அம் என்றால் அடி… இம் என்றால் குத்து… எதிர்த்துக் கதைத்தால் ஏறி ஒரு உதை…
என்ன எழுத வருகிறேன் என்று நீங்களே ஊகிக்கக் கடினமாக இருக்கும். வேட்பாளர் விக்கினேஸ்வரன் சொன்ன கணவன், மனைவி பிரச்சனையைப் பற்றியும் இல்லை, இங்கு நாளாந்தம் எம்மவர்கள் சிலர் வீடுகளில் உண்மையாகவே நடக்கும் கணவன், மனைவி குடும்பி பிடி சண்டையும் இல்லை. இங்கு இந்தவெளிநாடுகளில் பெரிய தொழில் அதிபர்களாகவும், முதலாளிகளாகவும் இருக்கும் தமிழர்கள், அவர்களின் கீழ் வேலை செய்யும் தமிழர்களை நடாத்தும் விதம் பற்றித்தான் சொல்ல வருகிறேன்.
இங்கு எழுதுபவைகள் அனைத்தும் உண்மை, உண்மையைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. வாழ்நாளில் இப்படியான நிர்வாகத்தின் கீழ் ஒருதடவை கூட வேலை பார்க்காது எப் பொழுதும் நல்ல சட்ட திட்டங்களின் படி நடக்கின்ற நிர்வாகத்தின் கீழ் 9 – 5 (குறித்த நேரத்திற்கு தொடங்கி குறித்த நேரத்தில் முடியும்) வேலை, சனி, ஞாயிறு விடுமுறை, 21 அல்லது 23 அல்லது அதற்கும் மேற்பட்ட விடுமுறை நாட்கள், எமது தனிப்பட்ட பிரச்சனைகளை கதைப்பதற்கென ஒரு மனித வள (HR) உத்தியோகத்தர்கள், வருத்தம், துன்பம் என்றால், அதற்கு சம்பளத்துடன் ஒரு நாள், அரை நாள் விடுமுறைகள் என்பதோடு, பலவகை வசதிகளையும் அநுபவித்துக் கொண்டிருப்போருக்கு இங்கு சொல்லவரும் விடையம், அதிசயமாகத்தான் இருக்கும்.
தமிழர்கள் முதலாளிகளாக இருக்கும், சில தொழில் நிறுவனங்களில் வேலை நேரம், அவர்கள் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் தோன்றும், ஆதிபரா சக்தியில் வந்த அம்மன் போன்று வேலையாள்களும் கூப்பிட்ட குரலுக்கு(ரெலிபோன் அழைப்புக்கு) வந்தேன் ஜயா என்று அம்மன் போல காட்சி தர வேண்டும், ஆனால் சின்ன வித்தியாசம் நீங்கள் உடனே காட்சி அருளிவிட்டு மறைய முடியாது, பிறகு அவர்கள் போகச்சொல்லும் நேரத்திற்குத்தான் போக முடியும்!
வேலை பளு தாளாமல் நீங்கள் முக்கி முனுக்கினாலும் அவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஒரு மாதிரி இழுத்துப்பறித்து முதல் வருடம் முடிந்த பிறகு, எங்கையாவது மன, உடல் வலி தீர வருட விடுமுறையை கேட்கும்போது, பிறகு இன்னுமொரு பகீரத பிரயத்தனை செய்ய வேண்டும், சிலருக்கு சில அதிர்ச்சி வைத்தியங்களும் கிடைக்கும், அப்போதுதான் வேலையில் சேரும் போது அவசர அவசரமாக கையெழுத்திட்ட, பக்கம் பக்கமான வேலை ஒப்பந்தத்தை எடுத்து ஒவ்வொரு பத்தியாக வாசிப்பார்கள். Bank staff என்றால் என்ன? Temporary staff என்றால் என்ன? என்ன வித்தியாசம் என்று ஓடி முழிப்பீர்கள்
தமிழ் முதலாளிகள் செய்யும் அடாவடித்தனத்தில், ஏக வசனத்தில் வேலை செய்பவர்களை அழைத்தல், எல்லோருக்கும் முன்னால் பேசி அவமானப்படுத்துதல், அவர்கள் மேல் கை வைத்தல், காலால் உதைத்தல், சேட்டை பிடித்து இழுத்தல், வாசல் வரை இழுத்துச் சென்று தள்ளி விடுதல் போன்றவைகள் இதில் அடங்கும். இதை வாசிக்க, அந்த காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளிகளின் கதைகள் ஞாபகம் வருகிறதா?பொய் இல்லை. அப்படியானால் ஏன் இங்கு இன்னமும் வேலை செய்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும்.
