அரைகுறைத்தீர்விற்கு இந்தியாவுடன் உடன்படும் தமிழ்க்கட்சிகள்

1004

ஈழத்து தமிழ் அரசியல் கட்சிகளிடையே வெளியில் தெரியும்படியிலான கொள்கை வேறுபாடுகள் இல்லை எனக் கருதுபவர்கள் அவை பிரிந்திருப்பதற்கு தனிப்பட்ட ஆளுமைகளுகிடையிலான பிரச்சனைகள், பதவி ஆசை என்பனவற்றை காரணமாக குறிப்பிடப்படுவதுண்டு. பொதுப்பரப்பில் அரசியல்வாதிகளால் வெளியிடப்படும், கருத்துகளிலிருந்தோ அல்லது தேர்தல் வாக்குகளைப் பெறுவதற்காக வெளியிடப்படும் கொள்கைப் பிரகடனங்களிலிருந்து அவர்களது உண்மையான நிலைப்பாட்டினை அறிந்து கொள்ள முடிவதில்லை. அரசியல்வாதிகளுடனான தனிப்பட்ட உரையாடல்களின்போது, அல்லது அவர்களது நடவடிக்கைகளை தொடர்ந்து அவதானித்து வரும்போது, அவர்களின உண்மையான முகம் வெளிப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.

கடந்த வருடம் நடைபெற்ற சிறிலங்காவின் பொதுத்தேர்தலில், வடக்கு-கிழக்குப்பகுதிகளில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், யாழ் மாவட்டத்திலும், திருமலை மாவட்டத்திலும் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கும் இடையில் கொள்கையளவில் வேறுபாடுகளை காணமுடியவில்லை என்பது உண்மைதான். தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ஒன்றாக இருந்த இவ்விரு கட்சியினருக்கும் இடையில், சில அரசியல் சொல்லாடல்கள் தவிர வேறெந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை. இந்நிலமையை சாதமாகப் பயன்படுத்தி, சில ஊடகங்கள் மக்களை குழப்பின. விளைவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற தமிழ்த்தேசியத்திறகான மக்கள் முன்னணி படுதோல்வியடைந்தது.

பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினை எதிர்த்துப் போட்டியிட்ட புளொட், ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன இவ்வாண்டு நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொணடன. இவ்வாறான சூழலில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கொள்கையளவில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவது இலகுவானதாக அமையும் என்ற எதிர்பார்ப்பு வெளித்தரப்பினரிடம் இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அதனைத் தவிரவும் தமது கொள்கைகள் என இக்கட்சிகள் வெளியில் தெரிவிக்கும் விடயங்களில் விட்டுக்கொடுப்பினை செய்வதற்கு அவை தயாராக இருக்கின்றன என்ற நம்பிக்கையும் வெளித்தரப்பினரிடம் உள்ளது.

போர் முடிவுக்கு வந்த சில மாதங்களில், அதாவது 2009 நொவம்பர் மாதத்தில், இலங்கைத்தீவில் உள்ள சிறுபான்மை கட்சிகளுக்கிடையில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் வகையில் கூட்டம் ஒன்றினை குறிப்பிட்டுச் சொல்லமுடியாத அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. சுவிஸ் அரசாங்கம் இதற்கு நிதியுதவியளித்தாகக் கூறப்பட்டது. கூட்ட ஏற்பாட்டினை லண்டனில் International Working Group on Sri Lanka  என்ற அமைப்பை நடாத்தும் பீற்றர் பௌலிங் மற்றும் தமிழ் தகவல் நடுவத்தின் தலைவர் வைரமுத்து வரதகுமார் ஆகியோர் செய்திருந்தனர். இந்த ஏற்பாட்டின் பின்னணியில் இந்திய அரசாங்கமும் இருந்ததாக ஒரு கருத்து அப்போது நிலவியது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளுக்கிடையில ; உடன்பாடு எதுவும் எட்டப்படாதமையால் இம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

இதனைத்தொடர்ந்து 2009 டிசம்பர் மாதத்தில் ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்;, புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் விபரங்கள் ஊடகங்களில் வெளியாகவில்லை. இருப்பினும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட புலம்பெயர் செயற்பாடளர்கள், தாம் தமது உறுதியான நிலைப்பாட்டை இச்சந்திப்பில் வெளிப்படுத்தியதாக தெரவித்திருந்தனர்.

இக்கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்களின் நோக்கம் தமிழ் அரசியல் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது என்பதற்கு அப்பால் தாம் விரும்புகிற ஒரு தீர்வினை திணிப்பதாகவே அமைந்துள்ளது. திம்பு பேச்சுவார்த்தையின் தோல்விக்கு இந்தியாவின் அழுத்தங்களே காரணமாக இருந்தமையையும், அதன் காரணமாக, இந்திய அரசுடன் பேசுவதை போராளிக்குழுக்கள் தவிர்த்து வந்தமையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்.

