இயக்கம்

107

சுத்தும் பூமி நின்றுவிட்டது போன்ற ஒரு பிரமை, ஒரு சிலருக்கு மட்டும் தானா அல்லது மற்றவர்களுக்கும் இந்த உணர்வு உள்ளதா? செந்நீரால் ஊற்றி வளர்ந்த விடுதலைப் பயிரை எப்படி கிள்ளி எறிந்தார்கள். ஒரு பரிணாம வளர்ச்சி போல் கொஞ்சம் கொஞ்சமாக கீழ்இருந்து மேல் நோக்கி எழுந்த எழுச்சி, கடலில் சிறீலங்கா கடல்படையினரால் பிடிபட்டு அடுத்தநாள் உடலமாக கரையொதுங்கிய காலம் போய், சிறீலங்கா கடல்படையினர் எம்மை கலைத்தால் பிடிபடாவண்ணம் வளர்ந்து, மேலும் சிறீலங்கா கடல்படையினரை நாம் கலைத்து, எமதுகடல் எல்லையை நிர்வகிக்கும் வரை உயர்ந்து,அதைவிடவும் வேகமாக ஒடி சிறீலங்கா கடல்படை தப்பி தவறி எமது எல்லைக்குள் வந்தால் அவர்களைக் கலைத்து பிடிக்குமளவுக்கு வளர்ந்த எமது கடல்படையும், அதை ஆண்ட கடல்புலிகளின் திறமையும் வியப்பதற்குரியது, ஒரு முப்பது ஆண்டு வளர்ச்சியும், திறமையும், அடுத்த தலைமுறையை அடையாமல் இடையில் நின்று ஏதலிக்கின்றது.

தெருக்கூத்து, சிறுநாடகம், விபரணச் சித்திரம், ஓவியம், விளையாட்டு போட்டிகள், என்று எமக்கென தனியானதொரு பாணியில் தென்இந்திய திரைப்படத்தை மீள்பதிவு செய்யாத ஈழத்துக்கென தனி ஒரு பாணியை உருவாக்கும் வகையில் வளர்ந்த கலைகளும், பண்பாடுகளும் முடங்கிப்போய் உள்ளன. எண்ணத்திராணியற்ற வகையிலான அடக்குமுறைக்குள்எமது மக்கள், அங்கு வாழ்ந்து வருகின்றார்கள்.

உள்ளங்காலில் இருந்து உச்சம் தலைவரை விரவிக்கிடந்த ஓர் உணர்வு, மின்னலை போன்று தரணியெங்கும் வாழும் தமிழர்களை இயக்கும், இயங்கு சக்தியை இழந்த மனிதர்கள் போலஇங்குள்ள மக்கள், பெரிய மின்சார ஓட்டம் தடைபட்டு, சின்ன சுற்றுக்குள் சுற்றி வருவது போன்று, தான்படித்த பழைய பாடசாலை, ஊர்சங்கம், கோயில்கள், மதகுருக்கள், இங்குள்ள தமிழ் பாடசாலைகள், சிறு சிறு சமூக தொண்டு நிறுவனங்கள் என்று அதற்குள்ளேயே அவர்களது சுற்று நின்று விடுகிறது, அந்த ஒன்றிணைந்த, கண்ணுக்குத் தெரியாத இழை, ஆங்காங்கே விடுபட்டு, தொடர்பற்று நிற்பது போன்றஉணர்வு. நல்லதா என்று உரைத்து பார்க்கத்தான் வேண்டும். ஆனால் அதிகமாக உரைத்தால் சேதாரமும் அதிகமாகும். உரைக்காமல் எடுத்தால் இல்லாததையும் பொன் என்று பொக்கிசப் படுத்தி ஏமாறும் அபாயம் உள்ளது. ஒன்றுமே வேண்டாம் ஏன் இந்த வம்பு என்றுஇருப்பது சுலபம், ஆனால் எங்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பும் வரலாற்றை நிர்மாணிக்கும் காலகட்டத்தில், வாளாதிருந்தவர்கள் என ஆகிவிடுவோம்.

நீங்கள் தமிழ்பேசும் அளவிற்கு இங்கு பிறந்தபிள்ளைகள் தமிழ் பேசுகின்றார்களா, இல்லையே, அப்பிடியானால் தமிழ் அழிகின்றதுஎன்று தானே அர்த்தம், அப்பிடி அழியும் தமிழுக்காக ஏன் பாடுபட வேண்டும். ஒருவரின் கேள்வி.இரண்டு விதமாக பதில் சொல்லாம் எதிர்மறையாக சொல்வதானால், ஓசோனில் ஓட்டை என்கிறார்கள், நீர்மட்டம் உயர்கின்றது என்கிறார்கள். உலகம் 40, 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் என்கிறார்கள். அப்பிடியானல் இவ்வழியும் உலகில் நிலையான பொருட்கள் என நாம் வீடு வாசல் எதையும் சேர்ந்து வைக்காமலா உள்ளோம்.

