அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் காரணமாக கைதிகளின் உயிரோடு விளையாடாதீர்கள் என முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதுடன் சிறைச்சாலை அதிகாரியின் தகவலின் அடிப்படையில் அரசியல் கைதிகள் பாதுகாப்புடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று மாலை முதல் கைதிகளுக்கும் பாதூகப்பு தரப்பினர் மற்றும் சிறைக்காலவர்களுக்குமிடையில் முரண்பாடான நிலை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக சிறைக்கைதிகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் சிலருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டமையினால் கொரனா தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள ஏனைய கைதிகள் தமக்கான பாதுகாப்பை வழங்குமாறு கோரி சிறைக்காவலர்களுடன் முரண்பட்டதுடன் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என கோரி கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் பாதுகாப்பை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்குமப்பால் கைதிகள் அனைவரையும் மனிதாபிமானத்துடன் நோக்கி அரசு அவர்களுக்கான மருத்துவ பாதுகாப்புடன் உயிர்ப்பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.
இதேவேளை சிறைச்சாலை அத்தியட்சகருடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அரசியல் கைதிகள் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்துள்ளதாகவும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.