அமெரிக்கா – இந்தியா – தமிழீழம் நலன்கள் சந்திக்குமா?

1314

கடந்தமுறை இப்பத்தியை நிறைவு செய்யும்போது, சிறிலங்காவில் மேற்குலகத்திற்கு இசைவாகச் செயற்படக்கூடிய ஒரு ஆட்சி ஏற்படுமிடத்தில் ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சி குறைப்பிரசவமாக மாறிவிடும் அபாயம் உள்ளமையை நாம் கவனத்தில் கௌ;ளவேண்டியவர்களாக உள்ளோம் என குறிப்பிட்டிருந்தோம். இங்கு மேற்குலகம் எனப் பொதுவில் அடையாளப்படுத்துவதை விடுத்து, ஐக்கிய அமெரிக்காவின் ஒழுங்குக்குள் வரக்கூடிய ஆட்சி மாற்றம் நிகழுமானால், சிறிலங்கா மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுவது நிறுத்தப்படுமா என்ற கேள்வியை நாம் முன்வைக்கலாம். ஐ.நா. மனிதவுரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்ததன் மூலம் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளமையால் அதனை நேரடியாக இவ்விடயத்துடன் தொடர்புபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

இலங்கைத்தீவு விடயத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்பில் பல்வேறு வியாக்கியானங்கள் வழங்கப்படுகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளாக இருந்தபோதிலும், நீண்ட கால மூலோபாய அடிப்படையிலேயே அமெரிக்கா செயற்படுகின்றது என்பதில் கருத்து வேறுபாடுகளில்லை. மூன்றாம் உலக நாடுகளை தமது ஒழுங்குக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா முற்படுகிறது. அதனடிப்படையில் முரண்டு பிடிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க முனைகிறது என்ற கருத்தில் இப்பத்தி கவனத்தைச் செலுத்துகிறது.

கொமியுனிஸ்ட் நாடுகளுடனான பனிப்போருக்கு பிந்திய காலத்தில், அமெரிக்கா தனது ஒழுங்குக்குள் நாடுகளைக் கொண்டு வருகிறது என்பதற்கு உதாரணமாக யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், ஈராக், எகி;ப்து, லிபியா ஆகிய நாடுகள் விடயத்தில் அமெரிக்கா நடந்து கொண்டதையும், தற்போது மியன்மார் (பர்மா), சிரியா ஆகிய நாடுகளில் அது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளலாம். நீழும் இப்பட்டியலில் சிறிலங்காவும் சேர்க்கப்பட்டுள்ளமையை ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெளிக்காட்டி நிற்கின்றது. எல்லா நாடுகளிலும் ஒரேவிதமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்பதனால் இலங்கைத்தீவில் ஈராக்கில் நடந்து கொண்டதுபோல் அல்லது சிரியாவில் நடைபெறுவதுபோல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்க வேண்டியதில்லை.

இலங்கைத்தீவின் ஆட்சி மையமான கொழும்பு அரசாங்கத்தினை தமது ஒழுங்குக்குள் கொண்டுவருவதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது என்பதனை இராஜபக்ச அரசாங்கம் அறிந்து வைத்துள்ளது. இருப்பினும் அமெரிக்கா விரும்புகிற ஒரு மாற்றத்திற்கு தன்னை உட்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் அது இருக்கிறது. இதனை சிறிலங்கா அரசாங்கத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கையாக, அல்லது தமது இறைமை மீதான பற்றுதலாக அல்லது வலதுசாரி – இடது சாரி அரசியலாக பார்க்க முடியாது. மாறாக தன்னை மாற்றத்திற்கு உள்ளாக்குவதற்கு சிறிலங்காவின் அரச கட்டமைப்பு இடம் தரமறுக்கின்றது. ஆகையால் ஆட்சியமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்த முனைவதன் மூலம் அரசாங்கம் அனுபவித்துவரும் பெரும்பான்மை ஆதரவினை இழந்துவிடுவதில் நாட்டம் கொள்ளாது.

சிறிலங்காவின் அரச கட்டமைப்பு என்பது மகாவம்ச மனோபாவத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த மேலாதிக்க அமைப்பு. அங்கு தேர்தல் மூலம் ஆட்சியைத் தெரிவு செய்தல் போன்ற சனநாயக வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், தாராண்மைவாத சனநாயக அணுகுமுறையானது தமது கட்டமைப்பை சீர்குலைத்துவிடும் என அதன் ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். அதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் கேள்வி;க்கிடமின்றி ஏற்றுக் கொள்வதனாலேயே தமிழ்மக்களுடன் அதிகாரத்தினை பகிர்ந்து கொள்வது இதுவரை சாத்தியப்படவில்லை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும், இராணுவ அதிகாரங்களையும் கொண்ட மகிந்த அரசினால், சிறிலங்காவின் அரச கட்டமைப்பில் மாற்றத்தினை கொண்டுவரமுடியாது என்பதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1987ல் சர்வ அதிகாரங்களையும் கொண்டிருந்த அப்போதைய அதிபர் ஜே.ஆர்.ஜயவர்தன, பதின்மூன்றாம் திருத்தச்சட்ட மூலத்தை மையப்படுத்திய இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கரக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவினை பிறப்பிக்க வேண்டியிருநதது என்பதனை இவ்விடத்தில் கவனத்தில் கொள்க.

