ஆண்டு என்றால் என்ன?

1643

ஒரு கோள் கதிரவனை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு தேவைப்படும் காலத்தையே ஒரு ஆண்டு என்பார்கள். பூமி ஒருமுறை சுற்றிவர 365.2425 நாட்கள் தேவைப்படுகிறது. இதையே நாங்கள் பூமியின் ஒரு ஆண்டு என்போம். இந்த வரிசையில் கதிரவனுக்கு அண்மையில் உள்ள கோள்களான புதனுக்கும் சுக்கிரனுக்கும் பூமியின் ஒரு ஆண்டுக்குக் குறைந்த காலமே தேவைப்படுகிறது. பூமியிலும் தொலைவிலுள்ள செவ்வாய்க்கு கிட்டத்தட்ட பூமியின் இரண்டு ஆண்டுகள் (687 நாட்கள்) தேவைப் படுகிறது. இந்த வரிசையில் வியாழனுக்கு 11.86 புவி ஆண்டுகளும் சனிக்கு 29.45 புவி ஆண்டுகளும் கடைசிக் கோளான நெப்ரியூனுக்கு 164.79 புவி அண்டுகளும் தேவைப்படுகின்றது.

பூமி ஒருமுறை கதிரவனை வலம்வரும் காலந்தான் ஒரு ஆண்டு என்றாலும் அதற்குள் அடங்காத ஆண்டுகளும் உள்ளன. எடுத்துக்காட்டிற்கு 12 நிலவு மாதங்களை உள்ளடக்கிய இஸ்லாமிய ஆண்டில் 354 நாட்களே உள்ளன. அதனால் அது ஒரு முழுமை பெறாத ஆண்டாகிது. ஆனாலும் அதை நாம் நிராகரிக்க முடியாது. அது இஸ்லாமின் புனித ஆண்டு.
ஆண்டு எப்போது தொடங்குகிறது என்றால் அதற்கும் நாட்காட்டிகள் மத்தியில் ஒருமைப்பாடு கிடையாது. பல்வகை நாட்காட்டிகளையும் அவதானிப்போமானால் தையிலிருந்து மார்கழிக் கிடையில் எந்த மாதத்திலும் புத்தாண்டு வரலாம் என்ற நிலையே உள்ளது. அந்தந்த நாட்காட்டிக்கு ஒப்ப அந்தந்த ஆண்டு தொடங்குகிறது. கிரகவுரியன் ஆண்டு ஜனவரி 1ம் திகதி தொடங்குகிறது. ஜூலியன் நாட்காட்டியின்படி ஜனவரி 14ல் புத்தாண்டு வருகிறது. காரணம் அவர்களின் ஜனவரி முதல் தேதி அன்றுதான். சீனர், வியத்நாமியர், தீபேத்தியர் ஆகியோரின் புத்தாண்டு ஜனவரியில் அல்லது பெப்ரவரியில் வருகிறது. மார்ச் 21ல் கதிரவன் நிலத்தின் நடுக் கோட்டிற்கு சரி மேலே நிற்பான். இந்நாளை, ஈரானியரும் வேறு சிலரும்; புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். சில பிரிவினர் தவிர பரவலாக இந்தியா முழவதும் ஏப்ரலின் நடுப்பகுதியில் வரும் சித்திரை 1ம் திகதியே புத்தாண்டாகக் கொண்டாடப் படுகிறது. மார்வாடியர்களும் குஜராத்தியரும் முறையே ஒக்டோபரிலோ அல்லது நவம்பரிலோ வரும் தீபாவளி நாள் அன்றும் மறுநாளும் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். அவை எல்லாவற்றையும் பார்த்து நாம் குழம்பாது உலகின் முக்கிய இரு நாட்காட்டிகளை மட்டும் பார்ப்போம். ஓன்று எமது தமிழ்ப் புத்தாண்டு. மற்றையது நாம் ஆங்கில ஆண்டு என்று கூறும் கிரகவுரியன் ஆண்டு. இரண்டையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தமிழ் ஆண்டு.
நாங்கள் தமிழ்ப் புத்தாண்டு என்று சொன்னாலும் அது விண்மீன் சம்பந்த ஆண்டு அல்லது வேதசோதிட ஆண்டு என்றே காலம் காலமாக அழைக்கப் படுகிறது. உண்மையில் கதிரவனைப் பூமி வலம் வருவது எங்கள் கண்களுக்கு கதிரவன் பூமியைச் சுற்றுவதுபோல்தான் தென்படுகிறது. ஒரு புள்ளியிலிருந்து தன் பயணத்தை ஆரம்பிக்கும் கதிரவன் மாதம் 30 பாகையாக ஒரு ஆண்டில் 360 பாகையை அல்லது ஒரு வட்டத்தைச் சுற்றி புறப்பட்ட இடத்திற்கே திரும்பவும் வந்தடைகிறான். இதுவே ஒரு தமிழ் ஆண்டு. ஒவ்வொரு 30 பாகையையும் ஒவ்வொரு ராசியாக வகுத்து 12 ராசிகளை வைத்துள்ளார்கள். 0 பாகையிலிருந்து 30 பாகை வரையுள்ள பகுதியை மேட ராசி என்றும் 30 பாகையிலிருந்து 60 பாகை வரை உள்ள பகுதியை இடப ராசி என்றும் மிகுதி உள்ள 10 பகுதிகளையும் முறையே மிதுனம்(60-90), கற்கடகம் (90-120), சிங்கம் (120-150) கன்னி 150-180) துலாம் (180-210) விருட்சிகம் (210-240) தனு (240-270) மகரம் (270-300) கும்பம் (300-330) மீனம் (330-360) என்று வகுத்துள்ளார்கள். சைபர் பாகையும் 360 பாகையும் ஒன்று என்பதை நான் சொல்லத் தேவை இல்லை.

