ஆட்சி மாற்றமும், மேற்குலகமும்

656

நேற்று (ஜனவரி 8) இரவு அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலியில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பது தொடர்பான கருத்தாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது, பத்து முப்பது மணியளவில் எரிக் சொல்ஹெய்ம் அனுப்பிய ருவிற்றர் செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அக்குறுஞ் செய்தி இவ்வாறிருந்தது “Going to bed with a clear lead for opposition in ‪#‎SriLanka‬ postal votes. The country may write history tomorrow!”. (தபால் மூலமான வாக்குகளில் எதிர்க்கட்சிகள் முன்னணியிலிருப்பது தெளிவாகியிருக்கும் நிலையில் நித்திரைக்குச் செல்கிறேன். நாளை அந்நாடு ஒரு சரித்திரத்தை எழுதக் கூடும்) விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின்போது அனுசரணயாளராகவிருந்த நோர்வேயின் முன்னாள் வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சர் சொல்ஹெய்ம் க்கு சிறிலங்காவின் ஆட்சிமாற்றத்தில் உள்ள அக்கறையை அல்லது விருப்பை இக்குறுஞ்செய்தி வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
‬‬
இன்று (ஜனவரி 9) காலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து மகிந்தவின் தோல்வி உறுதியான நிலையில், சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஜனவரி எட்டு எனத் திகதியிடப்பட்ட அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஜோன் கெரி அவர்களது செய்தியினை இராஜங்கத் திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவேற்றியிருந்தமையை காண முடிந்தது. தேர்தல் சுமூகமான முறையில் நடந்தேறியமைக்காக தேர்தல் ஆணையாளர், பாதுகாப்புப் படையினர், சிவில் சமூகம் ஆகியவற்றுக்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும், தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொணடு பதவி விலக முன்வந்தமைக்கு மகிந்த இராஜபக்சவிற்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அச்செய்தியில், புதிய அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றுவதனை எதிர்பார்ப்பதாகவும், தேர்தல் பரப்புரைகளில் குறிப்பிட்டது போன்று சமாதானத்துடன் கூடியதும் எல்லோரையும் உள்ளடக்கியதுமான ஜனநாயக முறையில் இயங்குவதற்கான திட்டங்களை நடை முறைப்படுத்துவற்கு முன்வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உலக நாடுகளில் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளிவரும்போதெல்லாம் இவ்வாறான வாழ்த்துச் செய்திகள் வெளியிடப்படும் நடைமுறை உள்ள போதிலும், சிறிலங்கா விடயத்தில் மேற்குலக சக்திகள் அதிக அக்கறை கொண்டிருந்தமையை இச்செய்திகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் மகிந்தவுடன் தொலைபேசியில் பேசிய ஜோன் கெரி, தேர்தலில் மகிந்த தோல்வியுற்றால், இராணுவத்தைப் பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்க முயற்சிக்கவேண்டாம் என அவரை எச்சரித்ததாக உறுதிப்படுத்தமுடியாத தகவல் ஒன்று உண்டு. தேர்தலுக்கு முன்னர், இத் தேர்தல் தொடர்பாக, மேற்குநாடுகளின் கொள்கை வகுப்பாளர்களுக்கு நெருக்கமான சர்வதேச முரண்பாடுகளுக்கான மையம் (International Crisis Group) வெளியிட்ட அறிக்கையிலும், தேர்தலில் குழறுபடிகள் ஏற்படுத்துவதை தவிர்க்குமாறும், மகிந்த இராஜபக்ச தோல்வியுறும் பட்சத்தில், சுமூகமான முறையில் ஆட்சியை கையளிப்பதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கப்பட்டிருந்தது. இவ்விடயங்களில் மகிந்த இராஜபக்ச உடன்பட மறுக்கும்பட்சத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பில் கடுமையான நிலைப்பாடு எடுக்கப்படும் சந்தர்ப்பம் இருப்பதாகவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவற்றை வைத்துப் பார்க்கையில் தேர்தல் மூலம் மகிந்த இராஜபக்சவின் ஆட்சியினை அகற்ற முடியும் என்பதில் மேற்குலகச் சக்திகள் நம்பிக்கை கொண்டிருந்தன எனபதனை ஓரளவு ஊகித்துக் கொள்ள முடிகிறது. ‘விக்கிலீக்ஸ்’ இல் கசியவிடப்பட்ட து போன்ற இராஜதந்திர வட்டாரங்களின் கேபிள்களின் உதவியின்றி இவ்விடயங்களில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பது சிரமமாகவிருக்கும். ‘சர்வதேச்சதி’ பற்றி அதிகமாகப் பேசிக் கொண்ட மகிந்த இராஜபக்ச தரப்பினால் கூட ஆட்சிமாற்றம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பிற்கும் வெளிச்சக்திகளுக்கும் இடையிலிருந்த தொடர்புகள்பற்றிய நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதனையும் முன்வைக்க முடியவில்லை.

