இந்தியாவைக் கையாளும் புதிய ‘பெருமாள் அவதாரம்’ வெற்றி பெறுமா?

551

ஒடுக்குமுறைக்கு எதிராகப் பெரும்போர் புரிந்த ‘மாவீரம்’ மௌனித்து ஐந்து ஆண்டுகளிற்கு மேலாகிறது. அவ் விதைகள் வீழ்ந்த காரணங்களை மக்கள் நன்கறிவர்.

இருப்பினும் அக் காரணிகளை பேரினவாதம் இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதன் அரசியல் அதிகாரப்போட்டிக்கு ‘அது’ தேவைப்படுவதை புதிதாக முளைக்கும் உறுமயாக்களும், பலயாக்களும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன. தம்புல்லையிலிருந்து மன்னார் வரை, அம்பாறையிலிருந்து தென்னமரவாடிவரை அதன் நச்சுவேர்கள் பரவிப்படர்ந்திருக்கின்றன.

இதுவரை வீழ்ந்ததெல்லாம் விதையென்று உரைத்தால், இல்லையில்லை அது ஜனநாயகம் அற்ற விதையென்று வியாக்கியானம் செய்கின்றார் சிலர்.

அப்பெருமக்களுக்காக, மட்டுநகர் கவிஞன் ‘சுபத்திரன்’ என்கிற தங்கவடிவேல் எழுதிய, ‘நான்’ என்கிற கவிதையில் இருந்து சில வைரவரிகள்……

‘ஒரு கோடி கவிதைகளால்
உலகம் போற்றும்
பெருங்கவிஞன் என நாமம்
பெற்றாலும் அஃது
ஒருசொட்டு இரத்தத்தை
உரிமைப்போரில்
தருபவனின் புகழ் முன்னே
தூசு! தூசு!’.

இக்கவிதையை வாசிக்கும்போது, எம் கண்முன்னே காட்சி தருவார் மறைந்த மாமனிதர் ஊடகர் தர்மரெட்ணம் சிவராம்.

‘……அந்த நேரத்தில் ‘நினைத்ததை முடிப்பவர் பிரேமதாசா’ (“Premadasa is a go getter”) என அவருக்கு வரதராஜபெருமாள் புகழாரம் சூட்டினார். தனது நன்றிக்கடனை நிறைவேற்ற வடகிழக்கு மாகாண சபைக்கு பிரேமதாசா வாரி வழங்கிடுவார் என கனவு கண்டார் பெருமாள். அந்த உற்சாகத்தில் தமிழர் தலைநகர் திருமலையில் சிங்கக் கொடியை ஏற்றி அவர் ‘சாதனை’ படைத்தார். ஆனால் நடந்ததென்ன?…. தனது மாகாண சபைக்கு கொடுக்கப்பட்ட எள்ளளவு அதிகாரங்களைக் கூட பிரேமதாசாவின் ஆட்சி கபளீகரம் செய்துவிட்டதென அவர் புலம்பியதும் இனித் தமிழீழம் அமைப்பதைவிட வேறு வழியில்லை என்று பிரகடனம் செய்து இந்தியாவிற்கு ஓடியதும் நாம் யாவரும் அறிந்த வரலாறு. ‘ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி’ கடந்த பின்னே நீ யாரோ, நான் யாரோ?’ என்ற கதையை சிங்கள தேசம் அன்று மீண்டுமொருமுறை அரங்கேற்றியது.’…….

இப்படி 2004 இல் எழுதியவர் வேறுயாருமல்ல..மக்களால் நன்கு அறியப்பட்ட, ஜனநாயகத்தின் எதிரிகளால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட இராணுவ- அரசியல் ஆய்வாளர் ‘தராக்கி’ சிவராம் என்கிற ஊடகச் சமராடிதான்.

சிவராம் குறிப்பிட்டதைப் போல, வரதராஜப்பெருமாள் இசைத்த அதே சோககீதங்களையே வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழக தொலைக்காட்சிகளில் இசைத்துள்ளார்.

