அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா?

2101

ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும்.

97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா ( உலக நாயகன் என்று இப்போது சொல்ல முடியாது), 2001 நவம்பரில் பூகோளப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை அவர்களுக்குச் சூட்டியது.

அது மட்டுமல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் வெண்புறா போன்ற தொண்டர் நிறுவனங்களைத் தடை செய்தது.

அன்றைய அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சார்ட் ஆமிரெஜ் தொடக்கம் இன்றைய மேற்குலக இராஜதந்திர கருத்துருவாக்கிகளின் மையமான அனைத்துலக நெருக்கடிக்குழு வரை, ‘ஆயுதப்போராட்டத்தைக் கைவிடுங்கள்’,’ வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மறந்திடுங்கள் ‘என்றுதான் விடுதலைப்புலிகளின் காதுகளில் ஓதிக்கொண்டிருந்தார்கள்.

அனைத்துலக சமூகத்திடமிருந்து அவசர நிதியுதவியைத் திரட்டும் வகையில் நவம்பர் 2002இல், ஐரோப்பா ,வட அமெரிக்கா மற்றும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தைச் சார்ந்த 37 நாடுகளின் பிரதிநிதிகள் ஒஸ்லோவில் ஒன்று கூடிய மாநாட்டில் உரை நிகழ்த்திய ரிச்சாட் ஆமிடேஜ், ‘ ஒரு தனியரசை அமைப்பதற்கான ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக சிறிலங்கா மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் விடுதலைப் புலிகள் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டும்’ என்று  வலியுறுத்தியதாக, ‘போரும் சமாதானமும்’ என்கிற நூலில் (பக்கம் 652) ‘தேசத்தின் குரல்’ அன்டன் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்தான தனது நிலைப்பாட்டை விளக்கும் போது, ‘ஆயுதப்போராட்டம் பற்றிய அமெரிக்காவின் பார்வை மிகவும் குறுகியது, மேலோட்டமானது என்பது எனக்கு நன்கு தெரியும். அரசியல் வன்முறை பற்றி ஒரு தெளிவற்ற, குளறுபடியான கோட்பாட்டைக் கொண்டுள்ள அமெரிக்க வல்லரசு உலகெங்கும் தலைவிரித்தாடும் வன்முறை வடிவமான போராட்டங்கள் எல்லாவற்றையுமே பயங்கரவாதப் பூதமாகக் காண்கிறது. அடக்குமுறைக்கும் அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக நிகழ்த்தப்படும் சில போராட்டங்களின் தார்மீக, அடிப்படை, அரசியற் புறநிலை, வரலாற்றுச் சூழ்நிலை ஆகிய முக்கிய அம்சங்கள் இந்தக் குறுகிய பார்வைக்குள் அடங்குவதில்லை’ என்கிறார் அன்டன் பாலசிங்கம் அவர்கள்.

இத்தகைய குளறுபடியான குறுகிய பார்வை என்பது, அமெரிக்காவின் பூகோள நலன்களுக்குச் சாதகமான ,ஒருதுருவ மேலாண்மைக்கு இசைவாகப் போகக்கூடிய கருத்துநிலை என்பதனை அடிப்படையாகக் கொண்டதெனலாம்.

இடத்திற்கு இடம் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதமாகப் பார்ப்பதும், தனது நலனிற்கு ஒத்துப்போகும் பிராந்தியங்களில், அவற்றினை விடுதலைப்போராட்டம் என்று ஏற்றுக்கொள்வதும் அமெரிக்காவின் வரலாறாக அமைகிறது.

இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட நாள் முதல், தேசிய இன விடுதலை இயக்கங்களால் முன்வைக்கப்பட்ட தாயகம் ,தேசியம் ,சுயநிர்ணய உரிமை என்கிற பூர்வீக தமிழ் தேசிய இனத்தின் அடிப்படைபிறப்புரிமையை இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனை முற்றாக நிராகரிக்கும் அதேவேளை, ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்களத்தின் முழு தேசத்திற்குமான இறைமையை உள்வாங்கும் வகையிலான ,அதிகாரப்பரவலாக்க தீர்வு முறைமைக்கு உடன்பட்டுச் செல்லுங்கள் என்பதாகவே இவர்களின் அழுத்தங்கள் இன்றும் பிரயோகிக்கப்படுகின்றன.

