ஆயுதப்போராட்டம் பற்றிய தவறான கற்பிதங்கள்

479

“நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமே பேசிப் பெற்றவையல்ல, அடித்துப் பெற்றவையே” – மாமனிதர் சிவராம்

தமிழீழ விடுதலைப் போரில் தங்களது இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகொள்ளும் இந்நாட்களில் அப்போராட்டம் பற்றியும், போராட்டத்தின் மூலம் எய்தவிருந்த இலக்குகளையிட்டும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம். மாவீரர்களை நினைவுகூர்வதையிட்டு வெளியிடப்படும் சில கருத்துகளைப் பார்க்கையில் இது வெறும் சடங்காகவோ அல்லது மாவீரர்களையிட்டு அனுதாபப்படுகிற அல்லது பரிதாபப்படுகிற ஒருநாளாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மாவீரர் தினம் என்பது வெறுமனே மாவீரர்களது தியாகங்களை மெச்சுவதாக அமைந்து விட முடியாது. மாறாக அவர்களது போராட்ட நியாயத்தை உணர்ந்து அவர்களது இலக்கு நோக்கி பயணிப்பதற்கு உறுதி எடுத்துக்கொள்ளும் நாளாகவே அமைய வேண்டும். மாவீரர்கள் அவர்களது செயலுக்காக மதிக்கப்படும் போது அவர்கள் மேற்கொண்ட ஆயுதப்போராட்டம், அவர்களால் நிர்வகிக்கப்பட்ட நிகழ்வுபூர்வமான அரசு (defacto state) என்பவற்றின் முக்கியத்துவம் விளங்கிக்கொள்ளப்பட வேண்டும்.

ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்தது என்பதனை வைத்து, தோல்வி மனப்பான்மையுடன் அதனைப்பார்ப்பதும், அதன் தோல்விக்கான காரணங்களைக் கூறுவதாக உள்நோக்கிய விமர்சனங்களை வைப்பதும் தமீழீழ தேசத்தை நிர்மாணிக்கும் பணிக்கு (Nation building process) எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை. அதற்குப் பதிலாகஎதிரிகளுக்கு வாய்ப்பாகவும், மக்களை விரக்தியடைய வைக்கவுமே இவ்வகையான விமர்சனங்கள் உதவும். ஆதலால் ஆயுதப்போராட்டத்தின் நேர்மறையான விடயங்களிலேயே நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம். இவ்வாறு கூறுவதனால் ஆயுதப்போராட்டம் ஏற்படுத்திய பாரிய அழிவுகளை குறைத்து மதிப்பிடுவதாகவோ, இவை போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்படாத தரப்புகளிலிருந்து வரும் பொறுப்பற்றகருத்துகளாகவோ எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை.

எல்லாப் போராட்டங்களைப் போலவும், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் விளைவாகபாரிய அழிவுகள் ஏற்பட்டன. இது சமூகத்தின்எல்லா மட்டத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தியது.தனிமனிதர்கள், சமூகங்கள் என்றளவில் ஏற்பட்டபாதிப்பின் அளவில் வேறுபாடுகள் காணப்படுகின்றபோதிலும் ஈழத்தமிழர்கள் எல்லோருமேஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர். இப்போது போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்ட நிலையில், பலவீனமான ஒரு தோற்கடிக்கப்பட்ட தரப்பினராக தமிழர்கள் உள்ளார்கள். இன்று போர்க்கால நெருக்கடிகளிலிருந்து ஒரளவு விடுபட்ட நிலையிலேயே தாயகத்தில் வாழும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற நடைமுறை யதார்த்தத்தை மறுப்பதற்கில்லை. இருப்பினும் மேலெழுந்தவாரியாக போர்க்காலத்துடன் ஒப்பிட்டு இன்றைய நிலவரத்தை மெச்சும் நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது மட்டுமல்லாமல், தவறான வழிகாட்டலாகவும் அமைந்து விடுகிறது.

