ஏ.ஆர் முருகதாசின் `ஏழாம் அறிவு’ திரைப்படம் பார்த்துவிட்டு வந்த அன்று 25-10-11 சாமம் ஒரு மணிபோல மேற்படி தலைப்பை இட்டு வைத்திருந்தேன். இத் திரைப்படம் குறித்துத் தான் இப்பத்தி எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன் `அழிபட்ட தமிழர்களுக்கும் அழிக்கப்பட முடியாத தமிழுக்கும் இது சமர்ப்பணம்’ என்று ஏழாம்அறிவு திரைப்படத்தை முடித்திருந்தார் ஏ.ஆர் முருகதாஸ்.
இது ஒரு வியாபாரத் தந்திரம் என்று சிலர் விதண்டாவாதம்புரிவர். ஒரு படைப்பைப் பார்க்கும் போது அது உண்மை உணர்வில் இருந்து எழுந்ததா அல்லது போலியானதா என்று உய்த்து உணர முடியாத அளவிற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல. மற்றும் தமிழ் உணர்வைக் காட்டித் தான்காசு உழைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் முருகதாசுக்கு இல்லை.
கிறீஸ்துக்குப் பின் ஆறாம் நுÖற்றாண்டுக்குப் பின் வாழ்ந்தபோதி தர்மன் என்ற தமிழனில் இருந்து கதை ஆரம்பிக்கின்றது. அது சமகாலத்தில் இந்தியா மீது சீனா தொடுக்கும் இரசாயன யுத்தம். (Chemical warfare) வரை கொண்டு வந்து நிறுத்துகிறது.போதி தர்மன் ஒரு தமிழன், அரசன், புத்த மதத்தைச் சேர்ந்தவன். யாவும் நம்பத் தகுந்த ஆதாரமான தரவுகளே. மூன்று வருடப் பயணத்துக்குப் பின் அவன் சீனாவைச்சென்றடைகிறான். சீன தேசத்து மக்களை நோயிலிருந்தும், எதிரிகளின் ஆக்கிரமிப்புக்களில் இருந்தும் காப்பாற்றுகிறான். அம் மக்கள் அவனை இரண்டாவது புத்தராக ஏற்கின்றனர். `குங் பூ’ என்கிறன்ற தற்காப்புக் கலையை மருத்துவக் கல்வியை அவர்களுக்குக் கற்றுத் தருகிறான் போதி தருமன்.இப்படியொருவன் இருந்ததை சீனாவில் உள்ள குழந்தைகள் பெண்கள் ஆண்கள் முதியவர்கள் என்று எல்லோரும் ஒத்துக் கொள்கின்றனர். தமிழர் எவருக்கும் போதி தருமன் பற்றிய சிறு துணுக்கு கூட தெரிந்திருக்கவில்லை. `ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் விபரணம் போல் அக்காட்சி வருகிறது. பெரும்பாலும் தமிழர், வரலாற்று அறிவு குறைந்தவர்களாகவும் தாழ்வுச் சிக்கல் மிகுந்தவர்களாகவும் வாழ்ந்து வருவதையும் நாம் அவதானித்து வருகின்றோம். எங்களிடம் உள்ள பழம் பெருமைகளைப் பேசுவதைக் கூச்சமாகக் கருதுகின்றோம். `சென்றொழிந்த காலம் இனித்திரும்பாது மூடரே‘ என்று தமிழ் மக்களை முட்டாளாக்கும் கவிதையும் தமிழில் உண்டு.
கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ஏ.ஆர் முருகதாசே இதனை இயக்கியும் இருந்தார். ஏன் இவ்வாறான ஒரு கதையை முருகதாஸ் தெரிவு செய்திருக்கவேண்டும் என்ற கேள்வியில் இருந்து அவரது தமிழ் உணர்வை நாம் புரியலாம் என்பது போக காலத்திற்கு காட்டியுள்ள கணக்கே அது என்று நான் விளங்கிக்கொள்கின்றேன். வீழ்ந்து போய், தோற்றுப் போய், அழிந்து போய், பதுங்கிக் கிடக்கின்றோம் நாம். உலகின் எந்த இரக்கப் பார்வையும் அனுதாப நோக்கும் எம்மீது படரவில்லை. சொந்த அண்ணன் தான் ஏதோ கொஞ்சம் ஆறுதல் சொல்கிறான் அந்த அண்ணன்களில் ஒருவனது ஆறுதல் வார்த்தைகள் தான் `ஏழாம் அறிவு’ திரைப்படம்.
