அழியத்தான் போகிறோமா?

815

கொ ஞ்சம் கோபத்துடனும் மிகுந்த கவலையுடனும் இதை எழுதுகிறேன். இப்பத்தியில் பலமுறை எழுதிச்சலித்த ஒன்று தான்.செவிடர்களின் காதில் ஏன் மீண்டும் மீண்டும் சங்கூதித் தொலைக்கிறேன் என்று தெரியவில்லை. காரணம்? ஒரு நப்பாசை தான். ஒருக்காலாவது பொறி தட்டாதோவென்று சும்மா எண்ணுகிறேனாக்கும்.

சென்ற வருடம் மாவீரர் நாளின் போது மாவீரர் நாளுக்கான அறிக்கையினை தலைமைச் செயலகம் என ஒன்றும் அனைத்துலகச் செயலகம் எனஒன்றும் வெளியிட்டிருந்தன. இரண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளில் சின்னத்தையே பயன்படுத்தியிருந்தது. அது பெரும் குழப்பத்தை மக்கள் மத்தியில் உண்டு பண்ணியது. அதே சமயம்நாடு கடந்த அரசாங்கம் மாவீரர் நாளுக்கான செய்தியினைத் தந்திருந்தது. அது ஒன்றும் குழப்பத்தைத் தந்தது அல்ல.

இப்பொழுது நான் அறிகிறேன் செய்தி ஒன்று மாவீரர் நாளும் இரண்டாக நடைபெறப் போகின்றது என. ஏற்கனவே இலண்டனில் `தமிழர் விளையாட்டுப் போட்டியும்’ இரண்டாக நடைபெற்று விட்டது. அடுத்து மாவீரர் நாள். அதை அடுத்து இன்னும் என்னன்னவோ நடைபெறப் போகின்றது. இப்படியெல்லாம் ஏன் நிகழ்கிறது என்று வெம்பிக் கிடக்கின்றேன் நான். இது ஏலவே எதிர்பார்த்தது தான் ஆனால் இவ்வளவு காட்டமாக அல்ல. அதிகாரப் போட்டியா இதற்குக் கார ணம்? அல்லது `ஈகோ’ முட்டி மோதுகிறதா?அல்லது நான் ஒருவன் தான் இருக்கலாம் என்கின்ற மமதையா? அல்லது பணம் செய்கின்ற `பத்து’ வேலைகளில் இதுவும் ஒன்றா?

இவ்வாறான சந்தர்ப்பங்களில் `இன்னாரை இன்னாரின் உளவாளி’ என்று வெகு சுலபமாக அடையாளம் காட்டி விட்டுப் போய்விடலாம். `உண்மை மனிதர்களும்’ அக் குற்றச்சாட்டை நம்பினால் பிறகு அடுத்த கதை இல்லை.

`இன்னாரை இன்னாரின் உளவாளி’ என்று சொல்கிற போது அல்லது துரோகி என்று அறிவிக்கிற போது நான் மிரண்டு விடுகிறேன். எந்த ஆதாரமும் இல்லாது எந்த நிறுவலும் செய்யாது தன்னை அல்லது தன் கருத்தை எதிர்க்கிறான் என்பதற்காக வெகு சுலபமாக உளவாளி,துரோகி என்ற பட்டங்களைச் சூட்டிவிட்டுப் போய் விடுவார்கள்.

நாங்கள் என்ன இராணுவத் தாக்குதலா மேற்கொள்கின்றோம். நாங்கள் அரசியல் வேலை தான் செய்கின்றோம். தாயகம் தேசியம் தன்னாட்சி என்பதனை ஏற்றுக்கொள்கின்ற எவரும் இதனுள் நுழையலாம். இக்கோட்பாடுகளில் விமர்சனம் உள்ளவர்கள் கூட சேர்ந்து வேலை செய்யலாம். அவர்களது உழைப்பும் பங்களிப்பும் காலமும் அவர்கள் யார் என்பதனைத் தீர்மானிக்கும். அரசியலிடமும் காலத்திடமும். அத்தனையையும் நாங்கள் விட்டுவிடுவோமே!

