இனியொரு இணையதளத்தின் மீது தாக்குதல்

633

அரசியல், சமூக வியடங்களில் வெளிப்படையான முறையில் தமது கருத்துகளை வெளியிட்டு வரும் இனியொரு (inioru.com) இணையதளம் மீது DD DoS எனப்படும் இணைய வலையமைப்புத் தாக்குதல் தொடுக்ப்பட்டுள்ளமையால் அவ்விணையத்தளம் செயலிழந்துள்ளதாக அறிய முடிகிறது.

மிகக்குறுகிய நேரத்தில் பலமுனைகளில் ஒரு இணையதளத்திற்கு அழைப்புகளை (requests) அனுப்புவதன் மூலம் அதன் வழங்கியை (Server) செயலிழக்கச் செய்யும் இம்முறை மூலம் இணையதளங்களை முடக்க முடியும். இவ்வாறான தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் தொழினுட்பம் உள்ளபோதிலும் அதற்கு பெருந்தொகையான பணத்தை செலவிட வேண்டியிருக்கும். கடந்த காலங்களில் தமிழ்நெற் இணையதளம் உட்பட வேறும்சில தமிழ் இணயதளங்கள் இவ்வாறான தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன.

கடந்தவாரம் லைக்கா மொபைல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதான ஒரு பொய்ச்செய்தியினை உறுதிப்படுத்தாத செய்தியாக திட்டமிட்ட முறையில் சில தமிழ் ஊடகங்கள் வெளியிட்டபோது, அதனை இனியொரு இணையதளம் அம்பலப்படுத்தியிருந்தது. அதற்கு பதிலடியாகவே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டத்தில் கருத்து நிலவுகிறது.

இனியொரு இணைய தளத்தில் வெளியாகும் சில அரசியற் கருத்துகள் தொடர்பில் எமக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளபோதிலும் கருத்துச்சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் இவ்விணையதளத்தின் மீதான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்விணைய தளத்தின் சக ஊடகவியலாளர்களுக்கு எமது தார்மீக ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒரு பேப்பர் ஆசிரியர் குழு