விடுதலைப்புலிகளால் முன்மொழியப்பட்ட இடைக்கால அதிகார தன்னாட்சி சபையானது ,இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்படாத விடயமாக இருப்பதால், அதனை நிறுவுமாறு வலியுறுத்தும் வகையில் சமாதான செயற்பாடுகளை முன்னெடுத்த மேற்குலக அணியினர் எதுவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

இவைதவிர , சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் , விடுதலைப்புலிகளை ஓரங்கட்ட அமெரிக்கா எடுத்த முயற்சிகளையும் மறந்து விட முடியாது.

2003 ஜூன் மாதம் ஜப்பானில் நடைபெறவிருந்த இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற்கு முன்பாக , 2003 ஏப்ரல் 14 ஆம் நாள் ,ரிச்சாட் ஆமிடேஜ் தலைமையில் வாசிங்டனில் கூட்டமொன்று நடந்தது. இதில் விடுதலைப்புலிகள் இணைத்துக்கொள்ளப்படவில்லை. அதில் 21 நாடுகளின் மூத்த இராஜதந்திரிகளும்,16 சர்வதேச நிறுவனங்களும், அமெரிக்காவிற்கான இந்தியத் தூதுவரும் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் ஏன் புறக்கணிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தைக் முன் வைக்கும் போது ,’ எமது கொள்கை தெட்டத் தெளிவானது. விடுதலைப்புலிகள் இயக்கமானது சொல்லிலும், செயலிலும், ஐயப்பாட்டிற்கு இடமின்றி, பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும் ‘ என்றார் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ஆமிடேஜ்.

ஆகவே, சமாதானம் பேச வந்தவர்கள், ஒரு தரப்பினரை ஓரம் கட்டுவது, அவர்கள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் என்கின்ற பார்வை தவறாக இருக்க முடியாது. அமெரிக்காவின் இத்தகைய சூழ்ச்சியால் விரக்தியுற்ற விடுதலைபுலிகள் ,இப் புறக்கணிப்பைக் கண்டித்து 2003 ஏப்ரல் 4 ஆம் திகதி அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்கள்.

இதன் பின்புலம் குறித்து, அன்டன் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிடும் போது, ‘தென்னிலங்கையின் பொருளாதாரத்தைச் சீரமைத்து கட்டியெழுப்புவதற்கு முக்கியத்துவம் கொடுத்து, விக்கிரமசிங்க அரசு உலக நாடுகளிடம் நிதி உதவியை வேண்டி நின்றது. அத்துடன், விடுதலைப்புலிகள் இயக்கத்தை அரசியல் இராணுவ ரீதியாக முடக்கும் சர்வதேச சதிவலைப்பின்னல்  என்ற நாசகாரத் திட்டத்தைக் கட்டி எழுப்புவதிலும் விக்கிரமசிங்காவும் அவரது தோழரான மிலிந்த மொறகொடவும் அமெரிக்காவுடன் இணைந்து அந்தரங்கமாகச் செயற்பட்டனர்’ (போரும் சமாதானமும்-பக்கம் 701)என்கிறார்.

இதே மிலிந்த மொரகொட என்பவரே, ‘விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவைப் பிரித்தெடுத்தது நாமே’ என்று தேர்தல் மேடைகளில் பகிரங்கமாக கூறியவர். இதுபோன்ற உடைப்புக்களில் ,வல்லரசுப் பின்னணிகள் எவ்வாறு இருந்திருக்கும் என்பது இப்போது தெளிவாகப்புரியும்.
இதுமட்டுமல்லாது, அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் வெளியிடும் உள்ளக தகவல்களை உற்று நோக்கினால், முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் நேரடியாகாவும் மறைமுகமாகவும் ஊக்கிகளாகத் தொழிற்பட்ட வல்லரசாளர்களின் வகிபாகத்தை புரிந்து கொள்ள இலகுவாகவிருக்கும்.

