இது விதைப்புக் காலம்

262

புரட்டாதி பிறந்தாலே உடன் நினைவுக்கு வருவது வன்னி வயல் விதைப்புத்தான். இதுதான் விதைப்புக்குரிய காலம். பருவத்தே பயிர் செய் என்பதற்கமைய கமக்காரர்கள் நெல்லை மொழியாக்கி பயிராக பச்சயம் தெரிய வைக்க கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்ற காலம் இது.

சோற்றுக்குள் கையை வைத்து சுவைத்து உண்ணுகின்றோம். அந்த சோற்றுக்குக் காரணமான நெல்லை விளைவிக்க சேற்றுக்குள் கமக்காரர்கள் படும்பாட்டை அனுபவித்துப் பார்ப்போருக்குத்தான் தெரியும். 17 ஆண்டுகளுக்கு மேலாக கிளிநொச்சியில் முரசுமோட்டை மூன்றாம் வாய்க்கால் என்ற இருவேறு வயல்புறங்களில் 85 ஏக்கர் அளவிலான இருபோகக் காணிகளில் நெற்செய்கையாளனாக இருந்த அனுபவம் எனக்கும் உண்டு.

அந்தக் கிளிநொச்சி பிரதேசத்தின் மிகப்பெரிய பகுதிகள் 634 சதுர மைல் பரப்பளவில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய பரப்பளவுகள் நெல் வயல்களால் ஆனது. பல குடியேற்றத்திட்டங்களையும் கொண்ட பகுதி கிளிநொச்சி மாவட்டம். 9 குளங்கள் இந்த வயல் நிலத்துக்கான நீர்ப்பாசன திட்டத்துக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளன. இவற்றை விட காலபோகத்திற்கு வான் பார்த்த பயிராக விளைகின்ற பருப்புகளும் அதிகம்.

கிளிநொச்சி மண் களிமண் நிலம். உரியபடி பயிரானால் ஏக்கருக்கு 45 மூட்டைகள் வரை நெல் விளையும் நிலங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் நிறைந்திருக்கின்றது. விதையை மொழியாக்கி பயிராக்குவதில் தான் நெற்செய்கையின் மூல வெற்றி தங்கியிருக்கிறது.

மழை உரிய படி உரிய நேரத்தில் அளவாக பெய்ய வேண்டும். மண் ஈரப்பதனாக இருக்கும்போது உழுது முடிப்பதற்குரிய வசதிகள் வேண்டும். வரம்புகள் நீரைத் தேக்கி வைக்கக்கூடிய தன்மையுரியதாக திருத்தப்பட வேண்டும். வரம்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் என்பதற்கமைய நண்டுவளைகள் அவை இவையென அடிக்கடி வரம்புகள் பழுதாவதால் ஒவ்வொரு செய்கை போகத்திற்கும் வரம்புகள் கட்டப்பட வேண்டியது முக்கிய பணியாகி விடுகின்றது.

சிறுபோக அறுவடை முடிய அடிப்பாகங்களாகக் காய்ந்திருக்கும் பழைய பயிர்அடிகளை வெயில் நேரம் பார்த்து முன்னதாகவே எரித்து விட வேண்டும். ஒட்டு எரித்தல் என்று இதைச்சொல்வார்கள். ஊரில் சிறிய அளவு நிலத்தில் நெல் பயிரிடுவோர் ஆடு, மாடு என்று கால்நடைகளை இந்த வயல் நிலங்களில் இரவில் பட்டி கட்டி படுக்க விட்டு அவற்றின் சாணத்தை உரமாக்கி நிலத்தில் தேக்கி வைக்கும் வழமையும் இருந்தது.

ஆடி உழவு தேடி உழு என்பார்கள். ஆடி மழை பெய்தால் நிலத்தை உழுவதற்கு முடியும். அந்த உழவு மண்ணைப் புரட்டி வைத்து, புரட்டாதி விதைப்புக்குத் தயார்படுத்துவதற்கு உதவியாகும். இவ்வாறு புரட்டி வைத்த நிலத்தில் புரட்டாதிகளில் புழுதி விதைப்பு என்ற முறையில் நெல் விதைப்பு நிறைவுபடும்.

இவ்வாறான புழுதி விதைப்பு மழை பொய்த்தால் பிரச்சினையாகி விடும். ஆடி மழை பெய்யவில்லை என்றால் புரட்டாதி மழை வரை காத்திருக்க வேண்டும். புரட்டாதி மழை ஆரம்பமான முன்னரே அந்த நிலத்திற்கான தயார்படுத்தலோடு அந்த நிலம் இருக்க வேண்டும். புரட்டாதி மழை தொடர்ந்து பெய்தால் உழவு செய்வது சிரமமாகி விடும். இந்த மழை தொடர்ந்து பெய்தாலும், புழுதி விதைப்புக் கண்ட நெல் முளைகள் அழுகிவிடும். புழுதி விதைப்பு என்பது ஏற்கனவே தயாராகியிருந்த நிலத்தை மீண்டும் ஒரு உழவு, மறு உழவு என்று உழுது நெல்லை விதைத்து பின்னர் மீண்டும் இரு உழவு மூலம் மீண்டும் அதனை மூடி விடுவதுதான். கணக்காக புழுதி விதைப்பு முடிய மழை பெய்து இடைவெளி விட்டால், அவற்றின் முளை தானாகக் கிளம்பி சிரமமில்லாமல் நெல் விதைப்பு முளையாக்கம் முடிந்துவிடும். மழை ஒரு முறை பெய்து இடைவெளி விட்டால்தான் முளை பயிராகும். மழை தொடர்ந்தால் வெள்ளம் தேங்கி முளைநெல் அழுகிவிடும். இங்கேதான் பிரச்சினையே ஆரம்பம்.

