அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவாரா ஜெரமி கோர்பின் ?

65

பிரித்தானிய அரசியலில் மாத்திரமல்ல, சர்வதேச மட்டத்திலும் கவனத்தைப் பெறுகிற ஒரு நகர்வாக திரு. ஜெரமி கோர்பினின் தெரிவு அமைந்திருக்கிறது. செப்ரெம்பர் 12ம் திகதி தொழிற்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு பிரித்தானியப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகியிருக்கிற கோர்பினின் வெற்றியை தனியொருவரின் வெற்றியாகக் கருதமுடியாது. மாறாக, அவரது தெரிவு பிரித்தானியாவில் அரசியற்கொள்கை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்பாகவே நோக்கப்படுவதனால், ஜரோப்பாவிலுள்ள மற்றைய நாடுகளின் அரசியற் தலைமைகளாலும் கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இருப்பினும் அவரது தலைமைத்துவம் எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்ற பேச்சு தொழிற்கட்சியின் உள்வட்டங்களிற்கூட இன்னமும் இருந்து வருகிறது.அவரால் நிழல் அமைச்சரவையை அமைக்கமுடியுமா என்ற கேள்வியும் அது அமையப்பெற்றபின்னர், தொழிற்கட்சியின் வருடாந்த மாநாடு வரைக்குமாவது அவர் தலைமைப்பதவியில் தாக்குப் பிடிப்பாரா என்று ஐயமுறுமளவிற்கு நிச்சயமற்றதன்மை நிலவி வந்தபோதிலும் யாரும் எதிர்பார்க்காதளவிற்கு அவரது தலைமைத்துவம் நாளுக்கு நாள் உறுதியடைந்து வருவதாகவே தெரிகிறது. அடுத்த வாரம் பிறைற்றன் நகரில் நடைபெறவுள்ள தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் அவர் தலைமை உரையை நிகழ்த்தவிருக்கிறார்.அங்கும் அவருக்கான பெரும் ஆதரவு வெளிப்படுத்தப்படும் என்றே நம்பப்படுகிது.

கடந்த பல தசாப்தங்களாகவே நடுவநிலையுள்ளவலது சாரிகள் (Centre Right), அல்லது நடுவநிலையிலுள்ள இடதுசாரிகள் (Centre Left) ஆகிய இரு அரசியல் கொள்கைகளைக் கொண்ட தலைமைத்துவங்களுக்கிடையில் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகளைச் சார்ந்து ஆடிக்கொண்டிருந்த பிரித்தானியாவின் மைய அரசியல் கோர்பினின் தலைமைத்துவத்தின் மூலம் இடது பக்கமும் நகரத் தொடங்கியிருக்கிறது. அதுவும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் `பிளேயறயிற்’ என அழைக்கப்படும் ரோனி பிளேயரின் ஆதரவு தளத்திலிருந்து விலகி ஒரளவு இடதுசாரித்தன்மை கொண்ட எட் மிலிபான்ட் இன் தலைமையிலான தொழிற்கட்சியின் வெற்றிபெற முடியாத இந்நிலையில் அசல் இடதுசாரித்தளத்தில் நின்று செயற்படும் கோர்பினிற்கு கிட்டியுள்ள கட்சியின் ஆதரவு அரசியல் அவதானிகளுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஆதரவுத்தளம்
கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து எட் மிலிபான்ட் தொழிற்கட்சியின் தலைப்பதவியிலிருந்து விலகிக்கொணடதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கோர்பின் உட்பட நான்கு தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிட்டார்கள். இத்தேர்தலில் கோர்பின் போட்டியிடுவதாக அறிவித்தபோது, அதனை ஒருநகைச்சுவையாகவே பலர் எடுத்துக்கொண்டார்கள். ஏனெனில் முப்பத்தியிரண்டு வருடங்களாக இஸ்லிங்ரன் வடக்கு தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் கோர்பின் தொழிற்கட்சியின் பின்வரிசை உறுப்பினராக இருந்துவருகிறார். முன்னைய பிரதமர்களான ரோனி பிளேயர், கோர்டன் பிரவுண் போன்றவர்கள் கோர்பினுக்கு ஆதரவு வழங்கவேண்டாம் என வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தார்கள். அதனால்தலைமைப்பதவிக்கு போட்டியிடுவதற்கு தேவையான இருபது பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதே கோர்பினுக்கு பலத்த சிரமமாயிருந்தது. பந்தயக்காரர்கள் (betting companies) முதலில் 1:200 என்று கோர்பினை நிரைப்படுத்தியிருந்தார்கள். அதாவது கோர்பின்வெற்றிபெறுவார் என ஒரு பவுணுக்கு பந்தயம் பிடித்தால் அவர் வெற்றிபெறும்போது 200 பவுண்ஸ்களைப் வெல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இருப்பினும் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே நிலமையில்மாற்றம் ஏற்படுவதனை அவதானிக்க முடிந்தது. கோர்பினை வெற்றி பெற வைப்பதற்காகவே பலஆயிரக்கணக்கானோர் தொழிற்கட்சியில் இணையத் தொடங்கினர். இவர்களில் இதுவரை அரசியலில் விரக்கதியடைந்திருந்த இளையவர்களும், தொழிற்கட்சியின் கொள்கைகளினால் வெறுப்படைந்து விலகிச்சென்ற அக்கட்சியின் முன்னாள்உறுப்பினர்களும் அடங்குவர். செப்ரெம்பர் 12ம் திகதி முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, 251,417 வாக்குகளைப் பெற்று தொழிற்கட்சியின் தலைவராக கோர்பின் தெரிவுசெய்யப்பட்டமை தெரியவந்தது. மொத்த வாக்குகளில் 59.5 விழுக்காடு வாக்குகளை கோர்பின் பெற்றிருந்த நிலையில் அவருக்கு அடுத்த இடத்திலிருந்த அன்டி பேர்ணம் அவர்களால் 19 விழுக்காடு வாக்குகளையே பெற்றுக் கொள்ள முடிந்தது. கோர்பின் தலைமைப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட சில தினங்களிலேயே புதிதாக இருபத்தோராயிரம் பேர் தொழிற்கட்சியில் இணைந்து கொண்டுள்ளமை அவரதுதலைமைத்துவத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

