புடவையில்லை என்று யாரிடமோ போய் இரவல் வேண்டி வந்த புடவையில் ஆகா இதுநல்ல கொய்யகம் என்று பெருமைப்படுவது போலத்தான் வர வர எங்களின் வேலைப்பாடுகள் இருக்கின்றன. முன்பு வருடத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறி, இவர் முடிய அவர் என்ற கணக்கில், மாதத்திற்கு ஒன்று என நடக்கின்றன. ஈழத்தமிழர்கள் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கென, வெளிநாட்டு, அயல்நாட்டு கலைஞர்களை அழைத்துமிகப்பெரிய அளவில் நடக்கும் இன்னிசை இரவுகள், இதயகானங்கள், மெல்லிசை மாலை பொழுது என மாதமொரு பெயரில், நடக்கும் வருமான யுத்தியைத்தான் சொல்லுகிறேன். தொழில் நிலையங்கள். சங்கங்கள் நடாத்துவதற்கு இடைஇடையே இப்படியான நிகழ்ச்சிகள் வைத்தால்தான் முடியும் என்ற நிலையில் சில நிறுவனங்களை இதை அதற்குரிய வருமானத்தை எமது மக்களிடம் இருந்து வசூலிக்கும் அதே வேளை அவாகளுக்கு விருப்பமான கலைஞர்களை வருவித்து நிகழ்ச்சியையும் மண்டபம் நிறைந்த மக்களோடு நடாத்தி முடிக்கிறார்கள்.
மக்கள் விரும்பி போகிறார்கள். அவர்களும் அதை பாவித்து வருமானம் ஈட்டுகிறார்கள், இதில் இடையில் நீர் யார் காணும், புடவையும், கொய்யகமும் என்று கதை பேசி வாறீர். எனதுஆதங்கம் எல்லாம் எமது ஈழத்தமிழரின் பணம்,எமது ஈழக்கலைஞர்களையும், எமது தனித்துவமான, மங்கி மறைந்து போய் விடுமோ என்று அச்சப்படும் கலைகளையும் வளர்க்க உதவினால்,நெல்லுக்கு இறைந்த நீர் வாய்க்கால் வழியோடு புல்லுக்கும் அங்கே புசியுமாம் என அதை பிரதானமாக வளர்த்துக்கொண்டு, இடையே இவைகளுக்கும் வாய்ப்புக் கொடுக்கலாம். இல்லாவிடில் மாடு மாதிரி உழைத்தோமா, ஓடு மாதிரி தேய்தோமா என்று ஒன்றுக்குமே முடிவில் அர்த்தம் அற்றுப்போய்விடும்.
ஈழத்து பாடல்களா? என்ன அது என்று கேட்பவர்களுக்கு பல பழைய பாடல்களை மீண்டும் மேடையேற்றலாம், புதிய கலைஞர்களை வெளிக்கொணர்ந்து ஊக்குவிக்கலாம். நாவாலி ஊர்சோமசுந்தரப்புலவர் ஆடிப்பிறப்புப்பற்றி பாடியது உங்களில் பலருக்கும் நினைவில் இருக்கலாம்.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி
வாசப்பருப்பை அவித்தக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலுÖரில் சக்கரையுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டித்கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிள நீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைத் கோலிக் கொண்டு
அன்னை அகப்பையால அள்ளி
அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை
உரித்துத் தின்போம் நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
இது போன்ற பழைய பாடல்கள், கூத்து போன்றவற்றை மேடையேற்றி இரவல் புடவையில்லாமல் எமது புடவைகயையே கட்டப்பழகுவோம். ஈழக்கலைஞர்களை ஊக்குவிப்போம், அடுத்த தலைமுறைக்கு எமது கலைவடிவம் கிடைக்கும் வகையில் மெரு கூட்டி இலகு தமிழில் எடுத்துச் செல்வோம்.
புலம் பெயர் தேசங்களில் கலை பண்ணாட்டுக்கென ஈழக் கலைஞர்களை அடையாளம் கண்டு, கலை காவலர்களாக அமர்த்தி, எமதுகலைகளை அழியவிடாது கலை நிகழ்ச்சிகளை அர்த்தம் உள்ளதாக்குவோம்.
மேடையில் ஏறுபவை எல்லாவற்றையும் நாம் நுழைவுசீட்டை வேண்டிவிட்டோமே என்றுபார்க்காது. நாம் விரும்புபவற்றை மேடையேற் வைப்போம்.
சுகி ( ஒரு பேப்பருக்காக )