ஆசியாவில் கொதிநிலையடைந்துள்ள தேசிய இனங்களின் போராட்டங்களை அவதானித்தால், அவற்றை முடக்குவதற்கு ,உலகச் சந்தைகளைப் பங்கிடும் அனைத்து வல்லாதிக்க சக்திகளும் ஒத்திசைவான மூலோபாய திட்டம் என்கிற இணைக்கப்பட்டு இராஜதந்திர நுண்ணரசியலை பயன்படுத்துவதைக் காணலாம்.

ஈழத்தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப்போராட்டமும் இதில் உள்ளடக்கப்படுகிறது என்கிற வகையில்,பொருளாதார ஆதிக்கப்போட்டி ஊடாக இலங்கையில் மோதும் வல்லரசுகள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைவிடத்தை மோதலற்ற மூலோபாய சமநிலை கொண்ட மையமாக மாற்றியமைக்க போட்டியிடுகின்றன என்று கணிப்பிடலாம்.
ஆனாலும், இந்த மென்போக்கு அணுகுமுறை எத்தனை காலத்திற்கு நீடிக்குமென்பதை, சீனா முன்னகர்த்தும் இந்துசமுத்திரப் பிராந்தியம் மீதான நிகழ்ச்சி நிரல் தீர்மானிக்கும்.

இருப்பினும், மென்சக்தி (soft power)அணுகுமுறையினை ,2009 மே இற்குப் பின்னர் பிரயோக்கிக்க வேண்டிய அவசியம் அமெரிக்கா , இந்தியா மற்றும் சீனா போன்ற வல்லரசுகளுக்கு ஏற்படுவதற்கு பல பூகோள அரசியல் -இராணுவ- பொருளாதாரக் காரணிகள் உண்டு.

இன அழிப்பிற்கு உள்ளாகும் தமிழ் தேசிய இனம், வெளியக சுயநிர்ணய உரிமை என்கிற பிறப்புரிமைக் கோட்பாட்டை முன்வைத்தால், வன்சக்தி (hard power) அணுகுமுறையை ஏதோவொரு பிராந்திய நலன் பேணும் வல்லரசு கையாள வேண்டிய சூழ்நிலை ஏற்படுமென்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொள்கின்றார்கள்.
ஆகவே நேரடியான மோதலைத் தவிர்க்க விரும்பும் இச்சக்திகள்,தமது ஆதிக்க இருப்பினை இலங்கையில் உறுதி செய்ய, வெவ்வேறு வழிமுறைகளை கையாள முற்படுகின்றனர்.

ஆட்சி மாற்றம் என்பதுதான் மேற்குலகின் ,குறிப்பாக அமெரிக்காவின் இலக்கு. சீன-இரானிய-ரஷ்ய அச்சில் இலங்கை ஆட்சியாளர்கள் நிரந்தரமாக இணைவது, தனது பிராந்திய நலனிற்கு ஆபத்தானதென அமெரிக்கா கருதுகிறது. ஆகவே போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், போன்ற சூடான விவகாரங்களை முன்வைத்து ,ஐ.நா.சபையில் தீர்மானங்களைக் கொண்டு வருவதன் ஊடாக இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என்பதுதான் அமெரிக்காவின் மென்போக்கு அணுகுமுறையாக அமைகிறது.

இருப்பினும், இலங்கையின் கடற்பரப்பினைப் பாதுகாப்பது என்கிற அடிப்படையில், அதன் கடற்படைக்கு பயிற்சி அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று அமெரிக்கத் தூதரகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை, சில மென்போக்கு அணுகுமுறைச் செய்திகளையும் சொல்கிறது.
அமெரிக்காவின் நட்பு நாடுகளான அவுஸ்திரேலியாவும் நியூசீலாந்தும் ,பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வோம் என்று  தெரிவித்த செய்தியும் இந்த மென்போக்கு இராஜதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது.