போரை தமிழ் மக்கள் விரும்பவில்லை. அது அவர்கள் மீது திணிக்கப்பட்டது. வேறு வழிவகையின்றியே ஆயுதப் போராட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலையிருந்தது. தவிர்க்க முடியாத நிர்பந்தம்என்ற விடயத்தை மறைத்து, போரின் அழிவுகளைக்காட்டி, ஆயுதப்போராட்டம் தவறான அணுகுமுறை எனக் கற்பிதம் செய்யப்படுகிறது. போராளிகளாகவிடுதலைப்போராட்டத்தில் இணைந்திருந்தவர்களில் சிலர் கூட இது வெல்ல முடியாத போராட்டமாக இருந்தது எனக் கூறத் தலைப்பட்டுள்ளனர்.

இன்னும் சிலர் போராட்டகாலத்தில், போராளிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மீறல்களை வைத்து இலக்கியம் படைக்கிறார்கள். இவர்களுக்கு பின்புலத்தில் சில அதிகார பீடங்கள் ஆதரவு வழங்குகின்றன. மொத்தத்தில் எங்கள் கண்முன் நடைமுறையில் இருந்த நிகழ்வு பூர்வமான அரசு பற்றியதகவல்கள், அதன் முக்கியத்துவம் என்பனமறைக்கப்படுகின்றன. இது ஈழத்தமிழ் தேசியத்தை சிறிலங்காவின் சிறுபான்மை இனமாகமுக்கியத்துவமற்ற இனக்குழுமமாக மாற்றும்நடவடிக்கை என்பது பற்றி பலரும் அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை. ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்வி (அல்லது பின்னடைவு)என்பது ஒட்டு மொத்தத் தமிழ்மக்களின் தோல்வியே. ஆனால் அதன் பொறுப்பை அடுத்தவர் தலையில் போட்டுவிட்டுத் தப்பிவிடும் வேலைகளே இப்போது நடைபெற்று வருகின்றன.

அண்மையில் ஸ்கொற்லாந்து தனிநாடாகப்பிரிவதா என்பது பற்றி ஒப்பம்கோர ஸ்கொற்றிஸ்மக்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றபோது,அவ்வாக்கெடுப்புப் பற்றிக் கருத்துக்கூறியமொழியிலாளரும் தத்துவாசியரியருமான நோம் சொம்ஸ்கி, இனத்துவ அடிப்படையிலான நாடுகளில் (Nation States) பெரும்பாலானவை ஆயுதப்போராட்டத்தின் மூலமே உருவாக்கப்பட்டன எனக் கூறியிருந்தார். ஜனநாயக முறையில் நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் ஸ்கொற்லாந்து தேசம் தனிநாடாக உருவாக்கப்படும் என்றபலத்த எதிர்பார்ப்புகள் இருந்த வேளையிலேயேஅவர் இத்தகைய கருத்தினை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அகிம்சைப் போராட்டத்தின் வாயிலாக தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் எனஇன்றைக்கும் நம்பியிருப்பவர்கள் இவ்வாறான உலக நிகழ்வுகளைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.

