அமெரிக்காவின் அதிகாரப் போட்டியும் குடிவரவுப் பிரச்சினையும்

454

பயங்கரவாத ஒழிப்பு, இரசிய மீள் எழுச்சி, சீனவிரிவாக்கம், அமெரிக்காவின் ஆசியச் சுழற்சி,ஈரானின் அணுக்குண்டு, ஆகியவை ஐக்கியஅமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கான சவால்களாக இருக்கும் வேளையில், பொருளாதாரப் பிரச்சனை, எல்லா மக்களுக்குமானமருத்துவக் காப்பீடு, குடிவரவுப் பிரச்சனை ஆகியவை ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டுமுகாமைக்கான சவால்களாக இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவில் எந்த உரிமையும் பெறாதகுடியேற்றவாசிகள் நான்கு கோடிக்கு மேல்இருக்கின்றனர். இவர்கள் அமெரிக்க அரசின் அனுமதி பெறாமலும் அரசுக்குத் தெரியாமலும் அமெரிக்கா சென்று வசிக்கின்றார்கள்.

தப்பி அமெரிக்காவிற்கு ஓடும் சிறார்கள்

பதினெட்டு வயதிலும் குறைந்தவர்கள் பலர் மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அனுமதியின்றி நுழைவது ஐக்கிய அமெரிக்க அரசுக்குபெரும் தலையிடியாகும். இவர்கள் பெரியவர்கள் துணையின்றி பெரும்பாலும், எல் சல்வடோர், கௌதமாலா, ஹொண்டூரஸ் ஆகியநாடுகளிலிருந்து செல்கின்றார்கள். முதலில்பொருளாதாரப் பிரச்சனையால் பல சிறுவர்கள்அமெரிக்கா சென்றனர். அட்டூழியக் குழுக்களாலும் போதைப் பொருள் உற்பத்தியாளர்களாலும் கொடுமைக்கு ஆளாவதால் இவர்கள் தமது நாடுகளில் இருந்து ஐக்கிய அமெரிக்காவிற்குத் தப்பி ஓடுகிறார்கள். ஏற்கனவே சட்ட விரோதமாகக் குடியேறிவர்கள் மீது பராக் ஒபாமா கடுமையான நடவடிக்கைகள் எடுக்காததால் அமெரிக்காவிற்குச் செல்லும் சிறுவர்கள் தொகை அதிகரித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது. சிறுவர்களை நாடுகடத்துவதற்கான அமெரிக்க நடைமுறை மிகவும் நீண்டகாலம் எடுக்கின்ற ஒன்றாகும். 2012-ம் ஆண்டு 16 அல்லது அதிலும் குறைந்த வயதாக இருக்கும் போது அமெரிக்காவினுள் நுழைந்து 2012-ம் ஆண்டு 30 அல்லது அதிலும் குறைந்த வயதானகல்வித் தகமை உள்ள 18 இலட்சம் பேருக்கு தொடர்ந்து அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்கும் உரிமை ஒபாமாவின் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் அதிகாரப் போட்டிகள்

அமெரிக்காவின் அதிகார மையங்கள் என்று பார்க்கும் போது அமெரிக்க அதிபர், கொங்கிரஸ் எனப்படும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் இரு அவைகளான மக்களவை, மூதவை ஆகியவற்றுடன் மாநில அரசுகள் ஆகியவை முக்கியமானவை. அதிபரை அவர் மாளிகையின் பெயரால் வெள்ளை மாளிகை என்றும் பாராளமன்றத்தை அது இருக்கும் இடத்தால் Capital Hill என்றும் சொல்வது வழக்கம். அமெரிக்க அதிபர் இலங்கை அதிபர் போலவே நிறைவேற்று அதிகாரமுடையவர். ஆனால் அமெரிக்க அதிபரால் அமெரிக்க பாராளுமன்றம் இயற்றும் சட்டத்தை இரத்துச் செய்யும் அதிகாரம் உண்டு. அமெரிக்க அதிபரின் வீட்டோவை அமெரிக்கப் பாரளமன்றமான கொங்கிரஸின் இரு அவைகளும் மூன்றில் இரண்டு பெரும்பானமயுடன் வீட்டோ செய்யலாம். அதாவது வீட்டோவை வீட்டோசெய்வது. நடை முறையில் அமெரிக்க அதிபர் வீட்டோக்கள் செய்வது குறைந்து கொண்டே போகிறது. ஜோர்ஜ் புஸ் நாற்பத்து நான்கு தடவைகள் வீடோ செய்தார். ஒபாமா இருதடவைகள் மட்டுமே.

