இலக்கின்றி பயணிக்கிறதா தமிழர் அரசியல் ?

604

விடுதலைப்புலிகள் களத்தை விட்டகன்ற கடந்தஐந்து வருடகாலத்தில் தமிழ் அரசியல் அமைப்புகள் ஏதாவது அரசியல் இலக்குடன் செயற்படுகின்றனவா என்றால் அதற்கு நேரிடையாகப் பதிலளிக்க முடியாதுள்ளது. விடுதலைப்புலிகள் தன்னாட்சி அலகான தமிழீழத் தாயகம் என்பத னையேதமது இறுதி இலக்காக வைத்திருந்தார்கள். இருப்பினும், அரசியல் தீர்வுவிடயத்தில் குறைந்தபட்சமாக எவற்றை ஏற்றுக்கொள்வது என்ற விடயத்தில் மிகவும் தெளிவாக இருந்தார்கள். இந்நிலப்பாட்டை பெரும்பாலான தமிழ்மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். சிறிலங்கா அரசாங்கங்களும், வெளித்தரப்பிலிருந்து மத்தியஸ்தம் வகிக்க வந்திருந்தவர்களும்கூட இதனை நன்கறிந்து வைத்துக்கொண்டே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். ஆகையால் விடுதலைப்புலிகளல் நிராகரிக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தை அரசியல்தீர்வாக முன்வைப்பது பற்றியோ, பதின்மூன்றாவது திருத்த்த்திற்கு அப்பால் செல்வது பற்றியோ அக்காலத்தில் பேசப்படவில்லை.

இன்றைய நிலவரம் மிகவும் பரிதாபகரமானது, தாயகத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பும் சரி, புலம்பெயர்நாடுகளில் செயற்படும் அமைப்புகளும் சரி அரசியல்தீர்வு விடயத்தில் தமது எதிர்பார்ப்புகள் என்ன என்பதனையிட்டு எதனையும் உறுதியாக முன்வைப்பதில்லை. மாறாக, நீங்களாகப் பார்த்து,தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை பெற்றுதரவேண்டும் என இந்தியாவையும், மேற்குலக நாடுகளையும் கேட்டுக் கொள்வதுடன்தமது கடமை முடிந்ததாக எண்ணுகின்றன. பரம்பொருளே பார்த்து எதையாவது கொடுங்கள் என்றபக்தனின் நிலை தான் இது. அதேசமயம் ஏதாவது கோரிக்கையினை முன்வைக்கும் போது கூட மேற்படி தரப்புகள் எதனை விரும்பும் அல்லது விரும்பாது என்பதனை அனுமானித்துக் கொண்டுஅதற்கேற்ப கோரிக்கைகளை வைப்பதனை இவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் (அல்லதுஇவ்வாறு இவர்களை கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது). இதற்கு `இராஜதந்திர அணுகுமுறை’ என்று பெயர் வைத்திருக்கிற கொடுமையை என்னவென்று சொல்லுவது? வெளித்தரப்புகளுடன் பேச்சுக்களில் ஈடுபடும் போது, பேசப்பட்டஎல்லாவிடயங்களையும் கூற முடியாது ஆனால்முக்கியமான விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன என்று கூறி தப்பித்துக் கொள்ளுவது இந்த இராஜதந்திர அணுகுமுறையினுள் உள்ளடக்கப்பட்டுள்ளதோ என்னவோ, இதனைக் கேட்பவர்களும் ஏதோ முக்கிய விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன, விரைவில் `நல்லது நடக்கும்’ என்ற குடுகுடுப்பைக்காரனின் செய்தியுடன் திருப்தியடைந்துகொள்கிறார்கள்.

கடந்த நொவெம்பர் மாதத்தில், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரித்தானியப் பிரதமர் டேவிட் கம்ரனுடன் கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்துக் கொண்டமை எவ்விதம் தமிழ் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டதோ, அவ்வாறு இப்போது இந்தியப் பிரதமருடனான கூட்டமைப்பினரின் சந்திப்பு பெரிது படுத்தப்படுகிறது. தான்உங்களுடன் நூற்றுக்கு நூறுவீதம் இருப்பதாக நரேந்திர மோடி சம்பந்தனுக்கு தெரிவித்தாகக் கூறி அதையிட்டு கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மகிழ்ந்து கொள்கிறார்கள். நரேந்திரமோடி இவ்விதம் கூறியிருப்பின் அதனை நடைமுறையில் எவ்வாறு செயற்படுத்துவார் என்பதனைமேற்படி தரப்புகள் தான் விளக்க வேண்டும்.