புது தொழிற்கட்சியின் வீழ்ச்சி
மார்கிரட் தட்சர் தலையிலான கொன்சவேர்ட்டிவ் கட்சியினை வெற்றிபெற முடியாதிருந்த தொழிற்கட்சியினை நடுவு நிலை இடதுசாரிக் கொள்கைக்குள் கொணடு சென்று தொடர்ச்சியாகமூன்று தடவை வெற்றியடைய வைத்தவர் ரோனிபிளேயர். ஆனால் இப்போது அவரது கொள்கைகளை வரித்துக் கொண்டுள்ள New Labourஅணியைச் சார்ந்தவர்கள் தொழிற்கட்சியின் தலைமைக்கான தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர். `பிளேயறயிற்’ கொள்கைகளுடன் தலைமைப்பதவிக்கு போட்டியிட்ட லிஸ் கென்டல் 4.5 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். அவரது தோல்வி பற்றி வினவியபோது, அவர் `ஈராக்’ என்ற ஒற்றை சொல்லில் பதிலளித்ததாகக் ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ரோனி பிளேயர் அவர்களது பொருளாதாரக் கொள்கைகளை விட, அவர் ஜோர்ஜ் டப்ள்யு புஷ் உடன் இணைந்து ஈராக் மீது நடாத்திய போர் தொழிற்கட்சி உறுப்பினர்களை சீற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தான் பிரித்தானியாவின் பிரதமாராகத் தெரிவுசெய்யப்பட்டால் ஈராக் மீது நடாத்திய போரிற்காக ஈராக்கிய மக்களிடம் மன்னிப்புக் கேட்பேன் என கோர்பின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கணிசமானளவினர் பிளேயறயிற் கொள்கைக்குச் சார்பானவர்களாக இருப்பதனால் அவர்களைச் சமாளிப்பது கோர்பினுக்கு தொடர்ந்து நெருக்கடியாக அமையப்போகிறது. இவர்களில் பலர் கோர்பினின் தலைமையிலான தொழிற்கட்சியானால் தேர்தலில் வென்று ஆட்சியமைக்கமுடியாது என உறுதியாக நம்புகிறார்கள். ஆதலால்அடுத்த தேர்தலுக்கு முன்னர் தலைமையை மாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இவை கோர்பின் அறியாத தகவல்களாக இருக்க முடியாது.