அன்று, ஒன்றரை இலட்சம் ‘இந்தியப்படை’ சூழ, வட – கிழக்கு மாகாணசபை முதல்வராக இருந்த வரதராஜப் பெருமாள் ‘ஈழமே தீர்வு’ என்று பிரகடனம் செய்தார். திருமலையிலுள்ள மடத்தடி கோயில் காணியைக் கையாளும் உரிமைகூட இந்த மாகாணசபைக்கு இல்லையே என்று பொருமினார் பொருளியல் விரிவுரையாளர் வரதராஜப்பெருமாள்.

இவர் திருக்கோணமலை மாவட்டத்தைப் பற்றி நன்கறிந்தவர்.70 களில், பயஸ் மாஸ்டரோடு ( இவர் பின்னாளில் தென்னாபிரிக்க போராட்டத்தில் இணைந்தார்) சேர்ந்து ஈழவிடுதலைப் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஒன்றரை இலட்சம் சிங்களப்படை சூழ, ‘நாம் பெரும் ஒடுக்குமுறைக்குள் ஆட்சி செய்கின்றோம்’ என்று இந்திய அரசிற்குக் கூறும் வடக்கு முதல்வர், இப்படையை அகற்ற இந்தியாவின் உதவியை நாடுகின்றார். தமிழகம் உணர்ச்சிவசப்படுவதால்தான் இராணுவம் வடக்கில் இருக்கிறது என்கிற தொனியிலும் மாற்றிப் பேசுகின்றார்.

வடக்கில் சிங்கக்கொடியேற்றி , கொழும்பில் மகிந்தர் முன்னால் சத்தியப்பிரமாணம் செய்து, இனித் தனியரசு கோரமாட்டோமென நீதிமன்றில் சத்தியம் செய்து, இணக்க அரசியலுக்கு கூட்டமைப்பு பச்சைக்கொடி காட்டினாலும், சிங்களம் அசையப்போவதில்லை.
அதனை விக்கினேஸ்வரன் அவர்களின் நினைவுப் பேருரையும், தொலைகாட்சி நேர்காணல்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்தியப்படை சூழ அரியாசனத்திலிருந்த பெருமாளினால் சாதிக்க முடியாததை, சிறிலங்காப்படை சூழ மாகாணசபை அதிகாரத்திலிருக்கும் விக்கினேஸ்வரன் அவர்களால் சாதிக்க முடியுமா? என்கிற கேள்விக்கான பதிலை, ‘இந்து’ ஊடகவியலாளர் இராதாகிருஷ்ணனிடமே விட்டுவிடுவோம்.

அவர்கள் சில வேளைகளில் ‘பாரதரத்னா’ விருதினை மகிந்தரோடு சேர்த்து விக்கினேஸ்வரன் அவர்களுக்கும் வழங்கலாம். இந்த விருதுகள் எல்லாம் ஒருவகையில் அதிகாரபோதை ஊட்டும் மாயவலைகள்தான். மக்களிடமிருந்து வாக்குப்பெற மாவீரர்களையும், அதிகாரத்தைத் தக்கவைக்க ‘விருது’ வழங்குனர்களையும் பயன்படுத்தும், ஒருவிதமான உயிர்வாழும் மிதப்புநிலைத் தத்தவத்தால் இவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஈழத்தமிழ் மக்கள் மீது பேரினவாத அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறைகளை தெளிவாக முன்வைத்தே தமிழக மாணவர் முன்னணிகளும் ஏனைய அமைப்புக்களும் போராடுகின்றன. ஒடுக்குமுறையிலிருந்து விடுபட முன்வைக்கும் தீர்வு யோசனைகளை, எம்மிடமிருந்தும் சர்வதேச அனுபவங்களில் இருந்தும் அவர்கள் பெற்றுள்ளார்கள்.

அது வெறுமனே உணர்ச்சிவயப்பட்ட பேச்சல்ல. அவர்கள் சுட்டிக்காட்டும் தீர்வுகள், இந்திய நடுவண் அரசிற்கு இராசதந்திர நெருக்கடியைக் கொடுக்கலாம். அதாவது இலங்கை அரசோடு மேற்கொள்ளும் ‘இசைந்து செல்லும்’ தந்திரோபாயத்திற்கு முட்டுக்கட்டையாக அமையலாம்.