தமிழ் ஆண்டு பல சிறப்புப் பண்புகளைக் கொண்டது. இந்த 12 ராசிகளுமே நிரந்தரமாக வானில் வரையப்பட்ட கோடுகள். புள்ளிகள் என்ற சொல் பயன் படுத்தாமல் கோடுகள் என்று சொல்வதற்கும் அர்த்தம் உண்டு. பூமி 23.5 பாகை சரிந்த நிலையிலேயே வலம் வருவதால் எங்கள் கண்களுக்கு கதிரவன் கற்கடக ரேகைக்கும் மகர ரேகைக்கம் இடையில் வளைந்து வளைந்து செல்வது போலவே காட்சி தருகிறான். ஆதனால் புள்ளி என்ற சொல்லிலும் கற்கடக ரேகையையும் மகர ரேகையையும் தொடுக்கும் கோடுகள் கொண்ட பட்டியாக இந்தச் சோதிட வட்டத்தைக் கணிப்பதுதான் சிறந்த முறை.

360 பாகையையும் சைபர் பாகையையும் தொடுக்கும் கோடுதான் மேட ராசியின் தொடக்கம். இங்கு கதிரவன் நுழையும் நேரம்தான் மேட சங்கிராந்தி. இதையே நாம் சித்திரைப் புத்தாண்டு என்கின்றோம். இந்திய இலங்கை நேரப்படி இரவு நேரத்தில் சங்கிராந்தி நிகழ்ந்தால் மறுநாள்தான் சித்திரைப் புத்தாண்டாக அறிவிக்கப் படும். பாய்ந்தடித்துக்கொண்டு இரவு புத்தாண்டு என்று அறிவிக்கத் தேவையில்லை. எல்லா மாதப் பிறப்புபுக்களுக்கும் இதே முறைதான். இதுதான் பாரம்பரியம். இப்பொழுது சிலர் பிறக்கும் புத்தாண்டையே கனடாவுக்கு ஒருநாள் இந்தியா இலங்கைக்கு வேறுநாள் என்று பிரிக்கிறார்கள். ஒரு நாட்டில் ஒரு நாளும் வேறு ஒரு நாட்டில் மறு நாளும் புத்தாண்டைக் கொண்டாடுவது முட்டாள்தனம் என்பதை இவர்கள் ஏன் உணருகின்றார்கள் இல்லை என்பதுதான் புதிராக உள்ளது.