2001 இல் போர்நிறுத்தம் ஏற்பட்ட காலத்தில் திருமலையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய மாமனிதர் சிவராம் அவர்கள், “நாம்இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமேபேசிப் பெற்றவையல்ல, அடித்துப் பெற்றவையே” எனக் கூறினார். “கால்நூற்றாண்டுக்கு மேலாகசட்டவல்லுநர்களான எமது தமிழ் அரசியல் வாதிகள் எவ்வளவோ பேசிப்பார்த்தும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சிங்கள தேசம் இறுதியாக எமது படைபலத்தைக் கண்டுஅஞ்சியே தற்காலிகமாக நீக்கவேனும் உடன்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.” எனஅவர் தனது கருத்தை விளக்கியிருந்தார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், ஆயுதப் போராட்டம் தவறானது என்ற கருத்துப்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை பேசி வருகின்றமையைஅவதானிக்க முடிகிறது. சிறிலங்கா அரசுடனானபேச்சுவார்த்தைகள் மூலமும், அண்டைய நாட்டின் அனுசரணை மூலமும் உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் கூட்டமைப்பினர் இவ்வாறு கூறி வருகிறார்கள். இவ்விடயத்தில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இன்றைக்கு பதின் மூன்றாம் திருத்தத்தை ஆரம்பப்புள்ளியாக ஏற்றுக்கொண்டு அரசியல் செய்வதாஅல்லது அதனை மறுதலித்து சமஸ்டிக் கோரிக்கையினை வலியுறுத்துவதா என்ற குழப்பத்திலிருக்கிற கூட்டமைப்பினர், பதின்மூன்றாம் திருத்தச் சட்டமூலம் கூட ஆயுதப்போராட்டத்தின் விளைவாகக் கிடைக்கப்பெற்ற ஒன்று என்பதனை வசதியாக மறந்து விடுகிறார்கள். ஆயுதப்பலத்தின் மூலமே தமிழ்தரப்பு சமஸ்டித்தீர்வு பற்றி சிறிலங்கா அரசுடன் பேச முடிந்தது என்பதனையும் அவர்கள்ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆயுதபலம்இழக்கப்பட்டதன் பின்னான இந்த ஐந்து ஆண்டுகளில் அரசியல் உரிமைகள் எனப் புதிதாக எதனையும் தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பதனை ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மீது தனது ஒவ்வாமையைக் காட்டும் சி.வி. விக்னேஸ்வரன் போன்றவர்கள் மறுதலிக்க முடியாது.

இவ்விடத்தில் தமிழீழ நிலவரத்தை ஒத்த பிறிதொரு நிகழ்வையிட்டுப் பார்ப்போம். 1967-1970காலப்பகுதியில் (தற்போதைய) நைஜீரியாவின் தென்கிழக்குப் பிரதேசத்தில், மூன்று மாநிலங்களை உள்ளடக்கியதாகவிருந்த நிலப்பரப்பில் இபோ (Ibo) தேசிய இன மக்களின் பயபிரா (Biafra) என்ற நிகழ்வுபூர்வமான அரசு, ஒரு அரசுக்குரிய எல்லாக் கட்டமைப்புகளுடனும் இயங்கி வந்தது. கபோன், ஹயிற்றி, கோற்றி டி வோர் (ஐவரி கோஸ்ட்), தன்சானியா, சாம்பியா ஆகிய நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்டிருந்த இவ்வரசு மேற்கத்தைய ஆதரவுடன் நைஜீரிய அரசினால் கைப்பற்றபட்டது. போராளிகள் தமது போராட்டத்தையும், அரசியற் கோரிக்கையையும் கைவிட்டு சரணடைந்தார்கள். பயபரா போரில் முப்பாதாயிரம் இபோ இன மக்கள் கொல்லப்பட்டார்கள். இன்றைக்குதமது நாட்டை இழந்து நைஜீரிய தேசிய நீரோட்டத்தில் கலந்திருந்தாலும், இழந்து போன நாட்டையிட்டு அவர்கள் பெருமைப்படுகிறார்கள். புகழ்பெற்ற இலக்கியவாதியும் பயபரா அரசில் பணியாற்றியவருமான சினுவா அச்சேல் (Chinoua Achebe) ‘There was a Country’ என்ற பெயரில் பயபரா நாடுபற்றிய தனது அனுபவக்குறிப்புகளை நூலாகஎழுதி வெளியிட்டுள்ளார்.

மாவீரர்களை நினைவுகொள்ளும் இந்நாட்களில் நாம் தமிழீழ அரசுபற்றியும் அது மேற்கொண்ட தேச நிர்மாணப்பணி பற்றியும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். வெறுமனே சடங்குகளுடன் நின்று விடாது, தேசத்தை கட்டியெழுப்புவதுதொடர்பாக, திட்டமிடுவதற்கும் செயலாற்றுவதற்குமான நாட்களாக இவற்றை பயன்படுத்திக் கொள்வோம்!