தமிழ் ஈழ போராட்டத்தில் வீர மரணமடைந்த முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் நினைவுநாள் நெருங்குகின்றது. இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் ஒக்டோபர் 10ம்திகதி 1987ம் ஆண்டு நடுராத்திரி தாண்டிய நேரம் 1.15 க்கு தமிழ் பெண்கள் பலரை வன்புணர்வுக்கு ஆளாக்கிய இந்திய இராணுவத்தை கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்து எதிர்கொண்டாள். நாட்டின் விடுதலையோடு, பெண்ணின் விடுதலையையும் கருத்தில் தாங்கி ஆயுதம் ஏந்தியவள் அதே இலட்சியக் கனவோடு வீரச்சாவை எதிர்கொண்டாள்.

பெண்ணானவள் சமையலுக்கும், பரப்புரைக்கும் மட்டும் அல்ல, ஆயுதம் ஏந்தி போராடவும் துணிந்தவர்கள் என்பதை நிரூபித்து காட்டியவள், அவள் பின்னால் அவள் பெயரில் மாலதி படையணியே உருப்பெற்றது. அது மட்டுமல்ல பெரிய ஆயுதங்களை தோளில் வைத்து அடிக்கவும், ஆழ் கடலடிநீச்சல் பிரிவில் இணையவும் எனபல்வேறு துறைகளில் பெண்கள் இணைந்ததோடு சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி என பெண்களின் போராட்ட வரலாறு நீளவும் வழிசமைத்தது.
தொன்மை காலத்தில் பெண் வழிபாடு, சக்திவழிபாடு என பெண்ணை முதன்மையாக கொண்ட எமது பழமை மாறி, சாதிவேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் நிறைந்த சமுதாயமாக உருப்பெற்றிருந்த காலத்தில், பெண் விடுதலையின்றி தேசிய விடுதலைக்கு சாத்தியம் இல்லையென தேசியத்தலைவர் போராட்டத்தில் பெண்களையும் இணைத்து அவர்களுக்கு எல்லாவற்றிலும் ஆண்களுக்கு சமமான பயிற்ச்சியையும் வழங்கி அவர்களை தனியாக இயங்கவும், பெண்களுக்கு பெண்களே பயிற்ச்சி கொடுக்கவும், அவர்களின் படைகளை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கவும் வழிசமைத்து கொடுத்தார்.
சாதிவெறி புரையோடி, ரவிக்கை போட்டதற்காக அது இழிக்கப்பட்டு, செருப்பு போட்டு நடந்ததற்காக அதை கழட்டி தலையில் வைத்துக்கொண்டு போக பணிக்கப்பட்டு, கோயில் கிணற்றில் தள்ளி அள்ளிக் குடித்தற்காக நையப்புடைக்கப்பட்டு, எதிரில் வரும்போது குடையை மடக்காமல் பிடித்துக்கொண்டு வந்ததற்காக குடைபறித்து முறிக்கப்பட்டு, சிரட்டையில் தண்ணீர்கொடுக்கப்பட்டு, பஸ்சில் கீழே இருக்காமல்,இருக்கையில் இருந்ததற்காக அவமானப்படுத்தப்பட்டு, கோயிலுக்குள் நுழைந்ததற்காக தாக்கப்பட்டு என எமது இனம் எமது இனத்தவர்களையே மிதித்த காலத்தில், பெண்களின் அடக்குமுறையைப்பற்றி பேசவே வேண்டாம். போடியார் வீட்டில் சாணம் அள்ளபோன பெண்ணில் மேல் போடியார் கண்பட்டால், போடியாரின் அடாவடிதன்மையைப்பற்றி பேசாது, சமூகம், வசதிஇல்லாத சாதிகுறைந்த பெண்ணின் விட்டு கொடுப்புகள் பற்றியும், சகிப்புத்தன்மை பற்றியும் பேசப்பட்ட காலம். வசதியானபெண்ணாட்டியும், வசதி குறைந்த வைப்பாட்டியும் வைத்திருந்த காலம், தாய்தந்தையர் தாம் விருப்பிய இடத்தில், பெண்ணுக்கு கல்யாணம் பேசிவிட்டு, வந்து முகூர்ந்த நாளை மட்டும் பெண்களுக்கு சொல்லியகாலம். அதிகம் பெண்களை படிக்கவிட்டால் கல்யாணம் பேசுவது கடினம் என்று நினைத்தகாலம், வேலைக்குபோன பெண், கல்யாணம் கட்டி அடுத்தநாள்,கணவரால் இனி வேலைக்கு போகவேண்டாம் என்று உத்தரவு போடப்பட்ட காலம்.
பெண்களின் விருப்பு வெறுப்புப்பற்றி அதிகம் சிந்திக்காது பெண் என்றால், இப்படிஇருக்கவேண்டும், இன்ன இன்ன தெரிந்திருக்க வேண்டும், இது இது செய்யக்கூடாது, இது இது செய்ய வேண்டும், இப்படித்தான் பேச வேண்டும், இப்படித் தான் நடக்கவேண்டும், இதைத்தான் அணிய வேண்டும் என்று அட்டவணை போடப்பட்ட காலம்.
இவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எதிர்கொள்ளாது, சத்தம் இல்லாது, கத்தியின்றி, இரத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடந்தது போலதேசியத்தலைவரின் பெண்களை போராட்டத்தில் இணைத்துக்கொண்ட முடிவினால் இவை யெல்லாமே, சமூகசிக்கலுக்கு காரணமான பிரதானமான சிக்கலை அவுழ்த்து விட்டது போல, கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமலே போய்விட்டன. என்றாலும் சில மூட நம்பிக்கைகளை, சமயத்தோடு இணைத்தவற்றை களைவதற்கு மேலும் பிரயத்தனம் எடுக்கவேண்டியிருந்து என்பதும் உண்மை.
`பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும் முழுமையாக சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது’ என்ற தேசியதலைவரின் கூற்றுக்கிணக்க பெண்பேராளிகள் எமது பெண் விடுதலைக்கும், பெண்களின் உரிமைக்கும் ஆற்றிய பணி அளப்பறியது. கிராமம் கிராமமாகப் போய் பல பெண்களின் குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்கள். பெண்களை ஆபாச பொருளாக பாவித்து விளம்பரம்தேடும் வியாபாரங்களையும் இல்லாதொழித்தார்கள்.
இன்று அப்படியான ஒரு தன்னலம் இல்லாத போராட்ட விழுமியங்களுக்குள் இருந்து வந்து, மாலதியின் 28 வது நினைவு தினத்தை நினைவுகூறும் இன்நாளில் நாம் நடந்து வந்த பாதையையும், இன்று நாம் இருக்கும் நிலமையையும் அவர்கள் சொல்ல வந்த விடையங்களை நாம் கருத்தில் கொண்டு நடக்கின்றோமா என்று சீர் தூக்கி பார்க்க வேண்டிய காலத்தில் உள்ளோம்.
அங்குள்ள எமது தமிழ்தரப்பு பாராளமன்ற உறுப்பினர்களும், சரி இங்குள்ள சில சமூக நல நிறுவனங்களும் சரி, அங்குள்ள எம் மக்களின் நிலையையும், பெண்களின் அவலத்தையும் அவர்களின் பிரதிநிதிகளாக நின்று சிந்திக்காமல், தங்களின் பதவி, தமது நிறுவனத்தின் எதிர்காலம், தங்களின் முக்கியத்துவம் என்ற ரீதியில் நின்று தீர்வைப் பார்கின்றார்கள். அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது வெறும் சொல்லாடல் அல்ல. பகலில் கூட,நாய் குலைக்கும் சந்தத்தைத் கொண்டு, ஜயோஆமிகாரன்கள் வருகிறான்கள், கடைக்கு போனஅம்மாவைக் காணவில்லை, தனிய, என அடிவயிற்றில் இருந்து திகில் பரவி, நெஞ்சு பட படக்க, தேகம் விறைந்து நிற்கும் நிலையும், நெஞ்சுக்குள் என்ன கிரனற்றா என்று, தமிழ் பெண்களின் நெஞ்சுக்குள் கைவிட்டு பார்க்க நின்ற கையறுநிலையும் இவர்களுக்கு அனுபவம் இல்லை. அதனால் தான் அமெரிக்கா தீர்மானத்தை ஆரம்பப்புள்ளி என்கிறார்கள்.
மே 18இன் பின் நிலாந்தன் சொன்னது போல [highlight color=”red”] `நிமிர்ந்து விறைத்து நின்ற ஆண் குறிகளையும், பீரங்கிகளையும் நோக்கி நடந்தோம் நிர்வாணமாக’ [/highlight] என்ற அனுபவம் இவர்களுக்கு இல்லை. நாங்கள் சர்வதேச விசாரணையைத்தான் கேட்டோம், நீங்கள் இதை தருகிறீர்கள், சரி இதைத்தன்னும் சரிவர நடாத்துங்கள், எமதுகருத்தை விசாரணை நடாத்தியதன் பின்தான்சொல்ல முடியும், நாம் இது போல பல தடவைஏமாற்றப்பட்டுள்ளோம், என்று கூறுவதைவிடுத்து, எமக்கு சந்தோசம், வரவேற்கின்றோம், ஆரம்பப்படி என்று உச்சி குளிரவேண்டியதில்லை. காயப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் காயத்தின் ஆழமும், அதன்வேதனைக்கு மருந்தும். `கொழும்புபி அரசியல் நடந்தும், அரசியல்வாதிகளுக்கும், அவ்வரசியல்வாதிகள் இங்கு வந்து, கூட்டத்திற்குதலைமை என்றதும், “வந்தேன் ஜயா” என்று, கூட்டத்திற்கு தலைமை தாங்க ஓடும், தலைமைவிரும்பிகளுக்கும் இது எங்கே புரியப்போகிறது.
மாலதியை நினைவு கூறும் இம்மாதத்தில், அவர்கள் சொன்ன, சொல்லிச் சென்ற, சொல்லவந்த செய்தியை வழிப்படுத்தும் தினமாக, ஈழத்தில் பெண்கள் படும் துன்பங்களுக்கு விடிவு வர, தடை அகற்றும் நாளாக தமிழராக, தமிழால் இணைந்து வலுப்படுத்துவோம்.