தமிழ் ஆண்டின் இன்னொரு சிறப்பு என்ன வென்றால் லீப் ஆண்டு என்று ஒன்றை கணக்கில் வைக்கத் தேவையில்லை. ஒவ்வொரு மாதத்திலும் எவ்வளவு நாட்கள் என்று கணக்கிடுவதுமில்லை. ஒவ்வொரு ராசியிலும் எத்தனை நாட்கள் கதிரவன் நிற்கின்றானோ அத்தனை நாட்கள்தான் அந்தந்த மாதத்திற்குரிய நாட்கள். எடுத்துக்காட்டிற்கு இவ்வாண்டு 32 நாட்கள் மிதுன ராசிக்குள் கதிரவன் நிற்கின்றான். நாட்காட்டியைப் பாருங்கள் 32 நாட்கள் ஆனி மாதத்தில் இருப்பதை அவதானிப்பீர்கள். இக்கணிப்பு கடந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பதிவிலுள்ளது. வருகிற ஏப்ரல் 14ல் பிறக்கும் ஜெய சித்திரைப் புத்தாண்டு, கலியுகம் 5116 ஆகும். பாரதக் கதை முடிவில் கலியுகம் பிறந்ததாகவும், அது பிறந்ததை பீமன் தர்மரிடம் கூறியதாகவும் இதிகாச வரலாற்றில் ஒரு குறிப்புக்கூட உண்டு.

இப்பொழுது உங்களுக்கு உள்ளத்தில் ஒரு கேள்வி எழலாம். சீராக 30 பாகைக்கு ஒரு வீடாகப் (ராசியாக) பிரித்து வைத்திருக்கும்போது ஏன் சிலராசிகளில் கூடிய நாட்களும் சில ராசிகளில் குறைந்த நாட்களும் கதிரவன் உள்ளான் என்று.

வானியலாளர் கெப்லரின் முதலாவது விதியின்படி கோள்கள் கதிரவனை நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன. அதனால் அவை எப்போதுமே சமனான தூரத்தில் இருக்க மாட்டா. அவற்றிற்கு அண்மை நிலை தூர நிலை என இரு நிலைகள் அமைகிறது.

அவரின் இரண்டாவது விதியின்படி தூரத்தில் நிற்கும்போது சுற்றும் வேகம் குறைகிறது. அதாவது இரு சமகாலத்தில் ஒன்று அண்மை மற்றையது தூரம் ஆகிய நிலைகளில் அவை பயணம் செய்த தூரத்தை தளமாக வைத்து ஒவ்வொரு கோடினதும் இரு முனைகளையும் கதிரவனுடன் தொடுத்து இரு முக்கோணங்கள் உருவாக்குவோமானால் அவை இரண்டும் சம பரப்பளவு கொண்ட முக்கோணங்களாக அமையும். இது சம்பந்தமான படத்தை அவதானிப்பீர்களானால் சற்றுத் தெளிவு ஏற்படும்.

the low of equal areasஇதனாலேயே அநேகமாக வைகாசி அல்லது ஆனிமாதத்தில் 32 நாட்கள் வருகின்றன.

ஆங்கில ஆண்டு
பருவ காலங்கள் பூமத்திய ரேகையை அண்மித்துள்ள நாடுகளில் பெரிதாக வித்தியாசப் படுவதில்லை. மழை காலம் கோடை காலம் என்று இரண்டு இருப்பது போல்தான் தென்படும். அப்படி இருந்தும் அவர்கள் அதை 6 ஆகப் பிரித்துள்ளார்கள். (இளவேநிர், முதுவேநிர், கார், குளிர்;, முன்பனி, பின்பனி) ஆனால் இங்கு ஐரோப்பிய நாடுகளில் பருவகாலங்கள் வெகு தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் வித்தியாசப் படுகின்றன. இதற்கான அர்த்தம் பூமி 23.5 பாகை சரிந்த நிலையில் சுற்றுவதனால் உண்டாகும் விளைவை நாம் கூடுதலாய் உணர்கின்றோம் என்பதுதான்.