வயல் பாத்திகளால் நீரைத்தேக்கி அகற்றிவிட கழிவு வாய்கால்கள் இருக்கும். ஆனால், அந்தக் கழிவு வாய்க்கால்களை பின் வயல்காரர்கள் அடாத்தாகப் பிடித்து நெற்காணி ஆக்கியிருப்பார்கள். பாத்திநீர் வடிந்தால் தன் காணிக்குள் அது வருவதாக பின்காணிக்காரன் சண்டை பிடிப்பார்கள். மண்வெட்டி அடிகள் கொலையில் முடிந்த சம்பவங்களும் உண்டு.

புழுதி விதைப்பு நீர் முட்டி அழுகி நாசமானால், அல்லது வேறு வகையில் அது பழுதாகி விட்டால் மீண்டும் விதைக்க வேண்டும். மழை விட்டுக்கொடுக்க வேண்டும். நவராத்திரி அது இது என்று பருவமழை கனமாகத் தொடர்ந்தால் பலகை அடிப்பு, சேத்து விதைப்புத்தான் செய்ய முடியும். நெல்லை சாக்கில் தளர்வாகக் கட்டி வாய்க்காலில் அந்த மூட்டைகளை ஒருநாள் அளவில் ஊற வைப்பார்கள். பின்னர் மறுநாள் காலை எடுத்து அடுக்கி சாக்கால் மூடிவிட மூன்றாம் நாள் அவற்றிலிருந்து நெல் மணிகள் வெண்பல் முளைகளாக தள்ளி நீத்தும். அது சேத்து விதைப்புக்குத் தயாராகிவிடும். சேத்து விதைப்புக்கு வரம்பு நிறைய நீர் சேர்த்துக்கட்டி மேலதிகமாக வீல் இரண்டு பூட்டிய உழவு இயந்திரத்தில் சேற்றால் பாத்திகளை கலக்கச் செய்வார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு பாத்தியும் சேறு கலக்கி தயாராகி இருக்க பின்னால் தரையை பலகை அடித்து மட்டப்படுத்த வேலைகள் தொடரும். அகலப்பலகையை பூட்டி அவற்றை மாடுகள் சோடியாக இழுக்க ஆள் பலகை மேல் ஏறி நின்று கலக்கல் சேற்றை சமப்படுத்தி விடுவார். இவ்வாறாக பலகை அடிப்பு முடிய முளை நெல்லை வீசி விதைப்பார்கள். கலங்கல் சேற்றுடன் கலந்த முளைநெல் தரையில் காலூன்றி நிற்கும். அடுத்தநாள் விடிய பாத்திநீரை வடிய விடுவார்கள். அள்ளல் வெட்டி நீர் வடிய உதவியாகத் தயார் செய்வார்கள். சூரிய வெளிச்சம் காண வீறு கொண்டு பல் முளைகள் இளந்தளிர் பச்சை காணும். இதையே அடைமழை தொடர்ந்தால், பலகை அடிப்பு முளைநெல் நாசமாகிவிடும். மீண்டும் விதைக்க வேண்டும்.

சேற்று முளைக்கு சிறகை என்ற பறவை தேடி வரும். ஆயிரக்கணக்கில் இந்தப்பறவைகள் ஆகாயத்தில் பறக்கும். முளை விதைநெல் மணத்தைத் தேடி வயலுக்குள் இறங்கிவிடும். தாரா போன்ற அகல அலகு கொண்டவை இந்த சிறகைகள் என்ற பறவைகள். ஒவ்வொரு பாத்தியிலும் நூற்றுக் கணக்கான சிறகை இறங்கி அலகு வாயால் முளை நெல்லை உறிஞ்சி உண்டுவிடும். இரவிரவாக மண்ணெண்ணெய் போத்தல் விளக்கு, சேமக்கலம், வெடி என்று ஒளியும், ஒலியும் எழுப்பி சிறகைக்கு காவல் இருப்பது இன்னொரு கட்டம். முளைத்தால் உரம், களை பிடுங்கல் என்று பயிரை பருவத்திற்குப் பருவம் வளர்ப்பதற்கு செய்ய வேண்டியவை பல.