ஆகவேதான் இந்தியாவின் மூலோபாயத்திட்டத்திற்கு பிரச்சினையைக் கொடுக்கும் கோசங்களை எழுப்ப வேண்டாமென்று வடக்கு முதல்வர் தமிழ்நாட்டிற்கு அறிவுரை கூறுகிறார் போல் தெரிகிறது.
13 ஐ அமுல்படுத்த, இலங்கை அரசிற்கு மோடி நிர்வாகம் அழுத்தம் கொடுக்கும் என்கிற ஒரேஒரு நம்பிக்கையில்தான் முதல்வர் இப்படி பேசுகிறாரோ புரியவில்லை.
அதேவேளை தமிழ்நாட்டை அடக்கி வாசிக்கச் சொன்னால், இந்திய நடுவண் அரசிற்கு மகிச்சியாக இருக்குமென்று கருதிவிட்டார் போலிருக்கிறது.

அலரிமாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்தால், மகிந்தருக்குத்தான் வெற்றி.

தமிழ் நாட்டை ஊமையாக்கினால் இந்திய நடுவண் அரசிற்கே வெற்றி.

இதனால் வடக்கு மாகாண சபைக்கும், கிழக்கில் நிலமிழக்கும் தமிழ் பேசும் தேசிய இனத்திற்கும், குடாநாட்டு வலிவடக்கு மக்களுக்கும், என்ன நன்மை ஏற்படும்?.

சம்பூரில் வெளியேற்றப்பட்ட பூர்வீக தமிழ்குடிகளின் நிலைகுறித்து விக்கினேஸ்வரன் ஏன் தமிழ்நாட்டில் வைத்துப் பேசவில்லை?.

அம்மண்ணில் அனல்மின் நிலையம் அமைக்கும் இந்தியாவிற்கு, இதனைச் சுட்டிக்காட்டுவது பிடிக்காது என்பதால் தவிர்த்தாரா?.

இல்லையேல் அப்பிரதேசம் வடமாகாண அதிகாரத்தினுள் இல்லை என்பதால், தனக்குச் சம்பந்தமில்லையென்று ஒதுங்கிக்கொண்டாரா?.

அப்படியாயின் நேர்காணல் ஒன்றில், ‘திரு.விக்கினேஸ்வரன் அவர்கள் ஒட்டுமொத்த ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல..’ என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் கூறியது சரியான கருத்துப் போல் தென்படுகிறது.

ஒரு விடயம் எமக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

அதாவது திரு.விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ்நாட்டு ஊடகங்களில் கூறிய கருத்துக்கள் அனைத்தும், அவர் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தினை பிரதிபலிப்பதாக அமைகிறதா? என்பதனை, மாவை.சேனாதிராஜாவும், உத்தியோக பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் அவர்களும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தாயக- புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும்.

‘இலக்கு’ ஒன்றாக இருப்பதுபோல் பாவனை காட்டினாலும். பாதைகள் வெவ்வேறுதான். கூட்டமைப்பினைப் பொறுத்தவரை ‘ இலக்கு’ என்பது தெளிவற்ற, இருப்புநிலை சார்ந்த தோற்றம்.

‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையைக் கேட்கிறோம்’ என்று கூறியவாறே அது சமஷ்டி வடிவம் என்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
இறைமையுள்ள தேசிய இனத்தின் அடிப்படையிலமைந்த சுயநிர்ணய உரிமையா? என்று கேட்டால் பதில் இல்லை.

ஆகவே இவர்களின் இலக்கிலும் ‘மங்கலான நிலை’ தென்படுகிறது.

இந்தியாவும் ஜேஆரும் அருளிய 13 வது திருத்தச் சட்டம், சுயநிர்ணய உரிமையா? என்று வினவினால், அதற்கு அப்பால் 13 பிளஸ் இற்கு பாய்ந்து சென்றால் சுயநிர்ணய உரிமையைப் பிடித்துவிடலாமென்று சமாளிக்கின்றார்கள்.