23.5 பாகை சரிந்ததின் விளைவாக கதிரவன் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே கற்கடக ரேகைவரை செல்கிறான். தெற்கே மகர ரேகை வரை செல்கின்றான். வடக்கே கதிரவன் செல்லும் காலத்தை இந்தியா இலங்கையில் உத்திராண்ய புண்ணிய காலம் என்று சொல்வார்கள். ஆனால் அதன் முழு அர்த்தமும் பலருக்குப் புரிவதில்லை. சம்பந்தப்பட்ட படங்களை சற்று அவதானியுங்கள்.

tropic of cancer

தெற்கு நோக்கிச் செல்லும் கதிரவன் டிசெம்பர் 21 அல்லது 22 ல் மகர ரேகையை அடைகிறான். மார்ச் 21 பூமத்திய ரேகை, ஜுன்21 கற்கடக ரேகை, செப்ரெம்பர் 22 திரும்பவும் பூமத்திய ரேகை. டிசெம்பரில் புறப்பட்ட இடத்திற்கே திரும்புகின்றான். இந்த வடக்குத் தெற்குப் பயணம் கிட்டத்தட்ட சமாந்தரக் கோடு 50 பாகை வடக்கிலுள்ள ஐரோப்பிய நாடுகளில் எந்த வகைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்ப்போம். டீசெம்பர் 22ல் அவன் எங்களை விட்டு விலகி சுமார் எழுபத்தைந்து பாகைவரை சென்று விடுகிறான். அதை நாங்கள், பகல் பொழுது குறைதல், கடும் குளிர் போன்றவற்றால்; உணருகின்றோம்தானே.

நோர்வே சுவீடன் போன்ற நாடுகளின் வடக்கில் 66.5 பாகைக்கு மேல் வசித்தவர்கள் அவன் தெற்கே சென்று தொலைந்து புதிய கதிரவனாக புதிய உத்வேகத்துடன் வருவதாக உணர்ந்தார்கள். அப்படி அவன் வருவதை விழாவாகக் கொண்டாடினார்கள். அப்படி நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பண்டிகைதான் இன்று படிவளர்ச்சி பெற்று ஜேசுநாதரின் பிறப்புடன் இணைக்கப் பட்டு உலகின் தலைசிறந்த பண்டிகையான திருப் பிறப்பாகக் (நத்தார்) கொண்டாடப் படுகிறது. பகல் நீள ஆரம்பிக்கும் அம்மாதத்தின் 21ம் திகதியை ஒட்டிய வாரத்தை ஒரு விழாவாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். எந்தப் பெயரால் இது அழைக்கப் பட்டாலும் கதிரவன் புதிய உத்வேகம் பெறும் தன்மையை மையமாகக் கொண்ட விழாவாகவே இது கருதப் பட்டது. இந்தப் பண்டிகை மற்றைய எல்லாப் பண்டிகைகளையும் விட முக்கியத்துவம் பெற்றதற்கு வேறு காரணமும் உண்டு. விவசாயம் முக்கிய பங்கு வகித்த அந்நாளில், குறுகிய நாட்களாலும் குளிராலும் பயிர்ச் செய்கை இன்றி குறைவான வேலைப் பளுவே மக்களுக்கு இந்தக் காலத்தில் இருந்தது. அதனால் அவர்களுக்கு கூடிய ஓய்வு நேரம் இருந்தது. நாள் நீளப் போகின்றது என்பதால் அவர்கள் உள்ளங்களில்; எழும் மகிழ்ச்சியும் இவ்விழாவிற்கான இன்னுமொரு உந்து சக்தியாக இருந்தது. பகற் காலம் நீள்வதை அடிப்படையாக வைத்து ஆரம்பமான ஒரு பண்டிகை இன்று கிறிஸ்மஸ் ஆக, பண்டிகைகள் எல்லாவற்றையும் விஞ்சும் நிலையில் உள்ளது.

