இராஜதந்திரிகள் வெளியிடும் கருத்துக்கள் அல்லது சாத்தான்கள் ஓதும் வேதம் பற்றியது

111

கடந்தவாரம் லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிய, ஆபிரிக்க கற்கை நெறிகளுக்கான கல்லூரியில்(The School of Oriental and African Studies – SOAS) பிபிசி வானொலியில் பணியாற்றிய மார்க் ஸ்லேற்றர் என்ற ஊடகவியலாளரால் இலங்கைத் தீவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் பற்றிய‘To End A Civil War’ என்ற தலைப்பிலான நூல்வெளியிட்டு வைக்கப்பட்டது. நோர்வேயின் முன்னாள் வெளிநாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சரும், பேச்சுவார்த்தைகளில் அனுசரணையாளராகச் செயற்பட்டவருமான எரிக்சொல்ஹெய்ம் இவ்வாறானதொரு நூலை எழுதிவருவதாகவும், இவ்வருடம் அந்நூல் வெளியிடப்படும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மார்க் ஸ்லேற்றரின் மேற்படி தலைப்பிலான நூல்வெளிவந்திருக்கிறது. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களில் பெரும்பகுதியானவை சொல்ஹெய்மிடமிருந்து பெறப்பட்டதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளமையால் இதுவே அவர் எழுதவிருப்பதாக முன்னர் குறிப்பிடப்பட்ட நூல் எனக்கருத இடமுண்டு. இந்நூல் பற்றிய எனது விமர்சனத்தை பிறிதொரு நாளுக்கு வைத்துவிட்டு இந்த நிகழ்வில் உரையாற்றியவர்கள் வெளியிட்ட கருத்துகளைப்பற்றிப் பார்ப்போம்.

மேற்படி நிகழ்ச்சியில் எரிக் சொல்ஹெய்ம், விதார் ஹெல்கிசன் ஆகியோருடன் மேற்படி கல்லூரியில் பன்னாட்டு உறவுகள் கற்கை நெறி விரிவுரையாளராகப் பணியாற்றும் கலாநிதி சுதாகரன் நடராஜாவும் உரையாற்றினார். முன்னைய இருவரும் நோர்வேயின் இராஜதந்திரிகளாக சமாதானமுயற்சிகளில் பங்குபற்றியதுபோன்று, தமிழர்தரப்பில் பேச்சுவார்த்தைக்குழுவில் முதன்மைப்பங்குவகித்த தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கத்திற்கு உதவியாக சுதாகரன் செயற்பட்டிருந்தார். பிரித்தானியாவுக்கான சிறிலங்காவின் பதில்தூதுவர் சானக தல்பஹேவாவின் பெயரும் உரையாற்றுபவர்களின் பட்டியலில் காணப்பட்ட போதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. உரையாற்றியவர்களை வைத்துப் பார்க்கையில் இது வெறுமனே ஒரு நூல் வெளியிட்டு நிகழ்ச்சி என்பதற்கப்பால் இங்கு வெளியிடப்படும் கருத்துகள் இலங்கைத் தீவின் அரசியல் விடயங்களில் அக்கறை கொண்டவர்களுக்களைச் சென்றடைய வேண்டும் என்ற முனைப்புக் காட்டப்பட்டமை தெரிகிறது.இந்நிகழ்ச்சி பற்றிய விளம்பரத்தினை ஒருபேப்பரில் பிரசுரிப்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டதாக ஒரு பேப்பரின் விளம்பரப்பிரிவினர் தெரிவித்தனர்.

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல்உரிமைகளை பரிசாக வழங்கப்போவதில்லை எனவும் தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் போராடியே பெறவேண்டும் எனவும், ஆயுதவழியிலின்றி, உண்ணா நிலைப் போராட்டம் போன்ற மக்கள் போராட்டங்களை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்த கருத்துகளை தமிழ் ஊடகங்கள் பலவும் முக்கியத்துவம் கொடுத்துச் செய்தியாக வெளியிட்டிருந்தன. இவ்றைக் கேட்பவர்கள் `திரும்பவும் முதலிலிருந்தா’ எனச் சலப்படையக்கூடும். சொல்ஹெய்ம் இக்கருத்துகளை தெரிவித்திருந்தார் எனினும், இந்நிகழ்ச்சியில் அவர் வெளியிட்ட கருத்துகளின் முழுமையையும் அல்லது முதன்மையான விடயங்களைத்தானும் பிரசுரிப்பதை விடுத்து, தமிழ் மக்களுக்கு ஏற்புடைய ஒரு கருத்தை மாத்திரம் பிரசுரிப்பது எரிக் சொல்ஹெய்ம் போன்றவர்களின் உண்மையான நோக்கத்தை மறைப்பதாகவே அமைகிறது.

