இந்தியப் பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி பெற்ற மாபெரும் வெற்றி முழு உலகத்தினது கவனத்தையும் அதன்பால் ஈர்த்திருக்கிறது.மோடி என ஒற்றைச் சொல்லால், அதாவதுஅவரது குடும்பப்பெயரால் அழைக்கப்படும் அறுபத்தி மூன்று வயதான நரேந்திர தாமோதரதாஸ் மோடி தலைமையில் பாரதீய ஜனதா பெற்ற வெற்றியானது இந்திய சுதந்திரத்திற்கு பின்னரான அறுபத்தியாறு வருடங்களில் கொங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றி எனக்கருதப்படுகிறது. இந்திய நடுவன் அரசாங்கம் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாவிடம் சென்றுள்ளமையினால் ஏற்படுள்ள ஆட்சி மாற்றம்ஈழுத்தமிழர் விடயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் உள்ளது. கூடவே தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலானஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து நின்று பெற்ற வெற்றியும் இவ் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.
தாம் வாழும் பிராந்தியத்தில் உள்ள பலம் மிக்க ஒரு பெரிய நாடு என்ற வகையிலும், கடந்த முப்பதாண்டுகளில் பல் வேறு வழிகளிலும் தலையீடுகளைச் செய்த நாடு என்ற வகையிலும் இந்திய ஆட்சி மாற்றம் பற்றி, ஈழத்தமிழ்மக்கள் அக்கறைகொண்டுள்ளமை இயற்கையானதே. கடந்தகாலங்களில் கொங்கிரஸ் ஆட்சியின் நடவடிக்கைகளால் பெரும் இழப்புகளையும் பின்னடைவுகளையும் கண்ட ஈழத்தமிழினம் புதிய ஆட்சியினையிட்டு ஓரளவு நம்பிக்கை கொண்டிருப்பது தெரிகிறது. ஆனால் அரசாங்க மாற்றம் இந்தியாவின் வெளியுறவைக் கையாளும் விடயத்தில் எத்தகைய மாற்றங்களை கொண்டு வரும்? இங்குள்ள வரையறைகள் என்ன ? வெற்றிபெற்ற கட்சியின் வெளியுறவுக் கொள்கை என்ன? போன்ற வினாக்களுக்குபதிலைத் தேடாமல், எமது கற்பனையில் தோன்றுகிற அல்லது நாம் விரும்புகிற விடயங்களேநடைபெறப்போகிறது என்ற மாயையைத் தோற்றுவிப்பதும், பின்னர் அதுநிறைவேறாதபோது ஏமாற்றம் அடைவதும் விவேகமான செயற்பாடுகளாக அமையாது.
நரேந்திர மோடி தேர்தலில் குதித்தபோது, அவரது இந்து மதவாத நிலைப்பாட்டைக் காரணங்காட்டி அவருக்கு ஆதரவு வழங்கக்கூடாது எனபுத்திஜீவிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலளார்கள், இலக்கியவாதிகள் எனச்சிலர் குரல் கொடுத்தனர். வட இந்திய மாநிலங்களிலும், கர்நாடகா, கேரளா போன்ற தென்மாநிலங்களில் எழுந்த இந்தக்குரலுடன் தமிழ்நாட்டிலிருந்தும் சிலர் இணைந்து கொண்டு கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இவ்வறிக்கையில் ஒப்பமிட்டவர்களில் சிலர் மகிந்த இராஜபக்சவை ஆதரிப்பவர்கள் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்க முரண்நகை. அதேசமயம், மகிந்த இராஜபக்சவின் அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளையிட்டு சர்வதேச விசாரணை வேண்டும் எனஆர்ப்பரிக்கிற ஈழத்தமிழர்கள், குஜாரத் மாநிலத்தில் மதக்கலவரங்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்மையையிட்டு சட்டைசெய்யாதிருந்த மோடியிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள் என்ற கேள்வி மேற்குறித்தவர்களிடமிருந்து எழுந்தது.
