அரசியலற்ற அரசியல் அல்லது ஆன்மீக அரசியல்

107

கடந்த பத்தாண்டுகளில் ஈழத்தமிழர்களின் அரசியலானது பெருமளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கிறது. சிறிலங்காவின் நாடாளுமன்றத்திலும், பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிச் சபைகளிலும் அக்கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருக்கிறது என்பதன் அடிப்படையில் அதுவே தமிழ்மக்களின் நடைமுறைத் (de facto) தலைமையாக, சிறிலங்கா அதிகார மையத்தினாலும், வெளித்தரப்புகளாலும் காண்பிக்கப்பட்டு வருகிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதற்கு அப்பால் இவ் அதிகார மையங்களின் ஏவலைச் சிரமேற்று நிறைவேற்றும் தரப்பாகவும் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது. ஆதலால் கூட்டமைப்பிற்கு மாற்றினைக் கட்ட முனைபவர்கள் பலத்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கூட்டமைப்பின் அரசியல் என்பது பெருமளவில் இந்திய, மேற்குலக அரசுகளின் அவற்றின் நலன்களின் அடிப்படையிலான வியூகத்திற்கு ஏற்ப நடந்துகொள்வதாகவே அமைந்திருக்கிறது. இத்தரப்புகள் சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்துப்போகும்போது அரசாங்கத்தை ஆதரிப்பதும், உறவுகளில் விரிசல் ஏற்படும்போது, வெறும் அடையாளத்திற்காவது தமது எதிர்ப்பினைப் பதிவு செய்வதுமாக கூட்டமைப்பின் அரசியல் நகர்கிறது. தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தக்கூடிய அரசியல் மூலோபாயம் எதுவுமற்று வெறுமனே முகவர் அரசியலை நடத்துவதற்கு தலைவர்கள் அவசியமில்லை. இந்நிலையிற்தான் மாற்றுத் தலையைின் அவசியம் தமிழ் மக்களால் உணரப்படுகிறது.

சிறந்த அரசியற் தலைமை என்பது வெறுமனே தனிமனித ஆளுமைகளை மையப்படுத்தியதாக அமைவதில்லை. அவர்கள் கடைப்பிடிக்கும் அரசியற் செல்நெறி, நீண்டதூரப் பார்வை, இலட்சிய உறுதி என்பனவற்றின் அடிப்படையிலேயே மக்கள் தலைவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். அண்மைய வரலாற்றில், ஈழத்தமிழர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் ஒரே தலைவராக தேசியத் தலைவர் பிரபாகரன் மாத்திரமே உள்ளார். ஆனால் ஒரு தேசிய விடுதலை இயக்கத்தை வழி நடத்திய அவரைப்போன்று ஒரு உறுதியான அர்ப்பணிப்பு மிக்க தலைவரை வாக்குப் பொறுக்கும் அரசியலில் காணமுடியாது என்பதில் தமிழ்மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.

இவ்வாறான பின்னணியில், ஒரு மாற்றுத்தலைமையை வழங்கக்கூடியவராக எண்பது வயதான முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சிலர் பிரேரிக்கிறார்கள். அவரது தலைமையை ஏற்று மற்றைய அரசியற் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவருடன் கூட்டுச் சேரவேண்டும் என்றும் இவர்கள் நாண்டு கொண்டு நிற்கிறார்கள். இவ்வாறு, இந்தியாவிலிருந்தும் புலம்பெயர்நாடுகள் சிலவற்றிலிருந்தும் அவரைத் தலைமைப் பதவிக்கு கொண்டுவருவதில் அக்கறை கொண்டிருக்கிறவர்கள், அதற்காக பெருந்தொகைப் பணத்தை வாரியிறைப்பவர்கள் எதனைச் சாதிக்க விழைகின்றனர் என்பது தொடர்பில் நாம் கரிசனம் கொள்ளவேண்டியுள்ளது.

அரசியற் சித்தாந்தங்கள் எதனையும் வரித்துக் கொள்ளாத விக்னேஸ்வரன், தனது அரசியற்பிரவேசங்கூட ‘ஆண்டவனின் முடிவு’ என்பதாகவே பொதுமேடைகளில் கூறிவருகிறார். தமிழ்த் தேசிய அரசியலையே அவர் மேடைகளில் மேலோட்டமாகப் பேசிவந்தாலும் தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை வலியுறுத்தும் முக்கிய விடயங்களை அவர் வேண்டுமென்றே தவிர்த்து வருகிறார். அல்லது முன்னுக்கு பின்னாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி மக்களைக் குழப்பி விடுகிறார்.

விக்னேஸ்வரனை ஒரு அரசியல்வாதியாகப் பார்ப்பதா அல்லது வெறுமனே ஒரு கனவானாக வைத்து எடைபோடுவதா என்பதில் சிலருக்கு குழப்பமிருக்கிறது. அதே சமயத்தில் தேர்தல் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் விரக்தியடைந்திருக்கிற மக்களில் சிலர், எவ்வித அரசியலுமற்ற ஒரு நல்ல மனிதனே போதும் என்று எண்ணுகிறார்கள். இத்தரப்புகளை நம்பியே விக்னேஸ்வரன் அரசியலற்ற அரசியல் செய்யவிழைகிறார்.

நடிகர் ரஜினிகாந் போன்று, விக்னேஸ்வரனும் ‘ஆன்மீக அரசியலை’ அல்லது அரசியலற்ற அரசியலை செய்ய ஆசைப்படலாம். ஆனால் தமிழ்மக்களின் அரசியல் வேணவா தொடர்பில் அவர் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்பதையிட்டே நாம் அதிக கரிசனை கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக சிறிலங்காவின் ஒற்றையாட்சியை மையப்படுத்திய நடப்புநிலமை (status quo) தொடர்பில் அவர் என்ன நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறார் என்பதனை அவர் ஐயத்துகிடமின்றி வெளிப்படுத்த வேண்டும்.

ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு அல்லது சட்டத்தரணியாகப் பணியாற்றுவதற்கு அல்லது அரச பதவியைப் பெறுவதற்காக சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பினை ஏற்று நடப்பதாக உறுதிப்பிரமாணம் எடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு கையொப்பமிட்ட பேனாவின் மை காய்வதற்குள் அதற்கு எதிராகவும் பலர் செயற்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழான சட்டத்தை காப்பவராக, ஒரு நீதியரசராகப் பணியாற்றிய விக்னேஸ்வரனை மேற்குறிப்பிட்டவர்கள் போன்று ஒப்புக்கு கையொப்பமிட்ட ஒருவராகக் கருதமுடியாது.

2013ம் ஆண்டு நடைபெற்ற வடமாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் தலைமையால் களமிறக்கபடும்வரை விக்னேஸ்வரன் நேரடி அரசியலில் ஈடுபட்டவரல்ல. அவ்வாண்டு கொழும்பில் நடைபெற்ற தந்தை செல்வா நினைவு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற அவர் அழைக்கப்பட்டிருந்தார். தமிழரசுக்கட்சியின் வன்முறையற்ற (அகிம்சை வழி) அரசியலைப் பாராட்டுவதாகவும் வன்முறைப் போராட்ட வழிமுறையையும் மறுதலிப்பதாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அந்நிகழ்ச்சியில், தமிழரசுக்கட்சியின் நீண்டகால ஆதரவாளர்போன்று அவர் தன்னை காட்டிக்கொண்டார்.

வடமாகாணசபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப்பெற்று முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட அவர் மகிந்த இராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதியின் முன் பதவியேற்கவேண்டும் என்ற அவசியம் இல்லாத நிலையில், ஒற்றையாட்சிக்கும் சிறிலங்கா அதிபருக்கும் தான் விசுவாசமானவர் என்பதனைக் காட்டிக்கொள்ளவே அவர் அவ்வைபவத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.

வடமாகாணசபையில் கொண்டுவரப்பட்ட ‘இனப்படுகொலை’ தீர்மானமே விக்னேஸ்வரனின் அரசியல் நடவடிக்கைகளின் திருப்பு முனையாக அமைந்திருந்தது. தான் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைமையின் விருப்பிற்கு மாறாக சர்வதேச சமூகத்தின் கவனத்தையீர்க்கும் வகையில் அத்தீர்மானம் அமைந்திருந்தது. சர்வதேச நீதியினைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளில் அத்தீர்மானத்தினால் எத்தகைய செல்வாக்கும் செலுத்த முடியவில்லை. இருப்பினும், தமிழ் மக்களின் கூட்டு மனவுணர்வினை வெளிப்படுத்துவதில் அத்தீர்மானமும், தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானமும் பெருமளவில் உதவின என்பதனை மறுப்பதற்கில்லை.

இத்தீர்மானம் போன்று வேறும் சில அரசியற் தீர்மானங்களை வடமாகாணசபை நிறைவேற்றியதாயினும், அச்சபையினால் வேறெந்தப் பணிகளையும் செய்யமுடியாமைக்கு விக்னேஸ்வரன் பொறுப்பேற்க வேண்டும். மாகாணசபை வினைத்திறனுடன் இயங்க முடியாமற்போனமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தன்மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கொள்வதற்காகவாவது வடமாகாணசபையின் இயக்கமற்ற நிலைபற்றி விக்னேஸ்வரன் மக்களுக்கு விளக்கவேண்டும்.

குடிசார் அமைப்புகளும் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளும் அங்கம்வகித்த தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டபோது அதன் இணைத் தலைவர்களின் ஒருவராக நியமிக்கப்பட்ட விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டார். தமிழ்மக்களைத் தலைமைதாங்கக்கூடிய ஒரு ஆளுமை என தன்னை நிரூபிப்பதற்கு அவருக்குக் கிட்டியிருந்த வாய்ப்பினை அவர் பயன்படுத்தத் தவறிவிட்டார். அவ்வமைப்பு சிறப்பாகச் செயற்பட்டிருக்குமாயின் விக்னேஸ்வரனின் தலைமையை தமிழ்மக்கள் எவ்வித நிபந்தனையுமின்றி ஆதரித்திருப்பார்கள். ஆனால் பேரவையானது உருவாக்கப்பட்டு நான்கு வருடகாலத்திற்குள் முற்றாக இயக்கமற்றுப் போய்விட்டது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஒற்றுமைக் கோசத்துடன் ஈபிஆர்எல்எப் உடன் இணைந்து களமிறங்க முனையும் விக்னேஸ்வரன் இப்போதாவது தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவராக இருந்து கொண்டு பேரவை வெளியிட்ட தீர்வுத் திட்டத்தை ஆதரிக்காது பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்ட அவர் இப்போது ஒற்றுமைபற்றிப் பேசுவது வியப்பையளிக்கிறது.

தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக விளக்குவதற்கு அவர் முன்வராவிடின் தமிழ்த் தேசிய அரசியலில் காத்திரமான மாற்றுதலைமை உருவாவதை தடுக்க முனையும் வெளித்தரப்புகளுக்கு துணைபோன துரோகத்தை செய்தவர்கள் என்ற வரலாற்றுப்பழி சுமப்பதிலிருந்து விக்னேஸ்வரனும் அவரது ஆதரவாளர்களும் தப்பிக்க முடியாது போய்விடும்.