அமைதி வீரர்களும், இடைஞ்சலாக இருந்தவர்கள்

நோர்வேயின் சமாதான முயற்சிகள் தோல்வியில்முடிவடைந்ததுமல்லாமல், இந்த நூற்றாண்டின் மாபெரும் மனிதஅவலங்களில் ஒன்றுக்கு வழிகோலுவதாக அது அமைந்தது. இதற்கான பொறுப்பினை அடுத்தவர்களின் தலையில் போட்டுவிட்டு இலகுவில் இவர்களால் கடந்து செல்ல முடிகிறது என்பது சர்வதே இராஜதந்திர செயன்முறையின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.

சமாதான முயற்சிகள் வெற்றிபெறாமைக்கு அம்முயற்சிகளுக்கு இடைஞ்சலாக இருந்தவர்களே காரணம் என சொல்ஹெய்மும், ஹெல்கிசனும் தமது உரைகளிலும். கேள்வி நேரத்தில் அவையிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது குறிப்பிட்டனர். தமிழீழக் கோரிக்கையிலிருந்து விட்டு விலகாதிருந்த திரு. பிரபாகரன் ஒரு புறமும் அப்போதைய பிரதமர் இரணில்விக்கிரமசிங்கவிற்கும், ஜனாதிபதி சந்திரிகாவிற்கும் இடையிலான மோதலும் சமாதானத்திற்கு தடையாக இருந்ததாகத் இவர்கள் தெரிவித்தார்கள். இவ்விடயம் பற்றி தனதுரையில் சுட்டிக்காட்டிய சுதாகரன் நடராஜா இப்பிரச்சனையை வெறுமனே ஒரு ஆயுத இயக்கத்திற்கும், சிங்களப் பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான பிரச்சனையாகப் குறுக்கிப் பார்க்கப்படுகிறதே தவிர, ஆழமாக வேருன்றியிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதம் பற்றிக் கணக்கில் எடுக்கப்படவில்லை எனக்குற்றஞ்சாட்டினார்.

சிங்களத்தரப்பில் இரணில் விக்கிரமசிங்கவும், தமிழர் தரப்பில் அன்ரன் பாலசிங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அமைதி வீரர்கள் எனவும் அவர்கள் சமாதானம் ஏற்படுத்துவதில் உண்மையாக உழைத்ததாகவும் நோர்வேஜியர்கள் இருவரும் தெரிவித்தனர். ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி எனவும் அவர் விடுதலைப்புலிகளை ஒரு சர்வதேசவலைப்பின்னலுக்குள் விழ வைப்பதற்கு முயற்சித்து வந்ததாகவும் அன்ரன் பாலசிங்கம் அவர்கள்வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியதை வைத்துப்பார்க்கையில், இரணில் விக்கிரமசிங்கவிற்கு சமாதானத்தை ஏற்படுத்தவதில் உள்ள ஆர்வத்தைப் எவராலும் புரிந்து கொள்ள முடியும். தமது கைப்பிள்ளை போன்று செயற்பட்ட ஒருவரை அமைதிக்கான வீரராக இவர்கள் காட்டுகிறார்களே தவிர இதில் உண்மை எதுவுமில்லை. அன்றைய நிகழ்ச்சியிலேயே கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் இரணில் விக்கிரமசிங்க ஒரு புனிதர் எனத்தான் நம்பவில்லை என சொல்ஹெய்ம் கூறியிருந்தார்.

படைவலுச் சமநிலை

2008ம் ஆண்டின் நடுப்பகுதி வரை போரில் இருதரப்பும் வெல்ல முடியாது என்ற நிலையே காணப்பட்டதாக இந்தியா தனது புலனாய்வுத் தகவல்கள் மூலமாகத் தமக்கு அறிவித்து வந்ததாகவும், ஆனால் 2008ம் ஆண்டு ஒகஸ்ட் மாதமளவில் போரில் சிறிலங்காவால் வெல்ல முடியும் என்றநிலை ஏற்பட்டதாக, அப்போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவிருந்த எம். கே. நாராயணன்தமக்குத் தெரிவித்ததாகவும் கூறிய எரிக் சொல்ஹெய்ம், அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி சுருங்கிச் சென்றதாகவும் குறிப்பிட்டார். புலனாய்வுத் தகவல்களை விடவும், தாக்குதல் வியூகங்கள் உட்பட பல்வேறு இராணுவ உதவிகளை சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்தியாசெய்து வந்தது தெரிந்ததே. ஆனால் பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்தில் காணப்பட்ட படைவலுச் சமநிலை மாற்றமடைவதற்கு வெளிச்சக்திகள், குறிப்பாக இணைத்தலைமை நாடுகள் எவ்வாறுபங்களிப்புச்செய்தன என்பதுபற்றி சமாதானத்திற்கு அனுசரணையளாராக வந்தவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கம் தமதுஆயுதப்படைகளின் ஆளணியை அதிகரித்தமை, படைக்கலங்களை வாங்கிக் குவித்தமை பற்றியோவிடுதலைப்புலிகளின் கப்பல்களை தாக்கியளிக்கப்பட்டமைக்கு வெளிச்சக்திகள் உதவியமை பற்றியோ சமாதான அனுசரணையாளர்கள் அறிந்திருக்கவில்லை என யாரும் கருதிவிடமுடியாது.