நூள் நீள ஆரம்பிப்பதை அவதானிப்பதும் எளிதான செயலாகவே இருந்தது. ஆனால் பூமி ஒருமுறை சுற்றத் தேவைப்படும் 365.2425 நாட்களை 365.25 என்று தவறாகக் கணித்து தேவையில்லாமல் 10 நாட்கள் கூட்டப்பட்டு இருந்தன. 1582ல் போப்பாண்டவர் 13வது பிரகவுரியின் சீரமைப்பினால் பருவ காலங்களுக்கு ஒப்ப ஒரு இம்மிகூடப் பிசகாத துல்லிய கணிபு;புடன் கிரகவுரியன் நாட்காட்டி நடைமுறையிலுள்ளது. பூமி கதிரவனை ஒரு முறை வலம் வர முன்நூற்றி அறுபத்தைந்தே கால் நாட்களிலும் பார்க்கக் கிட்டத்தட்ட .0075 நாட்கள் குறைவாகவே தேவைப்படுகிறது. இது 400 ஆண்டுகளில் மூன்று நாட்களாகிவிடும். இதை போப்பாண்டவர் வியக்கத் தக்க முறையில் கையாண்டுள்ளார். ஜுலியர் சீசர் காலத்திலிருந்து ஏற்பட்ட தவறால் கூடிய 10 நாட்களை முதலில் சரி செய்தார். ஒக்டோபர் 4ம் தகதி 1582 ஒரு வியாழக்கிழமை வந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமையை ஒக்டோபர் 15 என்று அறிவத்து ஒரு பெரிய மாற்றததின்மூலம் 10 நாட்களை வெட்டினார். அதன்பின் அதே தவறு தொடராதிருக்க 00ரில் முடியும் எல்லா ஆண்டுகளுமே நானூறால் மிச்சமின்றிப் பிரிபட்டால் மட்டுமே அவை லீப் ஆண்டு. இல்லாவிடில் அவை சாதாரண ஆண்டு என்று அறிவித்தார். எடுத்துக் காட்டிற்கு 2000மாம் ஆண்டு லீப் ஆண்டு. 2100, 2200, 2300 ஆகியவை சாதாரண .ஆண்டுகள். 00ரில் முடியும் அடுத்த லீப் ஆண்டு 2400. இப்படிச் சீர் செய்த பின்பும் சில வினாடிகள் மிஞ்சும். இப்போதைக்கு அவைபற்றிப் பேசி நாங்கள் குழம்பத் தேவையில்லை. அவை ஒரு நாளாகத் திரள்வதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே செல்லும். அதுவரை பேசாதிருப்போம்.

எங்கள் தமிழ்ப் புத்தாண்டு பருவ காலங்களுக்கு ஒப்ப ஓடினாலும் பூமியின் சிறு தளம்பல் காரணமாக (தன்னைத்தானே சுற்றி ஓடும் பம்பரம் எப்படிச் சிறிது தளம்புகிறதோ அதே தளம்பல்தான் பூமிக்கும் ஏற்படுகிறது) ஒரு ஆண்டில் 20 நிமிஷங்களை கூடுதலாய் விழுங்குகிறது. அதாவது 72 ஆண்டுகளில் ஒரு நாளை விழுங்குகிறது. இதற்;கு யாருமே எதுவுமே செய்ய முடியாது. ஆனால் அதன் விளைவாக ஏற்பட்ட சில பதிவுகளை மட்டும் கீழே தருகிறேன்.

கலியுகம் 5116 ஏப்ரல் 14ல் பிறக்கிறது. ஆனால் கலியுகம் 01 பெப்ரவரி 18ம் திகதிதான் பிறந்தது. கி பி 285ல் தமிழ்ப் புத்தாண்டு மார்ச் 21ல் பிறந்தது. நாம் உழவர் திருநாள் என்று கொண்டாடும் வள்ளுவர் 01 ஆண்டு ஜனவரி 14ல் பிறந்திருக்காது. டிசெம்பர் 16ல்தான் பிறந்திருக்கும்
.
மேலே குறிப்பிட்ட தளம்பல் ஒன்றை முடிக்க பூமிக்கு 26200 ஆண்டுகள் தேவை. ஏப்படி இப்போ சரியும்போது நேரம் கூடுகிறதோ அதே அளவு நேரம் நிமிரும்போது குறையும். ஆகையால் 26200 ஆண்டுகளின் கூடும் நேரம், குறையும் நேரம் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்தால் இருவகை ஆண்டுகளும் ஒரு இம்மிகூட வித்தியாசம் காட்டாத ஆண்டுகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.