கூட்டமைப்பினர் எங்கு சென்றாலும் இறுதியில் எங்களிடமே வரவேண்டும் என மகிந்த இராஜபக்ச குறிப்பிட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை இங்கு கவனத்திற்குரியது. நரேந்திர மோடியும் தன்பங்கிற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துமாறு கூட்டமைப்பினருக்கு `புத்திமதி’ கூறியதாக சம்பந்தன்,அவரது கட்சியைச் சேர்ந்த வித்தியாதரனுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இலங்கையை உடன்பட வைப்பதற்கு விடுதலைப்புலிகள் முன்னெடுத்த ஆயுதப்போராட்டமே காரணமாக இருந்தது என்பதனை கவனத்தில் எடுத்தால், இன்றைய நிலையில் தமிழ்மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வினை ஏற்படுத்திக்கொடுக்குமாறு இந்தியாவால் எவ்விதம் இலங்கைக்கு அழுத்தம்கொடுக்க முடியும்? இந்த வினாவிற்கு விடைகாணும் பொறுப்பினை இதனை வாசிப்பவர்களிடமே விட்டுவிடுகிறேன்.

மோடியுடனான சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதனை முழுமையாக கூறமுடியாது என சந்திப்பில் கலந்து கொண்ட மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் கூறியிருக்கிறார். மோடி கூறிய விடயங்கள் மாவைக்கு முழுமையாக விளங்கியிருக்குமா என்ற நியாயமான ஐயப்பாடு ஒருபுறமிருக்கட்டும். வித்தியாதரனுடான செவ்வியில்சம்பந்தன் குறிப்பிட்டவற்றை வைத்துப்பார்த்தால், இச்சந்திப்பிலிருந்து குறிப்பிடும்படியாக எதுவித முன்னேற்றமும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை. கூட்டமைப்பு தளநிலவரம்பற்றிய அறிக்கையை மோடிக்கு சமர்ப்பித்து, ஏதாவது செய்யுங்கள் என முறையிட்டுள்ளது. மோடியும் சில ‘புத்திமதிகளைக்’ கூறி வழியனுப்பியிருக்கிறார். ஆனால் இதனை ஊதிப்பெருத்து இந்தியா ஏதோ செய்யப்போவதாக கூட்டமைப்பின் அனுதாபிகள் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வாக எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றி இச்சந்திப்பில் பேசப்பட்டதாகவோ, அல்லது கூட்டமைப்பு அவ்வாறான அறிக்கை எதனையும் சமர்ப்பித்ததாக எதுவித தகவலும் இல்லை. ஆனால் ‘இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை’ முழுமையாக அமுல்படுத்துமாறு தாம் மோடியைவேண்டிக் கொண்டதாக சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். மோடியை சந்திப்பதற்கு முன்னதாகமன்மோகன் சிங்கை சந்தித்து பதின்மூன்றாவது திருத்தத்தில் சிறிலங்கா அரசாங்கம் திருத்தங்களை கொண்டு வரமுயன்றபோது, அதனைத்தடுக்க எடுத்த முயற்சிகளுக்காக அவருக்கு நன்றிதெரிவித்தாக சம்பந்தன் மேற்படி செவ்வியில் கூறுகிறார். இப்போது எழுகின்ற கேள்வி என்னவென்றால் பதின்மூன்றாம் திருத்தச் சட்டமூலத்தின் முலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளை அரசியல் தீர்வின் ஆரம்பப்புள்ளியாகவாவது கூட்டமைப்பு ஏற்றுக்கொள்கிறதா? என்பது. இந்தக்கேள்வியினை சம்பந்தனிடமோ அல்லது மற்றைய கூட்டமைப்பின் தலைவர்களிடமோ கேட்டால் மூன்று விதமான விடைகளை எதிர்பார்க்கலாம், ஆம். இல்லை. இரண்டுமில்லை.