தாராண்மைவாத சமாதான (liberal peace) அணுகுமுறையின் அடிப்படையில் இலங்கைத் தீவினை ஆட்சிமையத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமெரிக்கா முயற்சிக்கின்றது என்ற கருத்தியலில்; பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகள் உடன்படுகிறார்கள். ஆனால் அதனை அடையும் விடயத்தில் எத்தகைய அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும் என்பதில் இரு வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

ஒரு தரப்பினர், தற்போதுள்ள மகிந்த இராஜபக்ச தலையிலான ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசாங்கத்தை பதவியிறக்கம் செய்து ஐக்கிய தேசியக் கட்சி போன்ற அதிகமான மேற்குலகசார்புடையவர்களை ஆட்சியில் அமர்த்த முனைவார்கள்; என்ற கருத்தை வெளியிடுகிறார்கள். மற்றய தரப்பினர், சிறிலங்காவின் அரச(ளவயவந) கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே அமெரிக்கா இலங்கைத்தீவினை தமது ஒழுங்குக்குள் கொண்டுவர எத்தனிக்கும் என வாதிடுகிறார்கள்.

இங்கு குறிப்பிட்டுள்ள இரண்டாவது தரப்பினர் எதிர்பார்ப்பதனைப்போல் சிங்கள பௌத்த மேலாதிக்க அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுமாயின், அதுவே தமிழ்த் தேசிய இனத்தின் நலன்களுடன் ஒன்றிணையும்0 சந்திப்புப் புள்ளியாக அமையும். இக்கட்டமைப்பு உடைக்கப்படாமல் தமது அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியாது என்ற யதார்த்தத்தினை தமிழ்மக்கள் நன்கறிவார்கள்.

மேற்குலகம் விரும்பும் தாராண்மைவாத சமாதானத்தினை ஏற்படுத்துவதற்கு, அதாவது இலங்கைத்தீவினை தமது ஒழுங்குக்குள் கொண்டு வருவதற்கு, சிங்கள-பௌத்த மேலாதிக்க சிந்தனையே இப்போது முட்டுக்கட்டையாக இருக்கிறது. முன்னர் இவ்வாறான முட்டுக்கட்டையாக விடுதலைப்புலிகளை இருப்பதாக மேற்குலகம் கருதியது என்பதனை மறுப்பதற்கில்லை.

இங்கு இன்னொரு முக்கியமான தரப்பான இந்தியாவை எடுத்துக் கொண்டால், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளில் சிறிலங்காவிற்கு முழு ஆதரவையும் வழங்கிய அதனால், போருக்கு பிந்திய காலத்தில், எதிர்பார்த்த வகையில், தமது நலன்பேணும் செயற்பாடுகளை செய்யமுடியாமல் உள்ளது.
தனது நலன் சார்ந்த செயற்பாடுகளை இலங்கைத்தீவில் மேற்கொள்வதற்கு தடையாக இருப்பது சிங்கள பௌத்த மேலாதிக்க கட்டமைப்பு என்பதனையும், இக்கட்டமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்தாமல், இந்தியாவின் நலன்களை இலங்கைத்தீவில் ஈடேற்றிக் கொள்ள முடியாது என்பதனையும் காலம் கடந்தாயினும் இந்தியா உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டுள்ளது.

பொது எதிரியை எதிர்கொள்ளும் விடயத்தில்தான் ஈழத்தமிழ் மக்களும், இந்தியாவும், மேற்குலகமும் ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. ஆனால் இவ்வாறான இணைவு சாத்தியமா என்பது எதிர்கால அரசியல் நகர்வுகளில் மாத்திரம் தங்கியிருக்கிறது. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் சிங்கள-பௌத்த மேலாதிக்கம் உடைக்கப்;பட வேண்டியது அதன் இருப்பு சார்ந்து உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கையாக அமைகிறது. மற்றய இரண்டு தரப்பிற்கும் இத்தகைய அவசரமில்லை. அதுபோல் தமது மேலாதிக்கத்தினை தக்க வைப்பதில் உறுதியாகவுள்ள கொழும்பு ஆளும் வர்க்கம் தமக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வதில் தந்திரோபாயமாக நடந்து கொள்ளுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இத்தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக தமிழ்த்தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் அரைகுறையான தீர்வு முயற்சிகளில் அவை கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கலாம்.

சிறிலங்காவின் ஆட்சியமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற விடயத்தில், புலம்பெயர் தமிழ் அமைப்புகளும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, தமிழ் குடிசார் சமூகம் எனபன முனைப்பாக இருந்தாலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர், குறிப்பாக சம்பந்தன் – சுமந்திரன் குழுவினர் குழப்பமான நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். சிங்களப் பேரினவாதத்துடன் கரங்கோர்த்துக் கொள்வதில் கூட்டமைப்பினர் மத்தியில் தயக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்ததிலிருந்து தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் கூட்டுச் சேரந்துள்ளதுவரை, சிங்கள பௌத்த மேலாதிக்கத்துடன் சமரசம் செய்து கொள்ளவே கூட்டமைப்பு விரும்புகிறது. சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்கள் தமிழ்த்தரப்பின் பிரதிநிதிகளாக வெளியுலகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுவதில் உள்ள ஆபத்து இதுதான். இவற்றின் அடிப்படையில் ஆட்சியமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதற்கான வாயப்புகள் குறைந்தளவிலேயே தென்படுகின்றன.