RSS எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இராஸ்திரிய ஸ்வம்சேவக் சங் (தேசிய தொண்டர்அமைப்பு) என்ற மதவாத அமைப்பின் பின்னணியைக் கொண்டவர் நரேந்திர மோடி. அதுபோல் பாரதீய ஜனதாக் கட்சி ‘ஹ்ந்துத்வா’ எனும்மதமேலாதிக்க கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது. இவ்விடயங்களைக் கவனத்தில்எடுத்து, அவரைப் புறக்கணிப்பவர்களின் இலட்சிய நேர்மையை நாம் மெச்சிக்கொள்ளலாம். ஆனால் நடைமுறைக்கு உதவாத இலட்சியங்களுக்கு அப்பால், தமிழ் மக்களின் நலனில் நாம் அக்கறைகொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். இராஜதந்திர அணுகுமுறை என்பது நாடுகளற்ற தேசியஇனங்களுக்கும் உள்ளது என்பதனை ஏன் சிலர்ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆகவே சகட்டுமேனிக்கு மோடியை எதிர்க்கவேண்டும் என்ற குரல்களையிட்டு இந்தியாவின் பெரும்பான்மை வாக்களார்களைப்போல் ஈழத்தமிழர்களும் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.
எண்ணூற்று பதினான்கு மில்லியன் (814,000,000) மொத்த வாக்காளர்களைக் கொண்டஇந்தியாவில், பெரும்பான்மையான மக்கள்வாக்களிக்கச் செல்லும்போது, எந்த சித்தாந்தங்களின் அடிப்படையிலும் வாக்களிப்பதில்லை. மாறாக தமது வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவதைக் கருத்தில் கொண்டே வாக்களிக்கிறார்கள். இது உலகின் எல்லா ஜனநாயக நாடுகளுக்கும் பொருந்தும் நடைமுறை. தேசியவாத, மதவாத கருத்துகளும் இந்தியாவில் அதிக செல்வாக்குச் செலுத்துக்கின்றன என்பதனை ஒரு வேறுபாடாகக் கொள்ளலாம். இந்த அடிப்படையில் அவர்களிடம், கொங்கிரஸ், பாரதீய ஜனதா என்ற இரண்டு தெரிவுகளே இருந்தன. அவற்றுள் மிகப்பெரும் எண்ணிக்கையிலான வாக்களார்கள் பாரதீய ஜனதாவை தெரிவுசெய்துள்ளார்கள்.
ஈழத்தமிழரைப் பொறுத்தவரை, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என்போரின் தலைமையிலான கொங்கிரஸ் அரசாங்கங்கள் அவர்களுக்குச் செய்த அழிவுகள் சொல்லி மாளாதாவை. ஆகையால் பாரதீய ஜனதாக் கட்சியின் வெற்றியை அவர்கள் கொண்டாடவிட்டாலும், கொங்கிரசின் படுதோல்வியையிட்டு அகமகிழ்ந்து கொள்கிறார்கள். இருப்பினும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று அவதானித்தால், இலங்கைத்தீவு விடயத்தில் மோடி அரசாங்கம் குறிப்பிடத்தக்க மாற்றம் எதனையும் ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறிகள்தென்படவில்லை. ஏனெனில் வெளியுறவு விடயங்களில் மோடி தலைமையிலான அரசாங்கம், கொங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து அதிகம் வேறுபடவில்லை. உள் நாட்டில் உள்ள தேசிய இனங்களின் உரிமைகள் விடயத்திலோ அல்லது வெளியுறவுக்கொள்கைகளிலோ அது மாற்றுக் கருத்துகளைக் கொண்டிருக்கவில்லை. அரசாங்க மாற்றம் இந்திய அதிகார மையத்திலும் (Indian establishment) குறிப்பிடத்தக்க மாற்றம் எதனையும் ஏற்படுத்தப் போவதில்லை.