சட்டவாக்கல் அதிகாரம்

அமெரிக்காவின் பாராளுமன்றமான கொன்கிரஸ் இயற்றும் சட்டப்படியே அமெரிக்க அதிபர்செயற்படவேண்டும். கொங்கிரஸின் இரு சபைகளில் மக்களவையில் 435 உறுப்பினர்களும்மூதவையில் நூறு உறுப்பினர்களும் இருக்கின்றனர். சட்டவாக்கல் அதிகாரம் இரு சபைகளுக்கும் சமமாக இருக்கிறது. பன்னாட்டு மட்டத்தில் செய்யப்படும் உடனபடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் அதிகாரம் மூதவையிடம் இருக்கிறது. வரிவிதிப்புச் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மக்களவையிடம் இருக்கின்றது. இதைத் தவிர அமெரிக்க அதிபருக்கு நிறைவேற்று அதிகார உத்தரவு இடும் அதிகாரம் உண்டு. இந்த உத்தரவு ஒரு சட்டம் போன்றதாகும். இந்தவகையில் அமெரிக்க அதிபருக்கு சட்டவாக்கல் அதிகாரம் உண்டு. அதிபரின் நிறைவேற்று அதிகார உத்தரவை அமெரிக்கப் பாராளமன்றதின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் தீர்மானத்தால் இரத்துச் செய்ய முடியும். 1942-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் தனது நிறிவேற்ற அதிகார உத்தரவின் மூலம் அமெரிக்காவில் வாழ்ந்த பல ஜப்பானியர்களை தடுப்பு முகாம்களில் அடைத்தார்.

அமெரிக்காவின் கட்சி அரசியல்

டெமொக்ரட்டிக் பார்ட்டி எனப்படும் மக்களாட்சிக் கட்சியும் ரிப்பப்ப்லிக் பார்ட்டி எனப்படும் குடியரசுக் கட்சியும் அமெரிக்காவில் இரு முக்கிய கட்சிகள். ஆனால் இந்தக் கட்சிகளுக்குள் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. மக்களாட்சிக் கட்சிக்குள் முற்போக்கு மக்களாட்சியினர், தாராண்மைமக்களாட்சியினர், பழமைவாத மக்களாட்சியினர், தொழிற்சங்கவாதிகள், கிருத்தவவாதிகள், மதசார்ப்பற்றவர்கள் என பதினைந்திற்கு மேற்பட்ட பிரிவினர் உண்டு. குடியரசுக் கட்சியில்மரபுவாதிகள், பழமைவாதிகள், Neoconservative எனப்படும் புதிய பழமைவாதிகள், மிதவாதிகள், தாராண்மைவாதிகள் எனப்பத்திற்கு மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர்கள் ஒரு சட்டத்திற்கு வாக்களிக்கும் போது தமது கட்சிக்கொள்கையிலும் பார்க்க தமது உட்பிரிவின் கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதை விட ரீ பார்ட்டி என்னும் ஒரு முக்கிய குழு உள்ளது. இது குடியரசுக் கட்சியிலும் மக்களாட்சிக் கட்சியிலும் இருக்கும் வரி விதிப்பிற்கு எதிரான கொள்கையைக் கொண்டவர்களின் குழுவாகும். Taxed Enough Already என்ற சொற்தொடரின் முதலெழுத்துக்களான ரீ. ஈ .ஏ ஆகிய எழுத்துக்களை ஒன்று சேர்த்து இது ரீ பார்ட்டி எனப்படுகிறது.

ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்கர்கள் இந்தியர்கள்.

குடியேற்றவாசிகளால் உருவாகி குடியேற்றவாசிகளால் வளர்ந்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்று குடியேறியவர்கள் தம்மைஅமெரிக்கர் என்றும் அங்கிருந்த பூர்வீகக் குடிகளை இந்தியர்கள் என்றும் அழைக்கின்றனர். 1790-ம் ஆண்டு நற்பண்புள்ள வெள்ளையர்களுக்கு மட்டும் ஐக்கிய அமெரிக்காவில் குடியுரிமை வழங்கப்பட்டது. அப்போது இருந்த 16 மாநிலங்களில்(தற்போது 50) 40 இலட்சம் குடிமக்கள் அமெரிக்காவில் இருந்தனர். அப்போது அடிமைகளாக இருந்த கறுப்பின மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பல குடியுரிமைச் சட்டங்கள் பல இயற்றப்பட்டன. 1820களில் 75 இலட்சம் பேர் அமெரிக்காவில் மேலும் குடியேறினர். 1840களில் 50 இலட்சம் ஜெர்மனியர்கள் அமெரிக்காவில் குடியேறினர் 1865-ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது. முதலாம் உலகப் போரைத் தொடர்ந்துஇருபது இலட்சம் யூதர்கள் உள்ளிட்ட இரண்டு கோடியே நாற்பது இலட்சம் பேர் ஐரோப்பாவில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறினர்.1882-ம் ஆண்டு சீனர்கள் அமெரிக்காவில் குடியேறுவதைத் தடுக்கச் சட்டம் இயற்றப்பட்டது. கள்ளக் குடியேற்றங்களைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புப்படை ஒன்று 1924-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

ஒபாமாவின் நிறைவேற்று அதிகார உத்தரவும் குடியேற்றவாசிகளும்.