முன்னைய வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணசபை, பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபை போன்றவற்றிலிருந்து பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில் உள்ள குறைபாடுகளை விளங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு இம்மாதம் ஒராண்டை நிறைவு செய்யும் விக்னேஸ்வரனின்வடக்கு மாகாணசபை நல்ல உதாரணமாக அமைந்திருக்கிறது. வடக்கு மாகாண சபையில் தாங்கள் ஆட்சி அமைத்தால் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு, சிவில் நிர்வாகம் நடாத்தப்படும் எனவாக்குக் கேட்ட கூட்டமைப்பு, இராணுவ பிரசன்னம்பற்றி மோடிக்கு Situation Report சமர்ப்பிக்கும் நிலையில் உள்ளது. அதே சமயம் மாகாணசபை முறையில் உள்ள குறைபாடுகளை வெளியுலகிற்கு தெரியப்படுத்தவே தாம் மாகாணசபையை கைப்பற்றியதாகக்கூறி முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஐ.நா மனிதவுரிமைச் சபை ஆணையாளரின் குழுவின் விசாரணை ‘சர்வதேச விசாரணை’ எனவும் அதற்கு முழு ஆதரவையும் வழங்குவதாகவும் கூறிவரும் கூட்டமைப்பினர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் அதுபற்றி எதுவும் பேசவில்லை. சர்வதேச விசாரணை விடயத்தில் கொங்கிரஸ் அரசாங்கத்திற்கும், மோடி அரசாங்கத்திற்கும் இடையில் எதுவித வேறுபாடும் இல்லைஎன்பதனை அறிந்து வைத்திருப்பதனால், இவ்விடயத்தை பேசுவதனை தவிர்த்துக்கொண்டகூட்டமைப்பினர், தாம் இதுபற்றி பேசுவதற்கானஅவசியம் ஏற்படவில்லை எனக் கூறியிருக்கின்றனர். கொழும்பிலிருந்து வெளியாகும் Daily Mirror பத்திரிகையில் அரசியல் பத்தி ஒன்றைஎழுதிவரும் இந்திய ஆட்சியதிகாரத்திற்கு நெருக்கமான சிந்தனை மையமான ‘Observer Research Foundation’ இன் சென்னைப் பிரிவின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தனது அண்மைய பத்தி ஒன்றில், கூட்டமைப்பு சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்க முன்வந்தமை தவறான முடிவு எனக் கண்டித்திருக்கிறார்.

சம்பந்தன் வித்தியாதரனுக்கு வழங்கிய செவ்வியில் புலம்பெயர்தமிழர்கள் தொடர்பில் மோடி குறிப்பிட்டதாக ஒருதகவலை தெரிவித்திருக்கிறார். `நீங்கள் ஒரு நிதானமான – பக்குவமான – போக்கைக் கடைப்பிடிக்கின்றீர்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் புலம்பெயர்ந்த மக்கள் மத்திலிருந்து ஒரு காரசாரமான -வன்முறையை ஆதரிக்கக்கூடிய – ஒரு கருத்து வெளிவராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்’.

மேற்குறித்த கருத்தினை புதிதாக மோடி கூறவில்லை இதுவே இந்திய ஆட்சிமையத்தின் நிலைப்பாடு என்பதும் இதுவிடயத்தில் கூட்டமைப்பும், அதன் நீட்சியாகச் செயற்படும் புலம்பெயர் அமைப்புகள் சிலவும் முன்னரே அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்பதும் அறிந்த விடயம்தான்.

இங்கு வெளிப்படும் உண்மை என்னவென்றால்,மோடி அரசாங்கம் மகிந்த அரசாங்கத்தை தனது வழிக்கு கொண்டுவர கூட்டமைப்பை பயன்படுத்த முனைகிறது. இவ்விடத்தில் குறைந்த பட்ச அரசியல் கோரிக்கைகளைக் கூட முன்வைக்காது தமது இந்திய விசுவாசத்தை காட்டுவதுடன் நின்றுவிடுகிறது அரசியல் இலக்கற்ற கூட்டமைப்பு.