குறிப்பிட்டுச் சொல்வதானால், கடந்த மார்ச் மாதத்தில் ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் கொண்டுவரப்பட்ட இலங்கைத் தீவு தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் விடயத்தில், இந்தியா நடந்து கொண்ட விதத்திலேயே மோடியின் ஆட்சிக் காலத்திலும் நடந்து கொள்ளும் என எதிர்பார்க்கலாம். இவைஇந்திய – இலங்கை உறவுகளிலேயே பெருமளவு தங்கியிருக்கிறது. இருப்பினும், தமது மூலோபாய மற்றும் வர்த்தக நலன்களுக்கு விரோதமாக சிறிலங்கா நடந்து கொள்ளுமாயின் கொங்கிரஸ்ஆட்சியினைப்போலன்றி, மோடி அரசு கடும்போக்கினைக் கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கலாம். இவற்றை வைத்துப் பார்க்கையில் மோடி அரசாங்கத்தின் இலங்கைத் தீவு தொடர்பான நிலைப்பாடு சிறிலங்கா அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளமை தெரிகிறது. பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடுவும் இவ்வாறான கருத்துகளைச் செவ்வி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
பாரதீய ஜனதாக்கட்சியின் கொள்கைகளில்அது சிறிலங்கா அரசுடன் முரண்பட்டுக் கொள்ளும் சில விடயங்கள் இருக்கின்றன. இந்திய அதிகார மையத்தின் கனவுத்திட்டமான ‘அகன்றபாரதம்’ என்ற விரிவாக்கல் கொள்கை கொங்கிரசைக் காட்டிலும் பாரதிய ஜனதாவினரின் நெஞ்சுக்கு நெருக்கமானது. இந்தியாவின் சிறிய அண்டைநாடுகள் விடயத்தில் `பெரியண்ணன்’ நிலையைப் பேண மோடி அரசு முற்படுமாயின் அது சிறிலங்காவின் சிங்களபௌத்த தேசிய வாத அரசுடன் முரண்படும் நிலை ஏற்படும். சீன ஒழுங்கிற்குள் விரைந்து சென்றுகொண்டிருக்கும் சிறிலங்காவின் நிலைப்பாடும் மோடி அரசிற்கு ஒவ்வாதஒன்றாக அமையும். மேற்கத்தைய முதலீடுகளைவிரும்பும் மோடி தன்னை நவதாராண்மைவாதியாகக் காட்டவே முற்படுவார் என எதிர்பார்க்கலாம். இவ்விடயத்திலும் மோடி அரசு இராஜபக்ச அரசாங்கத்துடன் முரண்படும்.
இறுதியாக, அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தனித்து நின்று பெற்றவெற்றி ஈழத்தமிழர்கள்விடயத்தில் ஏதாவது வாய்புகளை பெற்றுக்கொடுக்குமா என்பது பற்றிப்பார்ப்போம். அ.தி.மு.க தமிழ்நாட்டின் முப்பதியொன்பது தொகுதிகளில் முப்பத்தியேழு தொகுதிகளைக் கைப்பற்றி முழு இந்தியாவிலும் மூன்றாவது நிலைக்கு வந்துள்ளது. மற்றய கட்சிகள் எதுவும் அறுதிப்பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைக்க முடியாத நிலையிருந்திருந்தால், அ.தி.மு.க மத்திய அரசில் பேரம் பேசும்நிலையைப் பெற்றிருக்கும். முதல்வர் ஜெயலிதா பிரதமராகும் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமும் ஏற்பட்டிருக்கும். இப்போது அவ்வாறான நிலை இல்லாமையால், அவரால் அதிகமாகஎதுவும் செய்து விடமுடியாது என்று சிலர் வாதிடுகிறார்கள். தேசிய மட்டத்தில் செயற்பட வேண்டிய நடுவன் அரசில் அ.தி.மு.க அதிகாரங்களை பெற்றிருந்தாலும் அது இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்க முடியாது. இவ்விடத்தில் மைய அரசில் அங்கம் வகித்த திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் செயற்பாடுகள் மனங்கொள்ள தக்கவை.
மைய அதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்ள முடியாதநிலையிருப்பினும் மாநிலத்தில் தனது முழுமையான அதிகாரத்தைப் பெற்றிருக்கும் ஜெயலலிதா அம்மையார், தற்போதைய பதவிக்காலத்தில் செயற்பட்டு வருவது போன்று தமிழ்த் தேசிய தளத்தில் செயற்படுவாரானால் அவரது ஆதரவுத் தளம் தக்கவைக்கப்படுவதுடன் , தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் ஈழத்தமிழர்களுக்குஆதரவான சில நகர்வுகளை மேற்கொள்ள முடியும்,இவ்விடயத்தில் மோடி அரசு எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.