையே வேண்டும்’ என்ற பழைய பல்வியையே பாடிவந்தன.

ஆறுமாதம் தாமதித்து வெளியிடப்பட்ட ஐ.நா.மனிதவுரிமை ஆணையாளரின் அறிக்கையானது ஒரு சீல் வைக்கப்பட்ட உறையில் பாதுகாப்பாக ஒரு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்தமாதம் அவ்வறிக்கை வெளியிடப்படும் வரை அதுபற்றிய விபரங்களை ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் அறிந்திருக்கவில்லை என நாம் முட்டாள்த்தனமாக நம்பினால் எட்வர்ட் ஸ்னோடனுக்கு பைத்தியம் பிடித்துள்ளது என்பதனையும் நாம் நம்ப வேண்டும்.

அறிக்கை வந்து விட்டது, இனி என்ன? என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. சிறிலங்காவின் உள்ளகப்பொறிமுறை தொடர்பாக விடயங்களை அவதானித்து 2016ம் ஆண்டு ஜ×ன் கூட்டத் தொடரில் வாய் மூல அறிக்கையும், 2017ம் ஆண்டு மார்ச் கூட்டத் தொடரில் எழுத்துமூல அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே சர்வதேசத்தின் கவனம்சிறிலங்காவில் தொடர்ந்து இருக்கப்போகிறது எனஆறுதலடைபவர்கள் இந்த அறிக்கையை `வரலாற்றுத் திருப்பமாக’ அல்லது `இது ஒரு ஆரம்பம்’ என அகமகிழ்வு கொள்ளலாம். ஆனால், அமெரிக்காவின் கவனம் வேறுவிதமாக இருக்கப் போகின்றது என்பதனை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் Foreign Policy  மாத இதழில் Colombo Consensus 2.0 என்ற தலைப்பில் இம்மாதம் வெளிவந்திருக்கும் கட்டுரை கூறுகிறது.

“சிறிசேன தமது வெளிவிவகாரக் கொள்கையை மாற்றியமைக்கும் நடவடிக்கையினை ஆரம்பித்திருக்கிறார். சீனாவிற்கு நெருக்கமாகவிருந்த முன்னைய நிலையிலிருந்து, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தமது தொடர்பாடலை சமதூரத்தில் (equidistant engagement) வைத்திருக்கஅவர் முனைகிறார். ஆனால் இந்தவிடயத்தில் சிறிசேன அரசாங்கத்தின் பெறுபேறுகள் இன்னமும் திருப்திகரமானதாக அமையவில்லை. அணிசாரா நிலைப்பாட்டில் சிறிசேன சறுக்குவாரேயானால் மீண்டும் பழைய கர்மா வட்டத்திற்குள் சிறிலங்கா சென்றுவிடும்.” இக்கட்டுரை புவிசார் அரசியலை மையப்படுத்தியதாக இவ்விடயத்தைஅணுகியிருக்கிறது. சிறிலங்கா மீதான சர்வதேசநாடுகளின் கவனம் அவற்றின் புவிசார் அரசியலைமையப்படுத்தியதே தவிர அந்நாட்டின் மனிதவுரிமை விவகாரத்தைப் பற்றியதோ அல்லது தாராண்மைவாத ஒழுங்கை கடைப்பிடிப்பது தொடர்பானதோ அல்ல என்பதனை நாம் புரிந்துகொள்ள முற்படவேண்டும்.

இந்த இடத்தில் கடந்த வாரம் வடமாகாணசபை உறுப்பினர் ஒருவரைச் சந்தித்தபோது, பாமரத்தனமாக அவர் கூறிய ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. “ஆட்சிமாற்றம் ஆபத்தாக முடியும் என்றுஎங்கட மக்களுக்குச் சொல்லிப்பார்த்தம். அவர்களுக்கு அது விளங்கவில்லை. இராஜபக்சவை எதிர்க்கவேண்டும் என்று சிறிசேனவிற்கு வாக்களித்தார்கள். விழைவு ஜெனிவாவில் தெரிகிறது”.

தற்போதைய அதிபர் சிறிசேனவோ அல்லது அவருக்கு பின்னர் ஆட்சிக்குவரும் அரசதலைவர்இராஜபக்சவினைப் போல் மேற்குடன் உரசிக்கொண்டாலே தவிர சர்வதேச நீதி தமிழ்மக்களைநோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் இல்லை. இவ்விடயத்தில் சிங்கள மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.