ஒன்று வேலை எடுப்பது மிகக்கடினம். அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்கள், ஊரில் ஆதரவு இன்றி இருக்கும் உறவுகள், வயது போன அம்மா, அப்பா, தங்களின் படிப்புச் செலவு,வீட்டு வாடகை, இப்போதுதான் பிறந்திருக்கும் குழந்தை, ஊரில் இருந்து தன்னை நம்பி லண்டனுக்கு புதிதாக வந்த மனைவி என ஆளுக்குக் கொரு பொறுப்பு இருப்பதால், சூடு சுரணையற்று மாடு போல வேலை செய்கிறார்கள். அப்படி இருந்தாலும் ஒருநாள் பொறுக்காது, வாய் திறந்தால் முதலாளி (தமிழன்தான்)உதைத்து அனுப்பி வைப்பார்.“ strong people stand up for themselves but the strongest people stand up for others” என்று உங்களின் நிலைக்குபரிதாபப்பட்டு அங்கு வேலை செய்யும் ஓரிருவர் “அண்ணை ஒன்றுக்கும் பயப்படாதேங்கோ, நாங்கள் இருக்கின்றோம். நீங்கள் எங்கு கூப்பிட்டாலும் அங்கு வந்து, நாம் கண்டதை சாட்சியாக சொல்லுவோம் என்று” அருள்வாக்கு கொடுத்து விட்டு, அடுத்தநாள் அவர்கள்வேலைக்கு போனால், இவர்கள் துடித்துப்பதைத்தது முதலாளிக்கு தெரிந்து, இவர்களின் பதவியும் காலி!
அட இப்படி பெயர்போன தமிழர் நடாத்தும் கம்பனிகளை விடுத்து, சாதாரணமான உணவு விடுதிகள், கடைகளுக்கு போகலாம் என்றால், அங்கு ஆறு சொச்சம் என்று சம்பளத்தை பகுதி நேர வேலை என்று பதிந்து விட்டு, முழுநேரமும், அந்த பகுதி நேர வேலைச் சம்பளத்துடனேயே செய்யச் சொல்வார்கள், கடைசியில்கணக்கு பார்த்தால் நீங்கள் மணித்தியாலத்துக்கு மூன்று அல்லது நாலு பவுணுக்கு வேலை செய்திருப்பீர்கள். சாப்பாட்டுக்கடைகளும் இதற்கு விதிவிலக்கு இல்லை. (இல்லாவிட்டால் என்னவென்று போட்டி போட்டு இடியப்பத்தை அறாவிலைக்கு விற்பது)
இதைவிட பெரிய தொழில்சாலைகளில் மேற்பார்வையாளராக வேலை செய்யும் தமிழர்கள்அடிக்கும் லுÖட்டியும் கொஞ்ச நஞ்சமில்லை. தமக்கு தெரிந்த கொஞ்ச ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு, ஏதோ அந்த தொழில்சாலையே தங்கள் முப்பாட்டன் சொத்து போலவும், இவர்கள் தாங்கள் முறிந்து மற்றவர்களையும் முறிந்து அடுத்து வரும் ஏழு தலைமுறைக்கும் தொழில்சாலை சொந்தக்காரனுக்கு சொத்து சேர்ந்து வைப்பார்கள். இப்படித்தான் தொழில்சாலையில் வேலை செய்த தமிழ் பெண்மணி நிலம் சுத்தம் இல்லாததால் சறுக்கி விழுத்து, இடுப்பொடிந்து விட்டா, நின்ற தமிழ் மேற்பார்வையாளர் அக்கறையாக அவரை தனது காரில் வைத்தியசாலைக்கு கொண்டு போய், ஆங்கிலத்தில் உரையாடி சேர்ந்து விட்டு, அவவின் கணவருக்கும் அறிவித்து விட்டு, மீண்டும் தொழில்சாலைக்கு போய் சேர்ந்து அவர் அன்றுவேலைக்கே வராத மாதிரி பதிவை மாற்றி விட்டாராம். பிறகு மூன்று மாதத்திற்கு பின் தான் அவர்களுக்கு வைத்தியசாலையில் அவவைசேர்க்கும் போது, அவர் அவவின் கணவரின் பெயரை சொல்லி அவ வீட்டு குளியல் அறையில் விழுந்ததாக சொல்லி, சேர்த்ததாக தெரியவந்தது. இதனால் அவ் ஆங்கிலம் தெரியாத தமிழ் பெண்மணிக்கு வரவேண்டிய உதவிதொகை ஏதும் வரவில்லை. அத்தொழில்சாலையில் இருந்து சாட்சிக்கு வேறு ஒரு தமிழ் பெண்மணியும் முன் வரவில்லை. கலியுகம்!
அட இதை யாரிடமாவது முறையிட்டு, நீதி கேட்கலாம் என்றால், பார்த்தவர்கள் எவரும் சாட்சி சொல்ல தமது பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் முன் வருவதில்லை. ஆதலால்மன உளைச்சலுக்கு ஆளாகாது, உங்களுக்குரிய சட்ட திட்டங்களைemployment rights act 1996 என்று இணையத்தளத்தில் தேடி, வாசித்து அறிந்து கொள்ளலாம். அல்லாவிடில் கீழ்வரும்இணையத்தள முகவரியில் போய் தகவல்களைவாசித்து அறிவதோடு, அவர்களின் இலவ சஉதவி இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளலாம்.
- http://www.acas.org.uk/index.aspx?articleid=1342
- Call our Helpline on 08457 47 47 47 for free and confidential advice
- Mon-Fri, 8am-8pm and Saturday, 9am-1pm
- Textphone: 08456061600