எம்மவர்களில் பலர் எதையும் காரணகாரியங்களுடன் ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வருவதில்லை. யாரோ சொல்கிறார் என்பதற்காக அதை அப்படியே நம்பிவிடுகிறார்கள். இதற்குப் படித்தவர்களும் விதிவிலக்கன்று. காவியுடுத்து நெற்றியில் விபூதிப் பட்டையும் குங்குமமும் அணிந்து தோற்றத்தில் சிவபக்தராகத் தோற்றம்தரும் எல்லோருமே இவர்களுக்கு கடவுள் அருள்பெற்றவராகக் காட்சி தருகிறார்கள்.
அதேபோன்று நீண்டு வளர்ந்த தலைமுடி, முகச்சவரம் செய்யப்படாமல் வளர்ந்திருக்கும் தாடி, நெற்றியில் திருநீறு, அதன் நடுவே ஒரு பெரிய சந்தணப்பொட்டும் குங்குமமும், வாய் நிறைய வெற்றிலைக்குதப்பல், காவிவேட்டி, சால்வை இவையே ஒரு சோதிடருக்குத் தேவையான வெளித்தோற்றம். அவர் ஒரு பெரிய சோதிடர் என்பதைப் பிரதிபலிப்பதற்கு உதவுபவை அவரைச் சுற்றியுள்ள பொருட்கள். மலர்மாலைகளுடன் கூடிய தெய்வப் படங்கள், பாத்திரம் நிறைந்த விபூதி, சந்தணம், குங்குமம் ஆகிய வழிபாட்டுச் சின்னங்கள், கோரமான தோற்றத்துடனான காளியினுடைய உருவச்சிலை, சில பழைய-புதிய பஞ்சாங்கங்கள், பிரபலமான அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் இவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுடைய பெயருடன் சேர்ந்து “பண்டிதர் அல்லது பண்டிட்ஜி, சாஸ்திரி, குருஜி என்ற ஏதாவதொரு அடைமொழி. இவ்வாறாகக் காட்சிதருபவர்தான் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு வருகை தந்து முகாம் போட்டுள்ள “சாஸ்திரிமார்”.
இவர் தொழில் புரிவது வாடகை குறைந்த ஏதாவதொரு வியாபாரஸ்தலத்தின் பின்புற அறையில். அவருக்கு உதவியாக அவரது மனைவி நிற்பதோ நடைபாதையில் – விளம்பர துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தபடி. அத்துடன் அவர்கள் ஏராளமான பணம் செலவுசெய்து தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்கின்றனர். இவற்றிற்கெல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது? எல்லாம் நம்மவர் இரவுபகல் பாராது உழைத்த பணமே. இவர்கள் கூறும் வார்த்தைகளில் மயங்கிவிடும் எம்மவர்களிடமிருந்தே இப்பணம் கறக்கப் படுகிறது.
எமது சமூகத்தில் உள்ள பலருக்குப் பல பிரச்சனைகள் உள்ளன. விசா மறுக்கப்படல், தகுந்த வருவாய் இல்லாமை, உறவுகளிடமிருந்து பிரிவு, கணவன்-மனைவி உறவில் விரிசல் இப்படி இன்னும் எத்தனையோ. விடிவு கிடைக்காதா என ஏங்கித்தவிக்கும் இவர்கள் விமோசனம் தேடி தமது எதிர்காலத்தை அறியும் நம்பிக்கையுடன் மேற்கூறிய ஆசாமிகளை அணுகுகிறார்கள். இத்தகைய மன உளைச்சலில் தவிக்கும் நலிவுற்ற மக்களே இவர்களுக்கு இரையாகி விடுகிறார்கள்.
விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்நாளில், சந்திரனில் மனிதன் காலடி வைத்துவிட்ட பின்னர், கிரகங்களுக்கு விஞ்ஞான ஆராச்சிக் கருவிகளை அனுப்பி அவற்றைப்பற்றிய விபரங்களை அறிந்துவிட்ட இந்நாட்களில் இன்னமும் சனிக்கிரகத்தைச் செவ்வாய் பார்க்கிறது, இந்த வீட்டிலிருந்து அந்த வீட்டிற்குப் போய்விட்டது, இது பாவம், அது தோஷம், இதற்குப் பரிகாரம்செய்தல் வேண்டும், அதற்குத் தோஷநிவர்த்தி செய்தல் வேண்டும் என எமது மக்களின் மனதைக் குழப்பி பெருந்தொகையான பணத்தைக் கறந்து விடுகிறார்கள்.
மனவேதனையில் தத்தளிக்கும் எம்மவர்கள் அவற்றிலிருந்து விடுபடும் வழியைத் தேடும்போது சோதிடர்கள் அவர்களுக்கு வழிகாட்டிபோல் தோன்றுகிறார்கள். எம்மவர்களின் பலவீனம் இந்த சோதிடர்களுக்குப் பலமாக அமைந்து பணமாகக் கொட்டுகிறது. பூசை புனர்க்காரங்களினால் பிறரின் கஷ்டத்திற்குப் பரிகாரம்செய்ய முயலும் சோதிடர், இவருக்கு வருவாய் தேடி பனியிலும் குளிரிலும், வெயிலிலும் மழையிலும் நடைபாதையில் நின்று துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் அவரது மனைவியின் துன்பத்தைப் போக்க ஒரு தோஷநிவர்த்தி செய்ய முடியவில்லையே. இவர் உண்மையிலேயே ஒரு சிறந்த சோதிடராகவோ அல்லது பாவநிவர்த்தி செய்யக்கூடியவராகவோ இருந்தால் தனது விற்பன்னஅறிவை, திறமையை ஏன் தனது சொந்த நாட்டில் நிலைநாட்ட முடியவில்லை?. எமது மக்கள் ஏமாறுபவர்களாக இருப்பதாற்றான் இப்படி ஏமாற்றுபவர்களும் பெருகிவிட்டார்கள்.
இச்சாஸ்திரிமாரில் ஒருவரே கைரேகை, நாடி சாஸ்திரம், பிறந்தநாள் பலன், எண்கணிதம், ஜாதகம் குறித்தல் என எல்லாவிதமான சாஸ்திர கிளைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.
அத்துடன் பில்லி சூனியம், பேய் பிசாசு, ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய துன்பங்களுக்கும் நிவர்த்திபெற்றுத் தரக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களின் வார்த்தை ஜாலத்தில் மயங்கி முதலில் சாஸ்திரம் பார்ப்பதில் தொடங்கி பின் அவர்களின் வீட்டில் குடிகொண்டிருக்கும் பேயைத் துரத்துவதுவரை இவர்களால் முடியும் என நம்பி தம் சேமிப்புக்களைக் கரைத்தவர்கள் மட்டுமன்றி கடன்பட்டு இவர்களுக்குக் காசு கொடுத்தவர்களும் எம்மிடையே உண்டு. சமீபத்தில் வழிதவறிச் சென்றுகொண்டிருந்த தம் ஒரே மகனை நல்வழிக்குக் கொண்டுவரும் முயற்சியில் நாலாயிரம் பவுண்களை இப்படியான ஒரு சித்துவிளையாட்டுக்காரரிடம் தொலைத்த பெற்றோரைப் பற்றியும் நான் அறிவேன். இன்னும் ஏன் இந்த மூடநம்பிக்கைகள்? இந்தப் பேய்களும் பித்தலாட்டங்களும் ஏன் எமது சமூகமக்களை மாத்திரம் தாக்கவேண்டும்? எம்மைச் சூழ உள்ள சமூகங்களின் மக்களை இந்தப் பேய் பிசாசுகள் சீண்டுவதில்லையே ஏன்? எனச் சிந்திக்கிறார்களில்லையே. என்று திருந்துவார்கள் இவர்கள்? இவர்களை நினைக்க நெஞ்சு பொறுக்குதில்லையே.
– (விசித்திரப்பிரியன்.)