ஆங்கில மொழியை பார்த்தால் எல்லாமே கடன் வாங்கியவை, கணிதம் கூட 1இல் இருந்து 9 வரை அரபு நாட்டில் இருந்து வந்தது, சுழியம்இந்தியாவில் இருந்து வந்தது, இதை விட ஒன்று செய்யலாம், வளரும் மொழியான சீனமொழியைப் படிக்கலாம்! அல்லது ஒருபடி மேல் யோசித்து, ஏன் அது அழியாமல் வளர்கின்றது, என்று பார்க்கலாம், இரண்டு சீனர்கள் ஆங்கிலத்தில் பேசியதை நான் ஒருபோதும் கண்டதில்லை, ஆனால் நாம்?. இப்ப ஒரு 12 வருடங்களுக்கு முன், தொலைபேசியில் பேசும் போது பி வணக்கம், நான்..பீ என்று தொடங்க, என்னபெடியள் மாதிரி சுத்த தமிழில் கதைக்கிறீர் என்று பதில் வந்தது. ஆனால் இப்போ அது சர்வசதாரணமாக எல்லோரும் சொல்கிறார்கள். `சித்திரமும் கைபழக்கம், செந்தமிழும் நா பழக்கம் அல்லவாபீ.

எமது இயங்கு சக்திக்கு தமிழ் தேசியம் ஒரு முக்கியமாக காரணம், அத்தேசியம் எம்மை நாடு கடந்தும் இணைக்கின்றது. இதுபற்றி ஆழமாக சிந்திந்து அத்தேசியத்தின் பேரால்நாம் ஒருகிணைய வேண்டும். இது சாராணமான சொல்லாடல் அல்ல. சுலபமாக விளங்குவது என்றால் “working from Home” என்று பலர்வீட்டில் இருந்து கொண்டே கணனி மூலம் மின்னஞ்சல், கணனி மூலம் பார்த்து உரையாடல் (Chat) சந்திப்பு அறை கூட்டம் (conference call) என்று ஒரு virtualஆக வீட்டில் இருந்து கொண்டே அலுவலகத்தில் இருப்பது போல முழுவேலையும் செய்யக்கூடியதாக உள்ள, இயக்கம் தான் இங்கு முக்கியமானது. அலுவலகத்தை பிறகு அமைத்துக்கொள்ளலாம்.

எம்மில் உள்ள, அந்த நாடு கடந்து எம்மை இணைக்கும் இயக்கத்தை நாம் சிந்தித்து செயல்பட்டு வளர்ந்துக்கொள்ளவேண்டும், இவர் சுள்ளுகிறார், அவர் கிள்ளுகிறார் என்று எம்மில் உள்ள சிறுசிறு குறைகளை பூதக்கண்ணாடி போட்டு பார்க்காது, இந்த இயங்குசக்தி என்று வரும் போது தமிழ் தேசியத்தின் பேரால் ஒன்றிணைய வேண்டும். இந்த எம்மிடம் உள்ள நாடு கடந்து விரவியிருக்கும் இயக்க சக்திக்குத்தான், நாடுகள் யோசிக்கின்றன. நாமும் எம்பலம் அறியாது, யானைப்பார்த்த குருடனைப்போல் தந்தம் கண்ணுக்கு முன்னால் தெரிவதைமட்டும் பார்த்துக்கொண்டு எம் முழுப் பலத்தையும் இணைக்காது பொழுதை விரயம் செய்கின்றோம்.

இது இப்படி இருக்க, அவனவன் கோட்டுசூட்டுப் போட்டுக் கொண்டு, சட்டம் படித்தவர்கள் என்று நேரத்திற்கும், நிற்கும் இடத்திற்கு அமைவாக கதைத்து தமது பதவியை தக்கவைத்துக் கொள்கிறார்கள். எமக்கு நடந்ததுஇனப்படுகொலை இல்லை என்று சொல்வதற்கு, தமிழ் மக்கள் பற்றி எவ்வளவு கணிப்பு இருந்திருக்க வேண்டும்? அவர்களின் கணிப்பின் படி, இந்த தமிழ் சனங்கள் ஒரு சோத்துச்சனங்கள், நாம் தமக்கு வசதியானதை சொல்விட்டும் போகலாம், அவர்கள் ஒன்றும் பேசாது,கேட்ட நீதி கிடைக்காமல் அலைந்தொழியும்ஆத்மாக்களுக்கு வருடாவருடம், அவ்வாத்மாக்கள் கேட்ட நீதியைக் கொடுக்காமல், தட்டிக்கழிப்பவர்களையும், சகித்துக் கொண்டு, வருடாவருடம் அவர்கள் கேட்காத திதியைச் செய்துபடைத்து சாப்பிட்டு உறங்கும் மக்கள் எனக்கணித்திருக்கிறார்கள்! வேறு ஒரு நாட்டு வரலாற்றிலும், அதே இனத்தைச் சேர்ந்தவர்களே, அவ்வினத்திற்கு கிடைக்கவேண்டிய நீதிக்கு எதிராக செயல்பட்டதாக வரலாறு இல்லை. அப்படி அவர்கள் செய்ய நினைத்திருந்தால் கூடஅம்மக்கள் அவர்களை சும்மா விட்டிருந்திருக்கமாட்டார்கள். எல்லாம் எமக்கென்று வந்து வாய்திருக்கிறார்கள், வைரவருக்கு வாகனம் வாய்ந்தது போல. இனி இவர்களின் சாயம் வெளுக்கும் மட்டும் காத்துக்கொண்டிருக்க, எமக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காமலே போய்விடும்.