நிற்க, தமிழ்த் தேசியமென்பது வெறும் சொல் அல்ல அது எங்கள் உணர்வு, எங்கள் வாழ்வு. நாங்கள் தேவைக்கு ஏற்ப தமிழ்த் தேசியத்தை பேசப்ப் போகின்றோமா? அல்லது `தமிழ்த் தேசியர்’களாக வாழப் போகின்றோமா? இங்கு நடக்கின்ற காரியங்களைப் பார்க்கின்றபோது `தேவைக்கேற்ப’ தமிழத் தேசியத்தை பேசுபவர்களாகவே நாங்கள் இருக்கின்றோம். அதனால்த்தான் எந்தவிமர்சனமும் இல்லாமல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை எதிர்க்கின்றோம் மாவீரர் நாளை இரண்டாக உடைக்கின்றோம்.

தமிழ்த்தேசியம் தொடர்பாக சிந்திக்கின்ற அமைப்புக்கள் என்பது 1980களில் சுமார் முப்பது அமைப்புக்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானாவைசொல்லளவிலும் தெளிவற்றும் இருந்தன. இறுதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற ஒரோயொரு அமைப்புத் தான் தமிழ்த்தேசியம் என்பதனை உறுதியாகவும் ஓர்மமாகவும் முன்னெடுத்தது. அப்பொழுதெல்லாம் அதனைக் கவனிக்கத் தவறிவிட்டேன் என்ற கவலை இப்பொழுதும் எனக்கு உண்டு.

இப்பொழுதும் தமிழத்தேசியத்தை விட்டுக் கொடுக்காது முன்னெடுக்கின்ற அமைப்புக்கள் என்று
சில உள்ளன. நாடு கடந்த அரசாங்கம், தலைமைச் செயலகம், அனைத்துலகச் செயலகம், உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர்பேரவை, மக்கள் அவை…. இவற்றுடன் இன்னும் இணையக்கூடியன உள்ளன. இவை ஒன்றோடொன்று நெருங்கி அரவணைத்து ஓர் இலக்கை நோக்கிப் பயணித்தவை. அப்படிப் பயணிக்
காவிடில் இனியாவது பயணிக்க வேண்டும்.

ஆனால் நான் ஒருவனே நிற்பேன் என்று யாராவது ஒரு அமைப்பு இதனுள் சத்தம் போட்டால் அது மிக மிக ஆபத்து. இலக்கு நோக்கி எல்லாக் குதிரைகளும் ஓட வேண்டும். எல்லாக் குதிரைகளும் ஓட வழி விடவும் வேண்டும். நான் மாத்திரமே ஓடுவேன் என்று ஒரு குதிரை நினைத்தால் அது படுகுழிக்குள் விழுகின்றதுஎன்று அர்த்தம். ஒற்றைக்குழல்த் துப்பாக்கியின் காலம் போய்விட்டது.பல்குழல் பீரங்கிகள் வந்துவிட்டன.
கொல்வின் ஒருமுறை சொன்னார் `ஒரு மொழி என்றால் இரு நாடு. இரு மொழி என்றால் ஒரு நாடு’ அதாவது சிங்களம் மாத்திரமே என்றால் இலங்கை இரு நாடாகும் சிங்களமும் தமிழும் என்றால்
இலங்கை ஒரு நாடாகவே இருக்கும். இது மகா உண்மையைச் சொன்னது.

அது இங்கும் பொருந்துகிறது நான் ஒருவன் மட்டுமே நிற்பேன் என்று யாரேனும் இறுமாப்புக் கொண்டால் பிளவுகள் தவிர்க்க முடியாதன. அவரவர் தனித்துவத்தைப் பேணி எல்லோரும் சேர்ந்து வேலை செய்வோம் என்று நினைத்தால் ஒருமைப்பாடு இருக்கும். அது வெற்றியைத் தரும்.

மாவீரர்களின் தலையில் கை வைத்து அவர் தம்கனவில் மனம் வைத்து தமிழத் தேசியத்தின் ஆணையின் பெயரால் நாம் அடுத்த காலடி எடுத்து வைப்போம். அல்ல வெனில் எம் அழிவு தவிர்க்க முடியாதது.