எங்கே என்று தேடி வரும் கிருமிகள், பங்கசுக்கள் பயிரை நாசமாக்கி விடும். அவற்றிலிருந்து பயிரைப் பாதுகாக்க கிருமிநாசினி, பங்கசுக்கொல்லி என்று வீசிக்கொண்டே இருக்க வேண்டும். இரவிரவாக வயலில் பரண் அமைத்து படுத்திருந்து இந்த சிறகைகள், கூட்டாக வரும் பன்றிகள் என்று அவற்றுக்குக் காவல் இருப்பது கமக்காரனின் முக்கிய பணி. பகல் பகலாக வயலில் பயிரைப் பச்சயப்படுத்த பாடுபடுவது இன்னொரு பணி. இவற்றை முடித்தால் தான் நெல் விளைச்சலைக் காணமுடியும்.

வன்னிப்புறத்தில் குடியேற்றத் திட்டங்கள், பழைய கமங்கள் என இருவகை வயல்நிலங்கள் இருக்கின்றன. மலாயன் பென்சனியர்கள் ஒரு காலத்தில் பத்து ஏக்கர், இருபது ஏக்கர் என்று வன்னியில் வயல்நிலங்களை வன்னியில் முதலீடாக வாங்கியிருந்தார்கள். இவர்களை விட குடியேற்றத்திட்டக் காணிகள் ஐந்து ஏக்கர், மூன்று ஏக்கர் என்று அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வயல்நிலங்களும் பல உள்ளன.

களை பிடுங்கலுக்கு ஆட்சேர்ப்பது சிரமமான ஒரு பணி. உழவு இயந்திரத்தை கூலிக்காரர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அனுப்பி காலை, மாலை போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்து அன்றாடம் கூலிக்குப் பணத்தைக் கொடுத்து, கூலியாளர்களை அழைத்து வந்துதான் களை பிடுங்க வேண்டும். ஒரு உழவு இயந்திரத்தில் 35 கூலியாளர்கள் வரை கொண்டு வந்து இறக்கப்படுவார்கள். இவற்றிற்கென தனித்தனியான கங்காணிமார் கூலியாளர்களை அழைத்து வர அமர்த்தப்படுவது அவசியமான ஒரு பணியாக என்றும் இருக்கின்றது.

யாழ்ப்பாண நெற்காணி விவசாயிகளை யாழ்தேவி கமக்காரர்கள் என வன்னியில் சொல்வார்கள். அவர்கள் வயலில் 2 அல்லது 3 கொட்டில்களில் மலையகத்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வசித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய வசிப்பிடமாக அது காணி முதலாளியால் வழங்கப்பட்டிருக்கும். அவர்கள் பொறுப்பு வயலைக் காப்பாற்றுவது. அதிகாலை யாழ்தேவியில் யாழ்ப்பாண முதலாளி வருவார். வரம்பில் குடை பிடித்துக்கொண்டு வேட்டியை மடித்துக் கட்டியபடி நின்று கண்காணிப்பார். மதியம் யாழ்தேவிக்கு கொண்டுவந்த சாப்பாட்டுப் பார்சலை உண்டுவிட்டு திரும்பிவிடுவார்.

pADDYநெல் அறுவடை காலம் என்றால், கமக்காரருக்கு மகிழ்ச்சி தொடங்கும் காலம். உரியபடி அறுவடை முடிக்க முன்பு மட்டக்களப்பு பகுதியிலிருந்து காக்காமார் அருவி வெட்டுக்கு என்று வருவார்கள். வயல்களில் வாடி அமைத்து இருப்பார்கள். வாய்க்கால் மீனைப்பிடித்து சமைத்து உண்பார்கள். இரவு களை போக்க கஞ்சா, மது என்று அருந்திக் கொண்டு உற்சாகமாக வசந்தனடி கோலாட்டம், தெம்மாங்கு பாடல்கள் என்று தங்கள் கலைத்திறனைக் காட்டுவார்கள். இரவிரவாக சூடு அடித்து நெல் மூட்டையாக்கி விற்பனைக்குப் போகும்.

கொட்டுண்ட நெற்கதிரைப் பொறுக்கி அவற்றை சேமிப்பாக உணவுக்கு பயன்படுத்துவது, சூடு அடித்து தூற்றிய பகுதியில் இருக்கின்ற சப்பிகளை புடைத்து நெல்லை சேகரிப்பது என்று பலரும் இவ்வாறான வகையில் பயன்படக் கூடிய கட்டங்கள் உள்ளன.

நெல் வயல் நிலங்கள் வடமாகாணத்திற்கு இயற்கை தந்த ஒரு கொடை. குளங்களை காலாகாலத்திற்குத் திருத்திப் பராமரித்தால் தான் இந்த நிலங்கள் நல்ல பயன்பாட்டைத் தொடர்ந்து தரும். வாழத்தொடர்ந்து முயன்றதனால் வையத்து உயர்ந்ததல்லவா தமிழர் இனம். செய்யும், வளரும், உயரும் என்று நம்புவோம்.