மலேசியாவில் அடி வாங்குகிறோம் சிங்கப்பூரில் சிதைகிறோம், இந்தியாவில் முதுகில் ஏறுகிறான் இலங்கையில் அழிக்கப்படுகிறோம் இனியும் பொறுக்க இயலாது `திருப்பிஅடி’ என்று சொல்கிறது திரைப்படம். `துணிந்தால் துயரமில்லை’ என்று சொல்லாமல் சொல்லி விடுகிறது. நாயகி நாயகனிடம் சொல்கிறாள் `வீரம் ஈழத்தில் தோற்று விட்டதே!’ என்று. நாயகன் சொல்வான் `வீரம் தோற்கவில்லை வென்றது. ஒன்பது நாடுகள் சேர்ந்து செய்த துரோகம்தான் தோற்கப் பண்ணியது’ வர்த்தக சினிமாவில் இவ்வாறெல்லாம் சொல்ல மிகுந்த துணிச்ச வேண்டும். எங்கள் அண்ணன்மார் எவ்வளவோ துணிச்சல் மிக்கவர்கள் தான்.
ஈழத்தமிழர் நாமும் ஒரு வேளை வரை துணிச்சல் மிக்கவர்களாக இருந்தோம். அதற்கு சில சொற்கள் தேவையாக இருந்தன. தலைவர், இயக்கம், போராட்டம், இலட்சியம், ஓர்மம் என்ற சொற்கள். அவை வெறும் சொற்கள் அல்ல வீறு, வீரம், வாழ்வு.ஆனால் இப்பொழுது நாங்கள் ஓய்ந்து போனோம் மாத்திரமல்ல ஒடுங்கி ஒதுங்கிக் கொண்டோம். அது மாத்திரமல்ல பதுங்கிக் கொண்டோம். படுத்துவிட்டோம். அதுவும் மாத்திரமல்ல யாவரையும் ஒற்றுமையாக இருங்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுங்கள் என்று சொல்லிக் கொண்டு எங்களுக்குள் வாய்ச் சண்டை புரிகின்றோம். வெட்டிச் சரிக்கின்றோம். ` நான் பெரிது நீ பெரிது என்றல்ல நாடு பெரிது?’ என்கின்ற மாதிரி தலைவர் ஏதோ சொன்னாராக்கும் அதை நாம். இப்போ தரையில் போட்டு மிதிக்கின்றோம். இருக்கட்டும்.
தமிழ் நாடு ஏன் இப்படி எங்களுக்காக அல்லலுற்றுத் துடிக்கிறது? நாம் அவர்களின் சொந்தத் தங்கைமார் தம்பிமார் என்பதனால் மாத்திரமா? அப்படியாயின் 58 தமிழ் இனப்படுகொலையின் போதும் 77 இனப்படுகொலையின் போதும் ஏன் அவர்கள் துடிக்கவில்லை? ஏனோதானோவென்று ஏன் இருந்தார்கள்? மிகச்சரியாகத் திட்டமிட்டு அரசியல் செயற்திட்டம் வைத்து தன்மீது நெருப்பை அள்ளிக் கொட்டினானே முத்துக்குமார்! எங்களில் எவரால் அப்படிச் செய்ய முடியும்? எப்படி அவனால் அது செய்யமுடிந்தது?. மேடை முழுவதும் வீரம்முழங்கி நெருப்பெழுந்து ஆடுவது போல ஆவேச ஆட்டங்காட்டி ஓர் உணர்வுப் பிழம்பாய் நின்றவள் செங்கொடி நெருப்பில் மூழ்கி அவள் உலகிற்கு ஒரு செய்தி உரைத்தாள். எப்படி அவளால் முடிந்தது? எது அவளை அப்படி ஆக்கியது?.
சத்திய ஆவேசமாக எழுந்த ஈழப்போர் என்ற ஒன்று மாத்திரமல்ல உறுதியாய் ஓர்மமாய் அப்போரை முன்னெடுத்த தலைவர் என்பதுவும் ஒரு முக்கிய கூறுதான். அவர் மீதான நம்பிக்கையே அத்தனையையும் ஆட்டிப்படைக்கிறது. அவையே தான் தமிழ் நாட்டை நம்பக்கம் திருப்பியது. நம்பிக்கை கொள்ளச் செய்தது. தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனிய சக்திகள் எப்போதும் எமது விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகவே இயங்கின. தமிழ் சினிமாவில் பார்ப்பனிய சக்திகளின் பிரதிநிதிகளான கே.பாலச்சந்தர், மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் காட்சிப்படுத்திய சினிமா ஈழத்தமிழரை திராவிடரை ஒடுக்கப்பட்ட மக்களை எவ்வளவு இழி சனராக சித்தரித்திருந்தது என்பதை நாம் அறிவோம். ஒரு புறத்தில் தமிழ்ச்சிமாவின் ஆதிக்க சக்திகளாகவும் அவர்கள் விளங்கினர்.
அந்த அணையை காட்டாற்று வெள்ளமாக அடித்துத் துவைத்தவர்கள் புதிய இயக்குனர்கள் பலர். பாலா, சோரன், அமீர், ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி போன்றுறோர்.அவர்களில் முக்கியமானவர்கள். இப்போது ஏ.ஆர் முருகதாஸ் அவர்களும் ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார். தமிழியம் சார்பாக முருகதாஸ் அவர்களுக்கு நன்றியும் மகிழ்வும்.