இருமுனைவாக்கம் அடையும் உலகச் சமநிலை குறித்து ,அமெரிக்க இராணுவ யுத்தக் கல்லூரியின் ஒரு பிரிவாக விளங்கும் மூலோபாய கற்கைநெறிகளுக்கான மையம் (SSI), ஒத்திசைவான மூலோபாயச் சமநிலை (Concert -Balance Strategy) குறித்து கலாநிதி பற்றிக் பவர் எழுதிய ஆய்வு ஒன்றினை வெளியிட்டிருந்தது.
அதில் அமெரிக்காவின் உலகளாவிய தாராள மேலாண்மையை எவ்வாறு பேணுவது என்பது குறித்தும், அதன் நிறுவனங்களை ,மதிப்பீடுகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வளர்ந்து வரும் சக்திகளுக்கிடையிலான இயக்கவியல் உறவுமுறைகளை ,ஒத்திசைவான மூலோபாயச் சமநிலை ஊடாக அணுகுவது பற்றி பேசும் அதேவேளை, அதில் தலையீடு செய்யாமல் பின்னடித்தால், பிராந்தியத்தில் ஏற்படும் மோதல்கள்  ஆபத்தான வெற்றுவெளியொன்றினை உருவாக்கிவிடும் என்கிற எச்சரிக்கையையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஆகவே ஆசியப் பிராந்தியத்தில்,குறிப்பாக இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ,அதிகாரங்களை அல்லது மேலாதிக்கத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய மாற்று மூலோபாயம் ஒன்றினை அமெரிக்கா கட்டமைக்க வேண்டும் என்கிற கருத்தினை கலாநிதி பற்றிக் பவர் முன்வைக்கிறார் போல் தெரிகிறது.

அதேவேளை,உலகநாயகன் என்கிற ஆதிக்க மேலாண்மையை விட்டுக் கொடுக்காத வகையில், ஆசியாவில் சீனாவும் இந்தியாவும் தன்னோடு சமமானவர்களாக இருந்தாலும், அக்கூட்டில் தானே முதன்மையானவராக (Primus inter pares) இருக்கக்கூடிய நிலையில் ,ஒத்திசைவான மூலோபாயச் சமநிலையை உருவாக்க அமெரிக்க முயற்சிக்க வேண்டும் என்பதே அவரின் வேண்டுதல்.
G8, G20 நாடுகளின் மாநாடுகளிலும் இத்தகைய முதல்வர் அந்தஸ்தினை அமெரிக்கா தக்க வைப்பதைப் பார்க்கலாம்.

யுத்தங்களினால் நிதிவளங்கள் வற்றிப்போவதும், உலகப்பொருளாதார வீழ்ச்சியும், மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி நிதி மூல வளங்கள் நகர்தலும், தனது ஓருலக நாயகன் பாத்திரத்தை அமெரிக்காவால் தொடர்ச்சியாகத் தக்க வைக்க முடியாமல் இருக்கும் யதார்த்த நிலையைப் புரிந்து, அதற்கேற்றவாறு தனது பரந்த மூலோபாயத்தை மாற்றியமைக்க வேண்டும் என்கிறார் கலாநிதி பவர்.
இத்தகைய ஆய்வுகள் அமெரிக்க அதிகார மையத்தில் இருப்பவர்களால் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என்பதை நிராகரிக்க முடியாது. இது போன்று அமெரிக்காவின் சமகால பலம்- பலவீனம் குறித்து பல ஆய்வுக்கட்டுரைகள் வெளிவருகின்றன. நீண்டகால நிகழ்ச்சிநிரல் குறித்து வெளியாகும் அநேகமான கட்டுரைகளில் ,இதேவிதமான கருத்துக்கள் தென்படுவதைக் காணலாம்.