தமிழ்நாட்டின் போராட்டங்களும், தனியரசுத் தீர்மானங்களுமே சிங்களத்தின் இறுக்கமான பேரினவாத நிலைப்பாட்டிற்கு காரணமென்றால், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களின் போராட்டங்களும், சர்வதேச நீதி கோரும் பரப்புரைகளும் , மகிந்த அரசிற்கு அச்சுறுத்தலாக அமையவில்லையா? என்று கேட்கத் தோன்றுகிறது.

போர் முடிந்த கையோடு வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள்வாக்கெடுப்பு புலம்பெயர் நாடெங்கணும் சனநாயக முறைப்படி நடைபெற்று, 99 சதவீதமான மக்களின் ஆதரவினை பெற்ற விவகாரம் குறித்து விவாதிக்க, இலங்கை- இந்திய உறவின் மீது அதிக அக்கறை கொள்ளும் இந்திய தேசிய ஊடகத்தார் விரும்புவதில்லை.

அதேவேளை 18 வது திருத்தச் சட்டமானது, 13 இல் இருக்கும் மாநகரசபை உரிமைகளைக்கூட உருவி எடுத்துவிட்டது என்பதைப் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்ளும் கூட்டமைப்பின் நீதிபதிகளும், சட்டத்தரணிகளும், முதன்முதலாக மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த நரேந்திர மோடி அவர்கள் 13 ஐ நிறைவேற்றுமாறு ஆணையிட்டதாக ஆனந்தம் கொள்கிறார்கள்.

பொதுவாகவே இவ்வாறான பலவீனமான பக்கங்களைச் சுட்டிக்காட்டும்போது, கூட்டமைப்பின் அரசியல் மொழிபெயர்ப்பாளர்கள் கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
அதாவது இந்தியாவை ‘விட்டால்’, அல்லது அதனை ‘மீறி’ எம்மால் என்ன செய்ய முடியும் என்பதுதான் ‘ரெடிமேட்’ பதிலாக வரும்.

இருப்பினும் இந்திய நடுவண் அரசிற்கு எம் சார்பாக அழுத்தம் கொடுக்க தமிழக மக்களால் முடியும் போது , அதை நாம் ஏன் குழப்ப வேண்டும்!.
இந்தியப் பெருங்கடலின் ஆதிக்கம் யார் கையில் அகப்படுமோ, அவரே சீனாவின் பட்டுப்பாதையையும், அமெரிக்காவின் ஆசியா PIVOT ஐயும் கட்டுப்படுத்தும் வல்லோர் ஆக முடியும்.
இலங்கையைப்போல் தமிழகத்தின் நீண்ட கரையோர எல்லையும் இக்கடல் பிராந்தியத்தில்தான் இருக்கிறது.

ஒருவேளை ஆட்சி மாறினாலும், புதிய சனாதிபதி இரணில் (?) உடனும், இந்திய அதிகார மையம் இதே உறவினைத் தொடர்ந்து பேணும்.
ஆட்சிகளும் காட்சிக்களங்களும் மாறும்.

ஆனால் எமக்கான ஆதரவுத் தளங்களை நாம் இழந்து விடக்கூடாது.

ஏற்கனவே உலக வல்லரசுகளின் சதியால் பெரும் போராட்ட சக்திகளை 2009 இல் இழந்தோம். தமிழகத்தின் ஆதரவினையும் நாம் இழக்க வேண்டும் என்பதையே இந்த இந்துமகா கடலாதிக்க வல்லூறுகள் விரும்புகின்றன. அப் பொறிக்குள் தெரிந்தே தமிழ் மக்கள் விழப்போகிறார்களா ? அல்லது வீழ்த்தப்படப் போகிறார்களா? என்பதை விரைவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வல்லரசுகளின் கால அட்டவணையானது, எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் எம்மைக் கடந்து போகும்…முள்ளிவாய்க்கால் அழிப்பினைப்போல.

– இதயச்சந்திரன்