இம்முறை தேர்தல் பரப்புரைகளில் சிங்கள மொழியில் நிகழ்த்தப்பட்ட உரைகளை செவிமடுத்தால், அதில் அதிகமாக இடம்பெற்ற சொற் தொடர் ‘ஜாதியாந்திர குமன்திரய’ (International Conspiracy) என்பதாகவே இருக்கும். இதனுடைய தமிழாக்கம் ‘சர்வதேசச் சதி’ எனக்குறிப்பிடலாம். மகிந்த இராஜபக்சவிற்கான பரப்புரைகளில் எதிரணியினருக்கு ஆதரவு வழங்குவதில் சர்வதேச் சதியொன்று இருப்பதாகக் குற்றம் சாட்டி வந்தனர். தமது நாடு வளர்ச்சிப்பாதையில் செல்வதனைப் பொறுத்துக் கொள்ளாத வெளிச்சக்திகள் தமது அரசாங்கத்தை மாற்ற முனைவதாகவும். அவை மகிந்த இராஜபக்சவை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின முன் நிறுத்த முனைவதாகவும் தேர்தல் மேடைகளில் பேசப்பட்டது. சிங்கள மக்களின் தேசியவாத உணர்வைத் தூண்டி அவர்களது வாக்குகளைச் சேகரிக்கும் வகையில் இப்பரப்புரைகள் அமைந்திருந்த போதிலும் இதில் ஒரளவு உண்மையிருக்கிறது என்பதனை விடயம் அறிந்தவர்கள் ஏற்றுக்கொள்வர்.

மகிந்த அணியின் சர்வதேசச் சதி பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த எதிரணியினர் மேற்கு நாடுகள் சிறிலங்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்கு மகிந்த அரசாங்கத்தின் தவறான வெளியுறவுக் கொள்கைகளே காரணமாக இருப்பதாகவும், சர்வதேச சதி எதுவுமில்லை என தமது பிரச்சார மேடைகளில் கூறிவந்தனர். மகிந்த அரசாங்கம் புரிந்த இனப்படுகொலை, மனிதவுரிமை மீறல்கள் போர்க்குற்றம் காரணமாகவே மேற்குலகம் சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்க முனைகிறது என்ற கருத்துடன் எதிர்க்கட்சி கூட்டமைப்பு உடனபடவில்லை. மாறாக, மகிந்த அரசாங்கத்தின தவறான வெளிவிவகாரக் கொள்கைகளை குற்றம் சாட்டுவதன்மூலம் தம்மால் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையினை அவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பின் முள்ளிவாய்க்கால் காலத்தில், மேற்குநாடுகளின் தலைவர்கள், இராஜதந்திரிகள் பற்றிய அச்சம், வெறுப்பு என்பன சிங்கள மத்தியில் அதிகரித்து வந்தன. அதனை மூலதனமாக வைத்தே மகிந்த இராஜபக்ச தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்தது வந்தார். ஆனால் தவறான வெளிவிவகாரக் கொள்கை காரணமாகவே மேற்குலகம் இவ்வாறு நடந்துகொள்கிறது, தமது ஆட்சியில் சரியானவர்கள் இப்பொறுப்பை ஏற்பார்கள் எனக் கூறி சிங்கள மக்களின் அச்சத்தை தணிப்பதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒரளவு வெற்றி பெற்றிருக்கிறது.

சிங்கள மக்கள சர்வதேச நாடுகளையிட்டு வெறுப்படைந்திருக்கிற நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் சர்வதேசம் பற்றிய நம்பிக்கை மென்மேலும் அதிகரித்து வருகிறது. மனிதவுரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களும், இறுதி யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையும் இந்நிலையை தோற்றுவித்துள்ளது. சிங்களத் தரப்புகளுக்கு நேரெதிராகக் காணப்படும் இந்நிலைப்பாட்டினை வாய்ப்பாகக் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதனைக் காணலாம். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சர்வதேச சக்திகளின் நெறிப்படுத்தலில் நடந்து கொள்ளும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இதன் மூலம் தமிழ் மக்கள் அடையப்போகும் சாதகபாதக நிலை பற்றியே நாம் அதிகம் அக்கறைப்பட வேண்டியுள்ளது.

விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு துணை நின்ற மேற்குலக சக்திகள், தமிழ்மக்களை தேசிய இனம் என்ற நிலையிலிருந்து மத ரீதியான சிறுபான்மையினராக சிறிலங்காவின் தேசிய நீரோட்டத்தில் இணைப்பதனையே இலக்காகக் கொண்டிருக்கிறாரகள். இந்த முயற்சிக்குத் துணை நிற்பவர்களாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், புலம் பெயர் அமைப்புகளான உலகத்தமிழர் பேரவை, கனேடிய தமிழ் கொங்கிரஸ் போன்றவற்றினையும் பார்க்க வேண்டியுள்ளது.

இப்போது ஆட்சிமாற்ற முயற்சி வெற்றி பெற்றுள்ள மேற்குலகச் சக்திகள் சிறிலங்கா விடயத்தில் இனி எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றன என்பதனை அடுத்த சிலமாதங்களில், குறிப்பாக மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனிவுரிமை கூட்டத் தொடரின்போது அறிந்து கொள்ளலாம். இருப்பினும், புதிய அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக நடவடிக்கை எதுவும் எடுக்காது கால அவகாசம் வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.