சரணடைவுத் திட்டம்

2009ம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா, இந்தியா,ஐ.நா., சர்வதேச்ச் செஞ்சிலுவைசங்கம் ஆகியவற்றுடன் இணைந்து சரணைடைவுத் திட்டமொன்றை நோர்வேத் தரப்பினர் விடுதலைப்புலிகளிடம் முன்வைத்ததாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டார். இத்திட்டத்தின்படி, விடுதலைப்புலிகள் சரணடையும் பட்சத்தில், தலைவர் பிரபாகரன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டமான் ஆகியோரைத் தவிர மற்றையவர்களை பாதுகாப்பதற்கு மேற்படி தரப்புகள் உடன்பட்டதாகவும் தெரிவித்த சொல்ஹெய்ம், தலைவர் அவர்களையும், பொட்டமானையும் பாதுகாப்பதற்கு இந்தியா இணங்கவில்லை எனவும் கூறினார். ஆனால் இத்திட்டத்திற்கு திரு.பிரபாகரன் உடன்படவில்லை எனவும் அவ்வாறு அவர் இணங்கியிருந்தால், பல ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்கலாம் எனவும் கூறினார்.

சயனைட் குப்பிகளைக் கட்டியிருக்கும் தற்கொடைக்குத் துணிந்த போராளிகளான விடுதலைப்புலிகள் இவ்வாறான திட்டத்திற்கு உடன்பட்டிருப்பதற்கான சாத்தியமில்லை. அதிலும் உலகத் தமிழ் மக்களினால் போற்றப்படும் ஒரு தலைவரை காவு கொடுக்கும் இத்திட்டம் இயக்கத்தில்மேலும் பிளவுகளை உருவாக்கி அதனை மேலும்பலவீனப்படுத்துவதற்கான உத்தியாகவே பார்க்கப்பட்டிருக்கும். ஏற்கனவே நைஜீரிய பயபிரா போராட்டத்தின் சரணடைவிலிருந்து கற்ற பாடங்களுக்குப் பின்னரும் இவ்வாறான சரணடைவிற்கு விடுதலைப்புலிகள் இணங்கியிருக்க முடியாது. மாறாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளராக வந்தவர்கள் சரணைவுத் திட்டத்தினை முன்வைப்பது அவர்களது முயற்சி எவ்விதத்திலாவது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாகவே (To End a Civil War) இருந்தது எனபதனை வெளிப்படுத்துகிறது. விடுதலைப்புலிகள் சரணடைவுத் திட்டத்திற்கு உடன்பட்டிருக்கும் பட்சத்தில் அவர்கள் வரித்துக்கொண்டிருந்த அரசியல் இலக்கினை கைவிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தனித்து ஆயுதங்களை மௌனித்ததாக அறிவித்ததன் மூலம் அரசியல் இலக்கினை அவர்கள் கைவிடவில்லை. இதுவே இன்றைக்கும் விடுதலைப்புலிகள் மீதான தடைநீடிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

புலம்பெயர்தமிழருக்கு அறிவுரை

இறுதியாக, புலம் பெயர் தமிழர்களே உலகில் வெற்றிகரமான டயஸ்போறா என அவர்களுக்கு `ஜஸ்’ வைத்த சொல்ஹெய்ம், அவர்களை இலங்கைக்குச் சென்று முதலீடு செய்யுமாறு அறிவுரை வழங்கினார். வெற்றிகரமான டயஸ்போறாவுக்கு உலகில் எங்கு சென்று முதலீடு செய்தால் இலாபம்ஈட்டமுடியும் என்பதனை நோர்வீஜிய இராஜதந்திரி ஒருவர் வந்து ஆலோசனைசொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் தமிழ்மக்கள் விரும்புகிற நிரந்தர அரசியல்த் தீர்வை அவர்களே போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர நோர்விஜியர்களோ, அமெரிக்கர்களோ அல்லது வேறெந்த நாட்டினரோ பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்ற உண்மையை `வெற்றிகரமான’ தமிழ் அலைந்துழல்வுச் சமூகம் கற்பூரம் போல் பற்றிக்கொள்ளுமா?