‘இனப்படுகொலை’ என்று கூறுவதில் ஏன் இந்தக் குழப்பம் ?

547

ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள், தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு (structural genocide) உட்பட்டுவருகிறார்கள் என்ற விடயத்தில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் உறுதியான கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள். நடைபெற்றது, நடைபெறுவது இனப்படுகொலையே, இதுவிடயத்தில் வேறு கேள்விகளுக்கு இடமில்லை என்பதே அவர்களது நிலைப்பாடு. இன்னொரு சாரார் இவ்விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும், `இனப்படுகொலை’ (genocide) என்ற பதத்தினை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டிவருகிறார்கள். இனப்படுகொலை எதுவும் நடைபெறவில்லை, நடைபெற்றது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறுபவர்களும் தமிழ்மக்கள் மத்தியில்இருக்கிறார்கள் எனினும் பொருட்படுத்தக்கூடியளவு எண்ணிக்கையில் இல்லாத இவர்களின்கருத்துகளை இக்கட்டுரை கவனத்தில் எடுக்கவில்லை. மாறாக இனப்படுகொலை நடைபெற்றது என்பதனை மனதார ஏற்றுக்கொண்டு அல்லது அவ்வாறு கூறிக்கொண்டு அதே சமயத்தில் அரசியற் காரணங்களுக்காக இச்சொல்லைத் தவிர்ப்பவர்கள் அல்லது இச்சொல்லை பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை கூறுபவர்களின் அரசியலைப் பற்றியே இக்கட்டுரை பேச விழைகிறது.

இனப்படுகொலை விடயத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பில் வெளித்தரப்புகள் மத்தியில் உள்ள தயக்கம் புரிந்து கொள்ளக்கூடியதுதான். ஏனெனில்உலகில் நடைபெறும் எந்தவொரு விடயம் தொடர்பாகவும் சர்வதேச அரசியலில் கையாளப்படும் சொல்லாடல்களும், அவற்றுக்கு கொடுக்கப்படும் வியாக்கியானங்களும், குறித்த தரப்பினர் அவ்விடயத்தில் எத்தகைய தீர்வினை வேண்டி நிற்கின்றனர் என்ற நிலைப்பாட்டின் பாற்பட்டவை. இத்தகைய புரிதலுடன் வெளித்தரப்பினரின் அரசியல் அணுகுமுறையினை விளங்கிக்கொள்ள முடியும்.ஆனால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காகச் செயற்படுவர்களும் இவ்விடயத்தில் காலனித்துவகால விசுவாசத்துடன் வெளித்தரப்புகளைப் பின்பற்ற வேண்டுமா என்பதுதான் இப்போது தமிழ் மக்கள் முன்னுள்ள மிகப்பெரிய வினாவாக உள்ளது.

இனப்படுகொலை என்பதனை ஏற்றுக்கொண்டு அதற்கு பரிகாரம் தேடும் விடயத்தில் தமிழ் அரசியல் அமைப்புகளிடையே ஒருமித்த கருத்து நிலவவில்லை என்பது விடுதலை வேண்டி நிற்கும் இனம் என்றவகையில் அரசியல் ரீதியான பின்னடைவு நிலை என்பதனை தமிழ் மக்கள் கவனத்திற் கொள்ளவேண்டும். குறிப்பாக, ஈழத்தமிழ் மக்களிடையே செயற்படும் அரசியல் அமைப்புகள் ஓரணியில்நின்று செயற்படவேண்டும் என ஒற்றுமையை வலியுறுத்துபவர்கள், இதுபோன்ற முதன்மையான விடயங்களில் ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதனை விடுத்து, தேர்தல்களில் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் எனக் கரிசனம் கொள்வது விவேகமான நடவடிக்கையாக அமையாது.

வடமாகாணசபையில், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை தொடர்பாக தீர்மானம் ஒன்றினை கொண்டுவருவதற்காக தீர்மான நகல் ஒன்றை அண்மையில் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சமர்ப்பித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அவ்வாறான தீர்மானம் எதனையும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஆதிக்கத்தில் உள்ள சபைகளில் கொண்டுவரவேண்டாம் என அறிவுறுத்தி கூட்டமைப்பின் தலைமைப்பீடம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. இதுதொடர்பில் தமது நிலைப்பாட்டினை விளக்குவதற்காக யாழ் ஊடக அமையத்தில் செய்தியாளர்களுடனான சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பு ஏற்பாடுசெய்திருந்தது. இச்சந்திப்பில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த சுமந்திரன், நடைபெற்றது இனப்படுகொலை என்பதனைத் தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், சிறிலங்கா பாராளுமன்றத்தில் இதுபற்றி பேசியிருப்பதாகவும், ஆனால் ஐ.நா. மனிதவுரிமை ஆணையாளரின் விசாரணைகளுக்கு குந்தகம் ஏற்படாதிருப்பதற்காகவே இத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டாம் என தாம் கோரியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதாவது நடைபெற்றது இன்படுகொலைதான் என வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அது நடைபெறும் விசாரணைகளையும் விசாரணையின் பின்னர் வெளியிடவிருக்கும் தீர்ப்பினையும் பாதிக்கும் என்பது சட்டத்தரணி சுமந்திரனின் வாதமாகவிருந்தது. வடமாகாண சபை மேற்கொள்ளும் தீர்மானங்களை அச்சபையின் ஆளுனர் மட்டுமல்ல அதன் தலைமைச் செயலாளரே சட்டை செய்யாத நிலையில் ஐநா மனிதவுரிமைச்சபையும், சர்வதேசமும் இத்தீர்மானத்தைக் கவனத்தில் எடுத்துச் செயற்படும் என அவர் எதிர்பார்ப்பது அவருக்கே கொஞ்சம் அதிகமாகத் தெரியவில்லையா என பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்தவர்கள் யாரும் கேள்வி எழுப்பினார்களா என்பது தெரியவில்லை.