குடிவரவுப் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதாகவும் அமெரிக்காவில் குடியுரிமை இன்றி இருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாகவும் உறுதி மொழி வழங்கி பராக் ஒபாமா அமெரிக்கக் குடியரசு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். நான்கு இலட்சம் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் நாடுகடத்தப்பட்டனர். 2014-ம் ஆண்டு40 இலட்சம் பேர்கள் நாடுகடத்தப் படுவதை நிறுத்தும் நிறைவேற்று அதிகார உத்தரவை பராக் ஒபாமா பிறப்பித்தார். அமெரிக்காவில் குடியுரிமை பெறும் சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் பெரும்பாலும் பராக் ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சிக்கே வாக்களிப்பார்கள். இதனால் குடியரசுக் கட்சியினர் பராக் ஒபாமாகுடியேற்றவாசிகளுக்குச் சாதகமாக நடவடிக்கைகள் எடுப்பதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். 2014 நவம்பர் வரை மக்களவையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மையாகவும் மூதவையில் மக்களாட்சிக் கட்சி பெரும்பான்மையாகவும் இருந்தன. இதனால் குடியேற்றவாசிகளுக்குச் சாதகமான சட்டம் இயற்ற முடியாமல் போனது. 2014 நவம்பரில் இருந்து இரு அவைகளிலும் குடியரசுக் கட்சியே பெரும் பான்மையானது. இதனால் ஒபாமா ஒரு நொண்டி வாத்து ஆக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளாக பாராளமன்றத்தில் சட்டம் இயற்ற முடியாத நிலையிலும் இன்னும் இரு ஆண்டுகளே ஒபாமா பதவியில் இருக்க முடியும் என்ற நிலையிலும் ஒபாமா தனது நிறைவேற்று அதிகார உத்தரவை ஒபாமாபிறப்பித்தார். அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கிலுள்ள இலத்திரனியல் நிறுவனங்களின் திறன் மிக்க ஊழியர்களை இழக்காமல் இருக்கவே ஒபாமா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சுரண்டல் வாதம்

அமெரிக்கப் பொருளாதாரம் தற்போதுவளர்ச்சி நிலைக்கு மீண்டு கொண்டிருக்கின்றது. இதனால் நாட்டில் வேலையில்லாப் பிரச்சனை குறைந்து செல்கின்றது. நாட்டில் வேலையில்லாப் பிரச்சனை குறையும்போது ஊதியம்அதிகரிக்கும். இந்த நிலையில் நாட்டில் உள்ளசட்ட விரோதக் குடியேற்ற வாசிகள் வெளியேறினால் ஊதியம் மேலும் அதிகரிக்கும். சட்ட விரோதக் குடியேற்றவாசிகளைச் சுரண்டி வந்த முதலாளிகள் அதிலும் பராக் ஒபாமாவின் கட்சியை ஆதரிக்கும் சிறு முதலாளிகள் பெரிதும் பாதிப்படைவர். இந்தச் சுரண்டல் வாதத்தைஅமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க நிறுவனங்கள் உலகச் சந்தையில் போட்டியிடு திறனை அதிகரிக்க திறன் மிக்க ஊழியர்களின் வழங்கல் தடையின்றி நடந்து கொண்டிருக்க வேண்டும் எனக் கௌரவமாகச் சொல்கின்றன. ஒபாமாவின் நிறைவேற்று அதிகார உத்தரவை மக்களாட்சிக் கட்சியில் 91 விழுக்காடு பேர்கள் ஆதரிக்கின்றனர். குடியரசுக் கட்சியின் 51 விழுக்காட்டினர் எதிர்க்கின்றனர். மொத்தத்தில் பெரும்பான்மையான அமெரிக்கர்கள் ஒபாமாவின் நடவடிக்கையை ஆதரிக்கின்றனர்.

Image Curtsey – http://www.vizworld.com/2010/11/daily-visual-loop-05112010/#sthash.FWa7SuJW.dpbs