அதிகார மையத்தின் எதிர்ப்பு
கோர்பினின் தலைமையில் தொழிற்கட்சி வெற்றிபெறுவதையிட்டான சந்தேகம் தொழிற்கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. அதே சமயத்தில் கோர்பினின் தலைமை வெற்றிபெறக் கூடிய வாய்ப்பு உள்ளதாக உணரும்பெருமுதலாளிகள், பல்தேசிய நிறுவனங்கள் போன்றவை, இடதுசாரிக் கொள்கைகளையுடைய ஒரு தலைமை வெற்றிபெறும் நிலையில் தமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையிட்டு அச்சப்படுகின்றன. தொழிற்கட்சியிலிருந்து அந்நியப்பட்டிருந்த தொழிலாள வர்க்க வாக்காளர்களில் ஒருதொகுதியினர், தேர்தலில் வாக்களிப்பதில் அக்கறையின்றியிருக்கும் இளையவர்கள், ஸ்கொற்லாந்து வாக்காளர்கள் போன்ற தரப்புகள் கோர்பினை ஆதரிக்குமாயின் அடுத்த தேர்தலில் தொழிற்கட்சியின் வெற்றி நிச்சயப்படுத்தப்படும் என இவைஎதிர்பார்க்கின்றன. ஆகவேதான் பெரும் முதலாளிகளால் நடாத்தப்படும் பிரித்தானியாவின் மையஊடகங்களில் பெரும்பாலானவை கோர்பினின் கொள்கைகள விமர்சித்து வருவதுடன், தொடர்ச்சியாக அவர் மீது தனிநபர் தாக்குதல்களை நடாத்தி வருகின்றன.

தமிழ் மக்களின் தோழன்
IMG_25பிரித்தானியத் தமிழ் மக்களுக்கு ஜெரமி கோர்பின் அவர்களோ அவரால் நிழல் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் ஹெய்ஸ் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனால்ட் அவர்களோ புதியவர்கள் அல்ல. 1983ம் ஆண்டு முதல்முதலாக பாராளுமன்ற உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்காக்க் குரல் கொடுத்து வருபவர் கோர்பின். தமிழ் அரசியற் கூட்டங்களில் தவறாது கலந்து கொள்பவர். ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்என்ற விடயத்தில் கொள்கை ரீதியாக உடன்படுவர். பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதானதடையை நீக்குமாறு 2006ம் ஆண்டு ஒரு மனு அனுப்பப்பட்டபோது அதில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டார்கள். ஒருவர் ஜெரமிகோர்பின். மற்றவர் ஜோன் மக்டொனால்ட்.

பிரித்தானித் தமிழர் பேரவை போன்ற தமிழ் அமைப்புகள், கொள்கைப்பிடிப்புடைய கோர்பின் போன்றவர்களை விடுத்து New Labour அணியினருடன் தொங்கிக் கொண்ருப்பதனை கோர்பின்விரும்பவில்லை. இவ்விடயத்தில் தனது எதிர்ப்பினை அவர் நேரடியாகவே வெளிப்படுத்தியிருந்ததாகத் தெரியவருகிறது. பிரித்தானியத் தமிழர் பேரவையுடன் இணைந்து செயற்படும் Tamils for Labour அமைப்பினர் கோர்பினின் தெரிவு பற்றி இதுவரை கருத்து வெளியிட்டதாகத் தெரியவில்லை. கடந்த முறை தலைமைப்பதவிக்கான தேர்தல் நடைபெற்றபோது முண்டியடித்துக்கொண்டு டேவிட்மிலிபான்ட் அவர்களை ஆதரித்த இந்த அமைப்பினர் இம்முறை எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.

ஈழத்தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகளைகொள்கைரீதியாக ஆதரிக்கும் கோர்பின் மற்றும் மக் டொனால்ட் போன்றவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தின் நிழல் அரசாங்கத்தில் முக்கியபொறுப்புகளை வகிப்பது எத்தகைய வாய்ப்புகளை எமக்கு வழங்கியிருக்கிறது என்பதனைதமிழ்ச் செயற்பாட்டாளர்களும், தமிழ் மக்களும் கவனத்திற்கொண்டு செயற்பட முன்வரவேண்டும்.