2013ம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்தியேழாம் திகதி தமிழ்நாடு சட்டசபையில் ஈழத்தமிழர்கள் தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இலங்கைத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணை நடாத்தப்பட வேண்டும் என ஒரு தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றபட்டது. தமிழ்நாட்டில் மாணவர் போராட்டங்கள் வலுப்பெற்றிருந்த ஒரு காலகட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றபட்டமை அவதானிக்கத்தக்கது. இவ்விடத்தில், தமிழ் நாடு சட்டசபையில் இத்தகையதொரு தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற முடியுமானால், வடமாகாண சபையில் ஏன் இத்தீர்மானத்தைக் கொண்டு வரமுடியாது எனக் கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

வடமாகாணசபையில் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பில், சர்வதேச நடைமுறைகளை மேற்கோள்காட்டி தமது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் தமிழ் சிவில்சமூக அமையம், சர்வதேச அரங்கில் முன்னுதாரணமாக நடைபெற்ற சில நகர்வுகளை பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறது.

  • வடக்கு ஈராக்கில் ISIS அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இனப்படுகொலையின் பாற்பட்டவை என ஈராக்கிய பாராளுமன்றம் 2014 ஓகஸ்ட் இல் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
  • காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலையின் பாற்பட்டது என பாகிஸ்தான் பாராளுமன்றம் 2014 ஓகஸ்ட் இல் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
  • காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலையின் பாற்பட்டது என பலஸ்தீன அதிபர் திரு. முகமட் அபாஸ் அவர்கள் 2014 செப்ரெம்பர் ஐ நா பொதுச்சபையில் ஆற்றிய உரையில் பதிவு செய்து இருந்தார்.
  • சென்ற நூற்றாண்டின் ஆர்மீனிய இனப்படுகொலை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் உட்பட உலகின் பல்வேறு பாராளுமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இத்தீர்மானங்களில் சிலவற்றை, குறிப்பாக பலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கைகளை ‘இனப்படுகொலை’ எனக்குறிப்பிடுவதனை மேற்குலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. பலஸ்தீன அதிபர் அபாஸ் ஐ.நா. சபையில் இவ்வாறு கருத்து வெளியிட்டமையையும் அமெரிக்காவிரும்பவில்லை என்பதனையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். இருப்பினும் தமது மக்களுக்கு நடைபெற்ற அவலத்தை, மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக வேறு ஒரு பெயர் சொல்லி அழைக்க பலஸ்தீனர்கள் உடன்படவில்லை. அவ்வாறாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் நீட்சியாகச் செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஏன் இவ்வாறு செயற்படுகின்றன?

மேற்படி கேள்விக்கு பதில் காண்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. வெளித்தரப்புகளில் ஆலோசனையின்படி நடந்து கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்கு தமிழ் மக்களின் வாக்குகள் தேவைப்படுகிறது. ஆகவே தமிழ் மக்களின்வாக்குகளைப் பெற்றுக்கொள்ள ‘இனப்படுகொலை’ என்றும் வெளித்தரப்புகளை திருப்திப்படுத்த அதுபற்றி பேசாதிருப்பதுமாக கூட்டமைப்பின் சந்தர்ப்பவாத அரசியல் தொடர்கிறது.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இனப்படுகொலை தொடர்பான சர்வதேச நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், இனப்படுகொலை என்பதனை நிருபிப்பதற்கு, குற்றம் புரிந்தவர்களின் மனவெண்ணம்இனப்படுகொலை புரிவதாக இருந்தது என்பதுஉறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். சுமந்திரனின் இக்கூற்று கவனத்திற்குரியது. ஏனெனில் மேற்கத்தைய சக்திகளும் சரி, இந்தியாவும் சரி இவ்வியடத்தில் ஓரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன. அதாவது பயங்கரவாத்திற்கு எதிரான போரில் சில போர்க்குற்றங்கள் அல்லதுமீறல்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதனைஏற்றுக்கொள்ளும் இத்தரப்புகள் இனப்படுகொலைக்கான எண்ணத்துடன் சிறிலங்கா அரசாங்கம் இருந்தது என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆதலால் இன நல்லிணக்கம், நல்லாட்சி, ஜனநாயகப்படுத்தல் போன்ற வழிமுறைகளினூடகப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என அவை நம்பியிருக்கின்றன. இத்தரப்புகளைப்பின்பற்றி அவர்களது போதனைகளையே தமிழ் மக்களுக்கு போதிக்க கூட்டமைப்பும் அதன் புலம்பெயர் ஆதரவாளர்களும் முனைகிறார்கள்.

இதுவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான முயற்சிகளுக்கும், மேற்கத்தைய நிலைப்பாட்டுக்கும் இடையிலான முதன்மையான முரண்பாடு. இந்த முரண் களையப்படாமல் தமிழரின் விடுதலை அரசியல் முன்னேற முடியாது என்பதே யதார்த்தமாக இருக்கிறது.