இந்த நடைமுறையின் தொடர்ச்சியாக,  இவ்வாரம் செவ்வாய், புதன் ஆகிய இருதினங்களில் டெல்லியில் தமிழ்க்கட்சிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. தமிழ்நாடு சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், (சோனியா) கொங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான திரு. சுதர்சனம் நாச்சியப்பன் அவர்களது தலைமையில் Reliance நிறுவனத்தின் அறக்கட்டளையான Observer Research Foundation (ORF) இன் அனுசரணையுடன் இந்தியப் பாராளுமன்றக் குழு ஒன்று இக்கூட்டத்தினை; நடாத்தியது.  ஈழத்தில் இன்றுள்ள அன்றாடப் பிரச்சனைகளை கண்டறிவததற்காகவும், தமிழ்க்கட்சிகளின் நிலைப்பாட்டினை அறிந்து கொள்வதற்காகவும் அவர்களை அழைத்துப் பேசியதாக திரு. நாச்சியப்பன் பி.பி.சி தமிழோசை வானொலிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் அங்கு 13ம் திருத்தச் சட்டமூலத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வு காண்பது தொடர்பான தமது விருப்பினை இந்தியத் தரப்பு வெளியிட்டதாகவும் அதற்கான ஆதரவினை தமிழ்க்கட்சிகளியடமிருந்து எதிர்பார்த்தாகவும் தெரிய வருகிறது. இந்த மாநாட்டின் பின்னணியில் இந்தியாவின் ஏவல் அமைப்பான பெங்களுருவிலிருந்து இயங்கும் ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எப்) இருந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், இந்திய அரச இயந்திரத்தின் ஒரு முயற்சியாகவே இதனைக் கருதலாம்.

இக்கூட்;;டத்தில் தமிழ்க் கொங்கிரஸ் கட்சியின் சார்பில் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திரு செல்வராசா கஜேந்திரன், தமிழரசுக்கட்சியின் சார்பில் திரு. மாவை சேனாதிராசா, திரு. மரியநாயகம் சுமந்திரன், தமிழர்விடுதலைக்கூட்டணியின் சார்பில் திரு. வீரசிங்கம் ஆனந்தசங்கரி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சார்பில் திரு. பவான்,  தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) சார்பில் திரு. செல்வம் அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுரேஸ்குழு சார்பில் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன், திரு. சிவசக்தி ஆனந்தன் மற்றும் அதன் நாபா குழு சார்பில் திரு. .சுகு சிறிதரன், திரு. துரைரத்தினம் மற்றும் பெங்களுருவிலிருந்து இயங்கும் ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈஎன்டிஎல்எப்) சார்பில் திரு. பரந்தன் இராஜன்,  அதன் அவுஸ்திரேலிய பிரதிநிதி திரு. இரவீந்திரன் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.  

மேற்படி கட்சிகளில் தமிழ்க் கொங்கிரஸ் கட்சி தவிர்ந்த ஏனையவை இந்திய அரசிற்கு ஆதரவான நிலைப்பாட்டினை உடையவை, அவற்றுள் நாபா அணி, ஈஎன்டிஎல்எப் என்பவை இந்திய உளவு அமைப்பான RAW இனால் அல்லது South Block எனப்படும் இந்திய வெளியுறவு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பனவற்றினால் இயக்கப்படுபவை. ஆகவே அவர்கள் இந்தியாவின் விருப்பத்திற்கு எதுவித மறுப்பும் தெரிவிக்காமல் செயற்பட தயாராக இருப்பவர்கள். இவற்றுள் அதிக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்ட தமிழ் தேசியக் கூடடமைப்பு வெளிப்பார்வைக்கு சுயாதீனமாக செயற்படுவதான தோற்றப்பாட்டினை காட்டினாலும் அதுவும் இந்தியாவின் கட்டுபாட்டுக்கு உட்பட்டது.   

இச்சந்திப்பில் சிறிலங்கா இராணுவத்தை தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றுவதே முதன்மையான விடயமாக விவாதிக்கப்பட்டது. இவ்விடயத்தில் அங்கு கலந்து கொண்ட கட்சிகளிடையே பொதுவான உடன்பாடு காணப்பட்டதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை. ஆனால் இரண்டாம் நாள் அமர்வில் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களும் பேசப்பட்டதால், கட்சிகளிடையே உள்ள வேறுபாடுகள் வெளிப்பட்டுள்ளன. முடிவில் பொதுவான அறிக்கை ஒன்றினை வெளியிட முடியாதளவுக்கு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற அடிப்படைக் கோட்பாட்டை உள்ளடக்கியதாகவே தீர்வு முயற்சிகள் இருக்க வேண்டுமு; என கஜேந்திரகுமார் வலியுறுத்தியபோது, அதனை ஏற்றுக்கொள்ள ஆனந்தசங்கரியும், ஈபிஆர்எல்எப் நாபா அணியினர், புளொட், ஈஎன்டிஎல்எப் போன்ற தீவிர இந்திய சார்பு கட்சிகளைச் சேர்நதவர்கள் மறுத்துவிட்டதாகத் தெரியவருகிறது. அதுபோல் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடும் சுமந்திரன், சேனாதிராசா, செல்வம், பிரேமச்சந்திரன் ஆகியோர், அறிக்கையில் அச்சொற்பதத்தைக் குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர். இவ்விடயத்தில் எதுவித விட்டுக் கொடுப்புக்கும் தயாரில்லை எனத் தெரிவித்த கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டனர். ஆதலால் மறுநாள் இந்தியப்பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவிருந்த (இந்தியச் சார்பு) அறிக்கை சமர்பிக்கப்படவில்லை.

இவற்றை உற்று நோக்கும் போது மேற்குலகத்தின் அழுத்தங்களிலிருந்து சிறிலங்காவை விடுவிக்க இவ்வாறான அரை குறைத்தீர்வினை திணித்துவிட இந்தியா முனைவது தெரிகிறது. ஆனால் தமிழ்த் தேசியக் கூடடமைப்பு இந்தியாவின் அழுத்தங்களுக்கு உடன்பட்டு தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்ட அடிப்படைக்கோட்பாடுகளை கைவிட்டுவிட எத்தனிப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.